எப்படியோ இந்த வலைப்பக்கமும் அடிக்கடி வரமுடியாமல் போகிறது. இப்போல்லாம் என்னவோ ஏதோ ஒரு காரணத்தால் மத்தியானம் சாப்பிட்டு வேலைகளை முடித்துக்கொண்டு உட்காரும்போதே ஒரு மணி ஒன்றரைமணினு ஆகிவிடுவதால் அதிகம் நேரம் செலவு செய்ய முடிவதில்லை. ஒவ்வொரு முறையும் இனியாவது தொடர்ந்து எழுத நினைப்பேன். முடியாமல் போகிறது.
சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ளக் குடைமிளகாயோடு உருளைக்கிழங்கைப் போட்டுக் கறி பண்ணுவோம். அதிலே சில மாற்றங்களோடு கூடிய ஒரு முறையை இங்கே பகிர்கிறேன். சென்ற வாரம் பண்ணினேன். படமெல்லாம் எடுக்கவில்லை. இந்த முறை வட மாநிலங்களில் அடிக்கடி பண்ணுவார்கள், ஒரே மாதிரியான ருசியாக இல்லாமல் மாற்றி மாற்றிப் பண்ணினால் ஓர் ருசி வரும் என்பதற்காகப் பண்ணுவது தான் இது. மற்றபடி அடிப்படை ஒன்றே. இதில் கொஞ்சம் மசாலாக்களை மாற்றிச் சேர்க்க வேண்டும். அவ்வளவே!
ஜீரகம் ஒன்றரை தேக்கரண்டி,
மிளகு ஒரு தேக்கரண்டி,
2 ஏலக்காய், சோம்பு அரைத் தேக்கரண்டி,
புதினா இலைகள் காய வைத்தவை பொடித்தது ஒரு தேக்கரண்டி,
கறுப்பு உப்பு ஒரு தேக்கரண்டி,
தனியாப் பொடி, இரண்டு தேக்கரண்டி,
அம்சூர் பவுடர் ஒரு தேக்கரண்டி,
கரம் மசாலா ஒரு தேக்கரண்டி
இவற்றில் ஜீரகம், மிளகு,ஏலக்காய், சோம்பு, புதினா இலைகள் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்துக்கொண்டு மற்றப் பொருட்களையும் சேர்த்துக் கொண்டு மிக்சி ஜாரில் பொடி பண்ணிக் கொள்ளவும். இந்த மசாலாக் கலவை தான் இந்த உணவின் தனிச் சிறப்பு. இப்போது காய்களை நறுக்கிக் கொள்ளலாம்.
குடமிளகாய் இரண்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
நடுத்தரமான உருளைக்கிழங்கு இரண்டு. நன்கு கழுவித் தோல் சீவிட்டுப் பின்னர் துண்டங்கள் ஆக்கிக் கொள்ளவும்.
தக்காளி நடுத்தரமான அளவில் 2 பொடியாக நறுக்கவும்
பச்சை மிளகாய், இஞ்சி பொடியாக நறுக்கவும்
கொத்துமல்லித் தழை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்
ஒரு தேக்கரண்டி மிளகாய்த் தூள், அரைத்தேக்கரண்டி மஞ்சள் தூள்
உப்பு தேவைக்கு, ஏற்கெனவே மசாலாப் பொடியில் கறுப்பு உப்பு சேர்த்திருப்பதால் உப்பைப் பார்த்துப் போடணும்.
தாளிக்க, வதக்க எண்ணெய், பெருங்காயம் ஒரு தேக்கரண்டி, ஓமம் ஒரு தேக்கரண்டி தாளிக்க
இணையத்தில் தேடினாலும் இந்தச் செய்முறை கிடைக்கும். நான் டாடா உணவுப் பொருட்களின் விளம்பரங்களில் அடிக்கடி பார்ப்பேன்.
