எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, July 16, 2019

பாரம்பரியச் சமையல்கள்! பொரிச்ச குழம்பு வகைகள்!

பொதுவாகப் பொரிச்ச குழம்பு எனில் பத்தியத்திற்குத் தான் பண்ணுவார்கள். பிரசவம் ஆன பெண்களுக்குப் பண்ணிப் போடுவார்கள். ஆகையால் இதற்கென உள்ள காய்கள், புடலங்காய், அவரைக்காய், கத்திரிக்காய் ஆகியவற்றையே மாற்றி மாற்றிச் செய்வார்கள். எல்லோரும் சாப்பிடப் பண்ணினால் முருங்கைக்காய், கீரைத்தண்டு, கொத்தவரைக்காய் ஆகியவற்றிலும் பண்ணலாம். சிலர் 2,3 காய்கள் சேர்த்துப் போட்டும் பண்ணுவார்கள். இந்தப் பொரிச்ச குழம்பு வெறும் மிளகு, சீரகப் பொடி மட்டும் போட்டுப் பண்ணினால் அது பத்தியத்திற்கென உள்ளது. தேங்காய் சேர்த்தால் எல்லோரும் சாப்பிடலாம். இதிலும் ஒரு சிலர் பொடி போட்டுப் பண்ணுவார்கள். பொடியும் போட்டு அரைச்சும் விட்டு எங்க மாமியார் வீட்டில் பண்ணுவாங்க. முதலில் மிளகு, சீரகப் பொடி மட்டும் போட்டுப் பண்ணுவது.

புடலைப் பொரிச்ச குழம்பு!

கால் கிலோ புடலங்காய்க்குப் பாசிப்பருப்புக் குழைய வேக வைத்தது ஒரு கரண்டி போதும்.
உப்பு தேவைக்கு
மஞ்சள் பொடி கால் டீஸ்பூன் சிலர் பருப்பிலே சேர்ப்பார்கள். அவரவர் விருப்பம் போல் செய்யலாம்.
மிளகு பொடி ஒரு டீஸ்பூன், காரம் அதிகம் தேவை இல்லை எனில் அரை டீஸ்பூன். பிரசவம் ஆனவர்களுக்குத் தேங்காய் சேர்க்க மாட்டார்கள். ஆகையால் தேங்காய் வேண்டாம்.

தாளிக்கத் தே,எண்ணெய், கடுகு, உபருப்பு, கருகப்பிலை, பெருங்காயம்

புடலங்காயைப் பொடியாக நறுக்கிக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும். காய் நன்கு வெந்ததும் வெந்த பருப்பைச் சேர்த்துக் கொதிக்க விட்டுக் கீழே இறக்கும்போது மிளகு பொடியைச் சேர்க்கவும். இன்னொரு பக்கம் இரும்புக்கரண்டி அல்லது சின்ன வாணலியில் எண்ணெயைக் காய வைத்துக் கடுகு, உபருப்பு, கருகப்பிலை, பெருங்காயம் தாளித்துக் கொண்டு குழம்பின் மேல் விடவும். கொத்துமல்லியும் பிடித்தால் சேர்க்கலாம். இது அதிகம் காரம் இல்லாமல் மென்மையான ருசியில் பிள்ளை பெற்றவர்களுக்குச் செய்வது. இதே முறையில் கத்திரிக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், போன்றவற்றிலும் செய்யலாம்.

வறுத்து அரைத்த பொரிச்ச குழம்பு!

இதற்கும் தான்கள் ஏதேனும் ஒன்றோ அல்லது 2 காய்கள் சேர்ந்தோ எடுத்துக் கொள்ளலாம்.

இரண்டு கிண்ணம் நறுக்கிய காய்கள், வெந்த பாசிப்பருப்பு அரைக்கிண்ணம்

உப்பு தேவைக்கு, மஞ்சள் பொடி, பெருங்காயம்

வறுத்து அரைக்க:
மி.வத்தல் ஒன்று, மிளகு ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு இரண்டு டீஸ்பூன், பெருங்காயம், தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன்.

