எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, March 20, 2021

மடர் பனீர்/ஜெயின் செய்முறை!

எங்கள் ப்ளாக் எங்கள் ப்ளாகில் "திங்க"ற கிழமைக்குப் போட்ட பதிவு இது! இங்கேயும் ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு போட்டேன்.

கொஞ்ச நாட்களாக வெங்காயம் அலர்ஜியாக ஆகி விட்டது. சாப்பிடுவோம். இல்லைனு சொல்லலை. இப்போ மாமியார் ஸ்ராத்தம் வந்தப்போ அதுக்காகப் பத்து நாட்கள் முன்னர் வெங்காயம், பூண்டு, மசாலாக்களை நிறுத்தியதில் இருந்து அந்தப் பழக்கத்திலேயே இருக்கோம். இன்னும் மாற்றவில்லை. கிராம்பு, ஏலக்காய் மட்டும் மசாலா சாமான்கள் போடும் இடத்தில் சேர்த்துப் பண்ணுகிறேன். அந்தச் சமயம் மடர் பனீர் வெங்காயம், பூண்டு இல்லாமல் பண்ணினேன். அதை இங்கே பகிர்கிறேன்.


பொதுவாகக் காய்ந்த பட்டாணியில் மடர் பனீர் அதிகம் பண்ணினாலும் இப்போப் பட்டாணிக்கான பருவம் என்பதால் பச்சைப் பட்டாணி கிலோ 40 ரூபாய் விலையில் கிடைப்பதால் அதை வாங்கி உரித்து வைத்துக் கொள்கிறோம். இந்த மடர் பனீர் செய்வதற்குத் தேவையான சாமான்கள்.


பச்சைப் பட்டாணி ஒரு கிண்ணம் சுமார் 200 கிராம். உரித்துக்கழுவி வெந்நீரில் போட்டு வைக்கவும்.



தக்காளி  4, பனீர் சுமார் 100 கிராம் அளவுக்கு. எடுத்துக் கழுவித் துண்டங்களாக்கி வைக்கவும்.


இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, புதினா (இருந்தால்) இஞ்சி/பச்சை மிளகாய் அவசியம். மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியைத் துருவிக் கொள்ளலாம். அல்லது பொடியாக நறுக்கிக் கொள்ளலாம்.



தக்காளியை வெந்நீரில் போட்டுச் சிறிது நேரம் வைத்து விட்டுப் பின்னர் தோலை உரித்துக் கொண்டு மிக்சியில் போட்டுச் சாறாக எடுத்துக்கொள்ளலாம். அல்லது இரண்டு தக்காளியை மட்டும் நறுக்கிக் கொண்டு இரண்டு தக்காளியை ப்யூரியாக மேற்சொன்ன முறையில் எடுத்துக்கலாம். இப்போது அடுப்பில் குக்கர், கடாய் ஏதாவது ஒன்றை வைத்து விட்டு ஒரு மேஜைக்கரண்டி சமையல் எண்ணெய்/வெண்ணெய்/நெய் ஏதானும் ஒன்றை விட்டுக் கொள்ளவும். 




குக்கரில் எண்ணெய் வைத்திருக்கேன். நான் பண்ணிய அன்று ச்ராத்தம் முடிந்து விட்டதால் சோம்பு, ஜீரகம், லவங்கப்பட்டை சின்னத்துண்டு, மிளகு முழுதாக நாலைந்து, பச்சை ஏலக்காய், கிராம்பு வகைக்கு ஒன்று. கறுப்பு ஏலக்காய் இருந்தாலும் போடலாம். வாசனை தூக்கும். நம்மவருக்குப் பிடிப்பதில்லை.



பின்னர் பச்சை மிளகாய், இஞ்சியைப் போட்டு வதக்கிக் கொள்ளவும்.



பின்னர் நறுக்கிய தக்காளித் துண்டுகளைப் போடவும். ப்யூரி எடுத்திருந்தால் அதைத் தனியாக வைக்கவும். பின்னர் சேர்க்கலாம். எனக்கு எல்லாம் போட்டால் அதிகம் ஆகிவிடும் என்பதால் தக்காளித்துண்டங்களை மட்டும் போட்டு நன்கு வதக்கினேன். தக்காளி வதங்கியதும் அதிலே மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி, மிளகாய்த்தூள் கால் தேக்கரண்டி, தனியாத்தூள் ஒரு தேக்கரண்டி, கரம் மசாலா கால் தேக்கரண்டி, ஜீரகப் பொடி கால் தேக்கரண்டி செர்த்து நன்கு வதக்கினேன். ஒரு தேக்கரண்டி சர்க்கரையும் சேர்த்தேன். தக்காளி நன்கு வெந்து குழையும் வரை வதக்க வேண்டும். தேவைப்பட்டால் ஒரு கிண்ணம் நீரைச் சேர்த்துத் தக்காளியை  வதக்க/வேக விடலாம்.


தக்காளி சேர்ந்து கொதித்து வரும்போது பச்சைப்பட்டாணியைச் சேர்க்கவும். ப்யூரி எடுத்திருந்தால் இப்போது நீருக்குப் பதிலாக அதைச் சேர்க்கவும்.




