எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Wednesday, May 29, 2019

பாரம்பரியச் சமையல்களில் மோரில் சாம்பார்!

இப்போது இன்னொரு வகை சாம்பார் மோரில் செய்வது. இதற்கும் துவரம்பருப்புத் தேவை. தானாகக் கத்திரிக்காய்,முருங்கைக்காய், வெண்டைக்காய் ஆகியவற்றைப் போடலாம். சுமார் இரண்டு பேர்களுக்கான மோர் சாம்பார் தயாரிக்கும் முறைக்குத் தேவையான பொருட்கள்.

மோர் ஒரு கிண்ணம்,

உப்பு தேவைக்கு, மஞ்சள் பொடிஒரு டீஸ்பூன், பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு அல்லது பெருங்காயப் பொடியைத் தாளிப்பில் சேர்க்கவும்.

துவரம்பருப்புக் குழைய வேக வைத்தது ஒரு கரண்டி அல்லது தேவைக்கேற்ப

மி,வத்தல் 2 அல்லது 3, பச்சை மிளகாய் 2 இஞ்சி கொரகொரப்பாக நசுக்கிக் கொள்ளலாம். (தேவை இல்லை எனில் இஞ்சி சேர்க்கவேண்டாம்.) கருகப்பிலை, கடுகு, வெந்தயம். இதற்குப் பொடி தேவை இல்லை. காரத்துக்கு ஏற்றாற்போல் மிவத்தலைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம்.

மோரில் தேவையான உப்பைப் போட்டுக் கொண்டு மஞ்சள் பொடியையும் போட்டுக் கொஞ்சம் போல் அரிசிமாவைப் போட்டுக் கரைத்து வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலி அல்லது கல்சட்டியை வைத்து எண்ணெயை ஊற்றிக் கொண்டு அதில் கடுகு, வெந்தயம், மிவத்தல், பச்சை மிளகாய், கருகப்பிலை, பெருங்காயம் என வரிசையாகத் தாளித்துக் கொண்டுத் தான்களை நறுக்கி அலம்பிப் போட்டு நன்கு வதக்கவும். கத்திரிக்காய் வேகக் கொஞ்சம் நேரம் எடுக்கும். தேவையானால் ஒரு கை தண்ணீர் தெளித்துக் கொண்டு வேக வைக்கவும். தானுக்குத் தேவையான அரை டீஸ்பூன் உப்பை மட்டும் சேர்த்து வதக்கவும். காய் நன்கு வதங்கியதும் கரைத்த மோரை ஊற்றிப் பருப்பைச் சேர்த்துக் கொதிக்க விடவும். கீழே இறக்கிப் பச்சைக் கொத்துமல்லி சேர்க்கவும்.

இந்தக் குழம்பையே வறுத்து அரைத்து விடுவதானால் மி.வத்தல்2 தனியா 3 டீஸ்பூன் , கடலைப்பருப்பு 2 டீஸ்பூன் ,  தே,துருவல் இரண்டு டீஸ்பூன், பெருங்காயம் போட்டு எண்ணெயில் வறுத்து அரைத்துக் கொண்டு மோரில் கலந்து வைத்துக் கொண்டு தாளிப்பில் மிளகாயைக் குறைத்துக் கொண்டு பச்சை மிளகாயையும் வாசனைக்கு ஒன்றே ஒன்று போட்டுக் கொண்டு தான்கள் வதங்கியதும் கரைத்த மோரைச் சேர்த்துப் பருப்பையும் போட்டுக் கொண்டு கொதிக்க விட்டு இறக்கலாம். இதற்கு முருங்கைக்காய் நன்றாக இருக்கும்.

இனி அடுத்துப் பாரம்பரியச் சமையல்களில் வத்தல் குழம்பு, வெறும் குழம்பு வகைகளைப் பார்ப்போம்.

