எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Wednesday, September 9, 2020

பிசிபேளா பாத் பாரம்பரிய முறையில்!

பிசிபேளா பாத் என்பது சூடான பருப்புச் சாதம் என்னும் பொருளில் வரும். ஆனால் நம்ம ஊரிலோ அதிலே எல்லாக் காய்களையும் போட்டுப் பண்ணுகின்றனர். முக்கியமாய் வெங்காயம் போடறாங்க. வெங்காயமே சேர்க்காமல் பண்ணுவது தான் பிசிபேளாபாத் என்பது. இன்னும் சொல்லப்போனால் நாம் கதம்பச் சாதத்தை அல்லது கூட்டாஞ்சோறு எனப்படும் சாப்பாடு வகையைப் பண்ணிட்டு அதுக்கு பிசிபேளா பாத் என்னும் பெயரைச் சூட்டுகிறோம். பேளா என்றால் பருப்பு. பிசி எனில் சூடான. பாத் என்பது சாதத்தைக் குறிக்கும். சூடான பருப்புச் சாதமே பிசிபேளா பாத் எனப்படும். அதன் செய்முறையும், சேர்க்கும் பொருட்களுமே வேறு. நாமோ கரம் மசாலாப் பொருட்களைப் போட்டுப் பண்ணுகிறோம். முக்கியமாய் இதுக்கு சோம்பு, ஏலக்காய் போன்றவை சேர்க்கவே கூடாது. ஆனால் நாம் அவற்றையே பிரதானமாகப் போடுகிறோம். இப்போது பிசிபேளா பாத் ஒரிஜினல் செய்முறையைப் பார்ப்போமா?

முதலில் ஒரு கிண்ணம் அரிசியோடு முக்கால் கிண்ணம் நல்ல துவரம்பருப்பைச் சேர்த்துக் களைந்து ஓர் உருளி அல்லது அடி கனமான பாத்திரம் அல்லது குக்கரில் வேக வைத்துக் கொள்ளுங்கள். ரொம்பவே குழையணும்னு இல்லை. ஆனால் பருப்பு வெந்திருக்கணும். பருப்பு, அரிசி எல்லாம் வேக விட்டு எடுக்கையில் அளவு அதிகமா வரும் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். ஆகவே திட்டமான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது தனியாக இருக்கட்டும். இப்போ பிசிபேளா பாத்திற்குத் தேவையான மசாலாப் பொடியைத் தயாரிக்கலாம். அதுக்குத் தேவையான பொருட்களில் முக்கியமாக

கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கசகசா, மிளகாய் வற்றல், தனியா ஆகியவை கூடியவரை ஒரே அளவிலே இருக்கணும். கிண்ணத்தால் அளக்காமல் போட்டாலும் உங்க கை அளவில் எவ்வளவு கடலைப்பருப்பு எடுக்கிறீங்களோ அவ்வளவுக்கு உளுத்தம்பருப்பு, கசகசா, தனியா ஆகியவையும் அதே அளவு மிளகாய் வற்றலும் எடுத்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் மிளகாய் வற்றல் தவிர்த்து மற்றவற்றை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளுங்கள்.  கசகசா நன்கு பொரிய வேண்டும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ஒவ்வொன்றாகத் தனித்தனியாக வறுத்துச் சேர்த்துக் கொண்டு வரவும். கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கசகசா, தனியா ஆகியவற்றை வறுத்ததும் சுமார் 10 அல்லது 15 கிராம்பைப் போட்டு வறுக்கவும். அதோடு கூடவே லவங்கப்பட்டையையும் போடவும். இந்த கிராம்பு, லவங்கப்பட்டை இரண்டும் போடும் அளவைப் பொறுத்து பிசிபேளா பாத்தின் சுவை கூடும். ஆகவே இரண்டையும் சரியாகப் பார்த்துப் போடவும். கிராம்பில் காரம் கூடத் தெரியும் என்பதால் கிராம்பைப் போல் இரு மடங்கு லவங்கப்பட்டையைச் சேர்க்க வேண்டும். பின்னர் ஜீரகம், வெந்தயம் ஆகியவற்றை வகைக்கு முக்கால் மேஜைக்கரண்டி போட்டு வெறும் வாணலியிலேயே அவற்றையும் வறுத்துச் சேர்க்கவும். பிரிஞ்சி இலை எனப்படும் (தேஜ்பத்தா) மசாலா இலையும் 2 அல்லது 3 நறுக்கி வெறும் வாணலிச் சூட்டில் வறுத்துச் சேர்க்கவும்.  வாணலியில் துருவிய கொப்பரைத்துருவல் இரண்டு மேஜைக்கரண்டி சேர்த்து அதையும் சிவக்க வறுத்து ஏற்கெனவே வறுத்த பொருட்களுடன் சேர்த்துக்கொள்ளவும். கடைசியாக அந்த வாணலியில் கொஞ்சம் போல் சமையல் எண்ணெய் விட்டு எவ்வளவு பருப்புக்கள் சேர்த்தீர்களோ அதே அளவு மிளகாய் வற்றலைப் போட்டு வறுக்கவும். அரைக்கிண்ணம் பருப்பு எனில் மிளகாய் வற்றலும் அதே அளவில் இருக்க வேண்டும். மிளகாய் வற்றலை இரண்டாகக் கிள்ளி அரைக்கிண்ணம் அளவில் எடுத்துக் கொண்டும் வறுக்கலாம். கண் மதிப்பாகவும் போட்டுக்கலாம்.  எல்லாவற்றையும் ஆற வைத்து மிக்சி ஜாரில் போட்டு நன்கு பொடித்துக் கொள்ளவும். தனியாக வைக்கவும்.