பட்டாணியைச் சேர்த்ததும் தேவையான உப்பைப் போட்டுக்குக்கரை மூடவும். அது தயார் ஆவதற்குள்ளாக நறுக்கி வைத்திருக்கும் பனீர்த் துண்டங்களைக் கடாயில் நெய்யை விட்டுப் பிரட்டிக் கொள்ளவும். இரு பக்கமும் ப்ரவுன் நிறமாக வந்ததும் அடுப்பை அணைக்கவும். அதிகம் இருந்தால் ரப்பர் மாதிரி ஆகிவிடும்.

குக்கரில் இரண்டு விசில் கொடுத்தால் போதும். பின்னர் குக்கர் தானாக ப்ரஷர் குறைந்ததும் திறந்து வறுத்த பனீர்த்துண்டங்களைச் சேர்க்கவும். கொத்துமல்லி, புதினாப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். ஒரு சிலர் தக்காளி வதக்கும்போதே கொத்துமல்லி, புதினாவையும் போட்டு வதக்கிச் சேர்ப்பார்கள். அவரவர் விருப்பம்.




ஜெயின் மதத்தவர் பொதுவாக பூமிக்கு அடியில் விளைபனவற்றைச் சாப்பிட மாட்டார்கள். ஆகவே அவர்கள் உணவில் வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, காரட், முள்ளங்கி, பீட்ரூட், போன்ற மண்ணுக்கு அடியில் விளையும் காய்கள், கிழங்குகள் சேர்க்காமல் பண்ணுவதால் இதை ஜெயின் முறையிலான உணவு என்கிறோம். நாங்க பொதுவாக உருளைக்கிழங்கு வேகவைத்துப்பண்ணும் காரக் கூட்டே சப்பாத்திக்கு வெங்காயம், பூண்டு இல்லாமல் இப்படி ஜெயின் முறையில் பண்ணுவோம். அமாவாசை, விரத நாட்கள், மாதப் பிறப்பு, புண்யகாலம் போன்ற தர்ப்பண தினங்களில் சப்பாத்தியை இரவுக்கு எனத் தேர்வு செய்தால் இம்மாதிரித் தயார் செய்து சாப்பிடலாம்.


Friday, March 19, 2021

அறிவிப்பு!

விரைவில் எதிர்பார்க்கவும். சமையல்  பதிவுகளை! 

Thursday, February 18, 2021

பச்சை மஞ்சள் தொக்குச் சாப்பிட்டுப் பாருங்க!

 நாங்க முதல் முதல் அம்பேரிக்கா போயிருந்தப்போப் பையர் பச்சை மஞ்சள் ஊறுகாய் வாங்கி வைச்சிருந்தார், அங்கே கிடைத்த ஆலு (உ.கி.) பராத்தாவோட சாப்பிட நன்றாக இருந்தது. ஒரு மாதிரியா எப்படிப் போட்டிருப்பாங்கனு புரிஞ்சு இங்கே வந்ததும் அநேகமா ஒவ்வொரு வருஷமும் சங்கராந்திக்கு வாங்கும் மஞ்சள் கிழங்கில் போட்டுப் பார்ப்பேன். உடனடியாகச் செலவும் செய்துடுவேன். இப்போத் தான் சமீபத்தில்  இந்த மஞ்சள் தொக்கு பற்றித் தெரிய வந்தது. இதுக்குத் தேவையான பொருட்கள்



பச்சை மஞ்சள் கால் கிலோ /தோல் சீவிக்கொண்டு துருவிக் கொள்ளவும்.



நல்லெண்ணெய் கால் கிலோ

மிளகாய்ப் பொடி ஒரு மேஜைக்கரண்டி

உப்பு தேவைக்கு

பெருங்காயப் பொடி ஒரு தேக்கரண்டி

கடுகு தாளிக்க இரண்டு தேக்கரண்டி


வறுத்துப் பொடிக்க

மி.வத்தல் சுமார் 25 (காரம் அதிகம் உள்ள மிளகாய் எனில் 10,15 போதும்.) நான் காரப்பொடி தான் உபயோகித்தேன். 

காரப்பொடி எனில் காரமாக இருந்தால் 5 தேக்கரண்டி. காரம் இல்லை எனில் ஒரு மேஜைக்கரண்டி

 மிளகாய் வற்றலை வறுத்துப் பொடிக்கவில்லை எனில் ஒரு மேஜைக்கரண்டி கடுகு, ஒரு மேஜைக்கரண்டி வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும்.



வறுத்துப் பொடித்த வெந்தயம், கடுகுப்பொடி. இது ஊறுகாய் விரைவில் வீணாகாமல் இருக்கப் போடுகிறோம். இதுக்கு மஞ்சள் பொடி தேவை இல்லை. கடைசியில் எலுமிச்சைச் சாறு சுமாராக 3,4 பழங்களின் சாறு தேவைப்படும். நல்ல சாறுள்ள பழம் எனில் 3 போதும். நான் 3 பழங்களின் சாறைத்தான் பிழிந்து சேர்த்தேன்.

மஞ்சளைத் துருவிக் கொண்டு அடுப்பில் வாணலியை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றவும். 



எண்ணெய் சூடானதும் கடுகைப் போட்டுப் பொரிந்ததும் பெருங்காயப் பவுடரைச் சேர்க்கவும். துருவிய மஞ்சளைச் சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது நேரம் மஞ்சள் வதங்க வேண்டும். பின்னர் அதில் தேவையான உப்பு, மிளகாய்ப் பொடி சேர்த்து மீண்டும் வதக்கவும். மிளகாய் வற்றலைக் கடுகு, வெந்தயத்தோடு சேர்த்து வறுத்துப் பொடித்து வைத்திருந்தால் அதைச் சேர்க்கலாம். 