தாளிக்க தே.எண்ணெய். கடுகு, உளுத்தம்பருப்பு, கருகப்பிலை, ஒரு சின்ன மி.வத்தல், கொத்துமல்லி தேவையானால்.

காய்களை வாணலி அல்லது உருளி அல்லது கல்சட்டியில் அலம்பிப் போட்டு நன்கு வதக்கிக் கொண்டு தேவையான நீர் விட்டு மஞ்சள் பொடி சேர்த்து உப்புப் போட்டு வேக வைக்கவும். வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு சிவக்க வறுத்து மிக்சி ஜாரில் போட்டுக் கொஞ்சம் நீர்விட்டு விழுதாக அரைக்கவும். காய்கள் வெந்ததும் வெந்த பாசிப்பருப்பையும் அரைத்த விழுதையும் சேர்த்து நன்கு கலந்து விட்டுக் கொதிக்க விடவும். அதிகம் கொதிக்க வேண்டாம். கீழே இறக்கித் தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, மி.வத்தல், கருகப்பிலை தாளிக்கவும்.

அடுத்துத் திருநெல்வேலிப் பக்கம் பண்ணும் பொரிச்ச குழம்பு

காய்கள் மேலே சொன்னவற்றில் ஏதேனும். அல்லது கலந்த காய்களாக இரண்டு கிண்ணம்.

மிளகாய் வற்றல் 3 இரண்டு டீஸ்பூன் மிளகு. இரண்டையும் வெறும் வாணலியில் நன்கு வறுத்து மிக்சியில் பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.

வெந்த பாசிப்பருப்பு அரைக்கிண்ணம், மஞ்சள் பொடி!

உப்பு தேவைக்கு. பெருங்காயம்

ஜீரகம் ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், அரிசி மாவு அல்லது ஊற வைத்த பச்சரிசி இரண்டு டீஸ்பூன்

காய்களை முன் சொன்ன முறையில்  வதக்கிக் கொள்ளவும். தேவையான நீர் விட்டு வறுத்த மிளகு, மிளகாய்ப் பொடியில் தேவையானவற்றை மட்டும் வதக்கும் காயில் சேர்க்கவும். கூடவே மஞ்சள் பொடியும் சேர்க்கவும். பெருங்காயம் போடவும். காயை நன்கு வேக விடவும்.  மிளகாய், மிளகு வாசனை போகக் காய்கள் வெந்ததும் வெந்த பருப்பைச் சேர்க்கவும். ஜீரகத்தோடு தேங்காய்த் துருவலை வைத்து அரிசி மாவு ஒரு டீஸ்பூன் அல்லது தேவைக்கு/அல்லது ஊற வைத்த பச்சரிசியை வைத்து நன்கு அரைக்கவும். வெந்து கொண்டிருக்கும் காயில் சேர்க்கவும். அரைத்த விழுது ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து கீழே இறக்கித் தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கருகப்பிலை, தேவையானால் ஒரு மி.வத்தல் தாளிக்கவும். கொத்துமல்லி பிடித்தால் சேர்க்கலாம்.

27 comments:

 1. அருமையான பொரிச்ச கூட்டு ரெடி. வயிற்றுக்கு மிகவும் இதம்.
  காய்கறிகளும் இளசாகக் கிடைத்தால் தினமுமே சாப்பிடலாம். அப்பாவுக்கு வயிற்றில் புண் என்று சொன்னதும்,ஆறு வருடங்கள் மிளகாய் சேர்க்காமல் அப்பாவுக்கு இந்து போல் செய்தது தான் காப்பாற்றினார்கள்.
  நானு அப்போது பிரசவத்துக்குப் போயிருந்தததால் எல்லோருக்கும் இந்தக் கூட்டும், தக்காளி ரசமும் தான்.அதுவும் வடிகட்டின தக்காளி ரசம்.
  மிக அருமையாக எடுத்துச் சொல்கிறீர்கள்.
  நன்றி கீதா மா.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரேவதி, என்னோட அம்மாவும் அப்பாவுக்காக இப்படித் தான் செய்வார். நீங்க சொல்லுகிற மாதிரித் தக்காளியைக் கொதிக்கவிட்டுச் சாறை மட்டும் வடிகட்டி பருப்பு ஜலம் விட்டு விளாவி ரசம்! இப்படித் தான் அதிகம் நாங்களும் சாப்பிட்டிருக்கோம்.

