படத்துக்கு நன்றி கூகிளார் வாயிலாக Amazon.in
பொதுவாக இது கடைகளில் கிடைக்கிறது. அறுபதுகளில் ரகோடின் என்னும் பெயருடன் வந்து கொண்டிருந்தது. அதன் சுவை தனியாக இருக்கும். இப்போ அந்தப் பெயரிலோ அந்தச் சுவையிலோ வருவதில்லை. எனினும் இதை நாம் வீட்டில் தயாரிக்கலாம். வெறும் கேழ்வரகு மட்டும் போட்டு ராகி மால்ட் தயாரிக்கப்படும் விதம் பற்றி இப்போது பார்ப்போம். இதைக் கேழ்வரகை முளைக்கட்டிக் கொண்டு தான் செய்வார்கள். எனினும் ஒரு சிலர் கேழ்வரகுப் பாலிலும் செய்வது உண்டு.
முதலில் கேழ்வரகு ஒரு கிலோ
இதற்குத் தேவையான சர்க்கரை ஒரு கிலோ /சாதாரணமாக இந்த அளவுச் சர்க்கரை போதும். தித்திப்பு அதிகம் வேண்டுமெனில் பாலில் கலக்கும்போது ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.
உணவு நிறம் ஆரஞ்சு அல்லது கேசரிப்பவுடர் ஒரு டேபிள் ஸ்பூன் அல்லது சின்னப் பாக்கெட் ஒன்று
வீட்டில் தயாரிப்பதால் ஏலக்காய், பச்சைக்கற்புரம் பொடித்தது ஒரு டேபிள் ஸ்பூன். சுமார் பத்து கிராம் ஏலக்காயுடன் ஒரு துண்டு பச்சைக்கற்பூரம் போதும்.
ஜாதி பத்திரி பத்து கிராம். ஏலக்காயுடன் சேர்த்துப் பொடி செய்து கொள்ளவும்.
கேழ்வரகை நன்கு களைந்து கல்லரித்துக் கொண்டு ஒரு நாள் முழுவதும் நீரில் ஊற வைக்கவும். அடிக்கடி நீரை மாற்ற வேண்டும். இல்லை எனில் ஒரு வாசனை வரும். இது முளைக்கட்டும் எந்த தானியத்துக்கும் பொருந்தும். இரவில் நீருடனேயே கேழ்வரகை வைக்கவும். மறுநாள் காலை அந்த நீரை வடிகட்டிவிட்டு மீண்டும் களைந்து கொண்டு ஒரு வெள்ளைத் துணியில் கொட்டி அதை நன்கு கட்டி வைக்கவும். ஒரு நாள் முழுவதும் இப்படி வைக்கவும். கேழ்வரகில் மிகுந்திருக்கும் நீரெல்லாம் அந்தத் துணி வழியாக வெளியேறிவிடும். உள்ளே கேழ்வரகு நன்கு முளை வந்து விடும். மறுநாள் அந்தக் கேழ்வரகு முடிச்சைத் திறந்து பார்த்தால் நன்கு முளை வந்திருக்கும். ஒரு பெரிய தாம்பாளத்தில் கொட்டிக் காய வைக்கவும்.
பின்னர் மாவு மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த கேழ்வரகு மாவை மஸ்லின் போன்ற மெல்லிய வெள்ளைத்துணியில் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுச் சலிக்கவும். இதை வஸ்த்ராயனம் செய்வது என்பார்கள். கேழ்வரகின் மாவு மட்டும் கீழே உள்ள பாத்திரத்தில் போய் விழும். மற்றவை முக்கியமாய்க் கேழ்வரகின் கருமை நிறம் எல்லாம் நாம் சலிக்கும் துணியில் தங்கி விடும். மாவு எவ்வளவு உள்ளது என்பதை அளந்து கொள்ளவும். அதற்கேற்பச் சர்க்கரையைப்பொடி செய்து கேழ்வரகு மாவுடன் நன்கு கலக்கவும். கூடவே ஏலப்பொடி, பச்சைக்கற்பூரப் பொடி, ஜாதிபத்திரி, நிறம் கொடுக்கக் கேசரிப்பவுடர் ஆகியவற்றையும் நன்கு கலக்க வேண்டும். எல்லாவற்றையும் நன்கு கலந்த பின்னர் நல்ல காற்றுப் புகாத டப்பாவில் அல்லது பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டு பால் காய்ச்சி அதில் தேவையான அளவுக்கு இந்தப் பவுடரைப் போட்டுக் கொண்டு குடிக்கலாம். சிறு குழந்தைகள் இதன் வாசனைக்காக விரும்பிச் சாப்பிடுவார்கள். பெரியவர்களும், முதியோர்களும் கூடக்குடிக்கலாம்.
