எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, March 4, 2016

உணவே மருந்து--- தக்காளி!

தக்காளி ரசம்:---

இதிலே புளியே இல்லை. வெறும் தக்காளி மட்டும். கடைசியில் எலுமிச்சை பிழிஞ்சுக்கலாம். அதனால் இதை எலுமிச்சை ரசம்னும் சொல்லிக்கலாம். நான்கு பேருக்குத் தேவையான பொருட்கள்:--

நல்ல பழுத்த நடுத்தர அளவில் தக்காளி மூன்று. இதைக் கொதிக்கும் வெந்நீரில் ஊறப் போட்டுத்தோலை உரித்துக் கொண்டு மிக்சியில் ஜூஸாக எடுத்துக்கவும்.

வெந்நீரில் ஊறப் போட்டுத் தோலை உரிப்பதை blanching என்பார்கள். தக்காளி சாதம் செய்கையிலும் தோலை இப்படி உரிச்சுக்கலாம்.

தக்காளி ஜூஸ் ஒரு கிண்ணம்

உப்பு தேவையான அளவு

பச்சை மிளகாய் இரண்டு

கருகப்பிலை, கொத்துமல்லிப் பொடியாக நறுக்கியது ஒரு டீஸ்பூன்

ரசப்பொடி ஒரு டீஸ்பூன்

மிளகு, ஜீரகப் பொடி ஒரு டீஸ்பூன்

பெருங்காயம் ஒரு துண்டு அல்லது கால் டீஸ்பூன் பவுடர்

துவரம்பருப்புக் குழைய வேகவைத்து நீர் விட்டுக் கரைத்தது ஒரு கிண்ணம்

எலுமிச்சம்பழம் பாதி மூடி

தாளிக்க நெய் இரண்டு டீஸ்பூன்

கடுகு, கருகப்பிலை, கொத்துமல்லி

தக்காளி ஜூஸை ஈயக்கிண்ணத்தில்/வேறு ஏதேனும் கிண்ணத்தில் ஊற்றிக் கொண்டு உப்பு, ரசப்பொடி, பெருங்காயம் சேர்த்துக் கருகப்பிலை, கொத்துமல்லி சேர்த்துப் பச்சை மிளகாய் நறுக்கிச் சேர்க்கவும். கருகப்பிலை கொத்துமல்லியை ரசம் கொதிக்கையில் சேர்த்தால் அதன் சத்து ரசத்தில் இறங்குவதோடு வாசனையும் தூக்கலாக இருக்கும். நன்கு கொதிக்க விடவும்.  நன்கு கொதித்ததும் துவரம்பருப்புக் கரைத்த நீர் விட்டு விளாவவும். விளாவியதும் அதிகம் கொதிக்க வேண்டாம். மேலே நுரை வரும்வரை கொதித்தால் போதும். பின்னர் கீழே இறக்கி ஒரு இரும்புக்கரண்டி அல்லது வாணலியில் நெய் ஊற்றிக் கொண்டு கடுகு தாளிக்கவும். பொடித்து வைத்துள்ள மிளகு, ஜீரகப் பொடியைப் போட்டு கருகப்பிலை சேர்த்து ரசத்தில் ஊற்றவும். கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கித் தூவவும். எலுமிச்சைச் சாறு சேர்த்துச் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும்.

தக்காளியே இந்தியாவைச் சேர்ந்தது அல்ல. வெளிநாட்டைச் சேர்ந்தது. என்றாலும் நம் நாட்டில் தக்காளி விதைகளிலிருந்து விளைவிக்கப்பட்ட தக்காளியை நாம் நாட்டுத் தக்காளி என அழைப்போம். இது புளிப்புச் சுவையும், சாறும் அதிகம் கொண்டது. மாறாக பெங்களூர்த் தக்காளி என அழைக்கப்படும் தக்காளியில் சுவையும் இருக்காது. சாறும் இருக்காது. விதைகளும் இருக்காது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட இந்தத் தக்காளியை உண்பது அவ்வளவு நல்லதல்ல. பின்னர் சிறுநீரகக் கல் இருப்பவர்கள் தக்காளியை உண்ண முடியாதே என்று கேட்பவர்களுக்காக நாட்டுத் தக்காளியை இரண்டாக நறுக்கி விதைகளை மட்டும் தனியாக எடுத்துவிட்டுப் பயன்படுத்தலாம்.

எந்த ஒன்றில் விதைகள் குறைவாக இருக்கின்றதோ அவை மரபணு மாற்றம் செய்யப்பட்டவை. அவற்றை மீண்டும் விளைவிக்கப் புதிதாகத் தான் விதைகளை மறுபடி வாங்கியாக வேண்டும். ஆகவே அவற்றை உண்ணாமல் இருப்பதே நல்லது. இந்த மரபணு மாற்றம் குறித்து விரைவில் விரிவாக எழுதுகிறேன். தக்காளி, கத்தரிக்காய் போன்றவை மரபணு மாற்றப் பயிர்களில் முக்கியத்துவம் பெற்றவை. பழங்களில் பப்பாளி, ஆப்பிள், மாதுளை, போன்றவை அதிகம் மரபணு மாற்றப்பட்டவை! 

6 comments: