எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, July 8, 2016

உணவே மருந்து! மணத்தக்காளி வற்றல்!

மணத்தக்காளிக் கீரையைப் பாசிப்பருப்போடு சின்ன வெங்காயம் சேர்த்துக் கூட்டாகச் செய்து சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறுகளுக்குத் தீர்வு கிடைக்கும்.  இதன் இலைச் சாறோடு வேறு ஏதேனும் பழச்சாறைக் கலந்து கொண்டு குடிக்கலாம். அப்படிக் குடித்தால் வயிற்றுப் பொருமல், வயிற்றுப் புண், குடல் புண், நாக்குப் புண், மூலவியாதி போன்றவற்றுக்கு நல்ல தீர்வாக இருக்கும்.  உடல் களைப்பும் நீங்கி நிம்மதியான தூக்கமும் வரும்.  கல்லீரல் கோளாறுகள் அனைத்தையும் நீக்கும் இந்தக் கீரை மஞ்சள் காமாலை நோய்க்கும் சிறந்த மருந்தாகும்.

நல்லகாய்ச்சல் இருக்கும் நேரங்களில் இந்தக்கீரைப் பொடியோடு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டிச் சூடாக அருந்தினால் காய்ச்சல் குறைய ஆரம்பிக்கும். மணத்தக்காளிப் பழமும் காய்ச்சலைக் குணமாக்கும் சக்தி உள்ளது. இதை வற்றலாகச் செய்துப் பொரித்து உண்ணலாம். உடல் நலம்பெறும் வரை தொடர்ந்து இந்தக்கீரையை உண்டு வரலாம். ஆஸ்த்மா நோயாளிகளுக்கு இந்தப் பழம் சீரான மூச்சு விடுவதற்கு உதவும். புதுமணத் தம்பதிகளுக்குக் கர்ப்பம் தரிக்கவும் இந்த மணத்தக்காளிப் பழம் பயன்படும்.  கரு வலிமை அடையவும், ஆண்களுக்கு தாது வலுவுடன் இருக்கவும் இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிடலாம்.

தோல் வியாதிகளுக்கும் இது அருமருந்தாக உதவுகிறது. கீரையின் சாற்றை இளநீர், மோர், தயிர், பால் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தொடர்ந்து அருந்தி வந்தால் சருமம் மினுமினுப்பு அடையும்.  இந்தக்கீரையைத் தினமும் சாப்பிட்டாலும் பிரச்னை ஒன்றும் இல்லை. மனச் சஞ்சலம் நீக்கி அமைதியைத் தரும் கீரைகளில் இதுவும் ஒன்று. ரிபோஃப்ளோவின் என்னும் வைடமின் பி2யும், வைடமின் நியாசினும் இந்தக் கீரையில் இருப்பதால்  தசைகள் பலமாகிக் கண்பார்வைக்கும் இது உற்ற மருந்தாகச் செயல்படுகிறது. நெஞ்சுவலி வந்தால் கூடகீரையையும், பழத்தையும் காய வைத்துப் பொடியாக்கி தினம் அரைக்கரண்டிப் பொடியைத் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நெஞ்சு வலி குணமாகும்.

மணத்தக்காளி வற்றல், சுண்டைக்காய் வற்றல், வேப்பம்பூ ஆகியவற்றை நல்லெண்ணெயில் வறுத்துக் கொண்டு இதோடு இந்துப்பு, பெருங்காயம், ஓமம், சுக்குச் சேர்த்துப்பொடியாக்கிக் கொண்டு தினம் ஒரு ஸ்பூன் பொடியில் ஒரு கைப்பிடி சூடான சாதத்தைக் கலந்து நெய் ஊற்றிச் சாப்பிட்டு வரலாம். தீராத வயிற்றுக் கோளாறுகள் எல்லாம் நீங்கும்.

பொதுவாக வற்றல் குழம்புகள் எது செய்தாலும் அவரை வற்றல், கொத்தவரை வற்றல், கத்திரி வற்றல், சுண்டைக்காய் வற்றல், மணத்தக்காளி வற்றல் என்று எது செய்தாலும் வற்றலை நல்லெண்ணெயில் வறுத்து வைத்துக் கொண்டு குழம்பைத் தாளிதம் சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கும் முன்னர் வற்றல்களைச் சேர்த்து ஒரு கொதி வந்தபின் இறக்கினால் வற்றல் சுவையுடன் இருக்கும். சிலர் வற்றல்களை வெந்நீரில் ஊற வைத்துச் சேர்ப்பார்கள். அதில் ருசியும், மணமும் மாறுபடும். 

3 comments:

  1. பொடி செய்து எல்லாம் சாப்பிட்டதில்லை. மற்றவை செய்திருக்கிறோம்!

    ReplyDelete
  2. எத்தனை பயன்கள் இதில்.....

    ReplyDelete
  3. மணத்தக்காளி வற்றல் சாப்பிட்டு இருக்கிறேன்! கீரையும் ருசித்தது உண்டு. உபயோகமான தகவல்கள்! நன்றி!

    ReplyDelete