எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, May 26, 2013

காராவடை வேணுமா?

காராவடை வேணுமா?  யாரும் எப்படினு கேட்கலை.  நானும் வீட்டிலே பண்ணலை.  இங்கே(புகுந்த வீடு) காராவடை அவ்வளவாப் பிடிக்கிறதில்லை.  அதனால் பிறந்த வீடு போறச்சே அங்கே பண்ணினால் சாப்பிடறதோடு சரி! :)))) ஆனாலும் எப்படிப் பண்ணுவாங்கனு பார்க்கலாம்.  பார்க்க உ.கி. போண்டா மாதிரித் தான் இருக்கும்.  ஆனால் போண்டா இல்லை.

தேவையான பொருட்கள்:  ஒரு சின்ன கிண்ணம் அரிசி, ஒரு டேபிள் ஸ்பூன் து.பருப்பு களைந்து ஊற வைக்கவும்.  அரிசி எவ்வளவோ அவ்வளவு உளுத்தம்பருப்பைத் தனியாகக் களைந்து ஊற வைக்கவும்.  கடலை மாவு ஒரு கிண்ணம்.  ஒரு டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்புக் களைந்து தனியாக ஊற வைக்கவும். தேங்காய் விருப்பமிருந்தால் ஒரு டேபிள் ஸ்பூன் பொடிப் பொடியாகக் கீறி வைத்துக் கொள்ளவும்.  மி.வத்தல் அவரவர் காரத்துக்கு ஏற்ப ஐந்து அல்லது ஆறு, உப்பு, பெருங்காயம்.  பச்சை மிளகாய் ஒன்று அல்லது இரண்டு. கருகப்பிலை.  பொரிக்க சமையல் எண்ணெய்.

நன்கு ஊறிய அரிசியையும் துவரம்பருப்பையும் மிளகாய் வத்தல், உப்பு, பெருங்காயம் சேர்த்து நல்ல நைசாக அரைக்கவும்.  தனியே வைக்கவும்.  உளுந்தை நன்கு கொட கொடவென அரைக்கவும்.  அரைத்த உளுந்து மாவில் கடலை மாவு, அரைத்து வைத்த அரிசி து.பருப்பு மாவைச் சேர்த்து, பச்சை மிளகாய்ப் பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கருகப்பிலை, தேங்காய்க் கீறல்கள், ஊறிய கடலைப்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கரண்டியால் கலக்கவும்.  தண்ணீர் சேர்க்கவே கூடாது.  மாவில் இருக்கும் நீரே போதும்.  எல்லாம் சேர்ந்து மாவு கையால் உருட்டிப் போடும் பதத்துக்கு வரும் வரை கலந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும்.  காய்ந்ததும் மாவை போண்டா போடுவது போல் கைகளால் எடுத்து உருட்டி காய்ந்த எண்ணெயில் போடவும்.  மெல்லிய இரும்புக் குச்சி அல்லது மெல்லிய கத்தி இருந்தால் வேகும் வடையைத் திருப்பிப் போடும்போது அதால் குத்தி விடவும்.  இரண்டு மூன்று இடங்களில் இப்படிக் குத்திவிட்டால் எண்ணெய் உள்ளேயும் போய் நன்கு வெந்து கொள்ளும். நன்கு வெந்ததும் மேலே மிதந்து வரும் காராவடைகளை எண்ணெயை வடித்துத் தட்டில் போடவும்.  இது மேலே மொறு மொறுவெனவும் உள்ளே மடிப்பு மடிப்பாக ஓட்டை போட்டுக் கொண்டு மிருதுவாகவும் இருக்கும்.  தொட்டுக் கொள்ளக் காரமான பச்சைக்கொத்துமல்லிச் சட்னி, புதினாச் சட்னி போன்றவை நன்றாக இருக்கும்.

