எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, May 12, 2019

கோதுமை உப்பு தோசையும், வெல்ல தோசையும்

சின்ன வயசில் அம்மா, பெரியம்மா எல்லோரும் இந்த தோசை அடிக்கடி பண்ணுவாங்க. அநேகமா மாசத்துக்கு இரண்டு தரம் இந்த தோசைகள் இருக்கும்.  ஆனால் கோதுமையைத் தான் அரிசியோடு சேர்த்து ஊற வைத்து அரைப்பார்கள். இப்போ நான் கோதுமை வாங்குவதில்லை. மாவு மிஷினிலேயே கோதுமையைப் பார்த்து வாங்கி அங்கேயே அரைக்கக் கொடுத்து மாவாக வீட்டுக்குக் கொண்டு வரும் வசதி வட மாநிலம் மாதிரி இங்கேயும் வந்து விட்டது. ஆகவே கோதுமை வாங்கி வெயிலில் காய வைத்து மாவாக்கி என்பதெல்லாம் இப்போ இல்லை. கோதுமை ரவை வாங்குவேன். அவ்வப்போது உப்புமா கிளறலாம் என்பதோடு இம்மாதிரி தோசைகளும் வார்க்கலாம். அப்பம் பண்ணும்போது அரிசியோடு இதையும் சேர்த்து அரைத்து அப்பம் குத்தலாம். இப்போ அடிக்கடி இந்த தோசை பண்ணிக் கொண்டு இருக்கிறேன் என்றாலும் பகிரவில்லை.

இன்னிக்குப் பகிரணும்னு நினைத்துக் காலையில் அரைக்கப் போடும்போதே படங்கள் எடுத்து வைத்தேன். ஆனால் மாலை அரைக்கும்போது வேலை செய்யும் பெண் பால்காரர் என அடுத்தடுத்து வந்ததில் அரைக்கையில் படம் எடுக்க மறந்தே போச்சு! சரி தோசை வார்க்கையில் படம் எடுக்க நினைச்சால் அதுவும் மறந்துட்டேன். அவர் சாப்பிட்டு முடிச்சாச்சு. அப்போத் தான் நினைவு வந்தது. சரினு எனக்கு வார்த்துக் கொண்டிருந்த தோசைகளையும் மாவையும் படம் எடுத்துப் போட்டிருக்கேன். இதை முதலில் எங்கள் ப்ளாகின் "திங்கற" பதிவுக்குத் தான் அனுப்ப இருந்தேன். ஆனால் எல்லாப் படங்களும் எடுக்கலை. எடுத்த படங்களும் சுமார் ரகம் தான். அங்கே ஒவ்வொருத்தரும் எல்லா அளவுகள் படங்களோடு , ஒவ்வொரு நிலைக்கும் படங்களோடு பதிவு போடுகையில் நம்ம பதிவை அங்கே அனுப்ப வெட்கமா இருந்தது என்பதால் அனுப்பவில்லை. அதென்னமோ சமைக்கையில் படம் எடுக்க வேண்டும் என்பதே தோன்றுவதில்லை.உப்பு, புளி சரியா இருக்கணுமே, போட்டோமா, போடலையானு தான் கவனம் போகுது! :))) எல்லாவற்றிலும் ஒரே சமயம் கவனம் செலுத்தும் வயது தாண்டிட்டேனோ? சேச்சே! அதெல்லாம் இல்லை! என்ன வயசு ஆகிப் போச்சு! இன்னும் பிறக்கவே இல்லையே! இப்போ தோசை வார்ப்பது எப்படினு பார்க்கலாமா? 

கோதுமை உப்பு தோசைக்குத் தேவையான பொருட்கள்: இருவருக்கு மட்டும்
பச்சரிசி அல்லது புழுங்கலரிசி அல்லது இரண்டும் கலந்து ஒரு கிண்ணம்,
கோதுமை ரவை ஒரு கிண்ணம். அரைக்கிண்ணம் துவரம்பருப்பு+ இரண்டு டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு+ ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு. உளுத்தம்பருப்புப் போடாமலும் பண்ணலாம். நன்றாகவே இருக்கும். வார்க்கவும் வரும்.

