எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, January 11, 2014

வாழ்க்கையில் ரசம் இல்லையா? இந்த ரசத்தைச் செய்து சாப்பிடுங்க!

ஒரு சில ரச வகைகளை இப்போது பார்க்கலாம்.  என்னடா முன்னுக்குப் பின் தொடர்பில்லாமல் வருதேனு நினைக்கிறவங்களுக்கு, இன்னிக்கு இதைக் கேட்டிருக்காங்க.  :)))))

முதலில் மிளகு, ஜீரகம் உடைத்த ரசம்:

நான்கு பேர்களுக்குத் தேவையான பொருட்கள்

புளி ஒரு சின்ன எலுமிச்சை அளவு

உப்பு தேவைக்கு

மி.வத்தல் இரண்டு

மஞ்சள் பொடி,

பெருங்காயம்

தக்காளி(தேவையானால்) சின்னது ஒண்ணு அல்லது பாதி

கருகப்பிலை, கொ.மல்லி

மிளகு ஒரு டீஸ்பூன்

ஜீரகம் ஒரு டீஸ்பூன்

தாளிக்க நெய்

கடுகு

முதலில் புளியை நன்கு ஊற வைத்துக் கரைத்துக் கொள்ளவும்.  மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாகப் பொடித்துக்கொள்ளவும். தனியே வைக்கவும். புளிக்கரைசலில்  உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி சேர்த்துக்  கொண்டு கொதிக்க வைக்கவும். ஒரு மிளகாய் வற்றலை இரண்டாகக் கிள்ளிச் சேர்க்கவும்.  தக்காளியையும் விரும்பினால் சேர்க்கவும்.  நன்கு கொதித்ததும் தேவையான அளவுக்கு நீரை விட்டு விளாவவும். பொங்கி வரும்போது அடுப்பை அணைக்கவும்.

இன்னொரு அடுப்பில் வாணலி அல்லது இரும்புக்கரண்டியை வைத்து நெய்யை ஊற்றவும்.  கடுகைப்போடவும்.  கடுகு வெடித்ததும் மிச்சம் இருக்கும் மி.வத்தல், கருகப்பிலை சேர்க்கவும்.   பொடித்து வைத்த மிளகு, சீரகக் கலவையை ரசத்தின் மேலே போட்டு அதன் மேலே தாளிதத்தைச் சூடாக இருக்கையிலேயே ஊற்றவும்.  கொத்துமல்லி தூவவும்.  சூடான நெய் விட்ட சாதத்தில் ரசத்தை ஊற்றிச் சாப்பிடவும்.  அப்படியே குடிக்கவும் நன்றாக இருக்கும்.

அடுத்து சீரக ரசம்.  அரைத்துவிட்டுச் செய்யும் முறை

நான்கு பேர்களுக்கு முன் சொன்னபடி

புளி ஒரு சின்ன எலுமிச்சை அளவு

உப்பு

மஞ்சள் பொடி

இதுக்குப் பெருங்காயம் வேண்டாம்.

தாளிக்க

நெய்

கடுகு,
மி.வத்தல்
கருகப்பிலை

மி.வத்தல் ஒன்று, ஒரு டீஸ்பூன் மிளகு, இரண்டு டீஸ்பூன் ஜீரகம் ஊற வைக்கவும்.  அதை ஒரு பிடி கருகப்பிலையோடு சேர்த்து நன்கு அரைக்கவும்.  தனியே வைக்கவும்.

புளியை நன்கு கரைத்துக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.  நன்கு புளி வாசனை போகக் கொதித்ததும் அரைத்த கலவையைக் கொஞ்சம் நீர் சேர்த்து ரசத்தில் விடவும்.  ரசம் தேவையான அளவுக்கு வரவில்லை எனில் இன்னும் கொஞ்சம் நீர் சேர்த்து விளாவவும்.  மேலே நுரைத்து வரும்போது அந்த நுரையை எடுத்துவிடவும். பின்னர் நெய்யில் கடுகு,மி.வத்தல், கருகப்பிலை தாளிக்கவும்.  ஜுரம் வந்த வாய்க்கு, அல்லது வயிற்றுக்கோளாறுக்கு மிக்க நன்மை பயக்கும் ரசம் இது.  இதையும் குடிக்கலாம்.  புழுங்கல் அரிசியில் கஞ்சி வைத்து இந்த ரசத்தை ஊற்றிக் குடிக்கலாம்.

19 comments:

 1. உங்கள் செய்முறைப்படி அடுத்த தடவை செய்யச் சொல்கிறேன் அம்மா... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வாங்க டிடி, இன்னிக்கு சுண்டைக்காய் வற்றல் குழம்பும், அகத்திக்கீரைச் சுண்டியதும், மிளகு, ஜீரகம் உடைச்ச ரசமும் தான் மெனு! :)))))

   Delete
 2. Replies
  1. நன்றி ராஜராஜேஸ்வரி.