இதையே கொஞ்சம் சுலபமான வழியில் செய்ய.  அரிசியை ஊறவைத்து வடிகட்டிக் காயவைத்து மெஷினில் அரைத்த அரிசி மாவு ஒரு கிண்ணம்.  இதற்கு ஒரு கிண்ணம் உளுந்து ஊற வைத்துக் கொட கொடவென அரைத்து எடுத்துக் கொள்ளவும்.  கடலை மாவு ஒரு கிண்ணம், மற்றச் சாமான்கள் தேங்காய்க் கீறல், கடலைப்பருப்பு, பச்சை மிளகாய், கருகப்பிலை, இவற்றோடு மிளகாய் வற்றல் போட்டு அரைக்காமல் மிளகாய்த் தூள், உப்பு, பெருங்காயம் சேர்க்கவும்.  கொட கொடவென அரைத்த உளுந்த மாவில் அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த் தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கலந்து கொண்டு கருகப்பிலை, கடலைப்பருப்பு, தேங்காய்க்கீறல், பச்சை மிளகாய் போன்றவற்றைக் கலக்கவும்.  இது ரொம்பக் கெட்டியாக இருந்தால் கொஞ்சம் போல் நீர் சேர்க்கலாம்.  மற்றவை முன் சொன்னாற்போல் வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு போண்டா போல் உருட்டிப் போடவேண்டும்.  இது ருசி மாறும்.

Monday, May 20, 2013

ஆலு புஜியா!

ஹிஹிஹி,பேரைக் கேள்விப் பட்டிருக்கீங்க தானே?? வட இந்திய உணவுப் பண்டமாக இருந்தாலும், நமக்கு ரொம்பத் தெரிஞ்சதுங்க இது.  தீபாவளிக்குக் கட்டாயமாப் பண்ணுவோமே.  என்னனு கண்டுபிடிக்க முடியுதா?  படம் எடுத்தேன்.  ஆனால் காமிராவை எடுக்கலை.  சோம்பல்.  செல்லிலே எடுத்திருக்கேன்.  அது எப்படி வந்திருக்குனு தெரியலை. நல்லா வந்தாப்போடுவேன். இல்லைனா இன்னொரு தரம் பண்ணும்போது காமிராவில் எடுத்துட்டுப் போடுவேன்.  க்ர்ர்ர்ர்ர் போட்டால் மட்டும் பார்க்கவா பார்க்கிறீங்க?? உ.கி. பொடிமாஸெல்லாம் போட்டுட்டு யாரும் பார்க்காமலேயே கிடக்கு!

அது போகட்டும்.  ஆலு புஜியாவுக்குத் தேவையான பொருட்கள் முதல்லே அரை கிலோ உ.கி. நல்லாக் குழைய வேக வைச்சுத் தோலை உரிச்சு, (ஹிஹி உ.கி.யோட தோலைத்தான்) உதிர்த்து வைச்சுக்குங்க.

அரைக் கிலோ கடலை மாவு, ஒரு சின்னக் கிண்ணம் அல்லது நூறு கிராம் அரிசி மாவு, உப்பு, பெருங்காயம், மிளகாய்த் தூள், ஓமம் பொடிசெய்து ஓமத்தூள் அல்லது கரம் மசாலா.  இரண்டில் ஒண்ணு இருந்தால் போதும்.  நம்ம ஊர் ருசி வேணும்னா ஓமத்தைத் தூள் செய்து போடுங்க.  வட இந்திய ருசி வேண்டும்னா கரம் மசாலாப்பொடி போடுங்க.  கரம் மசாலாப் பொடி போட்டால் மிளகாய்த் தூளைக் குறைச்சுப் போட்டுக்கணும்.  அல்லது வெறும் கரம் மசாலா மட்டும் போட்டால் கூடப்  போதும். பொரித்து எடுக்க சமையல் எண்ணெய். இப்போ எப்படிச் செய்யறதுனு பார்க்கலாமா?

கடலை மாவு, அரிசி மாவு உப்பு, பெருங்காயத் தூள், மி.தூள், கரம் மசாலா அல்லது ஓமத்தூள் ஆகியவற்றை நன்றாகக் கலக்கவும்.  முதல்லே மாவில் இது எல்லாம் நல்லா ஒரே மாதிரியாக் கலக்குதானு பார்த்துக்குங்க.  அப்புறமா ஒரு சின்னக் கிண்ணம் அதாவது 50 கிராம் சமையல் எண்ணெயைக் காய வைத்து அல்லது நெய்யைக் காய வைத்து மாவில் ஊற்றவும்.  மறுபடி மாவும், நெய்/எண்ணெய் நன்றாய்க் கலக்கவேண்டும்.  இப்போ உதிர்த்த உருளைக்கிழங்கை மாவில் போட்டுக் கைகளால் நன்கு கலக்கவும்.  கவனம் இப்போ ஜாஸ்தியா இருக்கணும்.

