எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, September 6, 2020

பாரம்பரிய முறைப்படியான சாம்பார் சாதம்!

முதல்லே நம்ம சாம்பார் சாதம் எப்படினு பார்த்துட்டு அதுக்கப்புறமா பேளா ஹூளி என்னும் செய்முறைக்குப் போகலாம். சாம்பார் சாதம் வேறே, பிசிபேளா ஹூளி அன்னா என்பது வேறே என்பதை முதல்லே புரிஞ்சுக்கணும். சாம்பார் சாதத்தில் காய்களைச் சேர்க்கலாம். அதே சமயம் பிசிபேளாவில் காய்களே கூடாது. பிசிபேளாவுக்கு வெறும் அரிசி+பருப்பு வேக வைத்ததோடு புளி ஜலம் +வெல்லம் அதற்கெனத் தயாரிக்கப்பட்ட மசாலாப் பொடி சேர்த்துப் பண்ணணும்.  அந்த மசாலாப்பொடியிலும் ஏலக்காய் சேர்க்கக் கூடாது கட்டாயமாய். ஏலக்காய் சேர்த்தால் பொடியின் சுவையே மாறிடும் என்பதோடு கரம் மசாலா மாதிரி ஆயிடும். ஆகவே இப்போ சொல்லப் போவது சாம்பார் சாதம் மட்டுமே என்பதைப் புரிந்து கொண்டு படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இதற்கு நான்கு நபர்களுக்குத் தேவையான பொருட்கள்:

அரிசி ஒரு கிண்ணம், துவரம்பருப்பு முக்கால் கிண்ணம். நல்ல பருப்பு எனில் அரைக்கிண்ணம் போதும். குக்கரிலோ வெண்கலப்பானை அல்லது உருளியிலோ அரிசி, பருப்பைச் சேர்த்துக் களைந்து தனியாக வேக வைக்க வேண்டும்.  அது தனியே இருக்கட்டும்.

மற்றப் பொருட்கள்: காய்கள், இதில் சாம்பாருக்கு என உள்ளவை மட்டும் போட்டால் நன்றாக இருக்கும். வெங்காயம் சேர்க்காமல் பண்ணுவது நல்லது. வெங்காயம் வேண்டுமெனில் போட்டுக்கலாம். அவரவர் விருப்பம். ஆனால் சாம்பாருக்கு என இருக்கும் முருங்கை, கத்திரி, பறங்கிக்காய் (மஞ்சளாக இருக்கக் கூடாது) பூஷணிக்காய் போன்றவை போதும். சேப்பங்கிழங்கு, உருளைக்கிழங்கு, பீன்ஸ், காரட் ஆகியவற்றைக் கூடியவரை தவிர்க்கலாம். வெண்டைக்காயும் போடக் கூடாது. கண்டிப்பாக ஜீரகம் சேர்க்கக் கூடாது. மற்றபடி மேற்சொன்ன காய்களை ஒரே அளவான துண்டங்களாக நறுக்கிக் கொண்டு ஒரு அடி கனமான வாணலியில் இரண்டு டீஸ்பூன் எண்ணெயை விட்டுக் காய்களைப் போட்டுச் சற்று வதக்கிக் கொண்டு தேவையான நீர் சேர்த்து வேக விடவும். இது தனியாக இருக்கட்டும்.

மசாலாவுக்குத் தெஎவையான சாமான்கள்:

மிளகாய் வற்றல் 3 அல்லது 4 காரத்துக்கு ஏற்ப

தனியா இரண்டு மேஜைக்கரண்டி,

கடலைப்பருப்பு ஒரு மேஜைக்கரண்டி அல்லது அதற்குக் கொஞ்சம் குறைவாக

வெந்தயம் இரண்டு டீஸ்பூன்,

துருவிய தேங்காய்த் துருவல் அல்லது கொப்பரைத் துருவல் ஒரு மேஜைக்கரண்டி.

பெருங்காயம் சின்னக் கட்டி அல்லது தூள் பெருங்காயம் ஒரு தேக்கரண்டி

வறுக்க சமையல் எண்ணெய் ஏதேனும் இரண்டு மேஜைக்கரண்டி.

அடி கனமான பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றிக் காய்ந்ததும் மேற்சொன்ன பொருட்களை ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்து ஆற வைக்கவும். கட்டிப் பெருங்காயம் எனில் எண்ணெயில் வறுத்துக்கொள்ளலாம். தூள் பெருங்காயம் எனில் தாளிக்கையில் சேர்க்கலாம். வறுத்து ஆறிய பொருட்களை மிக்சி ஜாரில் போட்டு நன்கு பொடித்துக் கொள்ளவும்.