22 comments:

 1. Replies
  1. வாங்க ஏஞ்சல், மாசக்கணக்கா எட்டிக் கூடப் பார்க்கலை! வரவுக்கு நன்னி ஹை!

   Delete
 2. தயிர் மோரில் எது செய்தாலும் எனக்கு பிடிக்கும் .மோர் வெந்தயக்குழம்பு செய்ததுண்டு மோர் சாம்பார் விரைவில் செய்றேன்
  அடுத்த பதிவுக்கு வெயிட்டிங் :) வத்தக்குழம்பு எனக்கு ஃபேவரிட்டாக்கும் :)

  ReplyDelete
  Replies
  1. மோர் வெந்தயக்குழம்பா? அது என்ன புதுசா?

   என்னடா இந்த நெல்லைக்கு வந்த சோதனை?

   Delete
  2. ஹையோ.ஹையோ, புளி போட்டு வத்தக்குழம்பைத் தான் சொன்னேன். அவங்களும் அதான் சொல்லி இருக்காங்க.

   Delete
  3. ஓ, மோர் வெந்தயக்குழம்புனு சொல்லி இருக்காங்களே அதுவா? அதைத் தான் மோர்ச்சாறு என்று சொல்லி நாங்க பண்ணுவோம். ஏஞ்சல் சரியாத் தான் சொல்லி இருக்காங்க. நெல்லை. !

   Delete
  4. ஏஞ்சல், ஸ்ரீராம், நெல்லை சொல்லி இருக்கிறாப்போல் ஒரு வழியா மோரில் பண்ணும் உணவு வகைகளை முடிச்சுட்டு அடுத்து வத்தக்குழம்புக்குப் போகலாமானு யோசிக்கிறேன். :))

   Delete
  5. இருங்க இருங்க மோர் வெந்தயக்குழம்பு க்கு proof இருக்கு :) அது புக் கட்டிங்கில் பார்த்து செஞ்சது மங்கையர் மலர்னு நினைக்கிரேன் .

   Delete
  6. கல்கி மங்கையர்மலர் எல்லா கட்டிங்கும் மொத்தமா இருக்கா அதில் எதுன்னு தெரில இதில் அறுசுவை அரசர் சமையல் பூக்கும் இருக்கு கைவசம் :) நானெல்லாம் தயிர் மோர் காம்பினேஷனில் சாப்பிடமாட்டேன் அப்டியே குடிப்பேன் :) அவ்ளோ ஆசை
   அக்கா உங்க குறிப்பு வரகு இட்லி தோசை குதிரைவாலி காம்போவில் அடிக்கடி செய்றேன் நல்லா வருது

   Delete
 3. ​செய்ததே இல்லை. குறித்து வைத்துக் கொள்கிறேன். எப்போதாவது உதவும்!

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம், எனக்கும் மாமியார் பண்ணித்தான் தெரியும். மாம்பழத்தில் கூடப் பண்ணுவாங்க.

   Delete
 4. "பருப்பையும் போட்டு கொதிக்க வைத்து இறக்கவும்" என்கிற இடத்தில் மட்டும் (ஆரம்பம் தவிர) ​ பருப்பு வருகிறது. ஒரு கைப்பிடி போதும் இல்லை?

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம், பருப்புப் பற்றிய குறிப்பு விடுபட்டிருக்கு. அதைச் சேர்த்து விட்டேன். சுட்டிக்காட்டியதுக்கு நன்றி.

   Delete
 5. இதுவரை கேள்விப்படலையே.... பருப்பையும் தளிகைப்பண்ணி, இத்துடன் சேர்க்கச் சொல்லியிருக்கீங்க. மோர் புளிக்கணுமான்னு சொல்லலை. இந்த மாதிரி மோர் சாம்பார் எங்க பண்ணுவாங்க?

  ReplyDelete
  Replies
  1. என் அம்மா வறுத்து அரைத்த மோர்க்குழம்புனு பண்ணுவாங்க. மாமியார் தான் பருப்பு எல்லாத்திலேயும் சேர்ப்பாங்க! பருப்பில்லாமல் அவங்களுக்கு ஓடவே ஓடாது. பொதுவா மோர்க்குழம்புக்கே மோர் கொஞ்சம் புளிக்கத்தான் செய்யணும். ரொம்பப் புளிப்பா இருந்தாலும் நல்லா இருக்காது. மற்றபடி பருப்பு சேர்ப்பதெல்லாம் உங்க இஷ்டம்.