மிளகாய் வற்றல் நான்கு, பச்சை மிளகாய் ஒன்று, உப்பு தேவையான அளவு, தேங்காய்த் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன், பெருங்காயம், கருகப்பிலை, கொத்துமல்லி, தோசை வார்க்க நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய். நான் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொண்டேன். 

எல்லாவற்றையும் நன்கு களைந்து கலந்தே ஊற வைக்கலாம். ஊறிய பின்னர் மிக்சி ஜாரில் முதலில் மிளகாய் வற்றல், பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் போட்டுச் சுற்றிய பின்னர் ஊறிய தானிய வகைகளைப் போட்டு நன்கு அரைத்துக் கடைசியில் தேங்காய் சேர்த்து அரைக்கவும். பாத்திரத்தில் மாற்றி மிக்சி ஜாரையும் ஜலம் விட்டு அலம்பி மாவில் சேர்த்துக் கருகப்பிலை சேர்க்கவும். பின்னர் தோசைகளாக மெலிதாக வார்க்கலாம். கரைத்த தோசைக்குக் கரைக்கும் மாதிரியிலேயே கரைத்துக் கொண்டு வீசி ஊற்றி மெலிதாக வார்க்கலாம்.

அரிசி வகைகள் இரண்டு பாத்திரங்களில் பெரியதில் உப்பு தோசைக்கு, சின்னதில் வெல்ல தோசைக்கு

                                                     
                                                         கோதுமை ரவை கொஞ்சம் தான் இருந்ததால் எல்லாவற்றையும் இரண்டிலுமாகப்  போட்டு விட்டேன்


அரிசியோடு கோதுமை ரவை

பருப்புக்கள் கலந்து


வெல்ல தோசைக்குத் தேவையான பொருட்கள்: இரண்டு பேருக்கு
பச்சரிசி அல்லது புழுங்கலரிசி அல்லது இரண்டு கலந்து ஒரு கிண்ணம், ஒரு கிண்ணம் கோதுமை ரவை, அரைக்கிண்ணம் கடலைப்பருப்பு மட்டும். துவரம்பருப்பெல்லாம் போட்டால் தோசை ரொம்ப முறுகலாக விறைப்பாக ஆகிவிடும். உளுந்து சேர்த்தால் அது கொஞ்சம் பொத பொதவென இருக்கும். ஆகவே இவை போதும். தேங்காய்த் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன், வெல்லம் தூளாக்கியது ஒரு சின்னக் கிண்ணம், ஏலக்காய்த் தூள் ஒரு டீஸ்பூன்

எல்லாவற்றையும் சேர்த்தே போட்டுக் களைந்து ஊற வைத்து மிக்சி ஜாரில் தேங்காய்த் துருவல் சேர்த்து அரைக்கவும். இறக்கும் முன்னர் வெல்லத் தூளைச் சேர்த்து விட்டு ஒரு சுற்றுச் சுற்றி விட்டு இறக்கிப் பாத்திரத்தில் மாற்றி ஜலத்தை அலம்பி விடவும். ஏலத் தூள் சேர்க்கவும். இதற்குத் தனி ஜார் வைத்துக் கொண்டால் நல்லது. ஏனெனில் உப்பு தோசைக்கு அரைத்ததில் இதை அரைத்தால் பெருங்காய வாடை வரும். இது அரைத்ததில் அரைத்தால் ஏலக்காய் வாசனை உப்பு தோசையில் வரும்.

எல்லாம் படம் எடுத்திருக்கணும். தேங்காய்த் துருவி மேடையிலேயே வைச்சிருந்தேன். ஆனால் அரைக்கையில் மறந்துட்டேன்.
வெல்ல தோசை மாவு பக்கத்தில் தோசை வார்க்க நெய்


வெல்ல தோசை சிரிப்பது தெரிகிறதா? 


உப்பு தோசை மாவு, பக்கத்தில் தே.எண்ணெய்


உப்பு தோசை.

