எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, September 18, 2020

மிகப் பாரம்பரிய முறையில் புலவு செய்யும் விதம்!

அடுத்து நாம் பார்க்கப் போவது பிரியாணி. இந்தச் செய்முறை அந்தக் காலத்தில் உண்டா என்றால் இருந்திருக்கு. "நளவீமபாக சாஸ்திரம்" என்னும் நூலில் பிரியாணி செய்முறை பத்திப் போட்டிருக்கு. முதலில் அதைப் பகிர்கிறேன். 1922 ஆம் வருடத்தைய பதிப்பு! 

பின்னர் நாம் செய்யும் முறைகள் பற்றி. இதைப் பல விதங்களில் பண்ணலாம். வெங்காயம், பூண்டு சேர்த்தும், சேர்க்காமலும் பண்ணலாம். காய்களில் குறிப்பிட்ட காய்கள் தான் நன்றாக இருக்கும். என்றாலும் கூடியவரை காய்கள் சேர்த்தும், காய்கள் சேர்க்காமல் பட்டாணி, பயறு, போன்றவை மட்டும் போட்டும் கூடப் பண்ணலாம். இதில் செய்முறைகளும் மாறுபடும். மசாலா சாமான்களைப் பாரம்பரிய முறையில் அரைத்து விடுவது ஒரு வகை. மசாலா சாமான்களைத் தாளிப்பில் போட்டுவிட்டுப் பண்ணுவது ஒரு முறை. மசாலா சாமான்கள் எல்லாவற்றையுமே பொடியாகப் பண்ணி வைத்துக் கொண்டு பண்ணுவது ஒரு முறை. இப்படிப் பல முறைகள் உள்ளன. ஒவ்வொன்றாகப் பார்ப்போம். முதலில் "நளவீமபாக சாஸ்திரத்தில்" இருந்து!

அதிலே இது ப்ரைட் ரைஸ் என்னும் வகையிலே வருதுனு நினைக்கிறேன். அவங்க தாளித்த அன்னம் எனத் தலைப்புக் கொடுத்திருக்காங்க. அதிலே உள்ளதை அப்படியே இங்கே கொடுக்கிறேன். அளவுகளைப் பார்த்துப் பிரமிக்க வேண்டாம். அந்தக் காலத்துக் கூட்டுக் குடும்பத்துக்கானதுனு நினைக்கிறேன்.

புலவுகளுக்குச் சொல்லிய அரிசி வகையில் ஓர் வகையில் ஓர் ஐந்து படி எடுத்துக் கல்,மணல், உமி இல்லாமல் தீட்டிப் புடைத்து ஆய்ந்து மூன்று கழுநீர் போக்கி ஓர் புதுக்கூடையிற்கொட்டி ஓர் பலகையின் மேல் வைக்க வேண்டும். ஐந்து படி வேகும்படியான தேக்சாவில் 11/4 படி நெய் வார்த்து அடுப்பிலேற்றித் தீயையெரித்து நெய் கொதித்து வரும்போது இரண்டு கைப்பிடி வெண்காயம் உரித்து அரிந்து கொண்டு 11/2 ரூபாயெடை கிராம்பு, ஒரு ரூபாயெடை ஏலக்காய், கறுவாப்பட்டை இம்மூன்றுடனே சேர்த்து அதிற்போட்டு அவை சிவந்து வருகையில் சரியாயளந்த பத்துபடிச் சுத்த ஜலத்தை மெள்ள ஊற்றித் தாளித்து சிறுகைப்பிடியாக ஐந்து பிடி உப்பையுஞ் சேர்த்து மூடியினால் மூடித் தீயை நன்றாய் எரிக்க வேண்டும்.  நீர் கொதித்து ஆவி வரும் பக்குவத்தில் 3 பலம் திராட்சிப்பழத்தையும், வாதுமைப்பருப்பையும், முந்திரிகைப்பருப்பும், 3/4 பலம் இலவங்கப்பத்திரியும் தூவி உடனே புதுக்கூடையரிசியை அதிற்கொட்டிச் சட்டுவத்தால் செவ்வையாய்க் கிண்டி மூடி அரைநாழிக்கொருதரம் இப்படியே கிண்டி வர வேண்டும். இந்தப் பிரகாரம் மூன்று நாலு தரம் செய்து வருகையில் நீர் வற்றிச் சாதம் அடியில் அமுங்கியபின் மறுபடியும் சட்டுவத்தின் காம்பால் கீழுமேலுமாகத் துழாவிக் காய்ச்சின பால் ஒரு படி அதன் மேல் பரவலாக ஊற்றி நாலுமுழ வெள்ளைக்கைக்குட்டையை நனைத்துப் பிழிந்து தேக்சாவின் தங்கில் வட்டமாகச் சுற்றி வைத்து மூடியால் அழுத்தி மூடித் தணலை மூடியிலும் தேக்சாவின் அடிப்பக்கங்களிலும் போட்டு இரண்டு நாழிகை வரைக்கும் அடுப்பிலேயே வைத்திருந்து  சுற்றிய குட்டையிலிருந்து ஆவி புறப்படும்போது திறந்து பக்குவமாயிருந்தால் எடுத்துவிடலாம். சிறிது வேறுபட்டிருந்தால் மூடியால் மூடி இன்னும் அரை நாழிகை வைத்திருந்து பின்பு இறக்கிவிடவேண்டும். இதைச் சுடுகையாகவே புசிக்க வேண்டும.

