எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, January 8, 2021

தக்காளி சாத வகைகள்!

 கிட்டத்தட்ட 2 மாதங்கள் ஆகிவிட்டன, இந்தப் பக்கம் வந்து. பாரம்பரியச் சமையல்கள் பகுதி2 வெளியிடுவதற்காகப் பதிவுகளைச் சேர்த்து எடிட் செய்யத் தயார் செய்து கொண்டிருந்தேன். நடுவில் கண் பிரச்னைகள்/அடுத்தடுத்து வேறு சில பிரச்னைகள்! சுத்தமாய் எந்தப் பதிவுமே எழுதவில்லை. இப்போத் தான் மற்றப் பதிவுகளும் எழுத ஆரம்பித்திருக்கேன். இங்கேயும் போடலாம்னு வந்தேன். இப்போத் தக்காளி சாதம் செய்முறையைப் பார்க்கலாம். இதை ஒவ்வொருத்தர் ஒவ்வொரு முறையில் செய்யறாங்க. நான் பொதுவாகச் செய்யும் முறையைப் போட்டுவிட்டுப் பின்னர் மற்றவற்றையும் பகிர்கிறேன்.

*************************************************************************************

நான் பொதுவாக இதற்கென பாசுமதி அரிசியெல்லாம் வாங்கிச் சமைத்தது இல்லை. சாதாரணமாகச் சமைக்கும் அரிசியிலேயே செய்துடுவேன். மிகவும் எளிதாகச் செய்து விடலாம். நான்கு பேருக்கான அளவைக் கீழே கொடுக்கிறேன்.

சமைத்த சாதம் உதிர் உதிராக இரண்டு கிண்ணம். 

தக்காளி, நல்ல பழுத்ததாக நான்கு/நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.

வெங்காயம் பெரிது ஒன்று/நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.

பச்சை மிளகாய் ஒன்று, மஞ்சள் பொடி அரைத் தேக்கரண்டி

சாம்பார்ப் பொடி அல்லது மிளகாய்ப் பொடி+தனியாப் பொடி வகைக்கு ஒரு தேக்கரண்டி. அல்லது சாம்பார்ப் பொடி எனில் ஒன்றரை தேக்கரண்டி.

ஏலக்காய், கிராம்பு, லவங்கப்பட்டை, மசாலா இலை வகைக்கு ஒன்று லவங்கப்பட்டை ஒரு சின்னத் துண்டு.

தாளிக்க : கடுகு, ஜீரகம், சோம்பு, தாளிக்க சமையல் எண்ணெய் ஒரு மேஜைக்கரண்டி

உப்பு தேவைக்கு

பச்சைக்கொத்துமல்லி பொடியாக நறுக்கியது இரண்டு மேஜைக்கரண்டி

ஆரம்ப காலங்களில் இதற்கு மசாலாப் பொடி எல்லாம் போட்டதில்லை. மசாலா சாமான்களும் பின்னாட்களிலேயே தாளிக்க ஆரம்பித்தேன். 

சாதத்தை உதிர் உதிராக உதிர்த்துக் கொண்டு அரைத் தேக்கரண்டிஉப்புச் சேர்த்து ஒரு தேக்கரண்டி நெய்யை விட்டு வைத்துக் கொள்ளவும்

கடாயில் சமையல் எண்ணெய் ஒரு மேஜைக்கரண்டி ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, ஜீரகம், சோம்பு வரிசையாகத் தாளிக்கவும். பிடித்தால் பெருங்காயத் தூள் அரைத்தேக்கரண்டி சேர்க்கவும். பின்னர் கிராம்பு, ஏலக்காய், லவங்கப்பட்டை, தேஜ்பத்தா என்னும் மசாலா இலை ஆகியவற்றைப் போட்டு வறுத்துக் கொள்ளவும். வாசனை வந்ததும் பச்சை மிளகாயைப் போட்டுக் கூடவே நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் சீக்கிரம் வதங்க அரைத் தேக்கரண்டி சர்க்கரை அல்லது உப்பைச் சேர்க்கலாம். வெங்காயம் வதங்கியதும் நீளமாக நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும். தக்காளியை நன்கு வதக்கவும். தக்காளி பாதி வதங்கியதும் மஞ்சள் பொடி, சாம்பார்ப் பொடி அல்லது மிளகாய்த்தூள்/தனியாத் தூள் சேர்க்கவும். நன்கு வதக்கவும். அரைக் கிண்ணம் நீரை ஊற்றிக் கொண்டு தக்காளி நன்கு குழைந்து சேர்ந்து வரும்வரை வதக்கிக் கொள்ளவும். குழைந்த நிலையில் உப்பைச் சேர்த்து நன்கு கிளறவும். 

