எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, June 15, 2020

(எங்க வீட்டு) பாரம்பரியச் சமையலில் பால் பாயசம்!

எல்லோருக்கும் தெரிந்த பிரபலமான பால் பாயசம். நான்கு பேருக்கு செய்யத் தேவையான பொருட்கள்

ஒரு கிண்ணம் பச்சரிசி

நெய் இரண்டு மேஜைக்கரண்டி.

பால் 3 லிட்டராவது கொழுப்புச் சத்துள்ள பாலாக வேண்டும். இதில் ஒரு லிட்டரைத் தனியாக வைத்து விட்டு மீதம் இரண்டு லிட்டர் பாலை நன்கு கொதிக்கவைத்துச் சிவந்த நிறம் வரும் வரை அடுப்பில் வைத்து எடுத்துத் தனியாக வைக்கவும். பாலின் ஏடுகளை/ஆடையை எடுக்கவேண்டாம் அப்படியே  கரண்டியால் கிளறிவிட்டுக் காய்ச்சித் தனியாகப் பாலை வைக்கவும்

ஏலக்காய்த் தூள் ஒரு டீஸ்பூன்,  முந்திரி, பாதாம், பிஸ்தா கலந்து இரண்டு டேபிள் ஸ்பூன். அல்லது திராக்ஷை மட்டும் இரண்டு டேபிள் ஸ்பூன்

சர்க்கரை தேவைக்கு. ஒரு கிண்ணம் தான் பச்சரிசி என்பதால் ஒரு கிண்ணம் சர்க்கரையே போதும். கூடப் போட்டால் தித்திப்பு அதிகம் ஆகிவிடும். இதைச் சிலர் குக்கரில் வைக்கிறார்கள். ஆனால் நேரடியாக உருளி அல்லது அடி கனமான பாத்திரத்தில் வைத்தால் இன்னும் நன்றாக இருக்கும். பச்சரிசியை நன்கு கழுவிக் களைந்து கொள்ளவும் வாணலி அல்லது உருளியில் ஒரு மேஜைக்கரண்டி நெய்யை ஊற்றி அரிசியை அதில் போட்டுச் சிவக்க வறுக்கவும். தனியாக வைத்த ஒரு லிட்டர் பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துப் பாலிலேயே அரிசியை வேக வைக்கவும். அரிசி நன்கு குழைந்து வெந்த பின்னர் தேவையான சர்க்கரையைச் சேர்க்கவும். சர்க்கரை சேர்ந்து நன்கு கரைந்த பின்னர் தனியாய் வைத்திருக்கும் கெட்டியான பாலைச் சேர்க்கவும். நன்கு கலக்கவும் ஒரே கொதி விட்டதும் அடுப்பை அணைத்து ஏலப்பொடி சேர்த்து நெய்யில் முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்புக் கலவையைச் சிவக்க வறுத்துச் சேர்க்கவும்.அல்லது திராக்ஷைப் பழத்தை நெய்யில் பொரித்துச் சேர்க்கவும்  சிலர் இதற்கு மில்க் மெயிட் சேர்க்கிறார்கள். மில்க் மெயிட் சேர்த்தால் அதிலே சர்க்கரை இருக்கும் என்பதால் ஒரு கிண்ணம் சர்க்கரை போட வேண்டாம். அரைக்கிண்ணமே ஜாஸ்தி ஆக இருக்கும். பார்த்துச் சேர்க்கவும்.

அரிசியை நெய்யில் வறுக்காமலும் பாலில் கரைய விட்டுப் பண்ணுவார்கள். அரிசியைப் பாலில் வேக வைத்துப் பின்னர் அது  நன்கு குழைந்த பின்னர் நன்கு மசித்துவிட்டுச் சர்க்கரை சேர்க்கலாம். சர்க்கரை சேர்த்துக் கொதித்துவிட்டால் பாயசம் கொஞ்சம் நீர்க்கப்போய்விடும். ஆகவே சரியான சமயத்தில் அடுப்பை அணைத்துவிட வேண்டும். பாயசம் கெட்டியாகப் பால் சேர்ந்து கொண்டு இல்லை எனில் கொஞ்சம் மில்க் மெயிட் அல்லது சுண்டக் காய்ச்சிய பால் சேர்க்கலாம். வழக்கம் போல் ஏலக்காய்த்தூள் சேர்த்து, முந்திரி, பாதாம் வறுத்துச் சேர்க்கலாம். அல்லது திராக்ஷைப் பழத்தை வறுத்துச் சேர்க்கலாம்.