அடுத்து இன்னொரு வகை. இதுக்குப் புலவுச் சாதம்னே பெயர் கொடுத்திருக்காங்க.  அரிசி வகைகளில் புலவு பச்சையமுதும்  கருப்புகளும், கர்மசால்களும்,முந்திரிப்பருப்பும், பூண்டு, வெண்காயம்(வெங்காயம்), மஞ்சள் இவைகளில் அரிசி ஒரு படி, பருப்பும்படி 1/4, கரமசால் பலம் 21/2, முந்திரிப்பருப்பு பலம் பத்து, நெய், பலம் 15. இதுகளைச் செய்யும் விதம்.
முதலில் தேக்சாவில் பிரமாணமாய்ச் சலம் விட்டு அடுப்பிலேற்றி கரமசால்களைத் துணியில் கட்டி அந்த சலத்திற்போட்டு நன்றாய்க் காய்ந்தபிறகு அந்தப் பொட்லத்தை யெடுத்துவிட்டு அரிசியையும் பருப்பையும் 5 தரம் சலம் விட்டுக் கழுவி அந்த தேக்சாவிலிருக்கும் நீரிற்போட்டு அறை வேக்காடு வேகிறதற்குள் மேற்சொன்ன சாமான்களை வேறேயடுப்பில் வெண்காயம், பூண்டு, மஞ்சள் இவைகளைச் சேர்த்து அதையும் அரை வேக்காடு வேகவைத்து முன்சொன்ன சாதத்திலிதுகளையெடுத்துக் கொட்டி மேற்கண்ட நெய்யை விட்டுக் கிளறி இறக்கி அதன் மேலொரு தட்டு போட்டு மூடி அதற்கு மேல் நெருப்பைப் போட்டு வைத்தால் உள்நீரையெல்லாம் வறட்டிக்கொள்வதுமல்லாமல் சாதமும் நன்றாய் மலர்ந்திருக்கும். பிறகு அதை எடுத்துச் சாப்பிட்டாலதினாலுண்டாகும் பலாபலன்.

சூடுங்கொழுமையுமாம் பிரயோசனம் சுத்த இரத்தத்தையுண்டாக்கும் அதிக வுணவாம் சௌக்கியம். குடலுக்கு வலிவுண்டாகும்.  தேகத்தழைப்பும் தாது விர்த்தியும் அதிகரிக்கும். யோகிகளுக்கும் தாது நஷ்டப்பட்டவர்களுக்கும் அநுகூலமுண்டாகும். இருதய கமலத்துக்கு வலிவுண்டாகி தைரியமுண்டாகும். வியாதி, தலை நோவு, மயக்கம் இவைகளுண்டாகும். பரிகாரம் எலுமிச்சம்பழச் சாற்றை வெந்நீரில் விட்டு சர்க்கரை கலந்து குடிக்கவும்.