எல்லாவற்றையும் தயார் செய்து கொண்டு அடுப்பில் கடாயை வைத்துக் கொண்டு எண்ணெயைக் காய விடவும். எண்ணெய் காய்ந்ததும் ஓமம், பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்த கையோடு நறுக்கிய உருளைக்கிழங்குகளைப் போட்டு நன்கு வதக்கவும். உருளைக்கிழங்கு நன்கு வதங்கியதும் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கிக் கொண்டு மஞ்சள் பொடி, மிளகாய்த் தூள் சேர்த்து உருளைக்கிழங்கு முழுவதிலும் கலக்கும்படி வதக்கிக் கொள்ளவும். இப்போது நறுக்கிய தக்காளிப் பழங்களைச் சேர்த்துத் தக்காளி நன்கு வதங்கும் வரையிலும் வதக்கவும். உப்புத் தேவையானால் இப்போது கொஞ்சமாகச் சேர்க்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் குடமிளகாய்த் துண்டங்களைச் சேர்த்து நாம் ஏற்கெனவே பொடி செய்து வைத்திருக்கும் மசாலாப் பொடியில் தேவையான அளவுக்கு இதில் சேர்த்து நன்கு கலக்கவும். குடமிளகாய்த் துண்டங்கள் நன்கு வெந்து மசாஆவில் கலக்கும் வரைக்கும் வதக்கவும். ஒரு தட்டைப் போட்டு மூடி வைத்தும் வதக்கலாம். எல்லாம் நன்கு கலந்த பின்னர் பொடியாக நறுக்கியக் கொத்துமல்லித் தழைகளைத் தூவி விட்டு ஒரு தேக்கரண்டி கசூரி மேத்தியைக் கைகளால் கசக்கிச் சேர்க்கவும். பின்னர் நன்கு கலந்ததும் ஃபுல்கா ரொட்டி, பராத்தா ஆகியவற்றோடு பரிமாறலாம்.
பிரபல ஓட்டல்களில் செய்யும் சுவையுடன் அமைந்திருக்கும்.
நேற்று என் மனைவி பறங்கிக்காய் (சின்னது), குடமிளகாய், கேரட் போட்டு பருப்புக் குழம்பு பண்ணினாள். நான் சாதம் குழம்பு மட்டும் ரொம்ப சுடச்சுட சாப்பிட்டேன். இன்றைக்கும் அதே பண்ணு, + உருளை வெங் போட்டு கரேமது எனக்குன்னு சொன்னேன். இங்க பார்த்தா நீங்க உருளை குடமிளகாய் கறி என்று எழுதியிருக்கீங்க. இருங்க...நான் போய் முதல்ல சாப்பிட்டுட்டு வர்றேன்
ReplyDeleteவாங்க நெல்லை, நான் பொதுவா உ.கி+கு.மி போட்டுத் தக்காளி சேர்க்காமல் காரப்பொடி மட்டும் போட்டு வதக்கி இருக்கேன். அதுவும் சப்பாத்திக்குத் தான். இம்முறை இது ரொம்பவே நன்றாக இருக்கும்னு தோன்றியதால் முதல் முயற்சி! நன்றாகவே வந்தது. நம்ம ரங்க்ஸ் வாயாலேயே ரொம்ப நல்லா வந்திருக்குனு வந்ததே! வ.வா.பி.ரி. :)))))
Deleteஏதோ உருளைக்கிழங்கும் குடைமிளகாயும், கூட சில சமயம் வெங்காயமும் போட்டு கறி செய்திருக்கிறோம். அது சாப்பாட்டுக்கு ஸைட் டிஷ். இது மாதிரி செய்ததில்லை.
ReplyDeleteசெய்து பாருங்க ஶ்ரீராம், ரெஸ்டாரன்ட் முறையில் ருசி தெரியும்.
Deleteகசூரி மேத்தி, அம்சூர் பொடிக்கெல்லாம் எங்கே போக?!!