நான் கடுகு, வெந்தயப் பொடி மட்டும் சேர்த்துத் தயார் செய்து வைத்ததால் மஞ்சள் துருவல் கொஞ்சம் வதங்கியதும் உப்பு, மிளகாய்ப் பொடியைச் சேர்த்துக் கிளறினேன். அது கொஞ்சம் வதங்கியதும் கடுகு, வெந்தயப் பொடியைச் சேர்த்துக் கிளறி விட்டுப் பின்னர் எலுமிச்சைச் சாறைச் சேர்த்தேன். 



பின்னர் எண்ணெய் பிரியும் வரை வதக்கிப் பின் ஆற வைத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைக்கலாம். சிலர் வெல்லம் சேர்ப்பார்கள். இது அவரவர் வீட்டு வழக்கம், ருசியைப் பொறுத்தது. சின்னக் கட்டி வெல்லம் எலுமிச்சைச் சாறைச் சேர்க்கும்போது போடலாம். வெல்லம் நன்கு கரையும் வரை வதக்கிய பின்னர் ஆற வைத்து எடுத்து வைக்கவும். இதற்கு வினிகர் போன்ற எந்தப் பாதுகாப்பு உபகரணங்களும் தேவை இல்லை. மஞ்சளைப் பொடியாக நறுக்கியும் ஊறுகாய் போடலாம்.அதை நாளை போட்டுப் பின்னர் பகிர்கிறேன்.



ஊறுகாய் தயார் நிலையில். கொஞ்சம் காரம். ஏனெனில் நான் வாங்கிய மிளகாய்த்தூள் கொஞ்சம் காரமானதாகவே இருக்கிறது. ஆகவே ருசி பார்த்த பின்னர் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கிளறி வைத்தேன்.  மோர் சாதத்துக்குத் தொட்டுக்கொள்ள நன்றாக இருந்தது. இதைச் சப்பாத்தி, தேப்லா, பராத்தா போன்றவற்றுடனும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

Saturday, February 13, 2021

உருளைக்கிழங்கும், குடமிளகாயும் சேர்ந்த கறி சாப்பிட வாங்க!

எப்படியோ இந்த வலைப்பக்கமும் அடிக்கடி வரமுடியாமல் போகிறது. இப்போல்லாம் என்னவோ ஏதோ ஒரு காரணத்தால் மத்தியானம் சாப்பிட்டு வேலைகளை முடித்துக்கொண்டு உட்காரும்போதே ஒரு மணி ஒன்றரைமணினு ஆகிவிடுவதால் அதிகம் நேரம் செலவு செய்ய முடிவதில்லை. ஒவ்வொரு முறையும் இனியாவது தொடர்ந்து எழுத நினைப்பேன். முடியாமல் போகிறது. 

சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ளக் குடைமிளகாயோடு உருளைக்கிழங்கைப் போட்டுக் கறி பண்ணுவோம். அதிலே சில மாற்றங்களோடு கூடிய ஒரு முறையை இங்கே பகிர்கிறேன். சென்ற வாரம் பண்ணினேன். படமெல்லாம் எடுக்கவில்லை. இந்த முறை வட மாநிலங்களில் அடிக்கடி பண்ணுவார்கள், ஒரே மாதிரியான ருசியாக இல்லாமல் மாற்றி மாற்றிப் பண்ணினால் ஓர் ருசி வரும் என்பதற்காகப் பண்ணுவது தான் இது. மற்றபடி அடிப்படை ஒன்றே. இதில் கொஞ்சம் மசாலாக்களை மாற்றிச் சேர்க்க வேண்டும். அவ்வளவே!

 ஜீரகம் ஒன்றரை தேக்கரண்டி,

 மிளகு ஒரு தேக்கரண்டி, 

2 ஏலக்காய், சோம்பு அரைத் தேக்கரண்டி, 

புதினா இலைகள் காய வைத்தவை பொடித்தது ஒரு தேக்கரண்டி, 

கறுப்பு உப்பு ஒரு தேக்கரண்டி, 

தனியாப் பொடி, இரண்டு தேக்கரண்டி, 

அம்சூர் பவுடர் ஒரு தேக்கரண்டி, 

கரம் மசாலா ஒரு தேக்கரண்டி

இவற்றில் ஜீரகம், மிளகு,ஏலக்காய், சோம்பு, புதினா இலைகள் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்துக்கொண்டு மற்றப் பொருட்களையும் சேர்த்துக் கொண்டு மிக்சி ஜாரில் பொடி பண்ணிக் கொள்ளவும். இந்த மசாலாக் கலவை தான் இந்த உணவின் தனிச் சிறப்பு. இப்போது காய்களை நறுக்கிக் கொள்ளலாம்.

குடமிளகாய் இரண்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

நடுத்தரமான உருளைக்கிழங்கு இரண்டு. நன்கு கழுவித் தோல் சீவிட்டுப் பின்னர் துண்டங்கள் ஆக்கிக் கொள்ளவும். 

தக்காளி நடுத்தரமான அளவில் 2 பொடியாக நறுக்கவும்

பச்சை மிளகாய், இஞ்சி பொடியாக நறுக்கவும்

கொத்துமல்லித் தழை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்

ஒரு தேக்கரண்டி மிளகாய்த் தூள், அரைத்தேக்கரண்டி மஞ்சள் தூள்

உப்பு தேவைக்கு, ஏற்கெனவே மசாலாப் பொடியில் கறுப்பு உப்பு சேர்த்திருப்பதால் உப்பைப் பார்த்துப் போடணும்.