மாவில் ஒரு சொட்டு நீர் கூட விடக் கூடாது.  உருளைக்கிழங்கில் இருக்கும் நீர்ச்சத்தே போதுமானது.  ஏற்கெனவே நெய்/எண்ணெய் வேறே காய வைச்சு ஊத்தி இருக்கோம்.  நல்லாக் கலந்து மாவு சப்பாத்தி மாவு பதத்துக்கு வரும் வரை பிசையவும்.  எண்ணெயைக் கடாயில் ஊற்றிக் காய வைக்கவும்.  அடுப்பைத் தணிக்கவும்.  பிசைந்த மாவை காராச்சேவுத் தட்டுப் போல இருக்கும் மெலிதான ஓமப்பொடித் தட்டில் கடாயின் மேல் தட்டை வைத்துக் கொண்டு தேய்க்க வேண்டும்.  தேய்த்தால் மெலிதான ஓமப்பொடியாக விழும். இந்தத் தட்டு (ஹிஹி, உள்ளே போட்டுட்டேன், வெளியே எடுத்துப் படம் எடுத்துப் போடறேன்.) இல்லையெனில் ஓமப்பொடி அச்சில் பிழியலாம்.  எண்ணெயில் போட்ட உடனே வெந்து மேலே வந்துவிடும்.  ஆகவே முதல்லே எண்ணெய் நன்கு காய்ந்தால் போதுமானது.  அடுப்பு ஒரே சீராக இருந்தால் தான் எண்ணெய் அதிகம் காயாமல் இருந்தால் தான் நிறம் மாறாமல் வரும். தட்டுத் தேவை எனில் துத்தநாகத் தகட்டை சதுரம், செவ்வகமாக வெட்டி அதில் மெலிதாக ஓட்டைகள் போட்டு நான்கு பக்கமும் மெலிதான கட்டைகளை அடித்து வைத்துக் கொள்ளலாம்.

அவ்வளவெல்லாம் கஷ்டப்பட முடியாது னு சொன்னா ஓமப்பொடி அச்சிலேயே பிழிஞ்சுக்கலாம்.   சாப்பிடறச்சே எப்படியும் உடைச்சுத் தானே சாப்பிட்டாகணும்.  :))))) மாலை நேரத் தேநீரோடு அல்லது தயிர் வடையின் மேலே தூவ, அல்லது பேல் பூரியின் மேலே தூவ, பானி பூரியோடு சேர்த்து உண்ண இவை எதுவுமே இல்லாட்டியும் அப்படியே சாப்பிடலாம்.  :)))))

Saturday, May 4, 2013

ஜி+இல் இருந்து ஒரு பகிர்வு.

உ.கி. கு.மி. காரட், பீன்ஸ், தக்காளி, வெங்காயம் எடுத்து நறுக்கிக்கோங்க.  பச்சை மிளகாய், இஞ்சி விழுது ஒரு டீஸ்பூன், வெங்காயம் நறுக்கியதில் கொஞ்சம் எடுத்துத் தக்காளியோடு அரைச்சு வைச்சுக்குங்க. 

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு ஜீரகம், சோம்பு தாளித்துக் கொண்டு வெங்காயம், தக்காளி விழுதைப்போட்டு வதக்கிக் கொண்டு, பச்சைமிளகாய் இஞ்சி விழுதையும் போட்டு வதக்கவும்,. நறுக்கிய காய்களைப் போட்டு வதக்கவும்.  மஞ்சள் பொடி, மி,பொடி, தனியாப் பொடி சேர்க்கவும். தேவையான உப்புச் சேர்க்கவும்.

நன்கு வதங்கியதும், தேவையான நீரைச் சேர்த்துக் கொதிக்க விடவும்.  காய்கள் நன்கு வெந்து வரும் நேரம் வறுத்த ஜீரகப் பொடியும் கரம் மசாலாப்பொடியும் சேர்த்து அதிகம் கொதிக்க விடாமல் கீழே இறக்கவும். பச்சைக் கொத்துமல்லி தூவவும்.  இதை மிக்சட் வெஜிடபுள் கறி என்றும் சொல்வார்கள்.  கிரேவி வேண்டாம் எனில் நீர் சேர்க்காமல் காய்களை வதக்கிக் கடைசியில் மேலே சொன்ன பொடிகளைச் சேர்த்துக் கீழே இறக்கலாம்.  பரிமாறும்போது முடிந்தால் கொஞ்சம் சீஸ் சேர்க்கலாம்.  வீட்டிலேயே பாலில் மேலே இருக்கும் ஏடுகளைச் சேர்த்து (மோர் சேர்க்காமல்) வைத்து ஒரு ஸ்பூனால் கலந்து கொண்டால் போதும். :)))))

மசாலா வாசனை தூக்கலாகத் தெரிய வேண்டுமெனில் அடுப்பில் எண்ணெய் வைத்ததும் ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கரைய விடவும். 

