எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Wednesday, July 3, 2019

பாரம்பரியச் சமையல்கள்! வல்லி கேட்ட கொட்டுக் குழம்பு!

இந்தக் கொட்டுக்குழம்பு வீட்டுக்கு வீடு மாறுபடும் என எண்ணுகிறேன். எனக்குத் தெரிந்து இது அதிகம் சேனைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கருணைக்கிழங்கு ஆகியவற்றிலேயே பண்ணிப் பார்த்திருக்கேன். கல்யாணம் ஆகி வரும்வரை இது குறித்துத் தெரியாது. ஆனால் புக்ககத்திலே பண்ணிப் பார்த்திருக்கேன். அந்தச் செய்முறையைப் பின்னர் சொல்கிறேன்.இப்போது பொதுவான செய்முறைக்குத் தேவையான பொருட்கள்:

எலுமிச்சை அளவுக்குப் புளி, உப்பு தேவையான அளவு, குழம்புப் பொடி 3 டீஸ்பூன்.

தாளிக்க எண்ணெய், கடுகு,வெந்தயம், துவரம்பருப்பு மட்டும், மிளகாய் வற்றல், கருகப்பிலை

தான்களாக கத்திரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்றவை போடலாம். ஒரு சிலர் முள்ளங்கி, உருளைக்கிழங்கு ஆகியவையும் போடுகின்றனர். இதற்குச் சிலர் அடியில் தாளித்துச் செய்கின்றனர். சிலர் தான்களை மட்டும் வதக்கிக் கொண்டு புளியைக் கரைத்துவிட்டுப் பொடி, உப்புப் போட்டுக் கொதித்த பின்னர் தாளிதம் செய்கின்றனர்.  இரண்டு முறையிலும் செய்யலாம். முள்ளங்கி, உருளைக்கிழங்கு போன்ற தான்கள் எனில் அடியில் தாளித்து வதக்கிச் சேர்க்க வேண்டாம். மற்றத் தான்களை வதக்கினால் ருசி கூடும். அடியில் தாளித்துச் செய்தால் சாதாரண வற்றல் குழம்பு, வெறும் குழம்பு ருசி போல் ஆகிவிடும் என்பதால் பலரும் இதைக் கொதிக்கவிட்டுப் பின்னர் இறக்கும்போதே கடுகு, மிவத்தல், கருகப்பிலை தாளிப்பார்கள். இது அவரவர் சௌகரியம் போல் செய்துக்கலாம்.

இதையே மி.வத்தல், தனியா, துவரம்பருப்பு, வெந்தயம், பெருங்காயம் ஆகியவற்றை வறுத்துப் பொடி செய்து கொண்டு தான்களைப் போட்டு வதக்கிக் கொண்டு முதலில் கொஞ்சம் புளி ஜலத்தில் தான்களை வேகவிட்ட பின்னர் மிச்சம் புளி ஜலத்தை விட்டுக் கொண்டு தேவையான உப்பையும், வறுத்துப் பொடித்த பொடியையும் போட்டுக் கொதிக்க விட்டுப் பின்னர் கடுகு, கருகப்பிலை, மி.வத்தல் தாளிப்பார்கள்.  இந்த முறையில் செய்தால் கட்டாயம் கடைசியில் தான் தாளிக்கணும். வெந்தயம் சேர்ப்பது அவரவர் விருப்பம். நான் வெந்தயம் நிறையச் சேர்ப்பதால் இதிலும் போடுவேன்.

இப்போது எங்க வீட்டில் செய்யும் கொட்டுக்குழம்பு முறை:

புளி எலுமிச்சை அளவுக்கு ஊற வைத்துக் கரைத்துக்கொள்ளவும். 3 கிண்ணம் புளி ஜலம்.
உப்பு தேவையான அளவு. குழம்புப் பொடி 3 டீஸ்பூன்,

தாளிக்க நல்லெண்ணெய், தாளிக்கும் பொருட்கள்: கடுகு, வெந்தயம், துவரம்பருப்பு மட்டும், மிவத்தல், கருகப்பிலை, பல்லுப் பல்லாகக் கீறிய தேங்காய்க் கீற்றுகள், கொண்டைக்கடலை, மொச்சை வகைக்கு இரண்டு டீஸ்பூன்கள், பெருங்காயம், மஞ்சள் பொடி

தான்களாக! நீளமாக நறுக்கிய சேனைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, கருணைக்கிழங்கு ஆகிய ஏதேனும் ஓர் கிழங்கு அல்லது கத்திரிக்காய், முருங்கைக்காய், சின்ன வெங்காயம் போன்ற ஏதேனும் ஒன்று. நாங்க இந்தக் குழம்புகளில் முள்ளங்கியோ உருளைக்கிழங்கோ சேர்ப்பதில்லை.

