எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, July 2, 2019

பாரம்பரியச் சமையல்கள்! பத்தியச் சமையல்களில் பூண்டு, வெங்காயக் குழம்பு!

சின்ன வெங்காயம், பூண்டு போட்ட குழம்பு இப்போப் பார்க்கலாம். இதை இரு முறைகளில் பண்ணலாம். ஒன்று பொடி போட்டு. இன்னொன்று பொடியைக் கொஞ்சமாகப் போட்டுவிட்டு சாமான்களை வறுத்து அரைத்து விட்டு. வறுத்து அரைப்பதில் பூண்டும் சேர்த்தால் வீரியம் அதிகமாகத் தெரியும். எல்லோருக்கும் ஒத்துக்காது! ஆகவே அவரவர் பழக்கப்படி, விருப்பப்படி பண்ணவும். முதல் முறை பொடி போட்டுப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள் நான்கு பேர்களுக்கு

புளி ஒரு எலுமிச்சை அளவுக்கு (இதற்குப் பெருங்காயம் தேவை இல்லை)

உப்பு தேவைக்கு, மஞ்சள் பொடி அரை டீஸ்பூன், சாம்பார்ப் பொடி/குழம்புப் பொடி 3 டீஸ்பூன்

சின்ன வெங்காயம் உரித்து எடுத்தது ஒரு சின்னக் கிண்ணம், பூண்டு உரித்த பற்கள் ஒரு சின்னக் கிண்ணம். இரண்டும் சமமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

தாளிக்க நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு, மற்றும் பருப்பு வகைகள், வெந்தயம், மி.வத்தல் 2, கருகப்பிலை  , தக்காளி விரும்பினால். இதில் தக்காளி சேர்ப்பதை விட அரைத்து விட்டுப் பண்ணுவதில் சேர்ப்பது தான் கொஞ்சம் ருசியாக இருக்கும். ஆனால் இதிலும் பிடித்தம் இருந்தால் போட்டுக்கலாம்.

புளியைக் கரைத்து வைத்துக்கொள்ளவும். 3 கிண்ணம் இருக்கலாம். உப்பு, மஞ்சள் பொடி, குழம்புப் பொடி போட்டுக் கலக்கும் பழக்கம் உள்ளவர்கள் கலந்து வைத்துக் கொள்ளலாம்.

அடுப்பில் கடாய் அல்லது உருளி அல்லது கல்சட்டியை வைக்கவும். (இந்தக் கல்சட்டியோ, உருளியோ கடாயோ பின்னர் சில நாட்களுக்குப் பூண்டின் வாசனை இருக்கும். ஆகவே தேய்த்தபின்னர் உடனேயே வெந்நீரைக் கொதிக்க வைத்து எலுமிச்சம்பழம் பிழிந்து உப்பைப் போட்டுக் கொதிக்க வைத்தால் வாசனை போய்விடும்.)

கல்சட்டி/உருளி காய்ந்ததும் எண்ணெயை விடவும். கடுகு, பருப்பு வகைகள், வெந்தயம், மி.வத்தல் கருகப்பிலை போட்டுத் தாளிக்கவும். வெங்காயம்,பூண்டை ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும். வெங்காயம், பூண்டை நறுக்கிக் கொள்ள வேண்டாம். அப்படியே உரித்துப் போட்டு நன்கு வதக்கவும். கலந்து வைத்த புளி ஜலத்தை ஊற்றவும். அல்லது புளி ஜலத்தை விட்டபின்னர் குழம்புப் பொடி, மஞ்சள் பொடி, உப்புச் சேர்க்கவும்.  குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரிய ஆரம்பிக்கையில் கீழே இறக்கவும். இதற்கு மறந்து கூட மாவு கரைத்து விட வேண்டாம். குழம்பின் மூல வாசனையே போய்விடும்.

இரண்டாம் முறை: அதே அளவு சாமான்கள் எடுத்துக் கொள்ளவும். ஆனால் குழம்புப்பொடி 3 டீஸ்பூன் வேண்டாம். ஒரு டீஸ்பூன் நிறத்துக்காகச் சேர்க்கவும்.

