எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, May 4, 2019

அங்காயப் பொடின்னா என்னனு தெரியுமா?

அங்காயப் பொடி அல்லது ஐங்காயப் பொடி! இது அதிகம் பிள்ளை பெற்றவர்களுக்கே சாதத்தில் போட்டுச் சாப்பிடவெனப் பண்ணுவது உண்டு. ஆனாலும் வெறும் நாட்களிலும் அனைவரும் வயிறு சுத்தமாக ஆகவும் வாயுத் தொல்லை நீங்கவும் சாப்பிடலாம். வாயில் ருசி தெரியாமல் இருக்கையிலும் வயிற்றுப் போக்கின் போதும் வாந்தி எடுத்தாலும் இந்தப் பொடியைச் சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றிச் சாப்பிடலாம். இதற்குத் தேவையான பொருட்கள்:

அங்காயப் பொடி: தனியா 50 கிராம், வேப்பம்பூ சம அளவு, சுண்டைக்காய் வற்றல் 50 கிராம், மிளகு ஒரு டேபிள் ஸ்பூன், ஜீரகம் ஒரு டேபிள் ஸ்பூன், சுக்கு ஒரு துண்டு, வெல்லம் ஒரு டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் எட்டு, உப்பு தேவைக்கேற்ப, கறிவேப்பிலை ஒரு கைப்பிடி, பெருங்காயப் பொடி ஒரு டீஸ்பூன்.

Image result for சுண்டைக்காய்    Image result for வேப்பம்பூ

Image result for சுக்கு   Image result for தனியா

படங்களுக்கு நன்றி கூகிளார்

எல்லாவற்றையும் வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு மிக்சி ஜாரில் போட்டுப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். வாய் சரியாக இல்லை என்றாலோ வயிறு அஜீரணமாக இருந்தாலோ ஒரு கரண்டி சூடான சாதத்தில் இந்தப் பொடியைப் போட்டு அதன் மேல் நெய் அல்லது நல்லெண்ணெயைக் காய்ச்சி ஊற்றிக் கொண்டு பிசைந்து சாப்பிடவும். சிறிது நேரத்தில் வயிறு சரியாகும்.  இந்தப்பொடியை வாயில் போட்டுக் கொண்டு மோர் குடிக்கலாம். அல்லது மோரில் பொடியைக் கலந்து சாப்பிடலாம். 

அடுத்து வேப்பிலைக்கட்டி எனும் நாரத்தை இலைப்பொடி: இதைச் சொல்வது தான் வேப்பிலைக்கட்டினு பெயரே தவிர இதைச் செய்வது நாரத்தை இலை, கொஞ்சம் எலுமிச்சை இலை ஆகியவற்றில். நல்ல பச்சையான நாரத்தை இலைகள், எலுமிச்சை இலைகளைப் பறித்துக் கழுவிக் காய வைக்க வேண்டும்.

Image result for நாரத்தை இலை Image result for எலுமிச்சை இலை

 நாரத்தை இலை                                            எலுமிச்சை இலை

படங்களுக்கு நன்றி கூகிளார்

தனி நாரத்தை இலை, பறித்துக் கழுவிக் காயவைத்து ஆய்ந்தது, இரண்டு கிண்ணம், எலுமிச்சை இலை இரண்டு கிண்ணம், மிளகாய் வற்றல், உப்பு, ஓமம் ஒரு டேபிள் ஸ்பூன், பெருங்காயம் பொடி செய்தது ஒரு டீஸ்பூன். மேற்சொன்ன சாமான்களை லேசாக வாணலிச் சூட்டில் பிரட்டிக்கொண்டு நன்கு இடித்து வைக்கலாம். இடிக்க முடியாதவர்கள் மிக்சியில் போட்டு அரைத்து வைத்துக்கொள்ளவும்.  இதுவும் நாக்கிற்குச் சுவை கூட்டும். மோர் சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும். இப்போதெல்லாம் சமையல் கான்ட்ராக்டர்கள் கல்யாணங்களில் கட்டு சாதக் கூடை வைக்கையில் இந்த நாரத்தை இலைப்பொடி, மோர் மிளகாய் போன்றவற்றைத்தொட்டுக்கொள்ளக் கொடுக்கின்றனர். மற்றபடி இந்தப் பழமையான சமையல் முறைகள் மெல்ல மெல்ல மறைந்து வருகின்றன.

