எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, October 6, 2018

உணவே மருந்து! வரகு 1

நீண்ட நாட்களாக இங்கே பதிவு போட முடியவில்லை. அடுத்தடுத்த சில பயணங்கள். அதோடு வேலைகள்! திரு நெல்லைத் தமிழர் நான் சில முன்னேற்பாடுகளுடன் ஒழுங்காகப் பதிவிடவில்லை என்கிறார். லேபல் எல்லாம் கொடுப்பதில்லை. ஏனெனில் குறிப்பிட்ட தலைப்பைக் கொடுத்தால் எனக்கு என் பதிவுகள் வருகின்றன என்பதோடு படிக்கும் சிலரும் சொல்கின்றனர். ஆகவே ரொம்பவே இதுக்காகவெல்லாம் கஷ்டப்படுத்திக்கலை. பெரிய அளவில் போய்ச் சென்று நிறையப் பின்னூட்டங்கள், கருத்துகளை எதிர்பார்த்துச் செய்வதில்லை. இங்கே வந்தால் குறிப்பிட்ட உணவு வகைகளின் செய்முறைகள் கிடைக்கும் என்பது அநேகமாக இங்கே அடிக்கடி வருபவர்களுக்குத் தெரியும். அந்த அளவில் போதும் என வைத்து விட்டேன். எனினும் சில குறிப்பிட்ட உணவுகளின் செய்முறைகளை மட்டும் தனியாகத் தொகுத்து மின்னூலாக ஆக்கும் எண்ணம் இருக்கிறது. விரைவில் அதற்கான வேலைகளைத் தொடங்கணும்.  வீட்டு வேலைகள் மட்டுமில்லாமல் சில சம்பவங்கள், சில சந்திப்புகள், சில நிகழ்வுகளினால் பதிவுகளின் தொடர்பு, போக்கு எல்லாம் மாறி விடுகின்றன. இப்போ நவராத்திரி வேறே நெருங்குவதால் அது சம்பந்தமான பதிவுகளைத் தான் அனைவரும் எதிர்பார்ப்பார்கள். ஆகவே அப்போதும் பதிவுகள் இடுவது மாறலாம். அதன் பின்னர் முன்பு எழுதியவற்றைத் தொடரும்போது ஆரம்பத்தில் இருந்த வரவேற்பு இருக்காது! இது சகஜமே!

முன்னுரை முடிஞ்சாச்சு! இப்போ வரகு பத்திப் பார்ப்போம். வரகு சிறுதானியங்களில் மிகவும் சத்துள்ளதும் பிரபலம் ஆனதுமான ஓர் உணவு. இது எங்கே வேண்டுமானாலும் விளையும். இதைப் பறவைகளோ ஆடு மாடுகளோ உண்ணாது. கடும் உணவுப் பஞ்சத்தில் கைகொடுக்கும் உணவு. இதைப்பாதுகாத்து வைத்தால் ஆயிரம் வருஷம் கூட முளைக்கும் திறன் கொண்டது. அதோடு அல்லாமல் இது இடி தாங்கும் திறன் உள்ளது என்பதால் தென்னிந்தியக் கோயில் கோபுரங்களின் கலசங்களை வரகு அரிசியால் நிரப்பி வைத்து மூடுவார்கள். இது தொன்று தொட்டு வரும் வழக்கம்.  தமிழ்நாட்டில் பண்டைய காலத்தில் பெருமளவு உண்ணப்பட்டு வந்த இந்த தானியம் பின்னர் பயன்பாடு பெரிதும் குறைந்து மிகவும் அருகிப் போய் இப்போது சில காலமாக மீண்டும் தலையெடுக்கத்தொடங்கி இருக்கிறது.

அரிசிக்குப் பதிலாகவோ அல்லது மாற்றாகவோ இதைச் சமைத்து எப்போதும் போல் குழம்பு, ரசம், மோருடன் உண்ணலாம். இட்லி, தோசைக்குப் புழுங்கல் அரிசி போடுவதற்குப் பதிலாக வரகரிசியைப் போட்டு இட்லி, தோசை செய்யலாம்.  இதில் மாவுச் சத்து மிகவும் குறைவு. நார்ச்சத்து மிக அதிகம். ஆகவே தினமும் இதைச் சமைத்து உண்பவர்களின் உடல் எடையும் குறையும்.  ஆரோக்கியத்துக்கு நல்லது. இதில் புரதம், கால்சியம், வைடமின் பி, தாதுப் பொருட்கள் ஆகியன இருப்பதோடு மற்றச் சிறுதானியங்களைப்போல் அல்லாமல் விரைவில் ஜீரணமும் ஆகும். இதைத் தொடர்ந்து உண்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

