எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, July 19, 2016

உணவே மருந்து! வெந்தயம்!

இப்போது சில வெந்தய சமையல்கள் குறித்துச் சொல்லப் போகிறேன். முதலில் வெந்தயக்கீரைக் குழம்பு.

தேவையான பொருட்கள்: ஒரு சின்னக் கட்டு வெந்தயக் கீரை, நன்கு ஆய்ந்து கழுவி நறுக்கிக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வைக்கவும்.

புளி ஒரு எலுமிச்சை அளவுக்கு. ஊற வைத்துக் கோது நீக்கிக் கரைத்துக் கொள்ளவும். இரண்டு கிண்ணம் இருக்கலாம்.

துவரம்பருப்பு குழைய வேக வைத்தது கால் கிண்ணம் (கொஞ்சமாப் பருப்புப் போட்டால் போதும்)

சாம்பார்ப் பொடி இரண்டு டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு

தாளிக்க
நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு ஒரு டீஸ்பூன், வெந்தயம் ஒரு டீஸ்பூன், மி.வத்தல் ஒன்று, பச்சை மிளகாய் ஒன்று, கருகப்பிலை கொஞ்சம் போல, பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு

அடுப்பில் கல்சட்டி அல்லது உருளி அல்லது இது ஏதும் இல்லைனா உங்கள் வழக்கமான நான் ஸ்டிக் பாத்திரத்தை வைக்கவும். நினைவாக அடுப்பை மூட்டவும். நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, வெந்தயம் போட்டுக் கொண்டு மி.வத்தல், ப.மிளகாய் போட்டுக் கருகப்பிலை பெருங்காயம் சேர்த்துக் கொண்டு நறுக்கி வைத்திருக்கும் வெந்தயக் கீரையைப் பிழிந்து போட்டு நன்கு வதக்கவும். கீரை சுருள வதங்கியதும் புளிக்கரைசலை ஊற்றவும். சாம்பார்ப் பொடி போட்டு உப்புச் சேர்க்கவும். நன்கு கொதித்ததும் குழைய வேக வைத்த துவரம்பருப்பைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் கீழே இறக்கவும். சூடான சாதம், சப்பாத்தி ஆகியவற்றோடு நல்ல துணை!

அடுத்து வெந்தயக்கீரையோடு உருளைக்கிழங்கு சேர்த்துச் செய்யும் கறி

வெந்தயக்கீரை ஒரு கட்டை முன்னர் சொன்ன மாதிரிக் கழுவி ஆய்ந்து நறுக்கிக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துத் தனியாக வைக்கவும்.

உருளைக்கிழங்கு நடுத்தரமானது 5 நன்கு வேக வைத்துத் தோலுரிக்கவும்.

குடமிளகாய் அல்லது பச்சை மிளகாய், உங்கள் விருப்பம் போல் குடமிளகாய் என்றால் ஒன்று. பச்சை மிளகாய் என்றால் இரண்டு

தக்காளி விரும்பினால்

மிளகாய்ப் பொடி ஒரு டீஸ்பூன்

தனியாப் பொடி ஒரு டீஸ்பூன்

கரம் மசாலா கால் டீஸ்பூன்

உப்பு தேவையான அளவு

தாளிக்க சமையல் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு, ஜீரகம், சோம்பு தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத் தூள் அரை டீஸ்பூன்
மஞ்சள் பொடி அரை டீஸ்பூன்

அடுப்பில் கடாயைப் போட்டு எண்ணெய் ஊற்றிக் கடுகு, ஜீரகம், சோம்பு தாளிக்கவும். எல்லாம் பொரிந்ததும் பெருங்காயம் சேர்த்துக் குடைமிளகாய் அல்லது பச்சை மிளகாய் சேர்க்கவும். வதங்கியதும் வெந்தயக் கீரையைப் பிழிந்து  போட்டு வதக்கவும். மஞ்சள் பொடி சேர்க்கவும். கீரை வதங்கியதும் உருளைக்கிழங்கு வேக வைத்ததைத் துண்டங்களாக்கிச் சேர்க்கவும். மிளகாய்த் தூள், தனியாத் தூள், உப்புச் சேர்த்து வதக்கவும். விரும்பினால் ஒரு தக்காளியைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். எல்லாவற்றையும் நன்கு வதக்கி விட்டுக் கீழே இறக்கும்போது கரம் மசாலா சேர்த்துக் கலந்து விட்டு இறக்கவும். சப்பாத்தி, ஃபுல்கா, பரோட்டா ஆகியவற்றுக்கு நல்ல துணை!

1 comment:

  1. இரண்டுமே பிடித்த உணவு. நன்றி.

    ReplyDelete