இதுக்குத் தொட்டுக்க என்னனு யோசிப்பீங்க. சாம்பார், வத்தக்குழம்பு, தேங்காய்ச் சட்னி, வெல்லம், வெண்ணெய்னு எதுவேணாத் தொட்டுக்கலாம். 30 comments:

 1. //நம்ம பதிவை அங்கே அனுப்ப வெட்கமா இருந்தது // - இந்த மாதிரி எழுதாதீங்க... உங்கள் செய்முறை எனக்கு எப்போதும் பிடிக்கும். படங்கள் இல்லாமலேயே நன்றாக இருக்கு. படங்கள் இருந்தால் இன்னும் அடுத்த லெவலுக்குப் போகும் என்றுதான் நான் நினைப்பேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெல்லைத் தமிழரே, இதை நான் எ.பிக்கு அனுப்பி இருந்தால் படங்கள் இல்லாததை நீங்க தான் முதல்லே சொல்லி இருப்பீங்க! இஃகி, இஃகி, இஃகி, அதுக்கு யோசிச்சுத் தான் அனுப்பலை! இன்னும் 2,3 பதிவுகள் இப்படித்தான் சரியான படங்கள் இல்லாமல் ட்ராஃப்ட் மோடிலேயே இருக்கு! பாராட்டுக்கு நன்றி.

   Delete
 2. //போட்டோமா, போடலையானு தான் கவனம் போகுது! // - அங்க மாமனார் வீட்டுல நான் செய்தால், டேஸ்ட் பார்க்க முடியாது. அதனால் யார் என்னிடம் பேச வந்தாலும் கவனிக்க மாட்டேன். சகஸ்ரநாமம் மட்டும்தான் சொல்லிக்கொண்டிருப்பேன். சாம்பார் பண்ணணும்னா, என்ன என்ன போடணுமோ அதையெல்லாம் போட்ட பிறகுதான் அடுத்த பக்கம் திரும்புவேன்.

  இங்க அந்தக் கவலை இல்லை. அப்போ அப்போ சரியா வந்திருக்கான்னு பார்த்துக்குவேன்.

  ReplyDelete
  Replies
  1. நான் எப்போவுமே சமைக்கையிலோ அல்லது சமைத்த பின்னர் நிவேதனம் ஆனப்புறமோ ருசி பார்ப்பதே இல்லை. பழக்கமே இல்லை. என் மாமியார் வீட்டிலாவது நிவேதனம் ஆனப்புறமாப் பரிமாறும் முன்னர் உப்புச் சரியா இருக்கானு பார்ப்பாங்க! என் அப்பா வீட்டில் அப்படிப் பார்த்தால் அப்பா அப்படியே கொட்டிடுவார். ஆகவே மனதில் அது தான் பதிந்திருப்பதால் அந்த வழக்கம் இன்னும் வரலை. இதனால் எங்க இரண்டு பேருக்கும் நடுவே ஒரு குருக்ஷேத்திரமே நடக்கும். சில சமயம் உப்புச் சரியாக இருக்காது. அல்லது மறந்திருப்பேன். அப்போச் சாப்பிடும்போது அவருக்குக் கோபம் வரும். ஆகவே முக்கியமாய் இட்லி, தோசைக்குச் சட்னி அரைச்சால் உப்புப் பார்க்காமல் போடாதேனு எச்சரிக்கைக் குரல் கொடுப்பார்.

   Delete
 3. இந்த மாதிரிப் பண்ணுவதற்கும், கோதுமை மாவு, அரிசி மாவு போட்டுப் பண்ணுவதற்கும் என்ன வித்தியாசம்? சுவையில் வேறு மாதிரி இருக்குமா?

  ReplyDelete
  Replies
  1. கோதுமை மாவு, அரிசி மாவு போட்டுப் பண்ணுவது தோசை அதுவும் வீசி ஊற்றி மெலிதாக வார்த்தாலும் அரைத்து வார்ப்பது போல் வராது! கோதுமை மாவோடு உளுந்து மட்டும் அரைத்துப் போட்டும் வார்க்கலாம். கேழ்வரகு மாவோடும் உளுந்து அரைத்துப் போட்டு வார்க்கலாம். இதே போல் உப்பு தோசை, வெல்ல தோசை கேழ்வரகிலும் பண்ணுவேன். சிறு தானியங்கள் எல்லாவற்றிலும் பண்ணலாம்.