தாளிக்க, வதக்க எண்ணெய், பெருங்காயம் ஒரு தேக்கரண்டி, ஓமம் ஒரு தேக்கரண்டி தாளிக்க

இணையத்தில் தேடினாலும் இந்தச் செய்முறை கிடைக்கும். நான் டாடா உணவுப் பொருட்களின் விளம்பரங்களில் அடிக்கடி பார்ப்பேன். 

எல்லாவற்றையும் தயார் செய்து கொண்டு அடுப்பில் கடாயை வைத்துக் கொண்டு எண்ணெயைக் காய விடவும். எண்ணெய் காய்ந்ததும் ஓமம், பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்த கையோடு நறுக்கிய உருளைக்கிழங்குகளைப் போட்டு நன்கு வதக்கவும். உருளைக்கிழங்கு நன்கு வதங்கியதும் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கிக் கொண்டு மஞ்சள் பொடி, மிளகாய்த் தூள் சேர்த்து உருளைக்கிழங்கு முழுவதிலும் கலக்கும்படி வதக்கிக் கொள்ளவும். இப்போது நறுக்கிய தக்காளிப் பழங்களைச் சேர்த்துத் தக்காளி நன்கு வதங்கும் வரையிலும் வதக்கவும். உப்புத் தேவையானால் இப்போது கொஞ்சமாகச் சேர்க்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் குடமிளகாய்த் துண்டங்களைச் சேர்த்து நாம் ஏற்கெனவே பொடி செய்து வைத்திருக்கும் மசாலாப் பொடியில் தேவையான அளவுக்கு இதில் சேர்த்து நன்கு கலக்கவும். குடமிளகாய்த் துண்டங்கள் நன்கு வெந்து மசாஆவில் கலக்கும் வரைக்கும் வதக்கவும். ஒரு தட்டைப் போட்டு மூடி வைத்தும் வதக்கலாம். எல்லாம் நன்கு கலந்த பின்னர் பொடியாக நறுக்கியக் கொத்துமல்லித் தழைகளைத் தூவி விட்டு ஒரு தேக்கரண்டி கசூரி மேத்தியைக் கைகளால் கசக்கிச் சேர்க்கவும். பின்னர் நன்கு கலந்ததும் ஃபுல்கா ரொட்டி, பராத்தா ஆகியவற்றோடு பரிமாறலாம்.

பிரபல ஓட்டல்களில் செய்யும் சுவையுடன் அமைந்திருக்கும். 


Sunday, January 17, 2021

திடீர்னு ஒரு பனீர் புலவு! :)

 சென்ற வாரம் ஸ்ராத்தத்தின் போது வாங்கி வந்த காய்கள் நேற்று வரை வந்து விட்டன! இன்னிக்குக் காய் இல்லை.  கொஞ்சம் போல் காரட்டுகளும் ஒரு கைப்பிடி அவரைக்காயும் தான் இருந்தது. நம்மவருக்கு உடனே குஷி வந்துடுமே. நான் போய்க் காய்களெல்லாம் வாங்கிண்டு அப்படியே மத்தியானத்துக்குக் குழம்பு, ரசம், கறி, கூட்டும் வாங்கிடறேன். நீ சாதம் மட்டும் வை! நேத்திக்கே கை வலினு சொன்னியே! இன்னிக்குச் சமைக்க வேண்டாம்னு சொல்ல எனக்குள் உத்வேகம். பின்னே? நான் சமைக்கிறேன். நீங்க ஒண்ணும் போய் அலைய வேண்டாம் என்று பெரிய முட்டுக்கட்டையாய்ப் போட்டேன். இன்னிக்கே சந்தைக்குக் காய்கள் எல்லாம் வந்திருக்காது. நாளையிலிருந்து தான் வழக்கமான முறையில் இருக்கும்னு சொன்னேன். ஆனால் அவர் கிளம்பிட்டார்.

நான் தீர்மானமாக நீங்க காய் வாங்கி வந்தாலும் நான் பனீர் புலவ் தான் இன்னிக்குப் பண்ணப் போறேன் என்று சொல்லி விட்டேன். சரி, ஆனால் கொஞ்சம் ரசம் வேண்டும் எனக்கு என்றார். தொட்டுக்க அப்பளம் வாட்டிக்கலாம், இல்லாட்டியும் வாழைக்காய் வறுவல் இருக்குனு நானும் சரினு சொல்லிட்டேன். ஆனால் அவரால் சந்தைக்கே போக முடியாமல் வண்டி படுத்தி எடுத்துக் கடைசியில் வீட்டுக்கு வந்துட்டார். இஃகி,இஃகி,இஃகி!



நான் திட்டம் போட்ட படி பனீர் புலவ் செய்தேன். அதுக்குக் காய்கள் வேண்டும்னு எல்லாம் இல்லை. வெங்காயம் இருந்தாலே போதும். ஆனால் காரட் வாங்கிப் பல நாட்கள் ஆகி விட்டதால் அதைத் தீர்க்கணும்னு காரட்டுகளை எடுத்துக் கொண்டேன். பச்சைப் பட்டாணி இல்லை; அதனால் என்ன? காய்ந்த பட்டாணியை நேற்றே எதுக்கும் இருக்கட்டும்னு ஊற வைச்சிருந்தேன். அதை நன்கு கழுவிக் கொண்டு சிறிது உப்புச் சேர்த்துக் குக்கரில் வேக வைத்தேன். இல்லைனால் பட்டாணிக் கல்லைப் போல் உட்கார்ந்திருக்கு! 

