எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, March 18, 2016

உணவே மருந்து!--வாழை!

Image result for வாழை

நன்றி விக்கிபீடியா!

அடுத்து நாம் பார்க்கப் போவது நாம் அனைவரும் நன்கு அறிந்த சமையலில் அதிகம் பயன்படுத்தும் வாழை! வாழையடி வாழையாக என்று வாழ்த்துவது உண்டு. ஏனெனில் வாழை தார் போட்டதும் பெரிய மரத்தை வெட்டினாலும் அதற்குள்ளாகப் பக்கத்தில் கன்றுகள் வந்திருக்கும். பெரிய மரத்தையும் தோண்டி வேறோர் இடத்தில் நட்டால் மீண்டும் வரும். சந்ததி தொடர்ந்து வரும் என்பதற்காக வாழையடி வாழையாக என வாழ்த்துவது வழக்கம். திருமணம் போன்ற முக்கிய விசேஷங்களில் வாழைக்கு முக்கியத்துவம் உண்டு. திருமணங்களில் குலை தள்ளி இருக்கும் வாழை மரத்தைப் பந்தலில் அலங்காரத்துக்காகக் கட்டுவார்கள். வாழைப்பழங்கள், வெற்றிலை, பாக்குடன் வைத்துக் கொடுக்கப்படும். தாம்பூலம் மாற்றும்போதும் வாழைப்பழம் முக்கியப் பங்கு வகிக்கும்.  இப்படி வாழையின் பயன்பாடுகள் அதிகம்.

வாழை மரத்திலிருந்து இலையும் நமக்குக் கிடைக்கும். பூவும் காயும் கிடைக்கும். அந்தக் காய்கள் பழுத்தால் வாழைப்பழம் கிடைக்கும். குலை தள்ளிய மரத்தை வெட்டினால் தண்டு உணவாகப் பயன்படும். வாழைத்தண்டு சிறுநீரகக் கற்களைக் கரைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. வாழைப்பட்டைகளைச் சேர்த்துத் தைத்து உணவு உண்ணப் பயன்படுத்துவது உண்டு. வாழை நாரில் பூக்கட்டலாம். நார் மற்றச் சிலப் பயன்பாட்டிலும் தேவைப்படுவது உண்டு.  தீப்புண் பட்டவர்களையும், பாம்பு கடித்தவர்களையும் முறையே வாழை இலை, வாழைப்பட்டையில் படுக்க வைப்பது உண்டு.  வாழை மரத்தைத் தோண்டி எடுத்ததும் அடியில் கிடைக்கும் கிழங்கும் பயன்படுத்தப்படுகிறது. மொத்தத்தில் நமக்கு அதிகப் பலன்களைக் கொடுக்கும் ஒரு மரம் வாழை மரம்.

வாழை இந்தியா முழுவதும் வளர்க்கப்படுகிறது. தனியார் வீடுகளிலும், தோட்டங்களிலும் பயிராக்கப்படுகிறது. வாழையில் பலவகை உண்டு. சிறுமலைப்பழம் என்னும் வாழைப்பழம் திண்டுக்கல், கொடைக்கானல் மலைப்பக்கம் இருக்கும் சிறுமலை என்னும் மலை ஊரில் பயிராகும். இதன் பழம் சிறியதாக இருந்தாலும் அதிகச் சுவையோடு இருக்கும். இவற்றிலேயே பெரிய பழம் இருந்தாலும் அது சிறுமலைப்பழத்தைப் போல் சுவையோடு இருக்காது. இதைத் தவிர பூவன், மொந்தன், பேயன், ரஸ்தாளி, செவ்வாழை, நாட்டு வாழை, நவரை வாழை, கொட்டை வாழை, பசும் வாழை, நேந்திரம் வாழை, கற்பூர வாழை, வெள் வாழைபோன்றவைகள் உண்டு. வட மாநிலங்களில் அதிகம் கிடைக்கும் புள்ளி கேலா எனப்படும் மஞ்சள் வாழைப்பழமும், பச்சைநாடான் பழம் எனப்படும் வாழைப்பழமும், பச்சை வாழைப்பழமும் கூட உடலுக்கு நன்மை தரும். 

6 comments:

 1. வாழையின் மகத்துவம் அளவிட முடியாதது. அதை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள் கீதா.

  ReplyDelete
 2. கிழங்கு பற்றி அறிந்ததில்லை. எங்கள் வீட்டில் ஒரு வாழைக்கன்று வைத்து, அது வளர்ந்து மூன்றாகியது. ஆனால் குலைதான் தள்ளவில்லை! :(

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், குலை தள்ளிய மரத்தைத் தோண்டி அடியில் இருந்து எடுத்தால் கிழங்கு கிடைக்கும். உண்மையான வாழைத்தண்டுச் சாறு அதில் தான் கிடைக்கும் என்பார்கள். அது சரி, போன தக்காளிப் பதிவிலே பார்க்க முடியலையே? :)

   Delete
 3. வாழை.... கிழங்கு பார்த்ததுண்டு. சுவைத்ததில்லை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், நானும் சாப்பிட்டதில்லை மருத்துவப் பயன்பாடுக்கு வைச்சிருப்பதாகச் சொல்வாங்க. :)

   Delete