வாங்கிபாத் பொடி:

மிளகாய் வற்றல் 50 கிராம், தனியா 50 கிராம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு 50 கிராம் சரிசமமாக. லவங்கப்பட்டை ஒரு துண்டு, கிராம்பு இரண்டு, பெருங்காயம் பொரித்துப் பொடித்தது ஒரு டீஸ்பூன், கொப்பரை ஒரு மூடி துருவிக்கொள்ளவும் அல்லது இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல், கறிவேப்பிலை ஒரு பிடி. உப்பு தேவையான அளவு.
Image result for கொப்பரை  Image result for லவங்கம்

Image result for லவங்கம்  Image result for வெள்ளை எள்

பட்டை, லவங்கம், கொப்பரை தவிர மேற்சொன்ன சாமான்களைத் திட்டமாக எண்ணெய் ஊற்றித் தனித்தனியாகப் போட்டு வறுத்துக்கொள்ளவும். லவங்கப்பட்டையையும், லவங்கத்தையும் வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும். கொப்பரை/தேங்காய் துருவலையும் வெறும் வாணலியில் வறுக்கவும். எல்லாவற்றையும் நன்கு ஆறவிட்டுப் பின் மிக்சியில் பொடி செய்து வைக்கவும். கத்தரிக்காய்ச் சாதம் செய்கையில் கத்தரிக்காயை வதக்கிச் சேர்த்தபின்னர் இந்தப் பொடியைப் போட்டுக் கலக்கவும். இதற்குச் சிலர் எள்ளும் சேர்ப்பார்கள். இரண்டு டீஸ்பூன் வெள்ளை எள்ளை வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு பொடி செய்கையில் சேர்க்கலாம்.

26 comments:

 1. ஐங்காயப் பொடி - என் மனைவிதான் பண்ணித்தந்தா. அதுக்கு முன்னால எனக்குத் தெரியாது. கலந்த சாதம் போல, இந்தப் பொடியையும் சாத்தில் கலந்துகொண்டு சாப்பிடுவேன். நல்லா இருக்கும். சமீப காலமாப் பண்ணலை. பண்ணச் சொல்லணும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெ.த. இந்த அங்காயப்பொடி அதிகம் கும்பகோணம் பக்கம் தான் பிரபலம். நமக்கு இரு பக்கமும் உறவு என்பதால் இது ஓர் வசதி! :)))) வாய்க்கு நல்லா ருசியாச் சாப்பிட முடியும்.

   Delete
 2. வேப்பிலைப் பொடி எனக்குச் சிறிய வயதில் என் உறவினர் செய்தார். இப்போல்லாம் அம்பிகா டிப்போலதான் வாங்கறாங்கன்னு நினைக்கறேன். எனக்கு எப்போதுமே இது பிடிக்காது.

  ReplyDelete
  Replies
  1. வேப்பிலைக்கட்டிச் சின்ன வயசில் வேப்பிலையிலேயே பண்ணுவாங்க போலனு நினைச்சுப்பேன். சாப்பிட்டுப் பார்த்ததும் தான் புரிந்தது. மோர் சாதத்துக்கு ரொம்ப நல்லா இருக்கும்.

   Delete
  2. கடையில் வாங்கும் வேப்பிலைக்கட்டியில் ஒரே உப்பு... நாம் வீட்டில் செய்துகொண்டால் உப்பும் பெருங்காயமும் சரியாய்ப் போட்டுக் கொள்ளலாம்!

   Delete
  3. நான் கடையில் எதுவும் வாங்குவதே இல்லை. விலை அதிகம். அந்த விலையில் பாதிக்குப் பொருட்கள் வாங்கினால் அதை விட அதிகமான பொடிகள் செய்து வைத்துக் கொள்ளலாம்.

   Delete
 3. அங்காயப்பொடி நானே கேக்கலாம் என்று இருந்தேன் நேயர் விருப்பமா!போட்டுட்டீங்க! தேங்க்யூ.