அதற்குள்ளாகப் பனீரை எடுத்து அலம்பித் துண்டுகளாக்கிக் கொண்டு அதில் மஞ்சள் பொடி, கொஞ்சமாக மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி, (தேவையானால் கரம் மசாலாப் பொடி) ஜீரகப் பொடி, உப்பு ஆகியன சேர்த்து நன்கு கலந்து வைத்தேன். வீட்டில் அதிர்ஷ்டவசமாக பாஸ்மதி அரிசி இருந்தது. அதை ஒரு சின்னக் கிண்ணம் எடுத்து நன்கு கழுவி விட்டுப் பின்னர் நீரை வடிகட்டிக் கொண்டு இரண்டு தேக்கரண்டி நெய்யை விட்டு அரிசியை வறுத்துவிட்டு அரிசி எடுத்த கிண்ணத்தாலேயே ஒன்றேகால் கிண்ணம் நீரை அதில் விட்டு அரிசியை ஊற வைத்தேன்.

இதெல்லாம் ஆவதற்குள்ளாகப் பட்டாணி வெந்து விட்டதைக் குக்கர் அறிவிக்க, ரசத்துக்கும், மோருக்கும் வெறும் சாதம் அரை ஆழாக்கு வைத்துவிட்டு ஈயச் செம்பில் ரசத்தையும் வைத்தேன். பின்னர் வந்து 2 பெரிய வெங்காயம், காரட் ஒன்று பொடியாக நீளவாட்டில் நறுக்கிக் கொண்டேன். தக்காளி சேர்க்கலை. வீட்டில் தக்காளியும் இல்லை. கொத்துமல்லி, புதினா எதுவும் இல்லை. நல்லவேளையாகப் பச்சை மிளகாயும், இஞ்சியும் இருந்தன. அதைப் பொடியாக நறுக்கிக் கொண்டேன். பச்சை மிளகாய் இரண்டைப் பிளந்து வைத்துக் கொண்டேன்.


படங்களுக்கு நன்றி கூகிளார்

அடுப்பில் குக்கரை வைத்துக்கொஞ்சம் எண்ணெய்/வெண்ணெய் சேர்த்துக் காய வைத்துக் கொண்டேன். ஜீரகம், சோம்பு, முழு மிளகு வகைக்கு ஒரு தேக்கரண்டி போட்டுத் தாளித்து லவங்கப்பட்டை ஒரு துண்டு பச்சை ஏலக்காய் 2, ஒரு கிராம்பு போட்டுக் கொண்டேன்.  பச்சை மிளகாய், இஞ்சியைப் போட்டுக் கொஞ்சம் வதக்கிக் கொண்டு வெங்காயத்தைப் போட்டு அது வதங்க ஒரு தேக்கரண்டி சர்க்கரையைச் சேர்த்து நன்கு வதக்கிக் கொண்டேன். வெங்காயம் வதங்கியதும் காரட்டைப் போட்டு வதக்கினேன். காரட் கொஞ்சம் வதங்கியதும் அரைத் தேக்கரண்டி மஞ்சள் பொடி, கால் தேக்கரண்டி மிளகாய்ப் பொடி(காரம் அதிகம்) ஒரு தேக்கரண்டி தனியாப் பொடி, கால் தேக்கரண்டி கரம் மசாலாப் பொடி போட்டுக் காய்களோடு நன்கு கலக்கும்படி வதக்கிக் கொண்டேன். எல்லாம் நன்கு கலந்ததும் நீரோடு  ஊற வைத்திருக்கும் அரிசியை அப்படியே அதில் சேர்த்தேன். மேற்கொண்டு நீர் வேண்டாம். பாஸ்மதி அரிசி அதிகம் நீர் தாங்காது. தேவையான உப்பைச் சேர்த்தேன். ஏனெனில் பட்டாணியில் கொஞ்சம் உப்புப் போட்டிருக்கோம். பனீருக்கும் கொஞ்சம் உப்புச் சேர்த்திருக்கோம். ஆகவே குறைவான உப்பே போதும்.

கொத்துமல்லித் தழை, புதினா இருந்தால் காரட், வெங்காயம் வதக்கையில் பொடியாக நறுக்கிச் சேர்த்து வதக்கலாம். அல்லது பச்சையாகக் கடைசியில் மேலே தூவலாம். இரண்டுமே இல்லை. குக்கரை மூடித் தணித்தே அடுப்பை எரிய விட்டு நன்கு மேலே ஆவி வந்ததும் வெயிட்டைப் போட்டேன். சிறிது நேரத்தில் ஒரு விசில் வர அடுப்பை உடனே அணைத்து விட்டேன். இதற்கு நடுவில் ஒரு வாணலியில் அல்லது பிடித்தமானால் நான் ஸ்டிக் தோசைக்கல்லில் நெய்யை விட்டுக் கொண்டு மசாலா சேர்த்து ஊற வைத்திருக்கும் பனீர் துண்டுகளை நன்கு ப்ரவுன் நிறம் வரும் வரை பிரட்டிக் கொள்ள வேண்டும். அதிகம் பிரட்ட வேண்டாம். ரப்பர் மாதிரி ஆயிடும். இங்கே குக்கர் திறந்ததும் வறுத்த பனீர்த் துண்டுகளை அதில் சேர்த்துக் கொத்துமல்லி, புதினா போடுவதானால் போட்டுவிட்டு மெதுவாகக் கிளறணும். அரிசி உடையாமல் கிளறிக் கொடுக்கணும். 

