எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, July 12, 2019

தஞ்சை ஜில்லாவின் தனிக்கூட்டு! பாரம்பரிய உணவுகள்!

தனிக்கூட்டு:

இது தஞ்சை மாவட்டத்தில் மட்டும் பொங்கலன்று செய்யப்படுகிறது. இதைத் தவிர சுமங்கலிப் பிரார்த்தனை என்னும் விசேஷங்களிலும் தஞ்சை மாவட்டக்காரர்கள் செய்வார்கள். அதிலும் சில குறிப்பிட்ட வீடுகளில் தான் இந்தத் தனிக்கூட்டு பண்ணுகின்றனர். இதற்கு 5 முதல் ஏழு காய்கள் வரை உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து வேக வைத்துக்கொள்ள வேண்டும். காய்களைத் தனியாக வேக வைத்து இந்தக் கூட்டு கிரேவியைத் தனியாகச் செய்து கொண்டு பின்னர் காய்களில் போட்டுக் கலப்பார்கள். விபரமாக இப்போது பார்க்கலாம்.

இதற்குத் தேவையான காய்கள்:

வாழைக்காய் பெரிதாக ஒன்று அல்லது மீடியம் சைசில் இரண்டு.

கத்திரிக்காய் கால் கிலோ

பறங்கிக்காய் கால் கிலோ

அவரைக்காய் கால் கிலோ

சேனைக்கிழங்கு கால் கிலோ

சர்க்கரை வள்ளிக்கிழங்கு கால் கிலோ

பச்சை மொச்சை தோலுரித்தது இரண்டு கிண்ணம்

கறுப்புக் கொண்டைக்கடலை(காய்ந்தது) ஒரு சிறு கிண்ணம்

மொச்சை காய்ந்தது ஒரு சிறு கிண்ணம்

தேங்காய்ப் பல்லுப் பல்லாகக் கீறியது ஒரு சின்ன மூடி

தாளிக்க கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கருகப்பிலை, தேங்காய் எண்ணெய் அல்லது சமையல் எண்ணெய்.

கிரேவி தயாரிக்க

புளி கால் கிலோ ஊற வைத்துக் கரைத்துக்கொள்ளவும், உப்பு, மஞ்சள் பொடி, வெல்லம் நூறு கிராம் தூள் செய்தது. வெண்ணை ஒரு டேபிள் ஸ்பூன்.

அரைக்க

மிளகாய் வற்றல் பத்து, நூறு கிராம் தனியா, கடலைப்பருப்பு 2 டேபிஸ்பூன், உளுத்தம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், மிளகு இரண்டு டீஸ்பூன், தேங்காய் துருவல்,  . ஒரு சின்ன மூடி.பெருங்காயம் ஒரு துண்டு,  வறுக்க எண்ணெய். தேங்காய் எண்ணெயில் வறுத்து அரைத்தால் நன்றாக இருக்கும்.

முதலில் காய்களைத் தனித்தனியாக உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும். பின்னர் அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்றாகச் சிவக்க எண்ணெயில் வறுத்துக்கொண்டு மிக்சி ஜாரில் போட்டு நைசாக அரைக்கவும்.

அடிகனமான வாணலி அல்லது கடாயில் புளிக் கரைசலை ஊற்றி உப்பையும் மஞ்சள் தூளையும் போட்டுப் புளி வாசனை போகக் கொதிக்க விடவும். அரைத்த விழுதைப் போட்டுக் கலந்து ஒரு கொதி விடவும். சேர்ந்து வரும்போது, இரண்டு டேபிள் ஸ்பூன் வெண்ணையைப் போட்டு நூறு கிராம் பொடி செய்த வெல்லத்தையும் போடவும். நன்கு கொதிக்க விடவும். ரொம்பத் தளர்த்தியாகவும் இல்லாமல், ரொம்பக் கெட்டியாகவும் இல்லாமல் கரண்டியால் எடுக்கும் பதம் வரும் சமயம்( எண்ணெய் பிரிந்து வரும்) இன்னொரு வாணலியைப் பக்கத்தில் வைத்துத் தேங்காய் எண்ணெயை ஒரு பெரிய கரண்டி ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மொச்சை, கொண்டைக்கடலை, தேங்காய்க் கீற்றுகள், கருகப்பிலை போன்றவற்றை நன்கு வறுத்துக் கொதிக்கும் கூட்டு கிரேவியில் கொட்டிக் கலக்கவும். ஒரு கொதி வந்ததும் கீழே இறக்கவும்.