உதிரான சாதத்தை அதன் மேல் போட்டுச் சாதம் உடையாமல் நன்கு கிளறவும். உப்புச் சேர்க்க வேண்டாம். நன்கு கிளறி எல்லாம் நன்கு கலந்ததும் பொடியாக நறுக்கிய கொத்துமல்லித் தழையைப் போட்டுக் கலக்கவும். தயிர்ப்பச்சடி காரட்/வெங்காயம் போட்டுப் பண்ணி அதோடு சாப்பிடலாம். 

இன்னொரு முறையில் தக்காளியை அரைத்துக் கொண்டு சாறு எடுத்துக் கொண்டு செய்வது. இம்முறையில் அரிசியைச் சமைக்காமல் அந்தத் தக்காளிச் சாறிலேயே வேக வைக்கலாம்.

தக்காளி நான்கு (ப்ளாஞ்சிங் முறையில் வெந்நீரில் ஊற வைத்து) சாறு எடுத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணம் சாறு இருந்தால் போதுமானது.

அரிசி ஒரு கிண்ணம் (இதற்கு பாஸ்மதி அரிசி நன்றாக இருக்கும். அரிசியைக் களைந்து கொண்டு வடிகட்டி நெய்யில் வறுத்து ஒன்றரைக் கிண்ணம் வெந்நீரில் ஊற வைக்கவும்.

தேங்காய் (பிடித்தமானால்) இரண்டு மேஜைக்கரண்டி துருவலை அரைத்துத் தேங்காய்ப் பால் எடுக்கவும். அதைத் தனியாக வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம் பெரிது ஒன்று பொடியாக/நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.

தாளிக்கும் பொருட்கள்

ஜீரகம், சோம்பு, தேஜ்பத்தா என்னும் மசாலா இலை, கிராம்பு, ஏலக்காய், லவங்கப்பட்டை

தாளிக்க எண்ணெய்/நெய் கொஞ்சம்

உப்பு தேவைக்கு

மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி, கரம் மசாலாப் பொடி

கொத்துமல்லி பொடியாக நறுக்கியது. 

தாளிக்கும் எண்ணெயைக் குக்கரில் விட்டுத் தாளிக்கும் பொருட்களைப் போட்டுத் தாளிக்கவும். மிளகாய்த் தூள், தனியாத் தூள், கரம் மசாலாத் தூள், மஞ்சள் பொடி சேர்க்கவும்.  வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் ஊற வைத்த அரிசியை நன்கு வடிகட்டி ஒரு கிண்ணம் அரிசிக்குத் தக்காளிச் சாறும் தேங்காய்ப் பாலும் சேர்ந்தாற்போல் ஒன்றரைக்கிண்ணம் வரும்படி எடுத்துக் கொண்டு அரிசியோடு கலக்கவும். இந்தக் கலவையைக் குக்கரில் வதங்கிய வெங்காயத்தோடு சேர்க்கவும். ஒரு தேக்கரண்டி சர்க்கரையும் தேவையான உப்பையும் சேர்க்கவும். குக்கரை மூடி ஒரே விசில் கொடுத்து அடுப்பை அணைக்கவும். பின்னர் குக்கர் தானாகத் திறக்க வந்ததும் திறந்து பச்சைக் கொத்துமல்லியைத் தூவவும். இதையும் வெங்காயப் பச்சடி, காரட் பச்சடியோடு சாப்பிடலாம். 

12 comments:

 1. நாங்களும் பாசுமதி அரிசியில் எல்லாம் சமைப்பதில்லை.  சாதா அரிசிதான்.  மசாலாவில் ஏலக்காய் அவ்வப்போதாவது சேர்க்க பாஸிடம் சொல்வேன்.  அவர் பெரும்பாலும் சேர்ப்பதில்லை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், பிரியாணி, புலவு போன்றவற்றைக் கூட நான் சாப்பாடு அரிசியிலேயே செய்திருக்கேன். ஏலக்காய் ஜீரணம் ஆகும். சாப்பாடு சாப்பிட்டு வயிறு கனமாக இருந்தால் 2,3 ஏலக்காயை மென்று தின்றுவிட்டு வெந்நீர் குடித்தால் சரியாயிடும். இதனால் அதான் அந்தக்காலங்களில் ஸ்ராத்தம் அன்று பிராமணர்கள் சாப்பிட்டு முடித்ததும் கொடுக்கும் வெற்றிலை, பாக்கில் ஏலக்காய், கிராம்பு வைத்துப் போட்டுக்கொள்ளக் கொடுப்பார்கள். இப்போதெல்லாம் யாரும் வெற்றிலை போடுவதும் இல்லை. ஏலக்காய், கிராம்பு வைத்துக் கொடுப்பதும் இல்லை.