இதை வெங்காயப் பச்சடி, காரட் பச்சடி, வெள்ளரிக்காய்ப் பச்சடி, தக்காளிப் பச்சடி ஆகியவற்றோடு சாப்பிடலாம். பண்ணும்போதோ, சாப்பிடும்போதோ இதைப் பதிவாகப் போடும் எண்ணமே இல்லை. ஆனால் சாயந்திரம் திடீர்னு தோன்றிய ஓர் உந்துதலில் மிச்சம் இருக்கும் புலவைப் படம் எடுத்துக் கொண்டேன். மற்றப் படங்கள் வழக்கம் போல் எடுக்கலை. ஹிஹிஹிஹி. கீழே மிச்சம் இருக்கும் பனீர் புலவ். பனீர் எங்கேனு கேட்காதீங்க! பொறுக்கிச் சாப்பிட்டுட்டேன்! :)))))


இன்று செய்த பனீர் புலவ் படம்

எல்லாப்படங்களையும் ஒழுங்கா எடுத்திருந்தால் எ.பி.க்குத் திங்கக்கிழமைப் பதிவுக்கு அனுப்பி இருப்பேன். இதையே "எண்ணங்கள்" வலைப்பக்கம் போட நினைச்சு அப்புறமா இங்கேயே போடலாம்னு போட்டுட்டேன். யாருக்கெல்லாம் முடியுதோ வந்து சாப்பிடுங்கப்பா!

Friday, January 8, 2021

தக்காளி சாத வகைகள்!

 கிட்டத்தட்ட 2 மாதங்கள் ஆகிவிட்டன, இந்தப் பக்கம் வந்து. பாரம்பரியச் சமையல்கள் பகுதி2 வெளியிடுவதற்காகப் பதிவுகளைச் சேர்த்து எடிட் செய்யத் தயார் செய்து கொண்டிருந்தேன். நடுவில் கண் பிரச்னைகள்/அடுத்தடுத்து வேறு சில பிரச்னைகள்! சுத்தமாய் எந்தப் பதிவுமே எழுதவில்லை. இப்போத் தான் மற்றப் பதிவுகளும் எழுத ஆரம்பித்திருக்கேன். இங்கேயும் போடலாம்னு வந்தேன். இப்போத் தக்காளி சாதம் செய்முறையைப் பார்க்கலாம். இதை ஒவ்வொருத்தர் ஒவ்வொரு முறையில் செய்யறாங்க. நான் பொதுவாகச் செய்யும் முறையைப் போட்டுவிட்டுப் பின்னர் மற்றவற்றையும் பகிர்கிறேன்.

*************************************************************************************

நான் பொதுவாக இதற்கென பாசுமதி அரிசியெல்லாம் வாங்கிச் சமைத்தது இல்லை. சாதாரணமாகச் சமைக்கும் அரிசியிலேயே செய்துடுவேன். மிகவும் எளிதாகச் செய்து விடலாம். நான்கு பேருக்கான அளவைக் கீழே கொடுக்கிறேன்.

சமைத்த சாதம் உதிர் உதிராக இரண்டு கிண்ணம். 

தக்காளி, நல்ல பழுத்ததாக நான்கு/நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.

வெங்காயம் பெரிது ஒன்று/நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.

பச்சை மிளகாய் ஒன்று, மஞ்சள் பொடி அரைத் தேக்கரண்டி

சாம்பார்ப் பொடி அல்லது மிளகாய்ப் பொடி+தனியாப் பொடி வகைக்கு ஒரு தேக்கரண்டி. அல்லது சாம்பார்ப் பொடி எனில் ஒன்றரை தேக்கரண்டி.

ஏலக்காய், கிராம்பு, லவங்கப்பட்டை, மசாலா இலை வகைக்கு ஒன்று லவங்கப்பட்டை ஒரு சின்னத் துண்டு.

தாளிக்க : கடுகு, ஜீரகம், சோம்பு, தாளிக்க சமையல் எண்ணெய் ஒரு மேஜைக்கரண்டி

உப்பு தேவைக்கு

பச்சைக்கொத்துமல்லி பொடியாக நறுக்கியது இரண்டு மேஜைக்கரண்டி

ஆரம்ப காலங்களில் இதற்கு மசாலாப் பொடி எல்லாம் போட்டதில்லை. மசாலா சாமான்களும் பின்னாட்களிலேயே தாளிக்க ஆரம்பித்தேன். 

