தக்காளி பலருக்குப் பிடித்தாலும் சிலருக்குப் பிடிக்காது. அந்த வகையில் நம்ம ரங்க்ஸுக்குத் தக்காளி அவ்வளவாப் பிடிக்காது! ஆனால் அதுக்காக ரசத்தில் போடாட்டியும் ரசம் பிடிக்காது. ஒரு நடுத்தரத் தக்காளியை நான்காக வெட்டி நான்கு நாட்கள் ரசத்துக்குப் பயன்படுத்துவேன். கொஞ்சம் அதிகம் ஆனாலும் புளிப்புனு சொல்லிடுவார். :)
மேலே உள்ளதைப் படிச்சதுமே புரிஞ்சிருக்குமே நான் நேர்மாறாக இருப்பேன் என! ஹிஹி! கல்யாணத்துக்கு முன்னாடியே அம்மா தக்காளியை வைத்து விதவிதமாக அங்கே இங்கே கேட்டு, சொந்தக் கற்பனையை வைத்துச் சமைப்பாங்க. அதிலே ஒன்று தான் தக்காளித் துவையல்! நான் பள்ளி மாணவியாக இருக்கும்போதிலிருந்தே அறிமுகம் ஆன இந்தத் தக்காளித் துவையலின் மேல் எனக்கிருக்கும் மோகம் இன்னமும் குறையவில்லை. தக்காளிப் பச்சடியும் செய்வாங்க. சாதமும் உண்டு. தக்காளி அல்வானு சர்க்கரை போட்டுக் கிளறித் தருவாங்க. இப்போக் கொஞ்ச நாட்களாக நம்ம ரங்க்ஸுக்கும் தக்காளி பிடிக்க ஆரம்பிச்சிருக்கு! ஏன்னா மருத்துவர் தக்காளி சேர்க்கக் கூடாதுனு சொல்லி இருக்கார்! :)
இந்தத் தக்காளியிலேயும் மருத்துவ குணம் இருக்கிறதாகவும் அதுவும் ஆஸ்த்மாவுக்குச் சிறந்த மருந்து என்றும் சன் தொலைக்காட்சியில் நாட்டு மருத்துவம் செய்யும் தாத்தா சொல்ல, அட! என்று அதிசயமாப் பார்த்தேன். அவர் சொன்னவற்றை முதலில் பார்ப்போமா?
ஒரு தக்காளியை எடுத்து நன்கு கூழாக அரைத்துச் சாறு எடுத்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் விட்டு ஒரு கால் டீஸ்பூன் மிளகுத்தூள், கால் டீஸ்பூன் சுக்குத் தூள் சேர்த்துக் கொஞ்சம் நீர் விட்டுக் கொதிக்க வைக்கவும். சுண்ட ஆரம்பித்ததும் அதை எடுத்து வடிகட்டிவிட்டுச் சூடு ஆறுவதற்குள்ளாக வெறும் வயிற்றில் குடித்து வரவும். இது இருமல், சளி போன்றவற்றிற்கு நிவாரணி என்கிறார்.
அடுத்துத் தயிரில் தக்காளியைத் துண்டுகளாகப்போட்டு அப்படியே சாப்பிடணுமாம். அதிலேயும் எடை குறையுமாம். எடை குறைய மேலும் ஒரு தக்காளி சாப்பிடும் முறையில் தக்காளியை வட்டமாக வெட்டிக் கொண்டு ஒரு தோசைக்கல்லில் நல்லெண்ணெய் ஊற்றித் தடவிக் கொண்டு தக்காளித் துண்டங்களை அதில் போட்டு சுவைக்கு மிளகுப் பொடியும், சிறிதளவு உப்பும் சேர்த்து இரு பக்கமும் வேகவிட்டு எடுத்துக் காலை உணவோடு சேர்த்துச் சாப்பிடணுமாம். காலை உணவு நாலு இட்லி எனில் இரண்டு இட்லி சாப்பிட்டுவிட்டு இந்தத் தக்காளி ரோஸ்டை ஒரு தட்டுச் சாப்பிட்டால் போதும். உடல் இளைக்கும் என உறுதியாகச் சொல்கிறார். செய்து பார்க்கணும். இனி தக்காளியின் மற்றச் சமையல்கள் பத்திப் பார்ப்போம்.
சமயங்களில் நான் தக்காளியை அப்படியே வெட்டி சர்க்கரை தூவி சாப்பிடுவேன்...
ReplyDeleteஆமாம், பலரும் அப்படிச் சாப்பிட்டுப் பார்த்திருக்கேன். :)
Deleteதக்காளி சேர்த்த எல்லாமே எனக்குப் பிடிக்கும். நல்ல யோசனைகள். அன்புடன்
ReplyDeleteநன்றி அம்மா. :)
Delete