  ReplyDelete
  Replies
  1. வாங்க மிகிமா, அங்காயப் பொடியின் வாசனை உங்களையும் இழுத்துட்டு வந்திருக்கு போல! மரபு விக்கியில் "பொடி வகைகள்" என்று தேடினால் எப்போவோ கிடைச்சிருக்கும்! :))))

   Delete
  2. என் அம்மா முறையில் நானும் செய்வேன்.. உங்கள் முறையை அறிந்து கொள்ளவே நினைத்தேன். எங்கள் வீட்டில் நாங்கள் வெல்லம் போடுவதில்லை. சேர்த்து செய்து பார்க்கிறேன் நன்றி

   Delete
  3. நானும் வெல்லம் எல்லாவற்றிலும் சேர்க்க மாட்டேன். ஆனால் இது மாமியார் செய்யும் முறை. ஆகவே நீக்காமல் போட்டேன். நான் வெல்லம் சேர்க்காமல் தான் பண்ணுவேன். :))))

   Delete
 4. இந்த அங்காயப்பொடி நல்லா இருக்கும் போலிருக்கே கீதாக்கா ..ஆனா வேப்பம்பூவுக்கு எங்கே போவேன் .வேப்பம்பூ வடகத்தை உடைச்சி அரைக்கலாமா ?

  ReplyDelete
 5. வாங்க ஏஞ்சல், நீங்க வேப்பம்பூ இல்லாமல் பொடி செய்து கொண்டு சாப்பிடுகையில் வேப்பம்பூ வடகத்தை எண்ணெயில் பொரித்துக் கொண்டு அந்தப் பொடியோடு சேர்த்துச் சாதத்தில் போட்டுச் சாப்பிட்டுப் பாருங்க! பொரிக்காமல் இன்னொரு முறை செய்து பாருங்க! எது உங்களுக்குப் பிடிச்சிருக்கோ அப்படி அதன் பின்னர் செய்து சாப்பிடுங்க.

  ReplyDelete
 6. பரபரவென பொடிவகைகளை போட்டு விடுகிறீர்கள். அங்காயப்பொடி எப்போதாவது மாம்பலம் மாமி (மொபைல் ஊறுகாய், பொடி விற்கும் மாமி) வரும்போது இந்தப்பொடி வாங்கி எம் ஐ எல்லும் பாஸும் உபயோகிப்பது உண்டு.(தெரியும்... நீங்கள் வெளியே இதெல்லாம் வாங்கவே மாட்டீர்கள்!!!!)

  ReplyDelete
  Replies
  1. ஶ்ரீராம், இதில் பலவும் ஏற்கெனவே எழுதி மரபு விக்கியில் சேர்த்திருக்கேன். நாங்க இல்லை, நான் வெளியே வாங்குவதை ஆதரிப்பதில்லை. ஆனால் அவருக்கு வெளியே வாங்குவதில் ஓர் மயக்கம் உண்டு. என் மாமனார் இருந்தவரைக்கும் வீட்டில் என்னதான் எல்லாம் பண்ணினாலும் அதே சமையலை அக்கம்பக்கம் வீடுகளில் செய்கையில் கேட்டு வாங்கிச் சாப்பிடுவார். இதுக்காக அவங்களிடம் சொல்லி வைப்பார்.

   Delete
 7. நாரத்தை இலைப்பொடியில் எலுமிச்சை இலை சேர்ப்பார்களா, நினைவில்லை. ஆனால் நாங்கள் இங்கு நாரத்தை மரம் இருந்தபோது அதை மட்டும்தான் போட்டு இடித்தோம்.

  ReplyDelete
  Replies
  1. நாரத்தை, எலுமிச்சை இரண்டும் சமமாகப் போடலாம்.

   Delete
 8. வாங்கிபாத் பொடி குறிப்பு குறித்து வைத்துக்கொள்கிறேன். பாஸிடம் கேட்டுப்பார்க்கவேண்டும். வீட்டில் கத்தரிக்காய் பிடித்த ஒரே ஜந்து நான்தான்.

  கத்தரிக்காய் சாதம் சாப்பிட்டுத்தான் எத்தனை நாட்களாயிற்று!

  ReplyDelete
  Replies
  1. சாதாரணமாக வெங்காயம், தக்காளி, பட்டாணி போட்டு வதக்கிய மசாலா பாத் வகைகளுக்கும் இந்தப் பொடியைப் பயன்படுத்திக்கலாம். கொஞ்சம் யோசிச்சோம்னா இன்னும் நிறையப் பயன்பாடு!