   Delete
 2. இரண்டாவது முறையில் இதுவரை செய்ததில்லை.  ஆனால் இந்த முறையில் தேங்காய் சாதம் ஒன்று செய்திருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. 2ஆவது முறை பல வருடங்கள் முன்ன்ன்ன்ன்ன்ன்னர் என் மாமி செய்து ஒரு முறை சாப்பிட்டேன் ஶ்ரீராம். ஆனால் அவர் புழுங்கலரிசியில் பண்ணி இருந்தார். ஆனாலும் நன்றாகவே இருந்தது. வெங்காயம் போடுவதெனில் அதையும் சேர்த்து அரைத்துக்கொள்ளலாம் என்றார். நறுக்கிச் சேர்க்காமல் வெங்காயத்தைச் சாறு எடுத்துச் சமை9க்கலாம் என்றார்.

   Delete
 3. இரண்டாவது முறையில் மகள் செய்வாள்.
  மசாலா பொருட்களைக் குறைத்துக் கொள்ள சொல்வேன். அவ்வளவாகப்
  பிடிப்பதில்லை. நல்ல தயாரிப்பு அன்பு கீதாமா.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி, மசாலாப் பொருட்கள் அனைத்தும் போடாமல் வெறும் ஏலக்காய், கிராம்பு போட்டாலே போதுமே! மணக்கும்!

   Delete
 4. நல்லா செய்முறை சொல்லியிருக்கீங்களே, இப்போவே பண்ணிச் சாப்பிடலாம் என்று நினைத்தேன்... கடுகு ஜீரகம் ஓகே. அப்புறம் போட்டிருக்கும் சோம்பு, தேஜ் பத்தா...லிஸ்டைப் பார்த்தால் இது நமக்குச் சரிப்படாதுன்னு தோணுது.

  இவை எதுவும் இல்லாமல், கடுகு சீரகம் பெருங்காயம் உ.பருப்பு கருவேப்பிலை திருவமாறி, தக்+வெங்+சாம்பார் பொடி போட்டு இப்போ பண்ணிப்பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெல்லைத் தமிழரே, இந்தச் சாமான்களை எல்லாம் நாம் மசாலா சாமான்கள் என ஒதுக்கினாலும் தீபாவளி மருந்து, பிரசவ லேகியம் ஆகியவற்றில் நிறையவே பயன்படுத்துவாங்க! தேஜ் பத்தா என்னும் மசாலா இலை பாதி போட்டால் போதுமே! கடுகு, உபருப்பு, கபருப்புப் போட்டு ஒரூ செய்முறை இருக்கு. ஆனால் இந்தச் சாமான்கள் போட்டால் பருப்பு வகைகள் தாளித்தால் அவ்வளவு நன்றாய் இருக்காது. சோம்பு நெய்யில் வறுத்து சாப்பாடுக்குப் பின்னர் வாயில் போட்டு மென்றால் ஜீரணமும் ஆகும். நாம் சாப்பிட்ட உணவின் துர் நாற்றமும் நீங்கும். இரவில் நல்ல உறக்கமும் வரும்.

   Delete
 5. பாசுமதி அரிசிலாம் ஒரு காலத்திலதான். எப்போ அது உடலுக்கு அவ்வளவாக நல்லதில்லை என்று படித்தேனோ அப்போதிலிருந்து சோனா மசூரிதான்..பிறகு கோலம் ரைஸுக்கு மாறிட்டேன். கோலம் கிடைக்கலைனா சோனா மசூரி

  ReplyDelete
 6. நெ.த. பாஸ்மதி அரிசி உடலுக்கு முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது என்றே கேள்விப் பட்டிருக்கேன். சோனா மசூரி நாங்களும் வாங்கிச் சாப்பிட்டிருக்கோம். இப்போத் தஞ்சை ஜில்லாவில் வயலில் இருந்து இயற்கை உரம் போடப்பட்ட அரிசி/தீட்டாதது வருவதால் அது தான் சாப்பிடுகிறோம்.

  ReplyDelete
 7. பாஸ்மதி ரைஸ் தமிழகத்தில் இருந்தவரை பயன்படுத்தியதில்லை. தில்லி வந்த பிறகு சில சமயங்களில் பயன்படுத்துவதுண்டு - அதன் சுவை எனக்குப் பிடிப்பதில்லை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், நாங்களும் பாஸ்மதி அரிசி அதிகம் பயன்படுத்தியதில்லை. முதல் முதல் அம்பேரிக்காப் போனப்போ அங்கே முழுக்க முழுக்க பாஸ்மதி தான். பழக முதலில் சிரமமாக இருந்தாலும் பின்னால் பழகிக் கொண்டோம். இன்னிக்குக் கூட பாஸ்மதி அரிசியை வைத்துத் தான் பனீர் புலவ் செய்திருக்கேன்.

   Delete