எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, July 7, 2019

பாரம்பரிய சமையலில் திருநெல்வேலிக்காரர்கள் செய்முறையில் தாளகம்!

இது முழுக்க முழுக்கத் திருநெல்வேலி முறைப்படியானது. இதுக்குத் தேவையான பொருட்கள். முதல்லே காய்கறி! இங்கே வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசி பாரணைக்கு 21 காய்கள் சேர்க்கணும்னு எல்லாத்திலேயும் வெட்டிப் போட்டுக் கொடுக்கிறாங்கனு ஆதி வெங்கட் சொல்லி இருந்தாங்க. நம்ம ரங்க்ஸை அதை வாங்கி வரச் சொன்னேன். எதுக்கும் இருக்கட்டும்னு என்னென்ன காய்கள் என்பதையும் சொன்னேன். 21 காய்கள் கொண்ட பையிலே பாகற்காய், பீன்ஸ், காரட், உ.கி. போன்றவையும் இருந்திருக்கின்றன. எனக்குத் தேவையோ நாட்டுக் காய்கள் தான்! ஆகவே அவற்றில் இருந்து ரங்க்ஸ் சேனைக்கிழங்குத் துண்டங்கள், சர்க்கரை வள்ளிக்கிழங்குத் துண்டங்கள், கொத்தவரை, சாட்டைப்பயறு போன்றவற்றைக் கொஞ்சம் வாங்கிக் கொண்டார். பின்னர் வாழைக்காய், கத்தரிக்காய், அவரைக்காய், பச்சை மொச்சை, பறங்கிக்காய், பூஷணிக்காய் போன்றவற்றையும் வாங்கிக் கொண்டார். போதுமான காய்கள் சேர்ந்தாச்சு. எல்லாவற்றையும் நறுக்கியும் வைச்சாச்சு!

பச்சைக்காய்கள் நறுக்கியது. வாழைக்காய், கத்திரிக்காய், அவரைக்காய், கொத்தவரை, சாட்டைப்பயறு, பச்சை மொச்சை, அவரைக்காய், பூஷணி, பறங்கிக்காய் வகைகள். கடாயில் வேகும்போது எடுத்த படம். நீர் குறைவாக வைத்து மூடி வைத்து வேக விட்டேன்.சர்க்கரை வள்ளிக்கிழங்கும் சேனைக்கிழங்கும் தனியாக வேக வைத்துக் கொண்டேன். இரண்டிலும் கொஞ்சம் போல் உப்புச் சேர்த்து மஞ்சள் பொடி போட்டு வேக வைத்தேன்.

அடுத்ததாகப் புளி ஓர் எலுமிச்சை அளவுக்கு எடுத்து நீர்க்கக் கரைத்துக் கொண்டேன். இந்தக் குழம்பிற்குத் துவரம்பருப்பு வேக வைத்துச் சேர்க்கக் கூடாதாம். ஆகவே நோ பருப்பு!

வறுக்க

மி.வத்தல் 3 (காரம் அதிகம் என்பதால் 3 மட்டும்)

துவரம்பருப்பு ஒன்றரை டேபிள் ஸ்பூன்

அரிசி இரண்டு டீஸ்பூன்

கருகப்பிலை இரண்டு ஆர்க்கு உருவியது

எள் 3 டீஸ்பூன், களைந்து கல்லரித்து முதலில் வறுத்து எடுக்கவும்.

தேங்காய்த் துருவல் சின்ன மூடின்னா ஒரு தேங்காய் மூடி அல்லது இரண்டு டேபிள் ஸ்பூன் துருவல்

இந்த மசாலா சாமான்களை வெறும் சட்டியிலேயே வறுக்கலாம். விருப்பமானால் கொஞ்சமாக எண்ணெய் சேர்த்து வறுக்கலாம். மிவத்தல், துவரம்பருப்பு, அரிசியை வறுத்துவிட்டு அந்தச் சட்டி சூட்டிலேயே கருகப்பிலையைப் போட்டு வறுத்துக் கொள்ளவும். இவை ஆறியதும் இவற்றோடு எள், தேங்காய்த் துருவலைச் சேர்த்து நன்கு நைஸாகப் பொடித்துக் கொள்ளவும்.எள் வறுத்தது. காமிரா கொஞ்சம் அசங்கி விட்டதால் முழுசா வரலை! மன்னிக்கவும்! :(மி.வத்தல்துவரம்பருப்பும் அரிசியும் வறுத்தது!
மிக்சி ஜாரில்   பொடிக்கையில்!
குழம்பு கொதிக்கிறது!