இப்படி எல்லாம் தயார் செய்ய முடியலை. திடீர்னு பாயசம் வைக்கணும். அதுவும் பால் பாயசம் தான் என்றால் என்ன பண்ணலாம். எப்படியும் சாதம் வடித்திருப்போம் இல்லையா? அதில் இருந்து இரண்டு கரண்டி சாதத்தை எடுத்து நன்கு மசிக்கவும். மசித்துக் கொண்டே கொஞ்சம் கொஞ்சமாகப் பாலைச் சேர்க்கவும். பாயசம் பதத்துக்கு வந்ததும் அடுப்பில் வைத்துச் சூடாக்கிச் சர்க்கரை சேர்க்கவும். தேவையானால் இன்னும் கொஞ்சம் பால் சேர்க்கலாம். சர்க்கரை கரைந்து பாயசம் கெட்டிப்பட ஆரம்பித்ததும் அடுப்பை அணைக்கவும். இப்போது கொஞ்சம் காய்ச்சிய பால் ஒரு கிண்ணத்தை அதில் சேர்த்துவிடவும். குங்குமப்பூக் கிடைத்தால் பாலில் ஊற வைத்துச் சேர்க்கலாம். பச்சைக்கற்பூரம் பிடித்தால் அதுவும் ஒரு சிட்டிகை போடலாம். இல்லை எனில் ஏலக்காய்த் தூள் சேர்த்து நெய்யில் முந்திரிப்பருப்பு, பாதாம், பிஸ்தா வகைகளை வறுத்துச் சேர்க்கவும்.

paal payasam recipe | rice payasam recipe | how to make paal payasam


படத்துக்கு நன்றி கூகிளார்

21 comments:

 1. பால்பாயசம் - கோவில்களில், அதிலும் கேரளக் கோவில்களில் தயார் செய்வதுபோல் வராது. ருசி ரொம்ப நல்லா இருக்கும்.

  எத்தனை வீட்டில் உருளி இருக்கப்போகுது? அப்படி இருந்தாலும் கேஸ் அடுப்பில் வைக்கும் ஸ்ட்ரென்த் இருக்கப்போகுது?

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெல்லையாரே, எங்க வீட்டில் விதம் விதமான அளவுகளில் உருளியும் இருக்கு, அடுப்பிலும் அடிக்கடி வைப்பேன். இதனால் எல்லாம் எரிவாயு தீர்ந்து விடாது. சூடு வெகு நேரம் தாங்கும் என்பதால் பாத்திரம் சூடானதும் விரைவில் சமையல் ஆகும். பலரும் தவறாக நினைப்பது வெண்கலப்பானை, உருளி, கல்சட்டியால் எரிவாயு தீர்ந்துவிடும் என்பது.

   Delete
 2. பால் பாயசம் செய்தபிறகு அதன் மேல் கோலம் போடணும்னு சொல்லவே இல்லையே.

  படத்துல கோலம்னா போட்டிருக்கு

  ReplyDelete
  Replies
  1. குங்குமப்பூக்கோலம் போட்டிருக்காங்க. நானெல்லாம் வாங்கவே யோசிப்பேன்.

   Delete
 3. சாத்த்தை மசித்து பால் பாயசம் செய்தால் கண்டுபிடித்துவிட முடியாதோ?

  பால் பாயசத்துக்கு கேரள சிவப்பரிசி வேணும். அதைக் குறிப்பிடவில்லை நீங்க.

  எபிக்காக அங்க இருக்கும்போது சிகப்பரிசி வாங்கினேன். பால்பாயசம் செய்து எபிக்கு அனுப்பும் நேரம் வாய்க்கவில்லை

  ReplyDelete
  Replies
  1. நெல்லை, ஐயப்பன் அரவணைக்கு மசிக்கிறாப்போல் நெய் விட்டு மசிக்கணும். கேரளச் சிவப்பரிசியில் எல்லாம் நாங்க பண்ணுவதில்லை. இன்னும் சொல்லப் போனால் இதுக்குனு தனியா அரிசி வாங்குவதும் இல்லை. வீட்டில் சமைக்கும் பச்சரிசி தான்.

   Delete
 4. பால் பாயசம் - இங்கே எந்த விழா என்றாலும் பால் பாயசம் இல்லாமல் இருக்காது! :) ருசியானது, பலருக்கும் பிடித்தமானது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், சில சமயங்களில் பண்ணினால் சரி. எப்போதும் பால் பாயசம் எனில் கொஞ்சம் மாறுதல் வேண்டி இருக்கும்! :))))))

   Delete
 5. நாங்களும் செய்வோம்தான்.  ஆனால் இவ்வளவு மெனக்கெட்டு அல்ல!  சிம்பிளாய் செய்து விடுவோம்!!!

  ReplyDelete
  Replies
  1. எப்படிச் செய்வீங்க என்பதையும் பகிர்ந்திருக்கலாமே ஸ்ரீராம்?

   Delete
  2. சின்ன வயசுல எனக்குப் பிடித்தமான உணவு, சுட சாதம், அதன் மேல் ஜீனி, பிறகு அதன் மேல் பால் விட்டு கலந்து சாப்பிடுவேன். எங்க அம்மா நான் கேட்கும்போதெல்லாம் போடுவார்.

