எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, March 22, 2016

உணவே மருந்து-- வாழை-- தொடர்ச்சி

வாழைப் பழமாக உண்டால் உணவு உண்ணுவதற்கு முன் உண்ணலாம். ஆனால் இப்போதைய ஆங்கில மருத்துவர்கள் வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை உண்ணக் கூடாது என்கின்றனர். வாழைப்பழத்தில் சர்க்கரைச் சத்து  36.4 சதவீதம் உள்ளது.  கொழுப்புக் குறைவாக 0.2 சதவீதம் இருக்கிறது. புரதம் 1.3 சதவீதமும் சுண்ணாம்புச் சத்து 0.01 சதவீதமும் உள்ளது.
Image result for வாழைப் பழம்

படத்துக்கு நன்றி தமிழ் த இந்து கூகிளார் வாயிலாக

வாழைப்பழம் மலச்சிக்கலுக்கு நல்லது. பூவன் வாழைப்பழத்தைப் பொடியாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி வைத்துக் கொண்டு இரவு படுக்கும்போது தினம் நாலைந்து துண்டங்கள் சாப்பிட்டு வந்தால் காலை மலம் எளிதாகக் கழியும். பேயன் வாழை உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் வல்லமை கொண்டது. ரஸ்தாளி வாழைப்பழம் மாரடைப்புக்கு நல்லது.  மஞ்சள் வாழை குடல் புண்ணை ஆற்றும். குழந்தைப் பேறு கிடைக்காத தம்பதிகள் தினமும் செவ்வாழைப் பழத்தை இரவு படுக்கும்போது பாலுடன் சேர்த்து உண்ணப் பிரச்னை தீரும்.உயிரணுக்களைப் பெருக்கும் வல்லமை உள்ளது செவ்வாழை! நேந்திரம் வாழையைத் தொடர்ந்து சாப்பிட்டால் தோல் மினுமினுக்கும். மொந்தன் வாழை உடலின் ஈரப்பதத்தைத் தக்கவைக்கும். மலைவாழைப்பழம் மலச்சிக்கலைப்போக்கும். உலகில் உள்ள 600 வகை வாழைகளில் குறைந்தது எழுபது அல்லது எண்பது வகை இந்தியாவில் கிடைக்கின்றன. தினமும் ஏதேனும் இரு வகை வாழைப்பழங்களைத் தொடர்ந்து உண்ணலாம்.
Image result for வாழைப் பூ

படத்துக்கு நன்றி நக்கீரன்,கூகிளார் வாயிலாக!

வாழைப் பழத்தைப் போலவே பூவிலும் சத்து நிறைய இருக்கிறது. மாதவிலக்குக் காலங்களில் அதிக ரத்தப்போக்கு இருந்தாலோ அல்லது மாதவிலக்கு நிற்கும் வயதுள்ள பெண்களின் அதீதமான ரத்தப்போக்கோ எதுவாக இருந்தாலும் வாழைப்பூவை இடித்துச் சாறு எடுத்துத் தொடர்ந்து குடித்து வந்தால் பலன் கிடைக்கும். இயலாத பெண்கள் வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்க்கலாம். உடல் வெப்பம் நீங்கி, காச நோய், வெட்டை நோய், மூல நோய், கைகால்கள் எரிச்சல், மூலம், நீரிழிவு, வயிற்றுக் கடுப்பு, போன்றவைகள் நீங்கும். ஆண்களுக்கு ஆண்மை பெருகும்.

Image result for வாழைக்காய்

படத்துக்கு நன்றி வெப் துனியா கூகிளார் வாயிலாக

வாழையின் பிஞ்சைக் கச்சல் என்பார்கள். அந்தக் கச்சல் வாழைக்காயைச் சமைத்து உண்டால் வயிற்றுப் புண், நீரிழிவு, மூலக்கடுப்பு போன்றவற்றிற்கு நல்லது. வாழைக்காயும் மேற்கண்டவற்றிற்கு நல்ல பலன் தரும். குடல் புண்ணிற்கு நல்லது என்றாலும் பலரும் வாயுத் தொந்திரவு என வாழைக்காயைச் சாப்பிட மாட்டார்கள். அவர்கள் வாழைக்காயைச் சாப்பிடாமல் கச்சல் வாழைக்காயைச் சாப்பிடலாம். அல்லது முற்றிய வாழைக்காயை வேக வைத்துப் பொடிமாஸாக உண்ணலாம்.


Image result for வாழைத் தண்டு

படத்துக்கு நன்றி தினகரன் கூகிளார் வாயிலாக
வாழைத் தண்டை ஒரு நாள் விட்டு ஒரு நாளிலோ அல்லது வாரம் இரு முறையோ சேர்த்து வந்தால் சிறுநீரகக் கற்கள் தோன்றது. கற்களைக் கரைக்கும் வலிமை உள்ளது வாழைத் தண்டின் சாறு. இதைப் பொடியாக நறுக்கி நாரை எடுத்துவிட்டுச் சாறாக எடுத்துக் குடித்து வரலாம். நீர் அடைப்பு இருந்தாலும் வாழைத்தண்டின் மூலம் நீங்கும். உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பை நீக்கும்.