ReplyDeleteஎல்லாக் கடைகளிலும் கிடைக்குது. 50 கிராம் அல்லது நூறு கிராம் பாக்கெட் வாங்கி வைத்துக்கொண்டால் போதும். அம்சூர்ப் பொடி பொதுவாக அரைத் தேக்கரண்டிக்கு மேல் போடக்கூடாது(தனியாகச் சேர்த்தால்) புளிப்பு ஜாஸ்தியாயிடும். கசூரி மேதியும் ஒரு தேக்கரண்டி எடுத்து இரு கைகளாலேயும் தேய்த்துக் கடைசியில் போடணும். உங்க வீட்டுச் செலவுக்கு ஒரு வருஷத்துக்கு வரும் இரண்டும். அடிக்கடி எல்லாம் வாங்கும்படி இருக்காது.நான் அம்பத்தூரில் வைச்சிருந்த கசூரி மேதி, அம்சூர் தீர்ந்து போய் இப்போத் தான் 3 மாசங்கள் முன்னால் வாங்கினேன்.
Deleteஅவ்வளவு நாள் வைத்துக் கொள்ளலாமா? பூச்சி வராதா?
DeleteNo. You can keep it. Just do not touch with wet hands and fingers.
Deleteதோலைத்தான் சீவி விடப்போகிறோமே.. அப்புறம் உருளைக்கிழங்கை ஏன் நன்றாய்க் கழுவ வேண்டும்?
ReplyDeleteஉருளைக்கிழங்கு வறுவல், பொடிப்பொடியாய் நறுக்கிய கறி, பஜ்ஜி போன்ற எல்லாவற்றுக்குமே உ.கியை நன்கு திரும்பத் திரும்பக் கழுவ வேண்டும். அப்போது தான் அதில் உள்ள ஸ்டார்ச் முற்றிலும் நீங்கும். உ.கி. வறுவலுக்கு இப்படி அலம்பி எடுத்த பின்னரும் நீரில் போட்டு வைப்போம். வறுவல் வறுக்கும் போது சிறிது நேரம் முன்னால் நன்கு வடிகட்டிப் பரவலாகப் போட்டு வைக்கலாம். உ.கி.யை வேக வைத்துச் செய்யும் வறுவலுக்கு உ.கியைச் சீவி விட்டுக் கழுவி ஒரு இரவு முழுவதும் சீவின வில்லைகளை நீரில் போட்டு வைப்போம். பின்னர் மறுநாள் காலையிலே அதை வடிகட்டி வாயகன்ற பாத்திரத்தில் உ.கி. மூழ்கும் வரை நீரை விட்டு வெந்நீரைக் கொதிக்க வைத்து அதில் உப்புச் சேர்த்து உ.கி. வில்லைகளைப் போட்டு ஒரு நிமிடம் வைத்து விட்டுப் பின்னர் அடுப்பை அணைத்துவிட வேண்டும். அரை மணி/முக்கால் மணிக்குப் பின்னர் வெந்நீரை வடிகட்டி வில்லைகளை நீரில்லாமல் எடுத்துக் கொண்டு வெயிலில் நன்கு காய வைத்து எடுத்து வைத்துக்கொண்டால் எப்போது வேண்டுமானாலும் வறுத்துக் கொள்ளலாம். தேநீரோடு சாப்பிட ஒண்ணும் இல்லைனால் இதை வறுத்துச் சாப்பிடலாம். வட மாநிலங்களில் கொதிக்கும் வெந்நீரிலேயே அவங்களுக்குத் தேவையான மசாலாக்களைச் சேர்த்து விடுவார்கள். புதினா+பமி அரைத்துச் சேர்த்துக் கொதிக்கவிட்டு அதில் உ.கி. வில்லைகளைப் போட்டுப் பண்ணுவது ரொம்பவே பிரபலம்.
Deleteஇதனை நாளை, இரவு சப்பாத்திக்குத் தொட்டுக்கப் பண்ணச் சொல்றேன். அப்புறம் சொல்றேன் நல்லா இருந்ததா இல்லையா என்று. ஓமம் - ரொம்ப டாமினேட்டிங் ஆக இருக்காதா?