அடுப்பில் கடாய் அல்லது உருளியை வைத்து சமையல் எண்ணெயை ஊற்றவும். கடுகு போடவும். பொரிந்ததும் ஒரு கைப்பிடி முந்திரிப்பருப்பைப் போட்டு வறுக்கவும். சிவந்ததும் சின்ன எலுமிச்சை அளவுக்குப் புளியை ஊற வைத்து எடுத்த புளிச்சாறைச் சேர்க்கவும்.  வெல்லம் சேர்ப்பது பிடித்தமானால் இந்த அளவிற்கு சுமார் 50 கிராம் பொடித்த வெல்லம் அல்லது நான்கு அச்சு வெல்லம் சேர்க்கவும். வெல்ல வாசனையும், புளி வாசனையும் போகக் கொதிக்கும்போது தேவையான மஞ்சள் தூளைச் சேர்த்துவிட்டுப் புளி வாசனை போனதும் ஏற்கெனவே வேக வைத்திருக்கும் சாதம்+பருப்புக் கலவையை மெதுவாகக் கொதிக்கும் புளி நீரில் சேர்க்கவும். தேவையான நீரைச் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்து வருகையில் அளவாக உப்பைச் சேர்த்து விட்டுப் பொடித்து வைத்திருக்கும் பொடியில் சாதக்கலவைக்குத் தேவைப்படும் அளவை எடுத்துக் கொண்டுக் கொஞ்சம் போல் நீரில் கரைத்துக் கொதிக்கும் சாதத்தில் ஊற்றவும். பொடியை அப்படியே போட்டால் உடனே நன்கு கரண்டியால் கிளறிக்கொடுக்க வேண்டும். பொடி கட்டி தட்டாமல் இருக்க வேண்டும். மீதம் பொடி இருந்தால் ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு இறுக மூடி வைத்துக் கொண்டால் அதைப் பின்னும் சில நாட்கள் பயன்படுத்திக்கலாம்.

சாதக் கலவையில் பொடியைச் சேர்த்ததும் ஒரு பத்து நிமிஷம் போல் கொதிக்க விட்டுப் பின்னர் அடுப்பை அணைத்துப் பொடியாக நறுக்கிய பச்சைக்கொத்துமல்லியைச் சேர்க்கவும். சாதத்தின் மேல் நெய்யைத் தாராளமாக ஊற்றிக் கலக்கவும். இதற்கு வேறு தாளிதமெல்லாம் கூடாது. 


venkatesh bhat makes bisibelebath|CC| how to make bisibelebath powder | bisibelebath  recipe in tamil - YouTube


படத்துக்கு நன்றி வெங்கடேஷ் பட்! 