ரஞ்சனி நாராயணனின் ஜி+இல் ஒருத்தர் கேட்டதுக்கு மேற்கண்ட சமையல் குறிப்பைக் கொடுத்தேன். அவசரமாக எழுதியது. என்றாலும் பரோட்டா, சப்பாத்திக்குத் துணை போகும் உணவு இது. 

Tuesday, April 30, 2013

கடலைப்பருப்பில் என்ன செய்யலாம்?

திரும்பத் திரும்ப பாசிப் பருப்பிலே மட்டுமே சப்பாத்திக்கு தால் பண்ணி அலுத்துப் போக ஆரம்பிச்சாச்சு.  அவ்வப்போது பயறு, முழு உளுந்து, காராமணி, கொண்டைக்கடலை, பட்டாணி என்று பண்ணினாலும் எல்லாமே அலுக்க ஆரம்பிச்சது.  நேத்திக்கு மாறுதலா இருக்கட்டும்னு கடலைப்பருப்பிலே பண்ணினேன். நல்லாவே இருந்தது.

கடலைப்பருப்பு 200 கிராம்(இந்த அளவில் நான்கு பேருக்கு வரும்) நன்கு களைந்து கொண்டு ஊற வைக்கவும்.

வெங்காயம் பெரிதாக ஒன்று, தக்காளி இரண்டு, பச்சை மிளகாய் 2 இஞ்சி ஒரு துண்டு, மி.வத்தல் ஒன்று, கருகப்பிலை, பெருங்காயம்,சிட்டிகை மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி, வகைக்கு ஒரு டீஸ்பூன், கரம் மசாலாப் பொடி அரை டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.

தாளிக்க, சோம்பு, ஜீரகம், லவங்கப் பட்டை, பெரிய ஏலக்காய், கிராம்பு ஒன்று, தேஜ் பத்தா எனப்படும்மசாலா இலை(விருப்பமிருந்தால்) தாளிக்க எண்ணெய். மேலே தூவ கொத்துமல்லி, புதினா பொடியாக நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன்.

ஊற வைத்த கடலைப்பருப்பை நன்கு குழைய வேக வைக்கவும்.  தேவையானால் குக்கரில் கூட வேக வைத்துக் கொள்ளலாம். கடாயில் அல்லது அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு ஜீரகம், சோம்பு, மி.வத்தல், பச்சை மிளகாய், இஞ்சி மற்ற மசாலா சாமான்களைப் போட்டுத் தாளிக்கவும்.  வெங்காயத்தைச் சேர்த்துப் பெருங்காயம் (விருப்பமிருந்தால்) போட்டு வதக்கவும்.  கருகப்பிலையைச் சேர்க்கவும்.  வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.  தக்காளி வதங்குகையில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத் தூள் சேர்த்துக் கிளறவும்.  தக்காளியும் வெங்காயமும் நன்கு வதங்கியதும் வேக வைத்த கடலைப்பருப்பைச் சேர்த்து உப்புச் சேர்க்கவும். தேவையான நீர் சேர்க்கவும். நன்கு கொதித்துச் சேர்ந்து வரும்போது கரம் மசாலாப் பொடி தூவிக் கீழே இறக்கி, கொத்துமல்லித் தழை, புதினாத் தழை சேர்க்கவும்.



பூண்டு விருப்பமுள்ளவர்கள் ஒன்றிரண்டு பல் பூண்டை உரித்துப் பாதி கொதிக்கையில் சேர்க்கலாம்.  இதை சாதத்தோடும் பஞ்சாப், ஹரியானாவில் சாப்பிடுவாங்க.  நாங்க ஃபுல்கா ரொட்டிக்கு சைட் டிஷாகப்பயன்படுத்தினோம்.

தேவையானால் சாப்பிடும்போது அரை மூடி எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். இது அவரவர்  விருப்பம்.

Tuesday, April 23, 2013

உடம்பெல்லாம் இல்லாட்டியும் இந்தக் கஞ்சி சாப்பிடலாம். :)

பிடிச்சால் சாப்பிடுங்க.  இப்போ எங்க வீட்டிலே கஞ்சி சீசன்.  :))) புழுங்கலரிசிக் கஞ்சி போடறேன். ஐய னு சொல்றவங்க கொஞ்சம் பொறுமையாகக் கேட்டால் கஞ்சியைப் பத்தித் தெரிஞ்சுக்கலாம்.