   Delete
 9. ஐங்காயப் பொடி ஜீரணத்துக்கு மிக நல்லது.
  வங்கி பாத் பொடி படிக்கவே நன்றாக இருக்கு.
  அப்பப்போ செய்தால் இன்னும் வாசனை இல்லையா கீதா மா.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி,இந்த வலைப்பக்கம் நீங்கள் வருகை புரிந்து கருத்துச் சொன்னதுக்கு நன்றி. ஆமாம், நான் அதிகமாய்ப் பண்ணி வைச்சுக்க மாட்டேன். சாம்பார்ப் பொடி, ரசப்பொடி உட்பட! :))))

   Delete
 10. பிட்லை என்றால் எங்க வீடுகளில் பாகற்காய், கத்திரிக்காய், சேனைக்கிழங்கு, காராமணி போன்றவற்றில் மட்டும் பண்ணுவது! //

  அதே அதே கீதாக்கா அதிலும் குறிப்பா பாகற்காய், கத்தரிககய் தான் பிர்லைனு வீட்டுல அல்லோகலப்படும்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா, கருத்து மாறி வந்திருக்கு! :))))

   Delete
 11. கீதாக்கா இந்தப் பதிவை அன்றே பார்த்துவிட்டேனே எப்படி என் கமென்ட் போகாமல் இருந்தது தெரியவில்லையே...

  ஐங்காயப் பொடி அதேதான் வெல்லம் மட்டும் சேர்க்க மாட்டேன். மற்றபடி இதேதான். வீட்டில் சேர்த்துச் செய்து வைத்திருந்தேன் சென்னையில். தீர்ந்துவிட்டது. இங்கு வந்து இன்னும் பொடிகள் அதிகம் செய்யவில்லை.

  நானும் பொடிகள் எதுவும் வெளியில் வாங்குவதில்லை. ஊறுகாயும் அப்படித்தான். எல்லாமே வீட்டில்தான். மிக்ஸ் என்பது கூட வாங்குவது இல்லை.

  வேப்பிலைக்கட்டியில்/பொடியில்/நார்த்தை இலை பொடியில்....இரு இலையும் சேர்ப்பதுண்டு. ஆனால் மாமியார் வீட்டில் எ மி மரம் தான் அது கிடைக்கும் போது அதை. மற்றொரு ஒன்ருவிட்ட நாத்தனார் வீட்டில் நார்த்தையும் உண்டு, எலுமிச்சையும் உண்டு அங்கிருந்து சில சமயம் இரண்டுமே வரும் அப்ப இரு இலையும் போடு அல்லது நாங்கள் அங்கு செல்லும் போது பறித்துக் கொண்டு வந்து செய்வதுண்டு. இங்கு பங்களூர் வந்து எதுவுமே செய்யவில்லை.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. எங்க மாமியார் வீட்டில் எல்லாத்துக்கும் வெல்லம் உண்டு. ஆனால் மாமியார் அளவாப் போடுவாங்க. நாத்தனார்கள் இருவரும் பெரியவங்க, கடைசிச் சின்னவங்க இரண்டு பேரும் வெல்லத்தில் தான் சாம்பார், வத்தக்குழம்பு, கூட்டு, கறி எல்லாமும் பண்ணுவாங்க! அங்கே வேலை செய்யும் பெண்மணி நான் போனால் சமைத்தது மிஞ்சினால் கொடுக்கையில் நீ ஏன் வெல்லம் போட மாட்டியா என என்னைக் கேட்பார்! :)))) நான் எதிலும் வெல்லம் போட மாட்டேன். தோசை மிளகாய்ப் பொடி, புளிகாய்ச்சல், பாகல்காய்ப் பிட்லை மூன்றுக்கு மட்டும். என் அம்மாவும் போடுவார்.

   Delete
 12. வாங்கிபாத் பொடி செய்து வைத்துக் கொள்வதில்லை. எப்போது வாங்கிபாத் செய்கிறேனோ அப்போது செய்து கொள்வது...மகனுக்கு மட்டும் செய்து கொடுத்துவிட்டேன். ரொம்ப நன்ராக இருக்கு என்றான். அதிலேயே கொஞ்சம் கறிவேப்பிலையையும் உலர்ந்த ஆனால் வாசனையுட்ன இருந்ததைப் போட்டுக் கொடுந்துவிட்டென்

  உங்க அளவு குறித்துக் கொண்டுவிட்டேன்..கீதாக்கா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. கருகப்பிலை சேர்த்தால் சில சமயம் பிடிப்பதில்லை. ஆகையால் பச்சைக்கருகப்பிலையாகத் தாளிதத்தில் சேர்த்து விடுவேன். இங்கே தான் நிறையக் கிடைக்கிறதே!

   Delete