இனி நம் செய்முறைகள் தொடரலாம்! :)

19 comments:

 1. அடேயப்பா அப்பவே தம் பிரியாணி எல்லாம் இருந்துருக்கா? சூப்பர், அறியாத தகவல்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏடிஎம், இது ஒரு புத்தகம் கிடைத்ததைத் தரவிறக்கி வைத்துள்ளேன். ஆரம்பத்திலிருந்து போடணும்னு! முடியலை, ரொம்ப நேரம் கணினியில் உட்கார முடியலை! அதோடு இந்தச் சாப்பிடலாம் வாங்க வலைப்பக்கப் பதிவுகளையும் தொகுத்துப் புத்தகமாப் போடணும்னு! முடிஞ்சவரை தொகுக்கிறேன். ஆனால் முன்போல் வேகமாகச் செய்ய முடியலை! நடு நடுவில் இடைவெளி வந்துடுது.

   Delete
 2. அடேயப்பா அப்பவே தம் பிரியாணி எல்லாம் இருந்துருக்கா? சூப்பர், அறியாத தகவல்கள்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், ஏடிஎம், பிரியாணி என்னும் தலைப்பிலேயே காய்கள் எல்லாம் போட்டுப் பார்த்த நினைவு. தேடணும். புத்தகத்தில் ஒவ்வொரு அத்தியாயம்/எண் எனத் தனியாய்க் கொடுக்காததால் முழுப் புத்தகத்தையும் ஒவ்வொரு தரமும் பார்த்துத் தேடி எடுக்க வேண்டி இருக்கு.

   Delete
 3. ஒழுங்கா கப் அளவுல, எலுமிச்சை அளவு புளி என்றெல்லாம் எழுதினாலே புரியறது கடினம். இதுல சிலர், மீடியம் தேங்காய், கையளவு வெந்தயம் என்றெல்லாம் எழுதிக் குழப்புவார்கள்.

  1922ம் ஆண்டு அளவு கணக்கையெல்லாம் போட்டு எங்களைத் தலைசுற்ற வைப்பது நியாயமா?

  இதையெல்லாம் இப்போ உள்ள அளவுக்கு கன்வர்ட் செய்து, அளவை பத்தில் ஒரு பங்காக்கிச் செய்து பார்ப்பதா? இல்லை இருக்கும் ஃபேமிலியை, அந்த அளவுக்கு ஏற்ற மாதிரி அதிகமாக்கி அதன் பிறகு செய்துபார்ப்பதா?

  ReplyDelete
  Replies
  1. அந்தக் காலக் கணக்குகளையும் தெரிஞ்சுக்கணும் நெல்லையாரே! எனக்கு இந்தப் பலம், சேர் எல்லாம் ஓரளவு தெரியும்/புரியும். நான்காம் வகுப்பு வரை இதில் தான் படித்தேன். பின்னரே புதுக்கணக்கு முறை! மெட்ரிக் முறை என்பார்கள். ஆனாலும் கல்யாணம் ஆகி வந்ததும் என் மாமியார் இன்னமும் இந்த அளவுகளிலேயே எல்லாம் அளப்பதையும் பார்த்திருக்கேன். எண்ணெய், பாலுக்குத் தனி அளவு, சாமான்களுக்குத் தராசோடு எடைக்கற்கள் இருக்கும். இப்போதைய எடைக்கற்கள் இல்லை அவை. அவை எங்கே போயின என்பதே தெரியவில்லை. தராசுத் தட்டுகள் சங்கிலி, மாட்டும் அளவுகோல் இல்லாமல் என்னிடம் இருக்கின்றன.

   Delete
  2. பழமையை மாற்றாமல்/மாறாமல் பாதுகாப்பது என்பது நமக்குத் தெரியாத விஷயம்! இப்படி ஒண்ணு இருந்திருக்குனு இளைய தலைமுறை அறிய வேண்டாமா?

   Delete
 4. அப்போதே இந்த மாதிரி உணவுகள்லாம் இருந்திருக்கிறதா? ஒருவேளை திருமணங்களில் மட்டும் பண்ணுவார்களோ?

  இதன் ஆசிரியர், அவரது பின்னணி என்ன?