இப்போது வெந்து கொண்டிருக்கும் காய்களில் ஒரு சின்ன எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்துக் கரைத்துச் சேர்க்கவும். இது கொஞ்சம் கெட்டியாக இருக்கும் என்பதால் தேவையான நீரை இன்னமும் சேர்க்கவும். இது கொதித்து வருகையில் மஞ்சள் பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்துக் கொதித்ததும், வேக வைத்து ஆற வைத்திருக்கும் சாதம்+பருப்புக் கலவையை இதில் சேர்க்கவும். காய்கள் உடையாமல் இரண்டையும் நன்கு கலந்து கொண்டே இவற்றுக்குத் தேவையான உப்பைச் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து நன்கு கெட்டிப்படும் சமயம் அரைத்து வைத்திருக்கும் பொடியைச் சேர்க்கவும். வெல்லம் சேர்ப்பது பிடிக்குமெனில் ஒரு சின்னத் துண்டு வெல்லம் சேர்க்கலாம்.  பொடியைப் போட்டு நன்கு சேர்ந்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு இரும்புக்கரண்டியில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றிக் கடுகு, ஒரு சிவப்பு மிளகாய், ஒரு பச்சை மிளகாய், கருகப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளித்து சாம்பார் சாதத்தில் கலக்கவும். தேவையானால் இன்னும் கொஞ்சம் நெய் சேர்க்கலாம். பொடியாக நறுக்கிய கொத்துமல்லித் தழையையும் தூவவும். இது தான் சாம்பார் சாதம்.

இதுக்கும் பிசிபேளா அன்னத்துக்கும் மாறுபாடுகள் உண்டு. பிசிபேளாவில் காய்களே சேர்க்காமல் பண்ண வேண்டும். ஆகவே அதை நாளை பார்ப்போம்.

அடிக்கடி இங்கே வரமுடியாமல் ஏதேனும் பிரச்னைகள். உடல் நலத்தில் பிரச்னை, கணினி பிரச்னை, மின்சாரப் பிரச்னை, வீட்டில் வேலைகள்னு ஆகிவிடுகிறது. ஆகவே தாமதமாகப் போடுவதற்கு மன்னிக்கவும். 

12 comments:

  1. கீசாமேடம்... முதல்ல உங்க உடல் நிலை நல்லா இருக்கணும். நல்லா ஆரோக்கியமா இருக்கணும். அதுதான் முக்கியம் (அப்போதான் நாங்கெள்லாம் கலாய்க்கணும்னா சாத்தியம்).

    ஏற்கனவே நீங்க டயப்படிதான் இணையத்துக்கு வருவீங்க. அப்போ கரண்ட் போயிடுச்சுன்னா அப்புறம் அடுத்த ஸ்லாட்தான்.

    அப்போ அப்போ இடுகை போட்டீங்கன்னா நல்லாருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லை, உங்க பிரார்த்தனைகளுக்கு நன்றி. நேரப்படி வந்தால் தான் மற்ற வேலைகளுக்கும் நேரம் ஒதுக்க முடியும். முன்னெல்லாம் படிப்பதை தினசரி செய்து கொண்டிருந்தேன். இப்போது படித்துவிட்டு கணினிக்கு வர முடிவதில்லை. கண்களில் பூச்சி பறக்கின்றன. ஆகவே படித்தால் அன்று கணினி இல்லை! :)))))

      Delete
  2. சாம்பார் சாதம் செய்ததில்லை.

    யாத்திரை போகும்போது அவங்க ட்ரூப் நல்லாவே சாம்பார் சாதம் செய்வாங்க. ருசியா இருக்கும் (இருந்தாலும் நான் கொஞ்சம்தான் வாங்கிக்கொள்வேன்)

    வெறும்ன நாலே காய்தான் சொல்லியிருக்கீங்க. அதுல பச்சைப் பறங்கி கிடைப்பது சுலபமில்ல. கத்தரி கைத்ததுனா சொதப்பிடும். பூசனி ஓகே. முருங்கை நாங்க உபயோகிக்க மாட்டோம். சர்க்கரைவள்ளி-கயால விட்டாச்சு. வேற என்ன காய்கறின்னு சொல்லுங்க. ஒரு நாள் ட்ரை பண்ணிப்பார்த்துட வேண்டியதுதான்.

    ReplyDelete
    Replies
    1. சென்னை முகப்பேரில் சந்தான ஶ்ரீநிவாசப் பெருமாள் கோயில் இருக்கு. திருப்பதி போகும் முன்னர் இங்கேயும் பெருமாள் தங்கினார் என்பார்கள். நல்ல உயரமானவர். நாங்க அம்பத்தூரில் இருக்கையில் வண்டியிலேயே போயிடுவோம். திருமஞ்சனம் கூடப் பிரார்த்தனை பண்ணிக் கொண்டு செய்திருக்கோம். அங்கே தரிசனம் முடிச்சுட்டு வரச்சே அநேகமா சுடச் சுட சாம்பார் சாதம் தான் கொடுப்பாங்க. அந்த ருசி அபாரமா இருக்கும். புளியோதரை எல்லாம் என்னிக்கானும், யாரானும் தளிகை ஏற்பாடு செய்திருந்தால் தான்! இது உண்மையிலேயே பிரசாதம்! ஸ்டாலில் விற்பது இல்லை. வைகுண்ட ஏகாதசிக்குத் தவறாமல் அங்கே போயிடுவோம்.