   அதுபோல நீங்கள் சொல்லியிருப்பதுபோல, சுட சாதம் மசித்து, பால், ஜீனி, முந்திரி வறுத்த்ப்போட்டுடுவாரோ?

   Delete
 6. சாப்பிட வந்துவிட்டேன் கீதாக்கா.

  பார்த்துவிட்டு வருகிறேன். ஸ்வீட்டாக இருக்கே நானே ஸ்வீட்டு!! ஹா ஹா ஹா ஆனால் எனக்கு ஸ்வீட் பிடிக்கும் ஆனால் திகட்டாமல் இருக்க வேண்டும் இனிப்பு திட்டமாக.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. எனக்குப் பாயசம் எனில் உள்நாக்குத் தித்திக்கணும். ஆனால் இப்போல்லாம் குறைத்துத் தான் போடுகிறேன்.

   Delete
 7. அழகா சொல்லியிருக்கீங்க கீதாக்கா.
  பெரும்பாலும் உருளியில் தான் ஏனென்றால் கனமாக இருக்கும் என்பதால். அரிசி வறுத்து அல்லது வறுக்காமல். நான் இரண்டும் செய்வதுண்டு. வறுத்துச் செய்தால் இன்னும் நன்றாக இருப்பது போல் இருக்கும்.

  சிலசமயம் என் சின்னப்பாட்டி செய்து காட்டியது போல குக்கரில் டைரக்ட்டாக வைத்துச் செய்வது. சிம்மில் வைத்து பால் அரிசியை வறுத்தோ வறுக்காமலோ சேர்த்து நல்ல வாசனையோடு வரும் அக்கா ரோஸ் கலரில். இது சில சமயம். அப்ப்டிச் செய்யும் போது கேட்பார்கள் மில்க்மெய்ட் சேர்த்தாயா என்று. விருந்து என்றால் பருப்பு, ஏலம் எல்லாம் போடுவதுண்டு. மகனும் நானும் ஏலக்காய் ஃபேள்வரில் சாப்பிடுவோம் என்றாலும் ஏலம் குங்குமப் பூ பருப்புகள் எதுவும் போடாமல் அந்த பால் குறுகிய டேஸ்டில் சாப்பிடப் பிடிக்கும்.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வறுத்தால் அந்த ருசியே தனிதான். இல்லையா? குக்கரில் இதுவரை நான் வைத்ததில்லை. அம்பேரிக்காவில் உருளி கிடையாது என்பதால் குக்கரில் பண்ணி இருக்கேன். ஆனால் மூடி வைத்து வெயிட் போட்டெல்லாம் இல்லை. சாதாரணமாகப் பாத்திரத்தில் வைப்பது போல் வைத்துப் பண்ணுவேன்.

   Delete
 8. வெள்ளிக்கிழமை பாயசம் என்று மாமியார் சொல்வார்.
  எல்லாமே ஆச்சாரமாக செய்வதால்
  வடித்த சாதத்தில் நீங்கள் சொல்வது போல மசித்து
  சர்க்கரை சேரக் கிளறிவிட்டுப் பால் விட்டுக்
  கொதித்த பின் இறக்கு வார்.
  நீங்களும்
  முழுமுதல் பாயாசம் சொல்லி இருக்கிறீர்கள்.
  3 லிட்டர் பாயசம் எப்படி இருக்கும் என்று
  நினைக்கவே இனிக்கிறது.

  மகள் இந்தப் பாயசம் செய்யவே தனியாக
  மடியாக ஒரு காசரோல் குக்கர் வைத்திருக்கிறாள்.
  நல்ல சுவையாக இருக்கும்.

  நல்ல விஷயங்களைப் படிக்க மனம் சந்துஷ்டி பெறுகிறது.
  நன்றி மா.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி, எனக்கென்னமோ குக்கர் சரியா வரதில்லை. பெண் இன்ஸ்டன்ட் பாட்டில் பண்ணுவாள். எனக்கு அதுவும் சரியாய் வரலை போல் தோணும்.

   Delete
 9. மசித்து செய்ற பாயசம் நல்லா இருக்கு .வீட்டில் மாப்பிள்ளை சம்பா அரிசி இருக்கு அதில் செய்யப்போறேன் 

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சல், ரொம்ப நாட்களாகக் காணோமே உங்களை? வேலைக்குப் போக ஆரம்பிச்சாச்சா? மாப்பிள்ளைச் சம்பாவில் செய்து பாருங்க.இங்கே தினம் தினம் கஞ்சி மாப்பிள்ளைச் சம்பாவில் தான் என்பதாலும் எப்போதுமே பச்சரிசியில் தான் பாயச வகைகள் பண்ணுவதாலும் நான் அதில் தான் பண்ணுகிறேன்.

   Delete
 10. பால் பாயசம் ஆறிப்போய்விட்டதே. வேறு சுடச் சுட ஏதாவது போடக்கூடாதா?

  ReplyDelete