அரை கிலோ புழுங்கலரிசி, இட்லி அரிசியானாலும் பரவாயில்லை.  அதோடு நூறு கிராம் பாசிப்பருப்பு இரண்டையும் சேர்த்துக் களைந்து நீரை வடிகட்டிக் கொள்ளவும்.  வெறும் வாணலியில் இரண்டையும் வறுக்கவும்.  வாசனை வரும்வரை வறுக்கலாம்.   ஆற வைத்து மிக்சி ஜாரில் போட்டுக் குருணை அல்லது ரவை பதத்துக்குப் பொடித்து ஒரு டப்பாவில் போட்டுக் கொள்ளவும்.  இந்தக் குருணை அல்லது ரவை ஒருத்தருக்கு ஒரு கரண்டி வீதம் எடுத்துக்கொள்ளவும்.

அதுக்கு முன்னால் ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை ஊறவைத்து முளைகட்டிக்கொள்ளவும்.  வெந்தயம் ஊறிய மஞ்சள் நீரைக் கொட்ட வேண்டாம்.  பச்சைக்காய்கள் புடலை, வெள்ளரிக்காய், காரட், பீன்ஸ், கீரை போன்றவை பொடிப்பொடியாக நறுக்கி ஒரு கிண்ணம்.  தேங்காய் கீறியது(விருப்பமானால்) ஒரு டேபிள் ஸ்பூன், பால் ஏதேனும் ஒரு பால் 200 கிராம்.  அல்லது விருப்பமிருந்தால் தேங்காய்ப் பால் ஒரு மூடித் தேங்காயில் இருந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.  உப்பு தேவையான அளவு, பெருங்காயம், மிளகுத் தூள், பச்சை மிளகாய் ஒன்று, ஒரு துண்டு இஞ்சி. தாளிக்க நெய் ஒரு டேபிள் ஸ்பூன், ஜீரகம், கருகப்பிலை. கொத்துமல்லி, புதினா பொடிப் பொடியாக நறுக்கிக் கடைசியில் மேலே தூவ வைத்துக்கொள்ளவும்.  முழுப்பயறு இருந்தாலும் ஊற வைத்து முளைகட்டிச் சேர்க்கலாம்.

புழுங்கலரிசி ரவையை வெந்தயம், முளைகட்டிய பயறோடு இரண்டு கிண்ணம் நீரில் நன்கு கரைய விடவும்.  நன்கு வெந்து கெட்டியாக ஆகும் சமயம் நறுக்கிய காய்களைச் சேர்த்துக் கொஞ்சம் நீரும் பாலும் சேர்க்கவும்.  காய்கள் வெந்து வரும் சமயம் உப்பு, மிளகுத்தூள், பச்சைமிளகாய், இஞ்சி(சிதைத்துக் கொண்டு) சேர்க்கவும். நன்கு கெட்டியாகக் குழைவாக வெந்து வந்ததும், மீதம் இருக்கும்தேங்காய்ப் பால்/ பாலையும் சேர்க்கவும்.  கஞ்சி ரொம்ப கெட்டியாகவும் இல்லாமல், நீர்க்கவும் இல்லாமல் கையால் எடுத்துச் சாப்பிடும் பதத்தில் இருக்க வேண்டும்.  நெய்யில் ஜீரகம், கருகப்பிலை தாளித்துக் கொண்டு கொத்துமல்லி, புதினா தூவிவிட்டுக் கஞ்சியை எலுமிச்சை ஊறுகாய் அல்லது பொடிப்பொடியாக நறுக்கிய மாங்காய் ஊறுகாயோடு சாப்பிடலாம். 

Friday, April 19, 2013

ரொம்ப சாதாரணமான சமையல் குறிப்பு ஒண்ணு!


சூரி சார் உ.கி. பொடிமாஸ் பத்தி கூகிள்+இல் கேட்டிருந்தார்.  நேத்துத் தான் பார்த்தேன். :))) அப்புறமா நேத்தி இணையமும் இல்லை.  விருந்தினரும் வருகை தந்திருந்ததால் உடனடியா எதுவும் எழுத முடியலை.  ஊரிலே இருந்து வந்த அலுப்பு வேறே!  இன்னிக்கு எழுதிடறேன்.