ReplyDeleteஇன்று பண்ண முடியாது. காலையில் நான் நுழைந்து உருளைக்கிழங்கு வெங்காயம் போட்ட கரேமது பண்ணச் சொல்லிச் சாப்பிட்டுட்டேன். ஒரே நாள் இரண்டு டிஷ்ஷில் உருளைனா பசங்க ஒத்துக்க மாட்டாங்க
ஓமம் சேர்த்து கசூரி மேதி போட்டுப் பிசைந்து பூரி பண்ணிச் சாப்பிட்டுப் பாருங்கள், பின்னர் விட மாட்டீங்க. ஆனால் எங்களுக்குப் பழகி விட்டது. உங்கள் விஷயம் எப்படியோ தெரியாது. பராத்தாப் பண்ணும்போது கூடச் சில சமயம் கோதுமை மாவோடு +மைதா மாவு அல்லது கடலை மாவு சேர்த்துக் கொஞ்சம் காரம், கறுப்பு உப்பு, ஓமம் சேர்த்துப் பிசைந்து பண்ணுவோம். நன்றாக இருக்கும்.
Deleteசுவையான குறிப்பு. இங்கே செய்வதுண்டு. ஓமம் பொதுவாகவே சப்பாத்தி மாவு பிசையும்போதே சேர்ப்பதுண்டு. நல்ல சுவை இருக்கும்.
ReplyDeleteவாங்க வெங்கட், நானும் சேர்ப்பேன் அடிக்கடி. பஜ்ஜி மாவில், பஜியா மாவில் கூட ஓமம் சேர்த்துப் பண்ணுவேன். வயிற்றுக்கு நல்லதாச்சே!
Deleteஅன்பு கமலாமா,
ReplyDeleteகரு உண்மை. கொஞ்சம் மாறுதலோடு
நான் உணர்ந்ததை எழுதி வருகிறேன்.
அந்த வயதுக்கான புரிதல் அவ்வளவுதான்.
நீங்கள் இதை ரசிப்பதே எபக்கு மகிழ்ச்சி.
ஹாஹாஹாஹா! மாறி வந்திருக்கு!
Deleteநேற்று நானும் இப்படி செய்தேன். வல்லிம்மா தளத்தில் போடவேண்டிய கமெண்ட்டை வெங்கட் தளத்தில் இட்டேன்!!
Delete😂😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
Deleteஅன்பு கீதாமா,
ReplyDeleteஇன்று என்ன கறி செய்வது என்று தலை காய்ந்தது.
நீங்கள் சொல்லி
இருக்கும் செய்முறையை உபயோகிக்கிறேன்.
மிக நல்ல வாசனை இருக்கும் என்று தோன்றுகிறது.
மிக நன்றி மா.
செய்து பாருங்கள் வல்லி. நிஜம்மாவே நன்றாக இருக்கு. அதிலும் ஓமமும், பெருங்காயமும், புதினாவும் சேர்ந்து ஒரு தனிச்சுவையைக் கொடுக்கிறது.
Deleteகட்டாயம் செய்கிறேன்மா. ஓமம் எப்பவுமே பிடிக்கும். பெண் எள்ளும் சேர்க்கிறாள்.
Deleteகால்சியமாமே.
ஆகக் கூடி சமையல் வைத்தியமாகிறது.
நான் எள் குறைவாகவே சேர்ப்பேன். எடை கூடி விடுமோனு பயம்.
Deleteசேர்க்கும் சாமான்களின் ஆல் ருசியும் வாசனையும் சற்று மாறுபடுகிறது ஓமம் சேர்ப்பதால் உடம்பிற்கும் மிக்க நல்லது சமையல்களில் மோர் குழம்பு வெந்தயக் குழம்பு முதலானவற்றில் ஓமம் சேர்த்தார் குழம்பு கூட நன்றாக இருக்கும் அம்மாதிரி இதுவும் ருசி மிகுந்தது நன்றாக உள்ளது அன்புடன்
ReplyDeleteநமஸ்காரங்கள் அம்மா. பாராட்டுக்கு நன்றி. உண்மையாகவே ருசியாக இருந்தது. ஓமம் போட்டு மோர்ச்சாறு அடிக்கடி பண்ணுவேன். பராத்தாவுக்கு ஓமம் சேர்ப்பேன்.
Delete