   Delete
 4. நீங்க மாவு தயார் பண்ணும்போதே வெல்லத்தையும் சேர்த்து அரைத்துவிடுவீர்களா (ரெண்டு சுத்துதான்). நான் பாகு மாதிரி (ஓரளவு) வைத்து அதனை மாவில் சேர்ப்பேன். அதற்கேற்றமாதிரி மாவு கொஞ்சம் கெட்டியா இருக்கும். பச்சை வெல்லம் மாதிரி உங்க மெதட்ல இருக்காதா?

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், அரைத்தது எத்தனை பேருக்கோ அத்தனை பேருக்கும் செலவாகி விடும் எனில் வெல்லத்தை அரைத்து எடுக்கையிலேயே சேர்ப்பேன். இல்லை எனில் அரைத்த மாவில் கொஞ்சம் தனியாக எடுத்து வைத்துவிட்டுப் பின்னர் சேர்ப்பேன். வெல்லம் பொடியாகத் தூள் செய்து விடுவதால் அதிகம் தண்ணீரில் எல்லாம் போட வேண்டாம். குப்பையாகவும் இருக்காது. தோசை நன்கு வெந்து தானே சாப்பிடறோம். பச்சை வெல்லம் என்றெல்லாம் எங்களுக்குத் தெரிவதில்லை. இதே பழக்கம் தான் அம்மா செய்து வந்த நாளில் இருந்து.

   Delete
  2. அக்கா நான் வெல்லைத்தைக் கொஞ்சம் தண்ணீரில் கரைத்துக் கொண்டு வடிகட்டி அதை மாவில் சேர்ப்பதுண்டு. சில சமயம் குப்பை இருக்கும் இல்லைனா ஃபைன் மணல் போன்று..அதனால்...அதற்கு ஏற்றாற் போல மாவில் நீர் சேர்த்து கரைப்பது அல்லது அரைப்பது..

   கீதா

   Delete
  3. வெல்லம் இங்கே சுத்தமாகவே வருது. பிரச்னை இல்லை. அப்படிச்சந்தேகம் இருந்தால் நானும் வெந்நீரில் தட்டிப் போட்டு வைத்து வடிகட்டிச் சேர்ப்பேன். மாவு கெட்டியாகவே அரைத்து வைப்பதால் கொஞ்சம் எடுத்து வைத்துவிட்டுப் பின்னர் சேர்ப்பேன்.

   Delete
 5. நான் எடுக்கும் படங்கள் கூட ரொம்பச் சுமார் ரகம்தான், இப்போதைய எங்கள் திங்கற கிழமை சமையல் பதிவுகள் படங்களோடு ஒப்பிடுகையில்! நல்லா படம் காட்டாறாங்க மக்கள்!

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம், உங்க படங்களே சுமார் எனில் நான் எங்கே போக? சமையல் பதிவுகள் படங்களோடு ஒப்பிடுகையில் எனக்கெல்லாம் போடவே தெரியலை!

   Delete
  2. அப்படீல்லாம் "போடவே தெரியலை' என்றமாதிரி எழுதாதீங்க கீசா மேடம்.. உங்க செய்முறைக் குறிப்புகள் ரொம்ப நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க... மிக உபயோகமா இருக்கும். அதில் 'பூண்டு', 'சோம்பு' போன்ற அந்நியப் பொருட்கள் இல்லாததெல்லாம் நான் நிச்சயம் செய்துபார்ப்பேன்.

   Delete
  3. படங்கள் என்பது சும்மா ஒரு தெளிவுக்காக... அவர்கள் எல்லாம் ஸூப்பர் படங்களேபோடட்டும். நாம் நம் படங்களைப்போடுவோம்... மெயில் எடுங்க... அனுப்பி வைங்க... உடனே!

   Delete
  4. //அதில் 'பூண்டு', 'சோம்பு' போன்ற அந்நியப் பொருட்கள் இல்லாததெல்லாம் நான் நிச்சயம் செய்துபார்ப்பேன்.//

   ஹா... ஹா... ஹா... நெல்லை! அதை எல்லாம் தவிர்த்து விட்டு நீங்கள் சமையுங்கள்!