இப்போ வெந்து கொண்டிருக்கும் தான்களை ஒன்றாகச் சேர்த்துக் கொண்டு கரைத்து வைத்திருக்கும் புளி ஜலத்தை அதில் விட்டுத் தேவையான உப்பை மட்டும் சேர்த்துக் கொதிக்கவிடவும். நிறம் அதிகம் வேண்டும் எனில் மஞ்சள் பொடி சேர்க்கலாம். ஏற்கெனவே காய்கள் வேகும்போது தனித்தனியாக உப்புச் சேர்த்திருக்கோம். ஆகவே இப்போப் புளி ஜலத்துக்கு மட்டுமான உப்புச் சேர்த்தால் போதும். சேர்ந்து கொதித்ததும் பொடித்த பொடியைப்போட்டுக்கலக்கவும். நன்கு கலக்க வேண்டும். பொடி கட்டியாக ஆகாமல் கலக்க வேண்டும். அது முடியலைனால் தேவையான பொடியை மட்டும் எடுத்துக் கொண்டு அரைக் கிண்ணம் நீர் விட்டுக் கரைத்துக் கொண்டு குழம்பில் ஊற்றலாம். பொடி போட்டு ஐந்து நிமிஷம் கொதித்தால் போதும். பின்னர் கீழே இறக்கும் முன்னர் தே.எண்ணெயில் கடுகு, கருகப்பிலை, மி.வத்தல் ஒன்றே ஒன்று தாளித்துப் பச்சைக் கொத்துமல்லி போட்டு இறக்கவும்.


பி.கு. இன்று மதியம் இதான் சாப்பாட்டுக்குப் பண்ணினேன். ரங்க்ஸுக்கு என்ன இருந்தாலும் நம்ம ஏழுதான் குழம்பின் ருசி இதில் இல்லைனு சொல்லிட்டார்! :) ஹெஹெஹெ முக்கியமான ஒண்ணு, பெருங்காயம் சேர்க்கலை! எள் வறுத்துச் சேர்ப்பதால்னு நினைக்கிறேன். ஆனால் பொதுவாகத் திருநெல்வேலி சமையலிலேயே பெருங்காயம் குறைவாகத் தான் சேர்க்கின்றனர்.  பெருங்காயம் சேர்க்காதது தான் குறையோ? தெரியலை! பொதுவாக வெங்காய சாம்பார், வெங்காயம் சேர்க்கும் பொருட்கள், ஜீரக ரசம் போன்றவற்றிற்குப் பெருங்காயம் சேர்க்க மாட்டார்கள்.குழம்பு கொதிச்சு முடிச்சுத் தாளிதம் ஆன பின்னர்!

12 comments:

 1. இதில் குழம்புப்பொடி சேர்க்கவில்லை இல்லையா? ம்ம்ம்ம்... ஒரு முறை செய்து பார்க்க வேண்டும். இவ்வளவு காய் போட்டால் கிரேவி மிகவும் குறைந்து விடாதா? வெறும் காயாக அல்லவோ வரும்?

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், தாளகமே திருநெல்வேலி சிறப்புக் குழம்பு. கிரேவி குறையவெல்லாம் செய்யாது. படத்தில் பாருங்கள் கிரேவியும், காயுமாகத் தான்குழம்பு இருக்கும்.

   Delete
 2. நான் காண்பது கனவா நனவா?