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியர் எல்லாம் யாரோ முதலியார். விபரங்கள் பின்னர் வெளியிடுகிறேன். முன்னுரை எல்லாம் ஏதும் இல்லாததால் பின்னணி/முன்னணி எல்லாம் தெரியலை.

   Delete
 5. பிரமாதமாக இருக்கே.
  இத்தனை விதத்தில் புலாவ்!!!

  அன்பு முரளிமா,கூகிள் செய்தால்
  இந்த அளவு தெரியும்:)

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி, அவருக்கு கூகிளில் தேட முடியலை போல! :))))) ஆமாம், விதம் விதமான செய்முறைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றாகப் பகிர்கிறேன்.

   Delete
  2. அப்படி பகிர்வது என்று தீர்மானித்தால், உங்கள் வேரியேஷன் அல்லது செய்முறை வித்தியாசம் இருந்தால் அதனையும் குறிப்பிடுங்கள்

   Delete
  3. நெல்லை, முதலில் ஒன்று புரிந்து கொள்ளுங்கள். யாருடைய எழுத்தையும் நாமாக மாற்றக் கூடாது. அவர்கள் எப்படிச் சொல்லி இருக்கிறார்களோ அப்படியே தான் நாமும் எழுதணும்/சொல்லணும். மாற்ற நமக்கு உரிமை இல்லை. இந்த விஷயத்தில் தான் நான் உ.வே.சா பற்றிய கட்டுரைகளில் அவருடைய கிரந்தம்/மணிப்ரவாளப் பிரயோகத்தை இப்போதைய நண்பர்கள் மாற்றித் தனித்தமிழில் திருத்தவே விக்கிப்பீடியாவை விட்டு விலகினேன். நம்ம துரை சொன்னது போல் ஜூலையை ஜூலை என்றே எழுதணும். மாறாக "சூலை" என்றால் அர்த்தமே மாறுகிறது இல்லையா? ஆகவே நாம் அதன் செய்முறையை மட்டும் தெரிந்து கொண்டு நம்முடைய அளவில் பண்ணிக்கலாம்.

   Delete
 6. உஷ்ணம் குறையும் என்று போட்டிருக்கிறதே நன்மை தான்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், ஒவ்வொரு செய்முறைக்கும் அதன் நன்மை, தீமை, பரிகாரம் எல்லாமும் உண்டு.

   Delete
 7. ஐந்து படி அரிசி, அதற்கேற்ற நெய்
  எல்லாமே அதிசயிக்க வைக்கின்றன.

  நானும் வீசை,பலம் என்றே படித்து
  மெட்ரிக் அளவுக்கு மாறினேன்.
  மாகாணி வாய்ப்பாடெல்லாம் தாத்தாவுக்கு
  மனப்பாடமாகச் சொல்லணும்.!!
  நன்றி கீதாமா.
  மிக அருமையான பதிவு.

  ReplyDelete
  Replies
  1. மீனாக்ஷி அம்மாளின் சமைத்துப் பார் புத்தகத்தில் பழைய அளவுகள் உள்ள புத்தகமே என்னிடம் இருந்தது. தற்சமயம் வரும் பதிப்புக்களில் செய்முறையில் அளவை அடைப்புக்குள் கொடுத்திருப்பதாகச் சொன்னார்கள். பழைய அளவோடு இப்போதைய மெட்ரிக் அளவையும் சொல்லி இருக்காங்க என்பார்கள். அந்த மாதிரி மாற்றிப் போடணுமோ? நானும் இந்த வாய்ப்பாடில் திணறி இருக்கேன். மாகாணி, வீசம் எல்லாம் குழப்பி அடிக்கும்! :)

   Delete
 8. 1922- சற்றேறக்குறைய 100 ஆண்டுகள் பழமையான புத்தகம்! அதிலிருந்து எடுத்துத் தந்த குறிப்புகள் நன்று. அளவுகள் குழப்பினாலும் நமக்குத் தகுந்த மாதிரி மாற்றிக் கொள்வது சுலபமே! மனம் இருந்தால் மார்க்கமுண்டு!

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், உங்கள் பதிலுக்கு நன்றி.

   Delete