   Delete
  5. சோம்பு, நெஞ்செரிச்சலுக்கு நல்லது. இப்போது கூட நெஞ்செரிச்சலுக்கு சோம்பு, ஜீரகம், கருஞ்சீரகம்,மிளகு, கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, சுக்குத் தட்டிப் போட்டுக் கொதிக்க வைத்த வெந்நீரைத் தான் குடித்துக் கொண்டே எழுதுகிறேன்.

   Delete
 6. மிக்சியில்தான் அரைக்கணுமா? கிரைண்டர் வேண்டாமா? நாங்கள் கோதுமை மாவில் உப்பு, பெருங்காயம் காரப்பொடி போட்டு வார்ப்போம். இது வித்தியாசமாய் இருக்கிறது. பச்சரிசி, புழுங்கலரிசி, கோதுமை ரவை...

  ReplyDelete
  Replies
  1. ஆட்கள் அதிகமாக இருந்தால் கிரைண்டரிலும் அரைக்கலாம் ஸ்ரீராம். நாங்க இரண்டு பேர் தானே! அதனால் மிக்சி!கோதுமை மாவில் உப்பு, பெருங்காயம், காரப்பொடி போட்டு வார்ப்பதை விட இது நன்றாக இருக்கும். கோதுமையையே முழுசாகச் சேர்த்து ஊற வைச்சு அரைச்சால் அது தனி ருசி தான்.

   Delete
 7. ஏலக்காய் பெருங்காய வாசனை மிக்ஸ் ஆகாமல் இருக்க தனித்தனி ஜார் முன் எச்சரிக்கை நல்ல குறிப்பு.

  வெல்ல தோசை கண்ணடித்துச் சிரிப்பது மாதிரி இருக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. எப்படியும் 2,3 ஜார் எல்லார் வீட்டிலும் இருக்குமே! மிக்சி ஜாரில் அரைத்தால் இப்படி மாற்றி வைத்துக்கொள்ளலாம். கிரைண்டர் எனில் முதலில் வெல்ல தோசைக்கு வெல்லம், ஏலக்காய் சேர்க்காமல் அரைத்து எடுத்துக் கொண்டு பாத்திரத்தில் மாற்றிய பின்னர் வெல்லம், ஏலக்காய் சேர்க்கலாம். கிரைண்டரில் உப்பு தோசைக்கு எல்லாவற்றையும் போட்டு அரைக்கலாம். வெல்ல தோசையோட சிரிப்பைப் பார்த்ததும் தான் அது நீ படம் எடுக்கணும்னு நினைச்சுட்டுப் படமே எடுக்காமல் என்னை வார்த்துச் சாப்பிடப் போறியா, சாப்பாட்டு ராமி! எனக் கேலி செய்வது தெரிந்து படம் எடுத்தேன். :))))

   Delete
 8. இது மாதிரி ஒருதடவை பாஸ் கிட்டச் சொல்லி செய்து பார்க்கவேண்டும்.

  ReplyDelete
 9. நல்லா இருக்கும் செய்து பார்த்துச் சாப்பிட்ட பின்னர் அதைப் பற்றி எழுதுங்கள்.

  ReplyDelete
 10. அதென்னமோ சமைக்கையில் படம் எடுக்க வேண்டும் என்பதே தோன்றுவதில்லை.உப்பு, புளி சரியா இருக்கணுமே, போட்டோமா, போடலையானு தான் கவனம் போகுது! :)))//

  அதே அதே அக்கா அதனாலேயே நான் இப்போது அனுப்புவதே இல்லை. ஏனென்றால் கவனம் அடுப்பில்தான் இருக்க வேண்டும் என்று. சில சமயம் படம் எடுக்கும் போது வறுபடுவது ஓவராக வறுபட்டுவிடும். என்பதால் ரொம்பவெ கவனமாகச் செய்ய வேண்டும். ரரெண்டாவது அளவு. எல்லாமே டக்கு டக்குனு கண்ணளவுல எடுத்துப் போடுவதை பதிவுக்கு என்றால் அது எவ்வளவு என்பதை ஆராய்ந்து அதற்கான ஸ்பூன் போட்டு அல்லது கப் போட்டு அளந்து காட்ட வேண்டுமே என்று அது பல சமயங்களில் கை வராததால் படம் எடுக்க விட்டுப் போய்விடுகிறது கீதாக்கா...