காய்களுக்கு வேக வைத்தவற்றை ஒவ்வொன்றாகத் தனித்தனியாக எடுத்துக்கொண்டு கூட்டு கிரேவியை ஒரு பெரிய கரண்டி ஊற்றிக் கலந்து கொள்ளவும். வேக வைத்த எல்லாக் காய்களையும் இம்முறையில் கலக்கவும். பொதுவாகக் காய்கள் நான்கு என்றால் இந்தத் தனிக்கூட்டையும் சேர்த்து ஐந்தாக வழிபாட்டில் நிவேதனம் செய்ய  வைப்பார்கள். இல்லை எனில் காய்கள் ஆறு+தனிக்கூட்டு என ஏழு இருக்கவேண்டும். ஒற்றைப்படையில் வைக்கவேண்டும் என்பதே முக்கியம்.

பொங்கல் வழிபாடு முடிந்ததும், மீதம் இருக்கும் எல்லாக் காய்களைப் போட்டுக் கலந்த கூட்டுக்களை ஒன்றாய்ச் சேர்த்து மீதம் இருக்கும் தனிக்கூட்டு கிரேவியையும் கலந்து நறுக்காமல் காய்கள் மீதம் இருந்தால் அவற்றையும் நறுக்கிப் போட்டு நன்கு கொதிக்க வைப்பார்கள். இதை எரிச்ச கறி என்று சொல்வதுண்டு. சில வீடுகளில் பொங்கல் கழிந்து ஒரு மாதம் வரையும் கூட இந்த எரிச்ச கறி மீதம் தொடர்ந்து வரும். தினம் தினம் இதைக்கொதிக்க வைக்கவேண்டும்.

கோங்கூரா கீரை என்னும் புளிச்சகீரையில் குழம்பு!

வீட்டில் இருக்கும் நபர்களுக்கு ஏற்ற மாதிரி கோங்குரா கீரை ஒரு சின்னக்கட்டு அல்லது சுமாரான கட்டு வாங்கிக் கொள்ளவும். கீரையை நன்கு ஆய்ந்து பொடியாக நறுக்கிவிட்டு அலசி வடிகட்டி வைக்கவும். கீரையை அலம்பிய பின்னர் நறுக்கினால் எனக்குச் சரியாக வரதில்லை. என்பதால் நன்கு பொடிப்பொடியாக நறுக்கிய பின்னரே அலசுவேன். மண்ணெல்லாம் அடியில் தங்கி விடும். கீரையை மட்டும் அரித்துப் போட்டு வடிகட்டி வைப்பேன்.

இதற்குத் தேவையான பொருட்கள்:

சாம்பார்ப் பொடி/ரசப்பொடி/குழம்புப் பொடி= 2 டீஸ்பூன்

துவரம்பருப்பு குழைய வேக வைத்தது அரைக்கிண்ணம்

பச்சை மிளகாய் காரத்துக்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு

உப்பு தேவைக்கு பெருங்காயம் கொஞ்சம் போல்

தாளிக்கத் தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன். கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், மிளகாய் வற்றல், கருகப்பிலை

இதற்குப் புளி தேவை இல்லை. கீரையே புளிப்பாக இருக்கும் என்பதால் அப்படியே வேக விட்டு மசித்த பின்னர் குழம்பைத் தயாரிக்கலாம்.

ஓர் அடிகனமான வாணலி/உருளி/கல்சட்டியில் நன்கு அலம்பிய கீரையைப் போட்டுக் கொஞ்சமாக நீர் விடவும். பொதுவாகக் கீரைகள் நீர் விட்டுக் கொள்ளும். என்றாலும் இது குழம்பு என்பதால் கொஞ்சம் நீர் சேர்க்கலாம். தேவையானால் மஞ்சள் பொடி போட்டுப் பச்சைமிளகாயைக் கையால் இரண்டாகக் கிள்ளிப் போடவும். கீரையை நன்கு வேக வைத்துப் பச்சைமிளகாயோடு சேர்த்து மசிக்கவும். இப்போது தேவையான சாம்பார்ப் பொடியைச் சேர்க்கவும். உப்பு, பெருங்காயம் சேர்க்கவும். (பெருங்காயம் தாளிதத்தில் கூடச் சேர்க்கலாம்.)  பொடி வாசனை போகக் கொதித்ததும் வெந்த துவரம்பருப்பைச் சேர்க்கவும். குழம்பு கெட்டியாக இருந்தால் கொஞ்சம் நீர் சேர்த்து சாம்பார் பதத்துக்குத் தளர்த்திக்கொள்ளலாம். ஒரு கொதி வந்த பின்னர் கீழே இறக்கித் தாளிக்கும் பொருட்களைத் தாளித்துச் சேர்க்கவும். கோங்குரா கீரை உடல் நலத்துக்கு ரொம்ப நல்லது. எல்லாக்கீரையையும் இப்படிக் குழம்பு பண்ணலாம். ஆனால் மற்றவற்றுக்குக் கொஞ்சம் புளிக்கரைசல் சேர்க்கவேண்டும். கோங்குராவுக்கு மட்டும் வேண்டாம்.