இப்போது கடாய்/உருளி/கல்சட்டியை வைத்து எண்ணெயைக் காய வைத்துக் கொண்டு கடுகு, வெந்தயம், பருப்பைத் தாளித்துக் கொண்டு உடனேயே கொண்டைக்கடலை, மொச்சையைப் போட்டு வெடிக்க விடவும். பின்னர் மி.வத்தல், கருகப்பிலை, பெருங்காயம் வரிசையாகச் சேர்க்கவும். அதன் பின்னர் தான்களைப் போட்டு வதக்கிக் கொண்டு பல்லுப் பல்லாகக் கீறிய தேங்காய்க்கீற்றுக்களையும் போட்டு வதக்கவும். மஞ்சள் பொடி சேர்க்கவும். கரைத்து வைத்த புளி ஜலத்தை ஊற்றிவிட்டுக் குழம்புப் பொடியும் உப்பும் சேர்க்கவும். குழம்பு சேர்ந்து கொதித்த பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய் பச்சையாக மேலே விடவும். தேவையானால் குழம்பை இறக்கும் முன்னர் ஒரு சின்னத் துண்டு வெல்லம் சேர்க்கலாம். நான் வெல்லம் சேர்ப்பதில்லை.  இந்தக் குழம்புக்கு மாவெல்லாம் கரைத்து விடவும் வேண்டாம். அதுவே சேர்ந்துக்கும். 

10 comments:

  1. இதுக்கும் காரக் குழம்புக்கும் என்ன வித்தியாசம்? கொண்டைக்கடலை, மொச்சை சேர்க்கச் சொல்லியிருக்கீங்க. அது வேகுமா?

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம்ருசி மாறும்.ஒருமுறை பண்ணிப் பாருங்க.புரியும். கொண்டைக்கடலை, பட்டாணி,மொச்சை போன்றவற்றை எண்ணெயில் வெடிக்க விட்டுச் சேர்ப்பதால் நன்றாக வேகும். என்மாமியார் வீட்டில் இவற்றைஎல்லாம் ஊற வைத்துச் சேர்த்தால் பிடிக்காது. பிட்லைக்குக் கூட நான் எண்ணெயில் வெடிக்க விட்டுக் கொதிக்கும்போது சேர்ப்பேன். நன்றாகவே இருக்கும்.

      Delete
  2. மிக மிக நன்றி கீதாமா. ஆஜிப் பாட்டி தான் இதைச் செய்வார். அவருக்குப் பிடிகறணை மிகவும் பிடிக்கும் .இதயத்துக்கு நல்லது என்று செய்வார். சேனை, சேம்பு எல்லாவிற்றையும்
    சிப்பல் சிப்பலாகப் போட்டி, கொண்டக்கடலை சேர்த்து செய்வார்.
    அது மாமியாரும் பாட்டியும் சேர்ந்து சமைத்த காலம்.

    அருமையாகக் சமையல் முறைகள் கொடுத்திருக்கிறீர்கள்.
    இங்கு செய்து பார்க்கிறேன். என் சொல்லுக்கு மதிப்பு கொடுத்து
    இந்த செய்முறை தந்ததற்கு மிக நன்றி மா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, இது கும்பகோணம் பக்கம் செய்யும் குழம்பு வகைனு நினைக்கிறேன். எனக்குக் கல்யாணம் ஆகி வந்து தான் கொட்டுக்குழம்பு என்பதே தெரியும்.

      Delete
  3. முதலிலேயே தாளிதம் செய்வதற்கும், கடைசியில் செய்வதற்கும் என்ன வேறுபாடு?

    ReplyDelete
    Replies
    1. @ஸ்ரீராம், பின்னால் தாளித்துக் கொட்டுவதால் தான் கொட்டுக்குழம்புனு பெயர் என எனக்குத் தோன்றும்.

      Delete
  4. அரைத்துவிட்ட குழம்பு போல சொல்கிறீர்கள். கொட்டுக்குழம்பு என்று எதற்காகச் சொல்கிறீர்கள்? (பெயர்க்காரணம்) பிட்லையில் கொண்டைக் கடலை சேர்க்கவே வேண்டாம் என்று பாஸிடம் சொல்லி இருப்பதில் நாங்கள் சேர்ப்பதில்லை.

    ReplyDelete
    Replies
    1. அரைச்சு விட்ட குழம்பின் சேர்க்கை தனி. இது தனி இல்லையோ? அதோடப் பிட்லைனா கொண்டைக்கடலை, மொச்சை போடலைனால் சாம்பாராகிவிடும். இவை போட்டால் தான் பிட்லையே! மேலும் பிட்லைக்கு அரைத்துவிடுவதிலும் சாமான்கள் போடுவதில் வித்தியாசம் உண்டு.

      Delete
  5. சிறு சிறு வித்தியாசங்களில் சுவையில் நல்ல மாறுதல் தெரியும் என்பதை பார்த்திருக்கிறேன். அதுபோல இதுவும் ஒருமுறை செய்து பார்த்தால்தான் தெரியும்.

    ReplyDelete
  6. செய்து சாப்பிட்டுப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

    ReplyDelete