வறுத்து அரைக்க, மி.வத்தல், 2, கொத்துமல்லி விதை இரண்டு டீஸ்பூன், மிளகு ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு, ஒரு டீஸ்பூன், வெந்தயம் அரை டீஸ்பூன், பூண்டு 5 அல்லது 6 பற்கள். (விரும்பினால் தேங்காய்த் துருவல் இரண்டு டீஸ்பூன்) எல்லாவற்றையும் எண்ணெய் விட்டு வறுத்துப் பொடியாகவோ அரைத்தோ வைத்துக் கொள்ளவும்

இப்போது கடாய்/உருளி/கல்சட்டியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு தாளிக்கும் பொருட்களை ஒவ்வொன்றாகத் தாளித்துக் கொண்டு சின்ன வெங்காயத்தையும், வறுக்க எடுத்துக் கொண்டது போக மிச்சப் பூண்டுப் பற்களையும் போட்டு வதக்கிக் கொண்டு புளி ஜலத்தை விட்டு உப்புப் போட்டுக் குழம்புப் பொடி ஒரு டீஸ்பூன் போட்டுக் கொதிக்க விடவும். பாதி கொதிக்கும்போது வறுத்து அரைத்த கலவையைச் சேர்க்கவும். சிலர் நிறம் வர வேண்டும் என்பதற்காகத் தக்காளியையும் வதக்கிக் கொண்டு அரைக்கும் சாமான்களோடு சேர்த்து அரைப்பார்கள். பிடித்தம் இருந்தால் அப்படிச் செய்யலாம். பூண்டு, வெங்காயம் வாசனை தூக்கலாக இருக்க வேண்டும் எனில் தக்காளி சேர்க்காமல் இருந்தால் சரியாக இருக்கும்.  வறுத்து அரைத்ததைச் சேர்த்து ஒரு கொதி வந்ததுமே எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும். குழம்பை இறக்கி விடவும். தேங்காய் அரைத்திருந்தால் அதையும் வறுத்து அரைக்கும் பொருட்களோடு சேர்த்தே அரைத்துச் சேர்க்கலாம். பிரசவம் ஆனவர்களுக்குச் செய்யும் பூண்டுக் குழம்பில் தேங்காய் சேர்ப்பது இல்லை. மிளகு வறுத்துச் சேர்த்தால் காரம் பிள்ளை பெற்றவர்களுக்கு அதிகம் ஒத்துக்காது என்பதால் ஜீரகமும் வறுத்துச் சேர்ப்பது உண்டு. சாதாரண நாட்களில் செய்தால் ஜீரகம் விரும்பினால் சேர்க்கலாம்.

17 comments:

  1. 1. நான் அப்புறம் அப்புறம் பெருங்காயமும் சேர்க்க ஆரம்பித்தேன்.
    2. தக்காளி சேர்ப்பதில்லை.
    3. மஞ்சள்பொடி சேர்ப்பதில்லை.
    4. வெங்காயம் மொத்தமாகவும், பூண்டு மொத்தமாகவும்
    போடக்கூடாதா? ஒவ்வொன்றாகப் போட்டால் சிரமமாச்சே...
    (ஹிஹிஹி)

    ReplyDelete
    Replies
    1. வெங்காயம் சேர்த்த சமையலுக்கே பெருங்காயம் சேர்க்கக் கூடாது என பல சமையல்கலை நிபுணர்கள் சொல்கிறார்கள். ஆனாலும் சின்ன வெங்காய சாம்பாரில் நான் பெருங்காயம் கொஞ்சம் போலச் சேர்ப்பேன். தக்காளி சேர்ப்பது அவரவர் விருப்பம். சிலர் பூண்டை வதக்கி அரைப்பது போல் தக்காளியையும் வதக்கி அரைப்பார்கள். பூண்டு சீக்கிரம் வதங்கும். வெங்காயம் வதங்க நேரமாகும். ஆகவே வெங்காயம் கொஞ்சம் வதங்கினதும் பூண்டைச் சேர்க்கலாம்.

      Delete
  2. எங்கள் வீட்டில் வாரத்துக்கு ஒரு தரம் ஏதோ பெரிய சமையல் போல இந்த பூண்டு வெங்காயக்குழம்பு செய்யப்படும். முதலில் எல்லாம் வெங்காயம்பூண்டு அப்படியே முழுசாப்போட்டுக்கொண்டிருந்தோம். அப்புறம் இரண்டாய் மூன்றாய் நறுக்கிப் போட்டுக்கொண்டிருக்கிறோம்!

    ReplyDelete
    Replies
    1. பூண்டு சேர்த்துச் சமைப்பதெல்லாம் மாமனாரோடு போயாச்சு. எங்க இரண்டு பேருக்குமே பூண்டு பிடிக்காது. ஒத்துக்கவும் ஒத்துக்காது! ஆகவே பூண்டே வாங்க மாட்டோம். :)))))

      Delete
  3. வறுத்து அரைக்கும் குழம்பு செய்ததில்லை. மேலும் அதில் மிளகு தேங்காய் சேர்ப்பதில் உடன்பாடும் இல்லை!