   Delete
 2. பொரிச்ச குழம்பு - நான் மிளகூட்டு என்று கூட்டாகப் பண்ணுவதை நீங்க பொரிச்ச குழம்புன்னு சொல்றீங்களோ?

  நான் மிளகு, உ.பருப்பு, 1 மிளகாய் எண்ணெய்ல வறுத்து, அதனை தேங்காயோடு அரைத்து விடுவேன். நீங்க மிளகு பொடி மட்டும் உபயோகப்படுத்தச் சொல்றீங்க.

  நிறைய இடங்களில் திருவமாறும்போது பெருங்காயத்தையும் சேர்த்துத் திருவமாறி போடச் சொல்றீங்க. நான் எப்போதும், காயோடயோ இல்லை குழம்பிலயோ, பெருங்காயத்தை கொதிக்கும்போதே போட்டுடுவேன்.

  ReplyDelete
  Replies
  1. மிளகூட்டல், மிளகுஷ்யம் என்றும் சொல்வார்கள். அது வேறு. இது பொரிச்ச குழம்பு வகைகள். பெருங்காயத்தைத் தாளிதத்தில் சேர்த்தால் வாசனை அதிகமாக இருக்கும். கொஞ்சமாகப் போட்டால் போதும். வத்தல்குழம்பில் தாளிதத்தில் பெருங்காயம் சேர்க்கலாம். அரைச்சு விட்ட சாம்பார், பொடி வறுத்துப் போட்ட சாம்பார் போன்றவற்றில் வறுக்கையில் பெருங்காயத்தைச் சேர்க்கலாம். பின்னாடி போடணும் என்பது இல்லை.

   Delete
 3. நெல்லை பொரிச்ச குழம்பு - இந்த விதத்தில் செய்துபார்க்கிறேன். சீரகம் சேர்ப்பது எல்லாம் எனக்குப் புதுசு.

  முருங்கைக்காய் தவிர மற்ற காய்களில் பண்ணலாம்.

  ReplyDelete
  Replies
  1. நல்ல முருங்கைக்காயாகக் கிடைத்தால் அதில் பொரிச்ச குழம்பு பண்ணினால் நல்ல ருசியாக இருக்கும். எங்க வீட்டிலும் நம்ம ரங்க்ஸுக்கு முருங்கைக்காய்ப் பொரிச்ச குழம்பு பழக்கம் இல்லை. ஆனால் நான் அவ்வப்போது பண்ணுவேன்.

   Delete
  2. ஆனா கீசா மேடம்... எங்க வீட்டுல முருங்கைக்காய், சுரைக்காய் போன்றவை banned. ஹா ஹா

   Delete
  3. சுரைக்காய் ஓகே. நாங்களும் சாப்பிடுவதில்லை. அப்படிப் பார்த்தால் சௌசௌ கூடச் சாப்பிடக் கூடாது. அதுவும் சுரைக்காய்க் குடும்பம் தான்! :)))) முருங்கைக்காயில் சத்துக்கள் அநேகம்! அதைச் சாப்பிடுவதில்லை என்பது கொஞ்சம் ஆச்சரியம் தான். காலிஃப்ளவர், பட்டாணி, நூல்கோல், பீட்ரூட் சாப்பிடுவீங்களா? அப்போ முருங்கைக்காய் சாப்பிட்டால் என்ன?

   Delete
  4. காலிஃப்ளவர், நூல்கோல், கேரட், தக்காளி, பீட்ரூட் சாப்பிடக்கூடாதுதான். அதாவது ஆங்கிலக் காய்கறிகள் 'ஆசாரமானவர்கள்' சாப்பிடக் கூடாது. எங்க பெரியப்பா வீட்டில், வாழை, நாட்டுக்காய்கள்-வெண்டை, கொத்தவரை (பீன்ஸ் சாப்பிட்ட நினைவு இல்லை), சேனை/சேம்பு கத்தரி போன்றவைதான் உண்டு.