இவரும் காய்கள் சேர்க்காமல் தான் பண்ணுகிறார். கிட்டத்தட்ட நான் சொன்ன முறைதான் இவரும் பண்ணுகிறார். காய்கள் சேர்த்தால் அது கதம்ப சாதம் அல்லது கூட்டாஞ்சோறு! சாம்பார் சாதம் போன பதிவில் சொல்லிட்டேன். 

12 comments:

  1. செய்முறையைப் பார்த்ததும் எங்கடா...இப்போ படம் மட்டும் இல்லாமல் செய்முறையும் லபக்தானா என்று நினைத்தேன்.

    அப்படி ஆதெண்டிக்கா இருக்கு செய்முறை. மத்தவங்க குழந்தைக்குச் சொல்லிக்கொடுக்கறார்ப்போல் சொல்றாங்க. நீங்க ஹெட் செஃப் இல்லையா? அதனால் செஃப்களுக்குச் சொல்றாப்போல சொல்லியிருக்கீங்க.

    இதை ஒரு நாள் பண்ணணும் என்று நினைத்திருக்கிறேன். செய்முறைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லை. முன்னெல்லாம் அடிக்கடி பண்ணிக் கொண்டு தான் இருந்தேன். ஆனால் கிராம்பு தூக்கலாகப் போட்டால் காரம் அதிகம் ஆகிறதுனு வீட்டிலே எல்லோருக்கும் கோபம் வருது! சரினு விட்டுட்டேன். இப்போல்லாம் காய்களைப் போட்டு சாம்பார் சாதமாகப் பண்ணிடுவேன், அதுவும் நாலைந்து பேர் இருந்தால் தான்!

      Delete
  2. //நான் சொன்ன முறைதான் இவரும்// - ஹல்லோ..இவர் எப்போவோ யூடியூபில் செய்முறை போட்டுட்டார். நீங்க இன்னைக்குத்தான் சொல்லியிருக்கீங்க

    ReplyDelete
    Replies
    1. நான் இன்னமும் இவர் செய்முறையைப் பார்க்கலை, பார்க்கணும். ஒத்துவருதானு தெரிஞ்சுக்கத் தான்! அடை, அவியல் போட்டிருப்பதாக மாமா சொல்லிட்டு இருந்தார், நேற்றுப் பார்த்தார் போல!

      Delete
    2. ஆமாம் கீசா மேடம்... ஆனா பாருங்க... அந்த மாதிரி அடையை கண்ணால் பார்க்கலாம். ஆனால் சாப்பிட்டால் செரிக்காது. அவ்வளவு எண்ணெய்....

      அவியல்ல, முருங்கை தவிர மற்றவை ஓகே. அதுமாதிரித்தானா நீங்களும் அழகழகாக அவியலுக்கு கட் பண்ணுவீங்க? நான் குக்கரில் வேகவைப்பேன். அவர் வெறும்னயே 8 நிமிஷம் அடுப்பில் இருந்தால் காய்கள் வெந்துவிடும் என்கிறார். பார்க்கணும்.

      Delete
    3. அப்படியா? நெல்லையாரே, நான் இன்னமும் பிசிபேளா பாத், அடை அவியல் எல்லாம் பார்க்கலை. கீரை வடை மட்டும் பார்த்தேன். உளுத்தம்பருப்போடு அவர் கடலைப்பருப்புச் சேர்க்கிறார். நாங்க எங்க அம்மாவீட்டுப் பக்கம் எப்போவுமே தனி உளுந்து வடை ஸ்ராத்தம்போது மட்டும் தான். துபருப்புக் கொஞ்சம், கபருப்புக் கொஞ்சம் சேர்ப்போம். ஆகவே எனக்கு அது புதுசா இல்லை. அதோடு குக்கரில் காய்களை வேக வைத்தால் நிறம் மாறிவிடும் என்பதால் நானும் வேக வைப்பதில்லை. சொல்லப் போனால் அவசரம் என்றால் தவிர சாதம் வடிப்பது தான். அதுக்கெனப் பாத்திரம் இருக்கு. காய்களை நேரடியாகவே வேகவைப்பேன். சேனைக்கிழங்கு முதற்கொண்டு நன்கு வெந்துவிடும். அவர் செய்முறையையும் சீக்கிரம் பார்க்கிறேன். காய்களை ஒரே அளவில் நீளமாகத் தான் அவியலுக்கு நறுக்குவோம். நறுக்குவதை வைத்தே நாங்கல்லாம் என்னனு சொல்ல்லிடுவோம்.