சாதத்தை உதிர் உதிராக உதிர்த்துக் கொண்டு அரைத் தேக்கரண்டிஉப்புச் சேர்த்து ஒரு தேக்கரண்டி நெய்யை விட்டு வைத்துக் கொள்ளவும்

கடாயில் சமையல் எண்ணெய் ஒரு மேஜைக்கரண்டி ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, ஜீரகம், சோம்பு வரிசையாகத் தாளிக்கவும். பிடித்தால் பெருங்காயத் தூள் அரைத்தேக்கரண்டி சேர்க்கவும். பின்னர் கிராம்பு, ஏலக்காய், லவங்கப்பட்டை, தேஜ்பத்தா என்னும் மசாலா இலை ஆகியவற்றைப் போட்டு வறுத்துக் கொள்ளவும். வாசனை வந்ததும் பச்சை மிளகாயைப் போட்டுக் கூடவே நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் சீக்கிரம் வதங்க அரைத் தேக்கரண்டி சர்க்கரை அல்லது உப்பைச் சேர்க்கலாம். வெங்காயம் வதங்கியதும் நீளமாக நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும். தக்காளியை நன்கு வதக்கவும். தக்காளி பாதி வதங்கியதும் மஞ்சள் பொடி, சாம்பார்ப் பொடி அல்லது மிளகாய்த்தூள்/தனியாத் தூள் சேர்க்கவும். நன்கு வதக்கவும். அரைக் கிண்ணம் நீரை ஊற்றிக் கொண்டு தக்காளி நன்கு குழைந்து சேர்ந்து வரும்வரை வதக்கிக் கொள்ளவும். குழைந்த நிலையில் உப்பைச் சேர்த்து நன்கு கிளறவும். 

உதிரான சாதத்தை அதன் மேல் போட்டுச் சாதம் உடையாமல் நன்கு கிளறவும். உப்புச் சேர்க்க வேண்டாம். நன்கு கிளறி எல்லாம் நன்கு கலந்ததும் பொடியாக நறுக்கிய கொத்துமல்லித் தழையைப் போட்டுக் கலக்கவும். தயிர்ப்பச்சடி காரட்/வெங்காயம் போட்டுப் பண்ணி அதோடு சாப்பிடலாம். 

இன்னொரு முறையில் தக்காளியை அரைத்துக் கொண்டு சாறு எடுத்துக் கொண்டு செய்வது. இம்முறையில் அரிசியைச் சமைக்காமல் அந்தத் தக்காளிச் சாறிலேயே வேக வைக்கலாம்.

தக்காளி நான்கு (ப்ளாஞ்சிங் முறையில் வெந்நீரில் ஊற வைத்து) சாறு எடுத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணம் சாறு இருந்தால் போதுமானது.

அரிசி ஒரு கிண்ணம் (இதற்கு பாஸ்மதி அரிசி நன்றாக இருக்கும். அரிசியைக் களைந்து கொண்டு வடிகட்டி நெய்யில் வறுத்து ஒன்றரைக் கிண்ணம் வெந்நீரில் ஊற வைக்கவும்.

தேங்காய் (பிடித்தமானால்) இரண்டு மேஜைக்கரண்டி துருவலை அரைத்துத் தேங்காய்ப் பால் எடுக்கவும். அதைத் தனியாக வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம் பெரிது ஒன்று பொடியாக/நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.

தாளிக்கும் பொருட்கள்

ஜீரகம், சோம்பு, தேஜ்பத்தா என்னும் மசாலா இலை, கிராம்பு, ஏலக்காய், லவங்கப்பட்டை

தாளிக்க எண்ணெய்/நெய் கொஞ்சம்

உப்பு தேவைக்கு

மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி, கரம் மசாலாப் பொடி

கொத்துமல்லி பொடியாக நறுக்கியது. 

தாளிக்கும் எண்ணெயைக் குக்கரில் விட்டுத் தாளிக்கும் பொருட்களைப் போட்டுத் தாளிக்கவும். மிளகாய்த் தூள், தனியாத் தூள், கரம் மசாலாத் தூள், மஞ்சள் பொடி சேர்க்கவும்.  வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் ஊற வைத்த அரிசியை நன்கு வடிகட்டி ஒரு கிண்ணம் அரிசிக்குத் தக்காளிச் சாறும் தேங்காய்ப் பாலும் சேர்ந்தாற்போல் ஒன்றரைக்கிண்ணம் வரும்படி எடுத்துக் கொண்டு அரிசியோடு கலக்கவும். இந்தக் கலவையைக் குக்கரில் வதங்கிய வெங்காயத்தோடு சேர்க்கவும். ஒரு தேக்கரண்டி சர்க்கரையும் தேவையான உப்பையும் சேர்க்கவும். குக்கரை மூடி ஒரே விசில் கொடுத்து அடுப்பை அணைக்கவும். பின்னர் குக்கர் தானாகத் திறக்க வந்ததும் திறந்து பச்சைக் கொத்துமல்லியைத் தூவவும். இதையும் வெங்காயப் பச்சடி, காரட் பச்சடியோடு சாப்பிடலாம். 

Friday, November 13, 2020

வெஜிடபுள் பிரியாணி அரைத்து விடாமல்!

அடுத்த முறை எல்லாவற்றையும் தாளிப்பில் போட்டுச் செய்வது. இதையும் வெஜிடபுள் பிரியாணி என்றே சொல்லுவோம். முன்னர் சொன்னது பெரும்பாலும் தமிழ்நாட்டில் செய்யும் முறை எனில் இந்த முறை பரவலாக அனைவரும் செய்வது. பெரும்பாலும் வட மாநிலங்களில் செய்வது. இதற்கும் தேவையானது பாஸ்மதி அரிசியே

 பாஸ்மதி அரிசி ஒரு கிண்ணம். நன்கு களைந்து நீரில் ஊற வைக்கவும்.

மசாலா பொருட்கள்

பிரிஞ்சி இலை (தேஜ்பத்தா) ஒரு இலை அல்லது 2

லவங்கப்பட்டை ஒரு பெரிய துண்டு

லவங்கம் 2இல் இருந்து 4க்குள் (அதிகம் போட்டால் காரம் அதிகம் தெரியும்.)