21 comments:

 1. தனிக்கூட்டு - இதனை வெண் பொங்கலுக்குத் தொட்டுக்குவாங்களா? இல்லை சாதாரணமா குழம்புக்குப் பதில் இதைப் பண்ணி சாதத்தோடு சாப்பிடலாமா?

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெ.த. இது அந்த மாதிரித் தொட்டுக்கும் உணவு வகை இல்லை. காய்களுக்குப் பதிலாகக் கூட்டு வகைகள். இத்தோடு மோர்க்குழம்பு பண்ணுவாங்க!சாதத்தில் பிசைந்து சாப்பிட! இவை எல்லாம் தொட்டுக்கொள்ளும் வ்யஞ்சன வகைகள். ஆனால் எங்க மாமியார் வீட்டில் சங்கராந்தி சூரிய வழிபாட்டில் இவை நிவேதனம் செய்யணும், பொங்கலோடு சேர்த்து!

   Delete
  2. ஒவ்வொரு காயையும் தனித்தனியாக வேக வைத்துக் கொண்டு ஒவ்வொன்றையும் இந்தக் கூட்டு(கிரேவி) செய்தபின்னர் தனித்தனியாக ஒவ்வொன்றிலும் தேவையான அளவுக்குப் போட்டுக் கலந்து தனியாகவே வைப்பார்கள். பின்னால் எரிச்ச குழம்பு பண்ணும்போது தான் எல்லாவற்றையும் சேர்ப்பார்கள்.

   Delete
 2. மிக அருமையான கூட்டு. இந்த வாசனை வந்தாலே
  விரத நாளின் நினைவும் வரும். எள்ளுப்பொடி,மஞ்சள் பொங்கல்
  எல்லாம் சேர்ந்து நல்ல நினைவுகளைக் கூட்டும்.
  எரிச்ச கறிக் குழம்பு ஒரு மாதம் வருமா.
  செய்து பார்க்கிறேன்.
  புளி நல்ல ப்ரிசர்வேடிவ்.
  நன்றி கீதா மா.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி. உங்க கருத்துக்கும் நினைவுகளின் பகிர்வுக்கும் ரொம்ப நன்றி. எனக்குக் கல்யாணம் ஆகி வந்தப்போ இதெல்லாம் புதுசா இருந்தது.

   Delete
 3. உங்க புளிச்ச கீரையில் குழம்பு ரெசிப்பி பார்த்த உடனேயே என் அம்மாவுக்கு போன் பண்ணி, அம்மா பண்ணும் புளிக்கீரை குழம்பு ரெசிப்பி கேட்டேன். முதல்ல சாதாரண கீரைல பண்ணிப்பார்க்கிறேன். (புளிச்சகீரைனா-கோங்குரா, புளி ஜலம் விடவேண்டாம்)

  ReplyDelete
  Replies
  1. நெ.த. சாதாரணக்கீரையிலும் புளி விட்ட கீரை பண்ணி இருக்கேன். அதையும் இங்கே பகிர்ந்திருக்கேன். உணவே மருந்து தலைப்புக்களில் கீரை என்னும் தலைப்புக்களில் ஏதோ ஒன்றில்.

   Delete
 4. கால்கிலோ புளியா? ஒரே புளிப்பாக இருக்காது? இந்த மாதிரி செய்ததில்லை.சாதாரணமாக செய்வதுண்டு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம், இதுக்குப்புளி ஜலம் கொஞ்சம் கெட்டியாகக் கரைப்பாங்க! அதோடு மாமியார் வீட்டில் இருக்கையில் சுமார் பத்துப் பதினைந்து நபர்கள் சாப்பிடப் பண்ணுவோம் இல்லையா? ஆகவே புளி கொஞ்சம் அதிகமாகவே எடுத்துப்பாங்க! வேணும்னா குறைச்சுக்கலாம். ஆனால் எனக்கு இது அவ்வளவாப் பிடிக்காது. புளிக்காய்ச்சல் மாதிரிக் கொதிக்கவிட்டாலும் ரொம்பவே தித்திப்பாகவும் இருக்கும். வெல்லமும் நான் குறைவாச் சொல்லி இருக்கேன். அங்கே கால்கிலோ வெல்லத்துக்குக் குறையாமல் போடுவாங்க!