இதன் தோலைச் சரியாக நீக்கிவிட்டு உண்ண வேண்டும். இல்லை எனில் தொண்டையில் பிரச்னை வரும். வரகுத் தாளை வீட்டுக்கூரையில் கூரை வேயவும் பயன்படுத்துவார்கள். இதனால் வீட்டிற்குள் சூரிய வெப்பம் தெரியாது. பொதுவாக ஆடி மாதம் பயிரிட நல்லது என்றாலும் இதை எப்போது வேண்டுமானாலும் பயிரிடலாம். எவ்வகை மண்ணிலும் விளையும் தன்மை கொண்டது. களர் மண்ணிலும் நன்கு விளையும். இதைப் பயிரிட்டதும் ஐந்து மாதங்களில் அறுவடை செய்யலாம். மழை பெய்து முடிந்த பின்னர் மண்ணில் அதிக ஈரம் இல்லாமல் இருக்கையில் விதைக்கலாம். விதைக்கையில் மழை இல்லை என்றாலும் பின்னர் மழை பெய்ததும் முளைத்து விடும். விதைத்து ஒரு வாரத்தில் முளைக்க ஆரம்பித்துவிடும். இதற்கு உரமோ, பூச்சிக்கொல்லியோ தேவை இல்லை என்பதோடு வயலில் களை எடுக்கவும் தேவை இல்லை. ஆடு, மாடுகள் மேய்ந்தாலும் பின்னர் கிளை பரப்பி அதிக வேகத்தில் வளர்ந்து விடும். நான்காம் மாதம் கதிர் விட ஆரம்பித்து ஐந்தாம் மாதம் அறுவடை செய்யலாம்.

வரகைத் தொடர்ந்து சாப்பிடுவதால் சர்க்கரை அளவு குறையும். மூட்டுவலிக்கு நல்லது.  கல்லீரலைச் செயல்பட வைக்கும். கண் நோய்களைத் தீர்க்கும். நிணநீர்ச் சுரப்பிகளைச் சீராக்கி உடலை ஆரோக்கியமாக வைக்கும். பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகளையும் சீராக்கும் தன்மை கொண்டது.

4 comments:

  1. வரகு - பார்த்ததே இல்லை அக்கா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், வரகு அரிசித் தேன்குழல் 2016 ஆம் ஆண்டு தீபாவளிக்குச் செய்தேன்னு நினைக்கிறேன். இங்கே வரகு புழுங்கலரிசியும் கிடைக்கும். அதோடு உளுந்து சேர்த்து அரைத்து இட்லி, தோசை, அடை பண்ணி இருக்கேன். வரகு அரிசியைச் சமைத்தும் சாப்பிட்டிருக்கோம். வழக்கம் போல் எல்லாக் கலந்த சாதங்களும் எந்தச் சிறுதானியத்தில் வேண்டுமானாலும் பண்ணலாம்.

      Delete
  2. ஆஆஆஆஆஆஆ கீசாக்கா.. எதையோ தொட்டு எதையோ தட்டிய இடத்தில எங்கெங்கோ என்னைக் கூட்டிப் போய்.. முடிவில் தமிழ்மணத்தில இறக்கி விட்டுது:).. ஏதோ பழைய நண்பர் வீட்டுக்கு வந்து விட்டதைப்போல ஒண்ணொண்ணாப் பார்த்தால் இப்போஸ்ட் தட்டுப்பட்டது.. அட நம்ம கீசாக்கா என வாலைப்பிடிச்சுத் தாவி இங்கு வந்திட்டேன்ன்...

    வரகு பற்றிய தக்லவல்கள் அருமை. இங்கு தோல் எடுத்த வெள்ளை வரகுதான் கிடைக்குது.

    ReplyDelete
    Replies
    1. அட, அதிரடி, ஞானி, என்ன இந்தப்பக்கம்? இஃகி, இஃகி, நான் தமிழ்மணத்தை விட்டு வெளியே வந்து பத்து வருஷங்கள் போல் ஆகப் போகுதே! அதிலே எப்படி என் பதிவு???????? இங்கும் தோல் எடுத்த வெள்ளை வரகு கிடைக்கிறது.

      Delete