நன்றி கூகிளார்
அடுத்து கேழ்வரகுப் பால் எடுக்கும் முறையில் செய்வது. கேழ்வரகை ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவும். முன் சொன்ன மாதிரி அடிக்கடி நீரை மாற்றவும். ஓர் பகல் ஓர் இரவு முழுவதும் ஊறிய கேழ்வரகை கிரைண்டரில் போட்டு அரைக்கவும். அல்லது கையால் அரைக்க முடிந்தால் அரைக்கலாம். அரைத்த கேழ்வரகை ஓர் பாத்திரத்தை அடியில் வைத்து அதன் மேல் ஓர் சல்லடை அல்லது வெள்ளைத் துணியில் பிழிந்தால் பால் மட்டும் பாத்திரத்தில் போகும். இம்மாதிரி இரு முறை பால் எடுத்தால் போதுமானது. இந்தப் பாலை ஓர் பெரிய தாம்பாளத்தில் கொட்டி வெயிலில் காய வைக்கவேண்டும். நல்ல வெய்யில் இருக்க வேண்டும். வெய்யிலில் காய்ந்ததும் எடுத்தால் அதுவே பொடியாக வரும். இல்லை எனினும் மிக்சியில் போட்டுப் பொடித்துக் கொள்ளலாம். பின்னர் அளந்து கொண்டு சர்க்கரையை மேற்சொன்ன அளவில் சேர்த்து வாசனைச்சாமான்களையும் மேலே சொன்னமாதிரியில் கலந்து வைக்கலாம். இது கொஞ்சம் கடினமான முறை. ஆனால் வஸ்த்ராயனம் பண்ணுவதற்கும் எல்லோருக்கும் தெரிவதில்லை. ஆகவே யாருக்கு எப்படி வசதியோ அப்படிச் செய்து கொள்ளலாம். யாருங்க அங்கே, கடையில் வாங்கறது தான் வசதினு சொல்லறது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))))
ராகி மால்ட் முன்பெல்லாம் குடித்ததுண்டு. வீட்டிலே செய்வார்களா என நினைவில்லை.
ReplyDeleteநாங்களும் ராகிமால்ட் வாங்கிக்கொண்டிருந்தோம். சர்க்கரை வரும் வரை! அப்புறமா நான் மட்டும் தனியா வாங்கி வைச்சுக் குடிக்க வேண்டி இருக்குனு வாங்கறதில்லை. ஹார்லிக்ஸ் வாங்கிடறோம். அதைப் பாலிலும் போட்டுச் சாப்பிடலாம், வெந்நீரிலும் போட்டுக் குடிக்கலாம்! சர்க்கரையும் போட வேண்டாம்! :)))
Deleteரொம்ப உபயோகமான பதிவு. நன்றி.
ReplyDeleteஎங்கம்மா, நான் சிறியவனாக இருந்தபோது கேழ்வரகை முளைக்கட்டியது, வஸ்திராயணம் செய்தது நினைவுக்கு வருது.
வாங்க நெ.த. எங்க வீட்டில் என் அம்மாவுக்குக் கான்சர் வந்தப்புறமே இதெல்லாம் நின்னு போச்சு! அம்மாவோடு எல்லாம் போயிற்று! :(
Deleteபடித்தேன்.
ReplyDeleteநேற்று என் அலுவலக சக பணியாளர் கம்பு, கேழ்வரகு, கொத்துமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம், வெந்தயம், எல்லாம் போட்டு தோசை செய்து வந்திருந்தார். எனக்கும் ஒன்று கொடுத்தார் சுவைத்துப்பார்க்க.
வாங்க ஶ்ரீராம், ஹிஹிஹி வெந்தயம்போட்டு அரைச்சிருப்பாங்க! கம்பு,கேழ்வரகோடு ஒரு கைப்பிடி அரிசியும், ஒரு டேபிள் ஸ்பூன் உளுந்தும் நான் சேர்ப்பேன். காரம்போட்டால் உப்பு, மிவத்தல் பெருங்காயம், தேங்காய் எல்லாம் போட்டு அரைப்பதுண்டு. கருகப்பிலை, கொ.மல்லி போட்டு அடைகளாட்டம் வார்ப்பேன். காரம் போடலைனா கம்பு, கேழ்வரகு, அரிசி, உளுந்தோடு வெந்தயம் சேர்த்து நனைத்து அரைத்துப் புளிக்க வைத்து தோசைகளாகவோ இட்லிகளாகவோ வார்ப்பேன். வெங்காயச் சட்னி நல்லா இருக்கும்.
Delete// யாருங்க அங்கே, கடையில் வாங்கறது தான் வசதினு சொல்லறது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))))) //
ReplyDeleteஹிஹிஹிஹி... நானாகத்தான் இருக்கும்!!
அதானே பார்த்தேன்! :))))))
Deleteநான் இங்கிருந்து வித விதமாக ராகி மால்ட், கடைகள்ளேர்ந்து வாங்கி அந்த ஊருக்குக் கொண்டுபோயிருக்கேன் (பெரும்பாலும் உபயோகப்படுத்தாமல் தூக்கி எறிந்துவிட்டு வந்தேன்... எனக்கு உணவுப் பொருட்களைப் பார்க்கும்போது வரும் ஆசையினால் வாங்குவேன், ஆனால் அவ்வளவு உபயோகப்படுத்தமாட்டேன்).
Deleteபொதுவா என் எண்ணம், ரொம்ப கஷ்டப்பட்டு இதையெல்லாம் செய்யக்கூடாது. (அதாவது எப்போவாவது ஒரு முறை சாப்பிடும் பொருட்களை)
நீங்களும் என்னோட ரங்க்ஸும் தேவையோ இல்லையோ கவர்ச்சியினால் எதையும் வாங்கும் ரகம் போல! நேத்திக்குக் கூட வெளியே போகையில் பால் பாக்கெட் வாங்கிட்டு வரேன்னு பிடிவாதம்! மோர் இருக்கானு கேட்டார். நேத்திக்குத் தான் எல்லாப் பாலேடுகளையும் போட்டுக் கடைந்தேன். மோர் நிறைய இருக்குனு சொன்னதும் அரை மனசாப் போனார்! தேவையில்லைனா எதுக்கு வாங்கணும்? அப்புறமாத் தூக்கிப் போடணும்! இப்படி நிறைய இருக்கு எங்க வீட்டில்.
Delete