      Delete
    2. முருங்கை எல்லா நாட்களிலும் நாங்களும் பயன்படுத்த மாட்டோம். சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாம்பாரில் அதிகம் போடுவதில்லை. திருவாதிரைக் களிக்குழம்பில் தான் நான் போடுவேன். பறங்கிப் பழம் போட்டு சாம்பார் பண்ணினால் பிடிப்பதில்லை. கூடியவரை சென்னையில் இருந்தப்போவும் பச்சைப் பறங்கி கிடைத்தால் வாங்கிடுவோம். இல்லைனா இல்லை தான். கத்திரிக்காய் அம்பத்தூரிலும் நன்றாகக் கிடைக்கும். இங்கேயும் நன்றாகவே கிடைக்கிறது. வெள்ளிக்கிழமை கத்திரிக்காய் ரசவாங்கி எங்க வீட்டு முறைப்படி பண்ணினேன். குழைவாக வெந்திருந்தது. இவற்றை விட்டால் பூஷணி தான் நீங்க பயன்படுத்தும்படி இருக்கு. வேறே குடமிளகாய் பயன்படுத்தலாம். ஆனால் ருசி கட்டாயமாய் மாறும்.2,3 காய்கள் போடும் பட்சத்தில் பரவாயில்லை எனில் பீன்ஸ், காரட் சேர்த்துக்கலாம். என்னைப் பொறுத்தவரை இதெல்லாம் இரண்டாம் பட்சம் தான். :( இங்கே பறங்கிக் கொட்டையே சிரிப்பாய்ச் சிரிக்கிறது. முள்ளங்கி எல்லாம் போட்டால் ருசி மாறிவிடும்.

      Delete
  3. இன்றைக்கு நான் சேமியா/ரவை போட்ட இட்லி செய்தேன். ரெசிப்பில ஈனோ சால்டோ இல்லை குக்கிங் சோடாவோ இல்லை. ஆனா சாஃப்டா இல்லாமல், பேஸ்ட் மாதிரி உள்ளே அமைந்துவிட்டது. என் பையன் மெதுவா என் காதுல, 'அம்மா வரும்வரை-அதாவது குக்கிங் செய்யும் வரை, நீங்க புதுசா ட்ரை பண்ணாதீங்க' என்று சொல்றான்.

    நீங்க சேமியா ரவா இட்லி பண்ணியிருக்கீங்களா?

    ReplyDelete
    Replies
    1. இல்லை நெல்லையாரே, சேமியாவே மாமாவுக்குப் பிடிக்காது. உப்புமா பண்ணினாலே அரை மனசாகச் சாப்பிடுவார். சாதம் சாப்பிடும் நாள் எனில் ஒரு கரண்டி உப்புமாவோடு மோர்சாதமாகச் சாப்பிட்டுடுவார். சேமியாவில் பாயசம் மட்டும் தான். விதம் விதமாக எலுமிச்சை சேமியா, தேங்காய் சேமியா, புளிக்காய்ச்சல் சேர்த்த சேமியா, தயிர் சேமியானு பண்ணுவேன். அதெல்லாம் ஒரு காலத்தில். வெறும் ரவா இட்லியே பிடிக்கிறதில்லை. இதிலே சேமியா சேர்த்து எங்கே பண்ணறது. ஒரு தரம் ஓட்ஸில் முயற்சி செய்தேன். வாங்கிக் கட்டிண்டேன். :))))) ஓட்ஸே வாங்கறதில்லை. எப்போவானும் வாங்குவோம். அல்லது எதுக்கானும் இலவச இணைப்பாக வரும்.

      Delete
    2. இதுல ஒண்ணு சொல்ல விட்டுப்போச்சு. பொதுவா எனக்கும் சுலபமா செய்துதரும் எந்த டிஃபனும் பிடிக்காது. ஹாஹா. ஒருவேளை எல்லா ஆண்களுக்கும் அப்படித்தானா என்ற சந்தேகம் வருது.

      Delete
  4. அருமையான தயாரிப்பு கீதாமா.
    கரம் மசாலா புலாவ் போன்றதற்கு மட்டுமே
    நான் உபயோகப்
    படுத்துவேன் . நீங்களும் அதுபோல
    கரம் சேர்க்காமல் செய்வது பிடித்திருக்கிறது.
    நன்றி மா. நல்ல செய்முறை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, நான் பிசிபேளாவிலும் கரம் மசாலா பயன்படுத்துவது இல்லை. கொஞ்சம் வேறுவிதமாகப் பண்ணுவேன். எங்களோட சிநேகிதர் வீட்டில் பண்ணிப் போட்டார்கள். கேட்டுத் தெரிந்து கொண்டேன். வெங்கடேஷ் பட்டும் இப்படித் தான் பண்ணுகிறார்.

      Delete
  5. சாம்பார் சாதம் குறிப்புகள் நன்று. பிசி பேளா பாத் குறிப்புகளுக்கு வெயிட்டிங்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், உங்க பதிவுகளுக்கும் அடிக்கடி வர முடியலை. ஒரு நாள் வந்து பார்த்துச் சேர்த்துப் படிக்கும்படி இருக்கு! :)

      Delete