   இப்போ நிறைய மாற்றங்கள் வந்தாலும், முருங்கை, சுரை விலக்கப்பட்டதுதான். வீட்டில் செய்ததில்லை. நான் ரொம்ப ஆசைப்பட்டு சுரைக்காய் 2-3 தடவை வாங்கியிருக்கிறேன். ஆனால் அப்படியே குளிர்சாதனப்பெட்டியில் இருந்து பிறகு தூக்கிப்போடுவோம். என்னவோ பண்ணுவதில்லை.

   தக்காளி சாப்பிட்டால், மற்ற காய்களை ஏன் சாப்பிடக்கூடாது என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.

   Delete
 4. வறுத்து அரைச்ச பொரிச்ச குழம்பு - இது என்ன அநியாயமாச் சொல்றீங்க. நான் கூட்டு பண்ணும் செய்முறை இது. பொதுவா கோஸ், புடலை போன்றவை உபயோகப்படுத்துவேன். அவரையும் பீன்ஸும் உபயோகப்படுத்தலாம், நான் செய்ததில்லை.

  கூட்டைப் போய், குழம்புன்னு சொல்றீங்களே (நான் சுட சாதம், நெய், இந்தக் கூட்டு இவைகளை மட்டும் சேர்த்துச் சாப்பிடுவேன். கொஞ்சம் டேஸ்டுக்கு உருளை கட் கரேமது இல்லை உருளை/சேப்பை ரோஸ்ட் பண்ணிப்பேன்)

  உடம்புக்கு ரொம்ப நல்லது மிளகு சேர்வதால்.

  ReplyDelete
 5. கூட்டுக்கு அதுவும் பொரிச்ச கூட்டுக்கு எல்லாம் வறுத்து அரைப்பது இல்லை. இது பொரிச்ச குழம்பு தான்! கூட்டு வேறே! பொரிச்ச குழம்பு வேறே!

  ReplyDelete
 6. கீதாக்கா இந்த மூன்று முறையும் பிறந்த வீட்டில் உண்டு.

  இதில் மூன்றாவது சொல்லியிருப்பதில் பாட்டி / அப்பா வழிப்பாட்டி புளி விட்டும் செய்வார் ஆனால் தேங்காய் ஜீரகம் அரைத்துவிடாமல் இரண்டாவதில் சொன்னது போல அரைத்துவிடுவார்.

  இதைப் புளியிட்ட பொரிச்ச கூட்டு என்பார். இதிலேயே பொடி இதேதான். அரைத்துவிட க ப, உ ப, மி வ எல்லாம் வறுத்து பெருங்காயம் வறுத்து தேங்காயும் கொஞ்சம் வதக்கிப் போட்டு அரைத்து விடுவார். புளிவிட்டால் புளி விட்ட பொரிச்சக் கூட்டு இல்லை என்றால் புளியில்லா பொரிச்ச குழம்பு/கூட்டு நீங்க சொல்லியிருக்கற இரண்டாவது முறைப்படி...

  முதல் படி தான் எனக்கு எங்க வீட்டில பத்தியம் செஞ்சு போட்டாங்க. பெரும்பாலும் புடலங்காய் அல்லது அவரைக்காய்...

  நானும் நெல்லையின் கருத்துதான் சொல்ல வந்தேன்.

  பொரிச்ச குழம்பு மி வ, உப, மிளகு .தேங்காயும் சேர்த்து அரைப்பாங்க....புளி விட்டு செய்வாங்க. நீர்க்கச் செய்தால் பு இல்லா பொ கு கொஞ்சம் கெட்டியா செஞ்சா பொ கூ...இப்படித்தான் வீட்டுல சொல்லுவான..

  கீதாக்கா அப்ப பொரிச்ச குழம்பு எப்படி? எங்கேயோ நீங்க சொல்லியிருந்தீங்கன்னு நினைக்கிறேன்...எபில

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தி/கீதா, புளி சேர்க்காமல் செய்வதைத் தான் எங்க வீடுகளில் பொரிச்ச குழம்பு என்போம். புளி விட்டுத் தான்கள் நிறையப் போட்டுப் பண்ணினால் கூட்டுக் குழம்பு என்போம்.