ஏலக்காய் கறுப்பு ஒன்று

ஷாஜீரா எனப்படும் கருஞ்சீரகம் அரைத் தேக்கரண்டி

சீரகம் ஒரு தேக்கரண்டி

star anise எனப்படும் நக்ஷத்திர சோம்பு அல்லது சோம்பு ஒரு தேக்கரண்டி

வெங்காயம் பொடியாக நறுக்கியது ஒன்று

பச்சை மிளகாய் ஒன்று அல்லது இரண்டு

இஞ்சி, பூண்டு விழுது அல்லது இஞ்சி துருவியது, பூண்டு பொடியாக நறுக்கியது வகைக்கு ஒரு தேக்கரண்டி. பூண்டு பிடித்தால் சேர்க்கலாம். இல்லை எனில் சேர்க்க வேண்டாம்.

மஞ்சள் பொடி ஒரு தேக்கரண்டி

காய்கள் கலந்தவையாக உ.கி. பட்டாணி, காரட், பீன்ஸ், காலிப்ளவர், நூல்கோல், டர்னிப் போன்றவை இரண்டு கிண்ணம் நறுக்கியவை

தேவைப்பட்டால் பொடியாக நறுக்கிய புதினா இலைகள், கொத்துமல்லி இலைகள்

மிளகாய்த் தூள் தேவைக்கு. ஏற்கெனவே பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்திருப்பதால் அரைத் தேக்கரண்டி போதும்.

கரம் மசாலாப் பொடி அல்லது பிரியாணி மசாலாப் பொடி அரைத்தேக்கரண்டி

உப்பு தேவைக்கு

தக்காளி பெரிதாக ஒன்று (பிடித்தமானால்)

தயிர் ஒரு சின்னக்கிண்ணம்.

ஒரு தேக்கரண்டி சர்க்கரை

அடுப்பிலே ஓர் அடி கனமான பாத்திரம் அல்லது குக்கரை வைக்கவும். வெண்ணெயும் சமையல் எண்ணெயுமாகக் கலந்து ஒரு மேஜைக்கரண்டி ஊற்றி முதலில் சொன்ன மசாலா சாமான்களை ஒவ்வொன்றாகப் போட்டுப் பொரிந்ததும் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்க ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்க்கலாம். பின்னர் பச்சை மிளகாயைப் போட்டுக் கொஞ்சம் வதக்கிக் கொண்டு இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்துப் பச்சை வாசனை போக வதக்கவும்.

இப்போது நறுக்கிய காய்களைப் போட்டு வதக்கவும். காய்கள் கொஞ்சம் வதங்கியதும் தேவை எனில் புதினா/கொத்துமல்லி இலைகளைச் சேர்த்து வதக்கவும்.  பின்னர் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள்/பிரியாணி மசாலாத் தூள் சேர்த்துக் காய்களோடு நன்கு கலக்கும்படி வதக்கவும். தக்காளியைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். தக்காளி நன்கு உருத்தெரியாமல் ஆனதும் தயிரைச் சேர்க்கவும். தயிர் நன்கு கலந்து காய்கள் கெட்டியாக ஆனதும் அதைப் பாத்திரத்தில் பரப்பினாற்போல் வைக்கவும்.

இப்போது களைந்து ஊற வைத்திருக்கும் அரிசியை நீரை வடித்துவிட்டுக் காய்களின் மேல் பரப்பினாற்போல் போடவும். பக்கத்தில் இன்னொரு அடுப்பில் நீரைக் கொதிக்க வைக்கவும். அதில் அரைத்தேக்கரண்டி உப்பைச் சேர்க்கவும். தேவை எனத் தோன்றினால் இன்னும் ஒரு கால் தேக்கரண்டி உப்புச் சேர்க்கலாம். அந்த நீரைக் காய்கள்+அரிசிக் கலவையின் மேல் பரவலாக ஊற்றவும். அரிசியை நன்கு பரப்பினாற்போல் வைக்கவும். இதைக் குக்கரில் வைத்தால் ஒன்றரைக் கிண்ணம் நீரும் நேரடியாக வேக வைத்தால் இரண்டு கிண்ணம் நீரும் தேவைப்படும்.குக்கர் எனில் மூடியை மூடி விட்டு ஒரே ஒரு விசில் கொடுத்து அடுப்பை அணைக்கவும். நேரடியாக வைத்திருந்தால் குறைவான சூட்டில் சமைத்துவிட்டு அரிசி முழுதும் நன்கு வெந்ததும் அடுப்பை அணைக்கவும். அந்தச் சூட்டிலேயே அப்படியே சிறிது நேரம் வைத்திருக்கவும். விருப்பமானால் வெங்காயத்தை நீளத்துண்டுகளாக நறுக்கிக் கொண்டு நெய்யில் வறுத்து மேலே தூவலாம். மேலே பச்சைக்கொத்துமல்லி இலைகளையும், புதினா இலைகளையும் பொடியாக நறுக்கித் தூவலாம். ப்ரெட் துண்டங்களை நெய்யில் வறுத்துச் சேர்க்கலாம். தேவைப்பட்டால் எலுமிச்சைச் சாறு இரண்டு தேக்கரண்டி சேர்த்துச் சாதம் உடையாமல் நன்கு கலக்கவும். வெங்காயப் பச்சடி, காரட், வெள்ளரி, தக்காளிப் பச்சடியுடன் பரிமாறவும்.