நான்கு பேருக்கான செய்முறைக்குறிப்பு:-

அரை கிலோ உருளைக்கிழங்கு, தேங்காய் மூடி ஒன்றின் துருவல், பச்சை மிளகாய் நான்கு, இஞ்சி ஒரு துண்டு, உப்பு, தாளிக்க கடுகு, உபருப்பு, க.பருப்பு, பெருங்காயத் தூள், கருகப்பிலை, கொத்துமல்லி, எலுமிச்சை மூடி ஒன்று. தாளிக்க எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்.

உருளைக்கிழங்கை வேக வைத்துத் தோலை உரித்துக்கொண்டு (ஹிஹிஹி) உதிர்த்துக் கொள்ளவும்.  உப்புப் பொடி சேர்த்துக் கிளறிக்கொள்ளவும்.  கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, ப.மிளகாய், இஞ்சி, கருகப்பிலை போட்டுத் தாளித்துக் கொண்டு, உப்புப் போட்டுக் கலந்த உருளைக்கலவையைக் கொட்டிக் கிளறவும்.  தேங்காய்த் துருவல் சேர்க்கவும். நன்கு கிளறி விட்டுக் கீழே இறக்கிக் கொத்துமல்லிப்பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.  சற்று ஆறியதும் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.  வத்தல் குழம்போடு அருமையான துணை!




நேத்திக்கு உருளைக்கிழங்கு பொடிமாஸ் செய்தேன்.  நல்லவேளையா சாப்பிடும் முன்னர் படம் எடுக்கத் தோணித்து.  உடனே படம் எடுத்துப் போட்டிருக்கேன். எங்கே? யாரும் கண்டுக்கிறதே இல்லை. :))))

Friday, April 12, 2013

சித்திரை விஷுவுக்கான பாயசம்!



பச்சரிசி அரிசி ஒரு சின்னக் கிண்ணம் எடுத்துக் களைந்து நெய்யில் பொரித்துக் கொண்டு குருணையாக உடைத்துக் கொள்ளவும். தேங்காய் நடுத்தர அளவில் ஒன்று. உடைத்துத் துருவிக் கொள்ளவும்.  கால் கிலோவுக்குக் குறையாமல் வெல்லம்(பாகு) வேண்டும்.  கூடவே இருந்தாலும் நல்லாவே இருக்கும்.  ஏலக்காய்த் தூள், முந்திரிப்பருப்பு, வறுக்க நெய் அரைக்கிண்ணம்.

குருணையாக உடைத்த அரிசியைத் தேவையான நீர் மட்டும் விட்டு  நன்கு கரைய விடவும்.  குழைய வேகும்போது துருவிய தேங்காயில் இரண்டு டேபிள் ஸ்பூன் எடுத்து வைத்துவிட்டு மிச்சத் துருவலை மிக்சியில் போட்டு நன்கு அரைக்கவும்.  பால் எடுக்கவும் தனியாக வைக்கவும்.  இரண்டாம் முறையும் இதே போல் அரைத்துப் பால் எடுக்கவும்.  அந்தப் பாலை வேகும் அரிசியில் சேர்க்கவும்.  மூன்றாம் பால் எடுக்க வருதானு பார்க்கவும். வந்தால் எடுத்து அதையும் வேகும் அரிசியில் சேர்க்கவும்.  நன்கு சேர்ந்து வரும்போது வெல்லத்தூளைச் சேர்க்கவும்.  வெல்ல வாசனை போகக் கொதிக்க விடவும்.  நன்கு கொதித்து வந்ததும், தனியாக வைத்திருக்கும் முதல் பாலைச் சேர்க்கவும்.  நெய்யில் முந்திரிப்பருப்பு வறுத்துப் போட்டுத் தனியாக வைத்திருக்கும் பச்சைத் தேங்காய்த் துருவலையும் ஒருமுறை நெய்யில் பிரட்டிவிட்டுப் பாயசத்தில் சேர்க்கவும்.  பால் எடுத்த சக்கைத் தேங்காய் பயன்படாது.  உங்களுக்குத் தேவையானால் அதையும் இந்தப் பாயசத்திலேயே சேர்க்கலாம்.  ஏலத்தூள் சேர்க்கவும்.  பாயசம் சூடாகச் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.  அதோடு பாயசம் நீர்க்க இருக்கக் கூடாது.  கையால் எடுத்துச் சாப்பிடும் பதத்தில் கெட்டியாக, அதே சமயம் சர்க்கரைப் பொங்கல் போல் ரொம்பக் கெட்டியாகவும் இருக்கக் கூடாது.