   Delete
 5. எங்கள் அண்ணன் நாங்கள் தஞ்சையில் இருந்தபோது இப்படிச் செய்திருக்கிறோம் என்று சொல்கிறார். எனக்கு ஞாபகமில்லை.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா, நீங்க அப்போ குழந்தையா இருந்திருப்பீங்க!

   Delete
 6. ​புளிச்சகீரைக்குழம்பு படித்துக்கொண்டேன். செய்யும் சுவாரஸ்யம் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம், புளிச்ச கீரையின் மருத்துவ குணங்களுக்காக வாங்கறோம். இப்போ அதுவும் இல்லை. மற்றபடி சாதரணக்கீரையில் கூடப் புளி விட்டுப் பண்ணலாம்.

   Delete
 7. தனிக்கூட்டு அசத்தல்.

  ReplyDelete
 8. வாங்க மாதேவி, நன்றி.

  ReplyDelete
 9. தனிக்கூட்டு எங்கள் வீட்டிலும் செய்வது உண்டு. இப்போதெல்லாம் இத்தனை செய்யும் பொறுமை இல்லை.

  புளிச்ச கீரையில் குழம்பு நன்றாக இருக்கும். ஆந்திரா [விஜயவாடா] செல்லும் சமயங்களில் கோங்கூரா பச்சடி/சட்னி என விதம் விதமாகச் சாப்பிட்டது உண்டு. இப்போதும் ஆந்திரக் கடைகளில் கோங்கூரா ஊறுகாய் கிடைப்பதை அவ்வப்போது வாங்கிப் பயன்படுத்துவது உண்டு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், உங்களுக்கும் இந்தக் கூட்டு தெரிந்திருப்பது ஆஅச்சரியம். எனக்குக் கல்யாணம் ஆகி வந்து தான் தெரியும்! கோங்குரா கீரை எப்போதாவது வாங்குவோம். கோங்குரா சட்னி என்னோட அம்மா செய்வது நன்றாக இருக்கும்.

   Delete
 10. கீதாக்கா இந்தக் கூட்டுத்தான் பொங்கலின் போது என் மாமியார் செய்வாங்க. கற்றுக் கொண்டேன். நான் சொல்ல வந்தேன் நீங்க அதைக் கடைசில சொல்லிருக்கீங்க....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க தி/கீதா, உங்க மாமியாரும் கும்பகோணம் தானே! இது பொதுவா அந்தப் பக்கத்துக்காரங்க செய்வது தான் என நினைக்கிறேன்.

   Delete
 11. கோங்குரா கீரைக் குழம்பும் செய்வதுண்டு கீதாக்கா. சாம்பார்/பருப்புக் குழம்பு போன்றோ அல்லது புளிக்குழம்பு செய்வது போன்றோவும் செய்வதுண்டு. புளி போடாமல்தான்...நன்றாக இருக்கும்.

  பிறந்த வீட்டில் இருந்தவரை கோங்குரா தெரியாது. கல்யாணம் ஆகி வந்த பிறகும் கூட மாமியார் வீட்டில் இதை சமைத்தது இல்லை. நான் கீரைக்கடையில் இதைப் பார்த்து தெரிந்து கொண்டு கற்றுக் கொண்டேன். அப்புறம் பொதுவாகச் சொல்லப்படும் ரெசிப்பிக்களைத் தவிர்த்து நம் இஷ்டத்துக்கு இதில் செய்யத் தொடங்கினேன்...ஒரு முறை இந்தக் கீரை கொஞ்சம் மீந்திருக்க அதைக் குழம்பில் கலந்து சாப்பிட்டதும் நன்றாக இருக்கவே அப்புறம் இதிய வைத்துக் குழம்பும் செய்ய ஆரம்பித்து..என்று பல ட்ரையல் பராசஸில் கற்றுக் கொண்டது..!!!!!!!!!!!!!!!

  சி வெ போட்டும் இதைச் செய்தால் நன்றாகவே இருக்கு

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தி/கீதா, எனக்கும் செகந்திராபாதில் இருந்தப்போத் தான் கோங்குரா கீரை பழக்கம் ஆனது! அதுக்கு முன்னால் அது பற்றி அவ்வளவாத் தெரியாது! ஆவக்காய் மட்டும் என்னோட நாத்தனார் அடிக்கடி பண்ணுவதால் தெரியும். சி.வெ. எல்லாத்தோடயும் ஒத்துப் போகும்!

   Delete