    ReplyDelete
    Replies
    1. சாதாரண நாட்களில் சாப்பாட்டுக்குனு பண்ணும் குழம்பில் தக்காளி எல்லாம் சேர்த்துப் பண்ணுவார்கள். பெரும்பாலும் மிளகு குழம்பு அடிப்படையிலேயே குழம்பு பண்ணிப் பூண்டையும், சி.வெ.யும் வதக்கி அதில் சேர்ப்பார்கள். அல்லது ஏதாவது ஒன்று மட்டும். சில வீடுகளில் மட்டும் நான் சொன்ன மாதிரி பூண்டையும் வதக்கி அரைத்துவிட்டுப் பண்ணுவார்கள். அதன் சாரம் உடம்பில் சேரணும் என்று. பூண்டைத் தனியாகப் போட்டால் சாப்பிடுபவர்கள் குறைவு.

      Delete
  4. அமாவாசை...அச்சோ... நான் வரலைப்பா இந்த விளையாட்டுக்கு.

    அதுவும் தவிர, பூண்டு போட்ட குழம்புலாம் எனக்கு நினைக்கவே பிடிக்காது.

    ReplyDelete
    Replies
    1. பிரசவம் ஆனால் எங்க பக்கம் அந்தப் பெண்ணை வந்து பார்க்கையிலேயே வெற்றிலை, கொழுந்தாக குறைந்தது அரைக்கவுளியும் கால்கிலோ பூண்டும், கருப்பட்டியும் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்துப் பார்ப்பார்கள். எல்லோரும் கொடுப்பதில் இம்மாதிரி மருந்து சாமான்கள், பூண்டு எல்லாம் தேவைக்கு மேலேயே சேர்ந்துடும். அமாவாசைன்னா படிக்கக் கூடக் கூடாதா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
  5. இந்த ரெசிப்பி வெங்காய சாம்பாருக்கு சரிப்படுமா? நாளை படித்துவிட்டுச் சொல்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. செய்து பார்த்துட்டுச் சொல்லுங்க நெ.த.

      Delete
  6. வெகு அருமையாகக் கொடுத்திருக்கிறீர்கள்
    கீதாமா.
    கணினியிலிருந்து வாசனை வரமுடியுமானால் எனக்கு
    அந்த மணம் வருவது போல் தோன்றுகிறது.
    இவருக்கு மிகவும் பிடித்த குழம்பு.
    இங்கே பூண்டு சாப்பிட மாட்டார்கள்.

    இங்க வந்து ஒரே ஒரு தடவை செய்திருக்கிறேன்.
    சின்ன வெங்காயம் அரைத்தும் போடுவேன்.

    மிக மிக நன்றி மா. எல்லோரும் அனுபவித்துச் சமைப்பார்கள்.

    ReplyDelete
  7. வாங்க வல்லி. ரசித்தமைக்கு நன்றி. ஆனால் எங்களுக்கும் பூண்டு பிடிக்காது என்பதால் நானும் இது பண்ணுவதில்லை. சும்மா எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கணும்னு போட்டிருக்கேன். எப்போவோ 20 வருஷங்கள் முன்னாடி பண்ணியது! இப்போ சமீபத்தில் பூண்டு ரசம் கூட வைக்கலை.

    ReplyDelete
    Replies
    1. பூண்டு ரசம் வைப்பதே, நம் முறையும் பிறர் முறையும் வேறுபடும்னு நினைக்கிறேன். சில இடங்களில் பூண்டு ரசம் (தக்காளி போட்டதூ) நல்லா இருக்கும். அதாவது மைல்டா பூண்டு வாசனை இருக்கும். பல இடங்களில், பூண்டை நசுக்கு அதிகமாகப் போட்டுடறாங்க போலிருக்கும். அவை எனக்குப் பிடிப்பதில்லை.

      பூண்டு மருத்துவ குணம் உடையது என்பதில் நம்பிக்கை. பூண்டின் இயற்கை தெரியாமல், தைரியமாக பெரிய பூண்டுப் பல் இரண்டு வெறும்ன சாப்பிட்டுவிட்டு தொண்டையெல்லாம் எரிந்து கஷ்டப்பட்டேன்.

      Delete
    2. எனக்குப் பூண்டே ஒத்துண்டது இல்லை. நான் சாப்பிட்டதும் இல்லை. பிரசவத்தின் பின்னர் கூட! :)

      Delete
    3. பூண்டு ரசத்தில் பூண்டு பத்தையாகப் போட்டால் வாசனை மைல்ட் ஆக இருக்கும். அதையே தோளுடன்நசுக்கிப் போட்டால் வாசனை தூக்கும்!!

      Delete
    4. பூண்டை ரசத்துக்கு அரைத்துவிட்டால் வாசனையும் பூண்டின் குணமும் அதிகமாகத் தெரியும். ஆனால் அப்படியே வதக்கிச் சிலர் சேர்ப்பார்கள். அவற்றைச் சாப்பிடாமல் தூக்கி வைக்கும் பழக்கம் இருப்பதால் பெரும்பாலும் வதக்கி அரைத்தே சேர்க்கின்றனர்.

      Delete
    5. திருத்தம் :

      தோலுடன் நசுக்கி

      Delete