  நிறைய ரெசிப்பிக்கள் கொஞ்சம் படங்களோடு இருக்கு. ஏதாவது அனுப்ப முடியுமா என்று பார்க்க வேண்டும்..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இதுக்குன்னு நாம சமைச்சு, யாரானும் படம் எடுத்துக் கொடுத்தால் போடலாம்! :) எங்க வீட்டில் பிள்ளை, பெண்ணுக்கெல்லாம் இதில் அவ்வளவு ஆர்வம் இல்லை. நம்மவருக்கோ படமே எடுக்கத் தெரியாது. காமிராவில் கொஞ்சம் எடுப்பார்.

   Delete
 11. கோதுமை தோசை ப அ பு அ, உப்பு காரம் ப மி கட் பண்ணி போட்டு, க வே, கொ ம எல்லாம் கட் பண்ணி போட்டுச் செய்ததுண்டு. ஆனால் பருப்பு சேர்த்துச் செஞ்சதில்லை. இது வித்தியாசமாக இருக்கிறது கீதாக்கா. நோட் செய்ஞ்சுக்கறென்.

  கோ வெ தோ வும் பரூப்பு சேர்த்ததில்லை. மற்றபடி செய்திருக்கேன் . பாட்டியிடம் கற்றுக் கொண்டது அப்பா வழிப் பாட்டி. அடிக்கடி செய்வார். இரண்டுமே.

  நீங்க வெ தோ வுக்கும் பருப்பு சேர்த்திருக்கீங்க இல்லைஅய அதையும் நோட் செய்து கொள்கிறேன். காப் பேஸ்ட் செய்துவிடுவேன் வேர்ட் டாக்குமென்டில்.

  தனித்தனியாக போட்டு வைக்கிறேன். ஒவ்வொரு டாக்குமென்டும். மகனுக்கு ஈசியா இருக்கணும் என்று.

  ஸோ ஈசி உங்கள் குறிப்புகளைக் காப்பி பேஸ்ட் செஞ்சு அடியில் கீதாக்கா குறிப்புனும் போட்டு வைச்சுருவேன்...!!!!!!!!!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. பருப்புச் சேர்த்துச் செய்தால் ருசி அதிகரிக்கும். நீங்க சொல்றாப்போல் புழுங்கலரிசியும் கோதுமையும் சேர்த்து ஊற வைத்து மிவத்தல், தேங்காய், உப்பு, பெருங்காயம் போட்டு அரைத்தும் சாப்பிட்டிருக்கோம். அதிலேயே வெல்ல தோசையும் பண்ணி இருக்கோம். இது என்னோட சொந்தக் கண்டுபிடிப்பாக்கும்! ராயல்டி தரணும்! :))))))

   Delete
 12. படங்கள் எலலாம் நல்லாவே வந்துருக்கு கீதாக்கா. என்ன குறை இதுக்கு? அனுப்பலாமே அக்கா எபி க்கு.

  நான் எடுப்பதும் அத்தனை ஒன்றும் நன்றாக வராது.

  உங்க தோசை பார்க்க அழகா இருக்கு கீதாக்கா எல்லாரையும் பார்ட்து என்ன பாருங்க நான் எப்படி இருக்கேன் சாப்பிட்டுப் பார்த்துச் சொல்லுங்கனு ஸ்மைலிங்க்!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா, வெல்ல தோசை சிரிச்சதும் தான் படம் எடுக்கணும்னே மூளைக்குத் தெரிந்தது தி/கீதா! நீங்கல்லாம் அளவில் இருந்து எல்லாம் போடறீங்க! எனக்கெல்லாம் போடும்போது, நனைக்கும்போது களையும் போதெல்லாம் நினைவே வராது! :) எப்போவானும் இப்படி அதிசயமா!

   Delete
 13. காப்பி பண்ணி வைச்சுட்டேனே ஹெ ஹெ ஹெ ஹெ
  செஞ்சு பார்ட்துட்டு கண்டிப்பா சொல்லுவேன் அக்கா..

  முடிஞ்சா படமும் எடுத்து ப் போடறேன்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. பார்த்தேனே, தோசை நன்றாகவே வந்திருந்தது. ருசியும் பிடிச்சதா?

   Delete