நம்ம ஊர் தூள் பஜ்ஜியை வடமாநிலங்களில் பஜியா அல்லது பகோடா என்பார்காள். இதற்குத் தனிக் கடலைமாவும், எல்லாக் காய்களும் இருத்தல் நலம். அங்கே இதோடு கொத்துமல்லி, புதினா, பாலக் கீரை, வெந்தயக்கீரை போன்றவையும் சேர்ப்பது உண்டு. இவற்றை மட்டும் தனியாகக் கலந்தும் போடுவது உண்டு.
தூள் பஜ்ஜி செய்முறை:
கடலை மாவு இரண்டு கிண்ணம்,
மிளகாய்த்தூள் ஒரு டேபிள் ஸ்பூன்,
குடமிளகாய் பெரிது ஒன்று அல்லது பச்சை மிளகாய் அல்லது பஜ்ஜி மிளகாய் இரண்டு அல்லது மூன்று.
பெருங்காயத் தூள் ஒரு சிட்டிகை
உப்பு தேவைக்கு
கலக்க நீர்
பொரிக்க எண்ணெய்
காய்கள்: உ.கி. பெரிது ஒன்று'
வெங்காயம்(தேவையானால்) பெரிது இரண்டு
புடலை, பீர்க்கை, செளசெள, கத்தரிக்காய் போன்ற காய்கள் நறுக்கி வகைக்கு அரைக்கிண்ணம்,
கருகப்பிலை, கொத்துமல்லி, புதினா போன்றவை நறுக்கி இரண்டு டேபிள் ஸ்பூன்
கடலை மாவில் உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். எந்த மாவும் நீர் விட்டுக் கலப்பதற்கு முன்னால் கையால் நன்கு உப்பும், காரமும் சேரும்படி கலக்க வேண்டும். பின்னரே நீர் விட்டுக் கலந்தால் பஜ்ஜியாகப் போட்டால் உப்பலாக வரும். பஜியாவும் உப்பலாகவும் வரும். நன்கு கலந்த பின்னர் நீர் விட்டுக் கரைக்கவும். இட்லி மாவு பதத்துக்குக் கரைத்தால் போதும். நறுக்கிய காய்களை அதில் போட்டு கருகப்பிலை, கொத்துமல்லி, புதினா, பச்சை மிளகாய் போன்றவற்றையும் நறுக்கிப் போட்டு நன்கு கலக்கவும்.
பின்னர் வாணலியில் எண்ணெயைக் காய வைத்துக் கைகளால் அள்ளி எடுத்துத் தூவினாற்போல் காய்ந்த எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும். இருபக்கமும் பொன் முறுவலாக வந்த பின்னர் எடுத்து வடிகட்டியில் போட்டு வடிகட்டவும்.
இதைப் புளிச்சட்னி, பச்சைச் சட்னியுடன் பரிமாறலாம். பரிமாறும் முன்னர் மேலே காரட் துருவல், கொத்துமல்லி நறுக்கியது, வெங்காயம் பொடியாக நறுக்கியது ஆகியவற்றைத் தூவித் தரலாம். சாஸோடு சாப்பிடப் பிடித்தவர்கள் அதனோடும் சாப்பிடலாம்.