   Delete
 3. இந்த ரசங்களுக்குள் சுவையில் பெரிய மாறுபாடு இருக்க முடியுமா? புளி அளவு நீங்கள் சொல்லியிருப்பதில் பாதிதான் போடுவேன் ஸாரி, போடுவோம் நாங்கள்!

  ReplyDelete
  Replies
  1. தக்காளி சேர்த்தால் நீங்க சொல்றாப்போல் பாதி போட்டால் போதும் தான் ஶ்ரீராம். அநேகமாய்ப் பத்திய ரசத்தில் நான் தக்காளி சேர்ப்பதில்லை. அதோடு புளி ஜலமும் நீர்க்கவே வரும். கர்நாடகாப் புளி, தும்கூர்ப்புளினு நினைக்கிறேன். கொழகொழவென்று புளி கரைக்கக் கரைக்க கெட்டிச் சாறு வராது. :)))

   Delete
  2. ஜீரக ரசத்துக்கும், மிளகு ரசத்துக்கும், நிச்சயம் மாறுபாடு உண்டு. இதிலேயே ஜீரகம், மிளகு வறுத்து அரைத்த ரசமும் இருக்கு. அது இன்னும் காரம் தூக்கலாக இருக்கும்.

   Delete
 4. ஹப்பாடி!!. நானே கேக்கணுன்னு நினைச்ச பதிவு இது!!.. என் கல்யாணத்தப்ப என் உறவுக்காரங்க என்னைப் பயமுறுத்தின பாயின்ட் இது..அப்ப எனக்கு ரசம் வைக்க சரியா வராது.. என்னவருக்கு ரசம் இல்லாட்டி சாப்பிட முடியாது!!!!!...இப்ப தத்தி முத்தி ஓக்கேன்னாலும் சரியா தெரிஞ்சுக்கணுன்னு ஆசை..தோ இப்பப் பண்றேன் இதை!!..

  ReplyDelete
  Replies
  1. ரசம் வைக்க வராதா? முதல்லே கத்துக்கறதே ரசம் தானே? அப்போத் தானே சமையலே ரசமா இருக்கும்?? :)))))

   Delete
 5. ரசத்துக்கு பருப்பு வேண்டாமா?

  ReplyDelete
  Replies
  1. வேண்டாம் அப்பாதுரை, பருப்பில்லாமல் பண்ணத்தான் இந்த ரசங்களின் குறிப்புக்களே. நான் வாரத்தில் ஒரு நாள் பருப்பு ரசம் பண்ணினால் அதிகம்! :))) கொள்ளு ரசம், தூதுவளை ரசம்(ஆரம்பப்பதிவுகளில் பார்க்கலாம்) பூண்டு ரசம் கூட வைச்சிருக்கேன். இப்போப் பூண்டு ரசம் மட்டும் ஒத்துக்கறதில்லை என்பதால் வைக்கிறதில்லை.

   Delete
  2. ஆம், நாங்கள் கூட பருப்பு ரசம் என்பதைக் கிட்டத்தட்ட மறந்தே விட்டோம்!

   Delete
  3. ஹாஹாஹா, எல்லாரும் நம்ம கட்சிக்கு வந்துட்டாங்கப்பா! :)))

   Delete
  4. தூதுவளையா? அப்படின்னா?

   Delete
  5. தூதுவளை ஒரு மூலிகை. ஜலதோஷம், கபம், ஜுரம்போன்றவற்றிற்கு நல்லது.

   ம்ம்ம்ம்ம், அம்பத்தூர் வீட்டிலே தூதுவளைச் செடி நிறையவே இருந்தது. சிறியாநங்கை, குப்பை மேனி, துளசினு வளர்ந்து வந்தது. குப்பைமேனி இலையை அரைச்சு உடலில் தேய்த்துக் கொண்டால் எந்த காஸ்மெடிக் சாதனங்களும் இல்லாமல் உடல் தானாகவே மிருதுவாகவும் நிறமாகவும் ஆகும். :))))

   அங்கே இருந்தவரை கோடைக்காலத்தில் வேப்பிலை, குப்பைமேனி, துளசி சேர்த்து அரைத்துத் தேய்த்துத் தான் குளித்து வந்தேன். :)))

   Delete
 6. ஏன் பருப்பு ரசத்தை மறந்துட்டீஙக..?

  ReplyDelete
  Replies
  1. பருப்பு ரசம் போரடிக்குது, அதான் மறந்துட்டேன். :)))) பருப்பு ரசத்திலேயே எனக்கு எலுமிச்சை ரசம் தான் பிடிக்கும். :)))

   Delete
 7. நல்ல ரசம்!

  விதம் விதமாய் ரசம் செய்தால் தான் போரடிக்காது இருக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், வாழ்க்கையில் ரசம் வேண்டாமா? அதான் விதவிதமாய் ரசம்! :))))

   Delete