எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, March 12, 2016

உணவே மருந்து!--தக்காளி--தொடர்ச்சி!

தக்காளியின் மருத்துவ குணங்களைப் பார்க்கும் முன்னர் அதை முன்னாட்களில் ஏதோ விஷக் கனி என்று எண்ணி சமையலில் சேர்க்கவே மாட்டார்களாம். என் மாமியார் வீட்டில் தோட்டத்தில் நிறையத் தக்காளி காய்த்தும் அதைப் பயன்படுத்தத் தெரியாமல் தூக்கி எறிவார்களாம். நான் புக்ககம் வந்த புதிதில் தக்காளித் துவையல், தக்காளி ஊத்தப்பம், தக்காளி போட்டு தால் எனச் செய்தால் அவங்களுக்கு ஒரே ஆச்சரியமாக இருக்கும். தக்காளி சாதம் பண்ணினால் புளிக்கும் என்று சொல்லி சாப்பிட மறுப்பார்கள். பின்னாட்களில் போகப் போகச் சரியானது. தக்காளியும் சாப்பிடும் பண்டம் தான் என்பது புரிந்தது.

தக்காளியில் இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, வைடமின் ஏ எல்லாமும் இருக்கிறது. தக்காளி ஒன்றை எடுத்து நன்கு கழுவி அதன் சாறை மட்டும் தனியாக எடுத்து அதில் நீர் கலந்து வடிகட்டினால் விதைகள் தனியாகப் பிரியும். அந்த விதைகளை எடுத்துக் காய வைத்துக் கொண்டால், தக்காளிச் செடி போடும்போது பயனாகும். விதைகளைப் போட்டுத் தக்காளிக் கன்றுகள் சுமார் ஓர் அடிக்குள் உயரம் இருக்கையிலேயே அதைப் பிடுங்கி வேறு இடத்தில் நட வேண்டும். விரைவில் பலனளிக்கும் காய்களில் இதுவும் ஒன்று. சிறு நீர் எரிச்சலைப் போக்கும். கண்கள் ஒளியுடன் திகழவும் தக்காளியைப் பயன்படுத்தலாம். ரத்தத்தைச் சுத்தமாக்கி, எலும்புகளைப் பலமாக்கும். நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் தக்காளிச் சாறைக் குடிக்கலாம்.  ரத்த ஓட்டம் சீராக இருப்பதால் தோல் மென்மையாகவும் , பளபளப்பாகவும் இருக்கும். களைப்பைப் போக்கி மலச்சிக்கலை நீக்கும். பற்களுக்கும் நன்மை தரும். குடல் புண்கள் ஆறும். உடலின் எடை குறையவும் தக்காளியைச் சாப்பிடலாம். கண்பார்வைக் குறைவைக் கூடத் தக்காளியை உண்பதால் தடுக்கலாம் என்று சொல்கின்றனர். பொதுவாகத் தக்காளியை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவென்று சொன்னாலும் சிறுநீரகக் கல் இருப்பவர்கள் தக்காளியை உண்ணும்போது விதைகளைச் சுத்தமாக அகற்றிவிட்டு உண்பது நல்லது.

பெங்களூர்த் தக்காளி என்னும் தக்காளியில் விதைகள் இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு இருக்கும் விதைகளையும் நீக்கிவிட்டு உண்பதே நல்லது. பெங்களூர்த் தக்காளி என்பது நாட்டுத் தக்காளியும்+உருளைக்கிழங்கும் சேர்ந்த ஒன்று என்று சிலர் சொல்கின்றனர். எப்படியாயினும் மரபணு மாற்றப்பட்ட தக்காளியை மட்டுமின்றி எந்தக் காய்களையும் உண்ணாமல் இருப்பதே நல்லது. தக்காளித் தொக்கு, தக்காளி ஜாம் போன்ற பல உணவு வகைகளைத் தக்காளியை வைத்துச் செய்யலாம். அவற்றில் ஒன்று தக்காளி சாஸ் அல்லது கெட்சப் என்பது ஆகும்.

இதற்குக் குறைந்தது இரண்டு கிலோ தக்காளியாவது தேவை. வெங்காயம் அரைகிலோ, பூண்டு கால் கிலோ தேவைப் படும்.

மிளகாய்த் தூள் குறைந்தது நூறு கிராம், சர்க்கரை அதே அளவு. மசாலாப் பொருட்கள் அனைத்தும் சிறியதாக ஒன்றிரண்டாக உடைத்து அதை ஒரு வெள்ளைத் துணியில் மூட்டையாகக் கட்டிக் கொள்ளவேண்டும். தேவையான உப்பு!