  படங்களுடன் உணவுப் பதிவு...அதுவும் தெளிவான படங்களுடன்

  (எலேய்..இப்படிலாம் எழுதி அவங்க நட்பைக் கெடுத்துக்காதே)

  ReplyDelete
  Replies
  1. அநியாயமா இல்லையோ! இதே வலைப்பக்கத்தில் சேவை, போளி, வடை, முறுக்கு, தட்டை எனப் படங்களோடு செய்முறைகள் போட்டிருக்கேன். கடுகோரை செய்முறை கூட இருக்கும். அதோடு இந்தப் பதிவு ஏற்கெனவெ எண்ணங்கள் பக்கத்தில் போன வருஷம் போட்டேன். இங்கே ஆவணப்படுத்துவதற்காக மீள் பதிவாய்ப் போட்டேன்.

   Delete
 3. வறுத்த அளவு பொடி அனைத்தையும் சேர்த்து விட்டீர்கள்தானே? அதிலும் கொஞ்சம்தான் போட்டீர்களா?

  ReplyDelete
  Replies
  1. இல்லை ஶ்ரீராம், குழம்புக்குத் தேவையான அளவு போட்டால் போதும். பொடி மிச்சம் இருந்தால் இன்னொரு நாள் பயன்படுத்திக்கலாம்.

   Delete
 4. தாளகம், சாம்பாருக்குப் பதிலாக உள்ளது.. நன்றாக இருந்ததா? இதுலயே ஏகப்பட்ட தான்கள் இருப்பதால், தொட்டுக்க என்ன செய்தீர்கள்? வெறும் வறுவல் அல்லது வடகம்தானா?

  காய்கள் திருத்துவது யார் எனக் கேட்கணும்னு நினைத்தேன்.

  ReplyDelete
  Replies
  1. //காய்கள் திருத்துவது யார் எனக் கேட்கணும்னு நினைத்தேன்.// இதை இப்போத் தான் பார்க்கிறேன் நெல்லை. என்னைப் பொறுத்தவரை காய்கள் நறுக்கி வைத்திருப்பதைப் பார்த்தாலே அதில் என்ன செய்யப் போகிறோம்னு தெரியணும் என்று ஒரு கருத்து உண்டு. ஆகவே நானே காய்களை நறுக்கிக் கொண்டால் தான் எனக்குப் பிடிக்கும். அவியலில் துண்டங்களாகக் காய்கள் போட்டால் அதைச் சாப்பிடவே எனக்குப் பிடிக்காது. அதே போல் மோர்க்கூட்டில் கடலைப்பருப்பைப் போட்டு ஜீரகம் அரைத்துவிட்டால் சாப்பிடணுமே சாப்பிடத் தோன்றும். :)

   Delete
  2. "சாப்பிடணுமே எனத்தோன்றும்!" என எழுதுவதற்கு சாப்பிடத்தோன்றும் என்னும் பொருள் வரும்படி சொல்லிட்டேன். :) மோர்க்கூட்டில் எல்லாம் கடலைப்பருப்புப் போட்டாலோ ஜீரகம் அரைத்துவிட்டாலோ சாப்பிடத் தோன்றாது.

   Delete
 5. நெல்லை, அப்பளம், வடாம் பொரித்திருப்பேன். இது போன வருஷம் செய்தது. ஆகவே தொட்டுக்க என்ன பண்ணினேன் என்பது நினைவில் இல்லை. ஆனால் குழம்பில் தான்கள் நிறைய இருந்தால் எனக்குப் பிடிக்கும். அவர் நேர் மாறாக! :)))) இப்போல்லாம் வற்புறுத்தித் தான்கள் போட்டுக்க வைக்கிறேன்.

  ReplyDelete
 6. படிக்கும் போதே பசிக்குதுக்கா! தாளகம் பெயர்க்காரணம் என்னவாக இருக்கும் என யோசித்துக் கொண்டிருக்கிறேன். பொதிகைத் தமிழ்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க தம்பி, அபூர்வமா வரீங்க! கருத்துக்கு நன்றி. திருநெல்வேலி மாமியிடம் கேட்டுச் சொல்றேன். தாளகம் என்றால் என்ன பொருள் என்பதை! :)

   Delete