      Delete
    4. பிசிபேளா பாத் செய்முறை, அடை அவியல் இரண்டும் இன்னிக்குப் பார்த்தேன். லவங்கமும், லவங்கப்பட்டையும் நிறையச் சேர்க்கிறார். கசகசாவும் நிறையப் போட்டிருந்தார். நான் அத்தனை போடுவதில்லை. அடை இந்த மாதிரி எல்லாப் பருப்புக்களும் சேர்த்து உப்பு, காரம் போட்டுத் தேங்காய் சேர்த்து நைஸாக அரைத்து "அடை தோசை" என்னும் பெயரில் பண்ணுவேன். இப்படிப் பண்ணினதில்லை. அவியலும் இப்படி ஜீரகம் சேர்த்தெல்லாம் பண்ணினதில்லை. காய்களை இப்படித்தான் நறுக்கிப்பேன். ஆனால் அடியில் எண்ணெய் விட்டுக் காய்களை வதக்கி வேக வைப்பதும் எனக்கு வழக்கம் என்றாலும் இவர் அதிலும் பச்சை மிளகாய், ஜீரகம் சேர்த்துக் கருகப்பிலையையும் பொரிய விட்டார். இந்த மாதிரி ஒரு நாள் பண்ணிப் பார்க்கணும்.

      Delete
    5. அடையில் நீங்க சொல்லி இருக்கிறாப்போல் அவ்வளவெல்லாம் எண்ணெய் விடலையே! சரியானபடி தான் எண்ணெய் சேர்த்திருந்தார். பண்ணிப் பார்க்கணும். ஆனால் நான் கருகப்பிலை, கொத்துமல்லி சேர்ப்பேன். இவர் சேர்க்கலை! பெருங்காயம் அரைக்கையிலேயே போட்டுடுவேன்.உப்பும்! இது மாதிரியும் ஒரு நாள் பண்ணணும். இதெல்லாம் இங்கே செலவாகும். முகநூலில் ஒருத்தர் ஜீரகம் போட்டு அரைத்ததோடு அல்லாமல் மாவெல்லாம் கரைத்து விட்டு ரகளை பண்ணி இருந்தார். :)))))

      Delete
  3. நல்ல குறிப்பு. நண்பர் கன்னடிகர் என்பதால் அவர் வீட்டில் செய்யும்போதெல்லாம் எனக்கும் அழைப்பு வந்து விடும் - சாப்பிட்டு வந்து விடலாம்! :)

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், நாங்களும் ஒரு கன்னடக்காரரிடம் தான் கேட்டுத் தெரிந்து கொண்டோம் அதுக்கு முன்னெல்லாம் பிசிபேளானா காய்கள் போட்டு ஏலக்காய், சோம்பு, கிராம்பு, லவங்கப்பட்டை, மிளகாய், தனியா எல்லாம் எண்ணெயில் வறுத்துத் தேங்காயோடு சேர்த்து அரைத்துப் போட்டுத் தான் பண்ணிக் கொண்டிருந்தேன். பின்னர் தான் மாற்றங்கள். ஏலக்காயும், சோம்பும் சேர்க்கவே கூடாது என்றார்கள் அவர்கள். :)))))

      Delete
  4. ஏலக்காய் ,சோம்பு சேர்த்தால் ருசியே மாறிவிடும்.
    நீங்க நல்ல வேளை அதை சேர்க்கவில்லை.

    மற்ற மசாலாக்களும் இப்போது
    ருசிக்கவில்லை. அவை எல்லாம் இல்லாமல்
    வெறும் க.பருப்பு,உ.பருப்பு,தனியா, மிளகாய்
    சேர்த்து செய்து பார்க்கிறேன்.

    விவரமான பதிவு. நன்றாக இருக்கிறது. நன்றி மா கீதா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, நானும் கிராம்பு ஒன்றுக்கு மேல் போடுவதில்லை. காரம் தூக்கலாக ஆகி விடுகிறது. நீங்க சொன்னாப்போலயும் பண்ணிக்கலாம். வேண்டும் எனில் லவங்கப்பட்டைப் பொடி தனியாக இருந்தால் அரைத் தேக்கரண்டி சேர்க்கலாம். செய்து பாருங்கள்.

      Delete