   Delete
 7. அக்கா சொல்ல விட்டுப் போச்சு பா பருப்பு போட்டு செஞ்சா கூட்டு. பா ப போடாமல் செஞ்சா கு...,...

  அக்கா நான் பார்த்த வரைல அஞ்சரைப் பெட்டில இருக்கறத பெர்மியூட்டேஷன் காம்பினேஷன்ல போட்டு செய்யறதுதான்னு தோணும். ஒவ்வொரு பகுதியிலயும் ஒரு பெயர்...அதே ரெசிப்பி கூட பெயர் மட்டும் மாறியிருக்கும்..

  இல்லேனா கொஞ்சம் வித்தியாசம் இருக்கும்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அப்ப்பா.... பாயிண்டைப் பிடிச்சுட்டீங்க கீதா ரங்கன்

   Delete
  2. பொரிச்ச குழம்பு எனில் பாசிப்பருப்பு, சில சமயங்களில் துவரம்பருப்பும் சேர்ப்பார்கள். பருப்புச் சேர்க்கலைன்னா அது கூட்டு!

   Delete
 8. முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு நிறைய சாப்பிட்டு இருக்கிறேன். இங்கே செய்வது இல்லை. நெய்வேலி நகரில் நிறைய முருங்கை மரம் என்பதால் அடிக்கடி சமையலில் சேர்த்து விடுவது உண்டு.

  ReplyDelete
 9. @Venkat, நானும் மதுரையில் இருந்தவரை நிறையவே முருங்கைக்க்காய்ப் பொரிச்ச குழம்பு சாப்பிட்டிருக்கேன். இங்கே வந்து அது தெரியாது என்பதால் பண்ணியதில்லை. இப்போத் தான் 2,3 வருஷமாகப் பண்ணுகிறேன். முருங்கைக்கீரையிலும் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 10. புடலை பொரிச்ச குழம்பு இந்த வகையில் ஒருதரம் செய்திருக்கிறேன். ஆம், தேங்காய் எண்ணெயில் தாளிதம்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், ரொம்பவே வேலை மும்முரத்தில் இருக்கீங்க போல! :( புடலைப் பொரிச்ச குழம்பு நல்லா இருக்கும். ஆனால் மிளகு மட்டும் சேர்க்கணும்! :)

   Delete
  2. வேலை மும்முரத்தில் இருந்தாலும் கண்ணில் பட்டால் வந்திருப்பேன். இது எப்படியோ கண்ணில்படாது போய்விட்டது.

   Delete
 11. சீரகம் சேர்த்து செய்ததில்லை. நாங்கள் பெரும்பாலும் மஞ்சள்பொடி சேர்ப்பதைத் தவிர்த்து விடுகிறோம்.

  ReplyDelete
  Replies
  1. சீரகம் சேர்ப்பது மாமியார் வீட்டுப் பழக்கம். பிறந்த வீட்டில் சீரக ரசம் கூடச் செய்ய முடியாது. அப்பாவுக்குப் பிடிக்காது! :)

   Delete
 12. முருங்கைக்காய், தக்காளி பொரிச்ச குழம்பு செய்வதுண்டு. அதில் மிளகு சேர்ப்பதில்லை.

  ReplyDelete
  Replies
  1. தக்காளிக்காயில் தான் பொரிச்ச குழம்பு, பிட்லை எல்லாம் பண்ணி இருக்கோம். தக்காளிப் பழத்தில் பண்ணியதில்லை.

   Delete
  2. தக்காளிக்காய் போட்டு சமைத்ததே இல்லை. பிட்லை பாகற்காயில் மட்டும்தான் கண்டிப்பாக!! ஒரே ஒரு முறை கத்தரிக்காயில் செய்திருக்கிறோம்.

   Delete
  3. பாகற்காய் பிட்லைக்கு முதல் மதிப்பெண் என்றாலும் கத்திரிக்காய், தக்காளியும் அந்த வரிசையில் சேரும். :))))

   Delete