வாழைக்காய்ப் பொடிமாஸ் செய்யும் முறை. நல்ல முற்றிய வாழைக்காயைச் சூடான வெந்நீரில் போட்டு ஐந்து நிமிஷம் போல் கொதிக்க விடவும். வாழைக்காயின் பச்சை நிறத் தோல் நிறம் மாறும் வரை இருந்தால் போதும். எல்லாப் பக்கங்களும் திருப்பி விட்டு இப்படி வேக விட்டு எடுத்ததும் ஆறவிட்டுத் தோலை உரித்தால் நன்கு உரிக்க வரும். பின்னர் காரட் துருவலில் வாழைக்காயையும் துருவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் வைத்து (தே.எண்ணெய் நல்லது. பிடிக்காதவர்கள் ஏதேனும் சமையல் எண்ணெய்) கடுகு, உ,பருப்பு, பச்சைமிளகாய், இஞ்சி கருகப்பிலை தாளித்துக் கொஞ்சம் பெருங்காயத் தூள் சேர்க்கவும். அதில் துருவிய வாழைக்காயைப்  போட்டு உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும். அடுப்பை அணைக்கவும். இப்போது பொடிமாஸில் எலுமிச்சம்பழம் அரை மூடி பிழியவும்.  இதற்கு அளவெல்லாம் போடவில்லை. வாழைக்காய் பெரிதாக இருந்தால் நான்கு பேர் உள்ள குடும்பத்துக்கு 2 வாழைக்காயே போதும். வாழைக்காய் நடுத்தரமாக இருந்தால் மூன்று தேவைப்படும். மற்றவை அவரவர் விருப்பம் போல் போட்டுக் கொள்ளலாம்.

பிசைந்து சாப்பிடும் வாழைக்காய்ப் பொடி! தொட்டுக்கவும் செய்யலாம்.

நன்கு முற்றிய வாழைக்காய் இரண்டு

மி.வத்தல் நான்கு(காரம் வேண்டுமெனில் ஒன்றிரண்டு கூடச் சேர்க்கலாம்)

உப்பு, பெருங்காயம்

கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு வகைக்கு ஒரு டீஸ்பூன்

இதற்கு வாழைக்காயைச் சுட்டால் நன்றாக இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் யார் வீட்டிலும் கரி கிடையாது. ஆகவே க்ரில் இருப்பவர்கள் அதில் சுடலாம். இல்லாதவர்கள் சென்ற பொடிமாஸ் முறையில் சொன்னது போல் வாழைக்காயைத் தோல் நிறம் மாறும் வரை வேக வைக்கவும். தோலை உரித்துத் துருவிக்கொள்ளவும்.

நல்லெண்ணெயில் முதலில் பெருங்காயத்தைப் பொரித்துக் கொண்டு மிளகாய் வற்றலை நிறம் மாறாமல் வறுத்து எடுத்துத் தனியாக வைக்கவும். கடுகு, உபருப்பு, கபருப்பு ஆகியவற்றையும் எண்ணெயில் போட்டுத் தாளிதம் செய்வது போல் வறுத்து எடுக்கவும். முன்னெல்லாம் இந்த மிவத்தல், கடுகு தாளிதத்தோடு உப்புச் சேர்த்து அம்மியில் வைத்து ஓட்டிக் கொண்டு பின்னர் சுட்ட வாழைக்காயைத் தோலுரித்துச் சேர்த்து அந்தக் காரத்தோடு வாழைக்காயையும் சேர்த்து நன்கு ஓட்டிப் பிரட்டி எடுப்பார்கள். இப்போதெல்லாம் சுட்ட வாழைக்காய் ஏது? அம்மியும் ஏது? சென்னை, அம்பத்தூரில் இருந்தவரை கரி அடுப்பும் இருந்தது. அம்மியும் இருந்தது. இங்கெல்லாம் அது இல்லை என்பதால் தாளிதத்தை மிக்சி ஜாரில் போட்டுக் கொரகொரப்பாகப் பொடித்துக் கொண்டு ஒருவாணலில் போட்டுக் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டுக் கடுகு (மறுபடி) மட்டும் போட்டுக் கொண்டு வாழைக்காய்த் துருவலையும் உப்பு மற்றும் பொடி செய்த காரப்பொடியைப் போட்டுச் சேர்த்து நன்கு கிளற வேண்டும். விடாமல் இரண்டு நிமிஷமாவது கிளறணும். பின்னர்  சூடான சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றிப் பச்சடி ஏதேனும் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.

தொடரும்!

3 comments:

  1. வாழையில் தான் எத்தனை வகைகள்... இங்கே ஒரே வகை வாழைப்பழம் தான் கிடைக்கும் என்பது சோகம்.

    ReplyDelete
  2. ரஸ்தாளி சாப்பிட்டால் மலத்தைக் கட்டும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். வாழைப் பழம் எனக்குப் பிடித்த பழம்! ஆனால் வெயிட் போடும் என்று சாப்பிடுவதைக் கொஞ்ச நாட்கள் நிறுத்தி இருந்தேன். வாழையின் அனைத்து வகைகளும் எனக்குப் பிடித்தம். ஆனால் என்னைத் தவிர வேறு யாரும் சாப்பிட மாட்டார்கள் என்பதால் எப்போதாவதுதான் சமைக்கிறார் என் பாஸ்...!

    ReplyDelete
    Replies
    1. வாழைக்காயை வேக வைத்துச் சமைத்துச் சாப்பிட்டால் எதுவும் செய்யாது. தைரியமாகச் சாப்பிடலாம்.

      Delete