   Delete
  2. கீதாக்கா என் பாட்டியும் (அப்பா வழிப்பாட்டி) வரத்தரைச்ச மோர்க்குழம்பு அல்லது பருப்பு மோர்க்குழம்புனு சொல்லி பண்ணுவாங்க. ஆனால் ஏனோ நான் செய்யவே இல்லை...எப்படி விட்டுப் போனதுன்னு தெரியலை...இப்ப உங்க குறிப்பு பார்த்ததும்தான் நினைவுக்கு வந்தது.

   என் மாமியார் வீட்டிலும் அப்படித்தான் எல்லாத்துக்கும் பருப்பு போடுவாங்க....து ப அல்லது பா ப.

   இப்ப உங்க குறிப்பு பார்த்து எடுத்து காப்பி பேஸ்ட் பண்ணி வேர்டில் போட்டாச்ஹ்கு. செய்துட்டு ஃபோட்டோ எடுத்தும் அனுப்பறேன்...அப்ப நாளைக்கு மெனு மாத்திட்டா போச்சு...பருப்புருண்டை மோர்க்குழம்பு செய்ததுதானே....இதுதான் செய்ததில்லை ஸோ நாளை மெனு இதுதான்...

   கீதா

   Delete
 6. நீங்க இந்த சீரியல்ல எழுதற பல குழம்புவகைகள் நான் கேள்விப்படலை, சாப்பிட்டதுமில்லை.

  ரொம்ப உபயோகமான பதிவுகள். தொடர்ந்து எழுதுங்க (அதுக்காகவாவது உங்க கால் வலி உடனே மாயமாகணும்னு வேண்டிக்கறேன்)

  ReplyDelete
  Replies
  1. நெல்லை, என் பிறந்த வீட்டில் வாரம் ஒருநாளாவது ஏதேனும் பிட்லை, அநேகமாகக் கத்திரிக்காய்ப் பிட்லை இருக்கும். இல்லைனா ரசவாங்கி (சின்னக்கத்திரிக்காயை முழுசாப் போட்டு) பண்ணிடுவாங்க. ஆகவே இதெல்லாம் கேள்விப்படாத சமையல்கள் இல்லை. புகுந்த வீட்டில் இதே சமையல்கள் சில மாற்றங்களுடன் பண்ணுவார்கள் பெயர் ஒன்றாக இருக்கும். பிட்லை என்று சொல்லிக்கொண்டு சாம்பார் மாதிரி இருக்கும். ரசவாங்கி என்பது மாமியார் வீட்டில் கூட்டாக இருக்கும். ஆனால் பெயர் ஒன்றே.

   Delete
 7. மோர் சாம்பார்னு எழுதியிருக்கறதுனால, 'மோரில் செய்யும் குழம்புகள் அல்லது மோர்க்குழம்பு வகைகள்' என்று தனித் தலைப்பில் எழுதுவீங்கன்னு நினைக்கிறேன். அவசியம் எழுதுங்க.

  ReplyDelete
 8. நெல்லை, இப்போ நீங்க சொன்னதும் இந்த எண்ணம் நல்லா இருக்கேனு தோணுது. பார்ப்போம். அதுவும் சரிதான் மோரில் செய்யும் உணவு வகைகளை ஒரு வழியாக முடிச்சுடலாம். தலைப்பை மாத்தணும்.

  ReplyDelete
 9. மோர்ப் பருப்புக் குழம்பு கேட்கவே நன்றாக இருக்கு.
  அன்னத்வேஷத்துக்குப் புளிப்பா நன்றாக இருக்கும்.
  கால்வலியில் கவனம் வைக்கவும்.
  நன்றி கீதா மா.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி. இனி வரிசையாக மோரில் செய்யும் குழம்பு வகைகளைப் பார்த்துடுவோம். நெல்லை சொன்னதும் தான் இது எனக்குத் தோணி இருக்கு!

   Delete