தக்காளியைக் கொதிக்கும் வெந்நீரில் ஊற வைத்துப் பின் தோலுரித்து நன்கு மிக்சியில் அரைத்துச் சாறை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.  பின்னர் மிக்சியில் வெங்காயத்தையும் , பூண்டையும் தனித்தனியே அரைத்துச் சாறை எடுத்துக் கொள்ள வேண்டும். மூன்று சாறையும் ஒன்றாகக் கலந்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். தேவையான உப்பு, மிளகாய்த் தூள், சர்க்கரை சேர்க்க வேண்டும். மசாலாப் பொருட்களைக் கட்டி வைத்த துணியை அதில் உள்ளே போட வேண்டும். ஒரு சிலர் மசாலாப் பொருட்களையும் அரைத்துச் சாறாக்கி இதில் சேர்ப்பார்கள். இவை நன்கு கொதித்துக் கெட்டிப்படும்வரை அடுப்பி வைத்துப் பின்னர் கீழே இறக்கி ஆற வைத்துக் காற்றுப் புகாத கண்ணாடி பாட்டில்களில் ஊற்றிக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்தலாம்.


தக்காளி ஜாம் செய்யவும் மேலே சொன்னமாதிரிச் சாறை எடுத்துக் கொண்டு கொஞ்சம் உப்புச் சேர்த்துப் பின்னர் சர்க்கரையும் தேவையான அளவுக்கு ஊற்றிக் கொதிக்கவைத்துப் பின்னர் ஏலக்காய் அல்லது ஏலக்காய் சிரப் (Food Flavour) சேர்த்துப் பின்னர் கெட்டிப் பட்டதும். ஒரு பாட்டிலில் எடுத்து வைக்கலாம்.

Image result for தக்காளி ஜாம்

படத்துக்கு நன்றி கூகிளார் வாயிலாக தமிழ்க்கடல் தளம்.

6 comments:

 1. //சிறுநீரகக் கல் இருப்பவர்கள் தக்காளியை உண்ணும்போது விதைகளைச் சுத்தமாக அகற்றிவிட்டு உண்பது நல்லது.//
  கால்சியம் பாஸ்பெட் மிகவும் அதிகம் இருக்கிறது. 50 வயசு க்கு மேற்பட்டவர்கள் ஜாக்கிரதை. பச்சைத் தக்காளி ஜூஸ் என்று சொல்லிவிட்டு , ஜாம் ஜாம் என்று குடித்து விட்டு பின் அவஸ்தை வேண்டாம்.
  சிறுநீரக கல் தொந்தரவு இல்லாவிடினும் ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது.

  அம்பது அறுபது ஆயிடுத்துன்னா வாயைக் கட்டுப்படுத்துவது நல்லது.

  ரொம்ப ஆசையா இருந்தா விரல் நுனிலே ஜாமை தொட்டு நாக்கில் தடவி ருசித்துப் பார்க்கலாம். தப்பில்லை.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. ஜூஸோ, ஜாமோ எங்க வீட்டில் யாருக்கும் பிடிக்காது என்பதால் கவலை இல்லை சு.தா.

   Delete
 2. தக்காளி ஜாம் - பார்க்க நல்லா இருக்கு!

  ReplyDelete
 3. உங்கள் மாமியார் நாட்களில் கூட தக்காளியைப் பற்றி அறியாமல் இருந்திருக்கிறார்கள் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறது!

  எனக்கு இரண்டு முறை கல் பிரச்னை வந்தபிறகு, மருத்துவர் அறிவுரையின்படி நாங்கள் பெங்களூர்த் தக்காளிதான் உபயோகிக்கிறோம்.

  தக்காளி தொக்கு அடிக்கடி செய்வோம். இதோ இப்போது தக்காளி, வெங்காயம் சேர்த்து ஸூப் செய்யப் போகிறோம்.

  ReplyDelete
 4. உங்கள் மாமியார் வீட்டில் தக்காளி பயன்படுத்த மாட்டார்கள் என்றால்,
  அந்த இடத்தில் புளிப்பிற்கு என்ன உபயோகம் செய்து இருப்பார்கள் என்று கூற முடியுமா. இது நம் பாரம்பரியத்தை அறிந்து கொள்ள எனக்கு உபயோகமாக இருக்கும்.

  ReplyDelete