எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, July 25, 2016

உணவே மருந்து! வெந்தயம், தொடர்ச்சி!

வெந்தயக் கீரைச் சப்பாத்தி அல்லது பரோட்டா அல்லது தேப்லா

Image result for மேதி பரோட்டா


மூன்றும் ஒன்றே தான். பரோட்டா மட்டும் கொஞ்சம் உள்ளே நெய் தடவி மடித்துப் போட்டு இட்டுச் செய்யணும். மத்தது இரண்டும் இட்டுக் கொண்டு தோசைக்கல்லில் போட்டு நெய்யோ எண்ணெயோ விட்டு வேக வைத்து எடுக்க வேண்டும். தேவையான பொருட்கள்:

வெந்தயக் கீரை ஒரு கட்டு. நன்கு ஆய்ந்து நறுக்கிக் கழுவிக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வைக்கவும்.

கோதுமை மாவு  இரண்டு கிண்ணம்

கடலை மாவு அரைக்கிண்ணம்

உப்பு தேவையான அளவு

மஞ்சள் பொடி ஒரு டீஸ்பூன்

மிளகாய்ப் பொடி ஒரு டீஸ்பூன்

கரம் மசாலாப் பொடி(தேவையானால்) அரை டீஸ்பூன்

ஓமம் பொடித்தது அரை டீஸ்பூன்

தயிர் ஒரு கிண்ணம்

பச்சை மிளகாய், இஞ்சி அரைத்த விழுது ஒரு டீஸ்பூன். இந்த விழுதை அரைக்கையில் இதனோடு தேங்காயும் சேர்த்து அரைக்கலாம். நான்கு பேருக்கான சப்பாத்திக்கு இரண்டு பச்சை மிளகாய் ஒரு துண்டு இஞ்சி ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய்த் துருவல் வைத்து அரைக்கலாம்.

எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் (இது மாவில் பிசையும் போது கலக்க)

இதைத் தவிர சப்பாத்தி செய்து கொண்டு சப்பாத்தியில் சுற்றியும் விட்டு எடுக்க எண்ணெய் அல்லது நெய் அவரவர் வசதிப்படி ஒரு சின்னக் கிண்ணம்.

சப்பாத்திக்கு உள்ளே தடவ வெண்ணெய் அல்லது நெய் ஒரு சின்னக் கிண்ணம்

கோதுமை மாவு, கடலை மாவு, உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, கரம்மசாலாப்பொடி ஆகியவற்றை ஒன்றாக்கி நன்றாகக் கலக்கவும். பச்சைமிளகாய் விழுது, பொடி செய்த ஓமம் ஆகியவற்றையும் போட்டுக் கலந்து கொள்ளவும். பச்சைமிளகாய் இஞ்சி கடிபட வேண்டுமென விரும்பினால் அப்படியே பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். இவற்றோடு ஆய்ந்து நறுக்கி வைத்த வெந்தயக்கீரையைச் சேர்த்துக்கலந்து கொள்ளவும்.  தயிரைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு மாவைச் சப்பாத்தி மாவு போல் பிசையவும். நன்கு மாவு பிசைந்தானதும் இரண்டு டீஸ்பூன் எண்ணெயை மாவில் மேலாக விட்டு மீண்டும் நன்கு பிசைந்து கொண்டு  ஒரு மணி நேரம் போல் ஊற வைக்கவும்.

மாவு ஊறியதும் அடுப்பில் தோசைக்கல்லைப் போட்டுச் சூடாக்கிக் கொண்டு பிசைந்த மாவில் ஒரு சின்ன ஆரஞ்சு அளவு எடுத்துக் கொண்டு காய்ந்த மாவில் தோய்த்துக் கொண்டு சப்பாத்தியாக இடவும். உள்ளே நெய் அல்லது வெண்ணெய் தடவவும், மடித்துப் போட்டுக் கொண்டு மேலே மீண்டும் நெய் அல்லது வெண்ணெய் தடவிக் கொண்டு சப்பாத்தியை மறுபடி மடித்துப் போட்டு இடவும். இம்மாதிரி இரண்டு அல்லது மூன்று முறை மடித்துப் போட்டுக் கொண்டு நெய் தடவிய பின்னர் சப்பாத்திகளாக இட்டுக் கொண்டு காய்ந்து கொண்டிருக்கும் தோசைக்கல்லில் போடவும். உடனே நெய்யோ அல்லது எண்ணெயோ விட வேண்டாம். ஒரு பக்கம் கொஞ்சம் வெந்த பின்னர் திருப்பிப் போட்டு வெந்த பின்னர் எண்ணெய் அல்லது நெய்யை ஊற்றினால் நன்றாக உப்பிக் கொண்டு வரும். பின்னர் இரு பக்கமும் திருப்பிப் போட்டு நெய்யோ அல்லது எண்ணெயோ ஊற்றி வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். இதை ஊறுகாய், தயிர்ப்பச்சடி போன்றவற்றோடு சாப்பிடலாம். மோர்க்குழம்பு, வெந்தயக்கீரைக்குழம்பு போன்றவையும் இதற்கு நல்ல துணை.


வெந்தயக் குழம்பு  தேவையான பொருட்கள்

புளி ஒரு எலுமிச்சை அளவு எடுத்து ஊற வைத்துக் கரைத்துக் கொள்ளவும். இரண்டு கிண்ணம் இருக்கவேண்டும்

தாளிக்க நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு, துபருப்பு, உபருப்பு, கபருப்பு, வெந்தயம், மிவத்தல், கருகப்பிலை ஆகியன பருப்பு கடுகு போன்றவை தலா ஒரு டீஸ்பூன் இரண்டு மிவத்தல் கருகப்பிலை கொஞ்சம் போல. பெருங்காயம் ஒரு துண்டு. மஞ்சள் பொடி அரை டீஸ்பூன்.

குழம்பில் போடத் தான் ஏதேனும். குழம்புக் கறிவடாம் அல்லது அப்பளம் அல்லது வற்றல் ஏதேனும். எண்ணெயில் வறுத்துத் தனியாக வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் நான்கு வற்றல் மிளகாய், ஒரு டேபிள் ஸ்பூன் துவரம்பருப்பு இரண்டு டீஸ்பூன் வெந்தயம் போட்டு வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். இந்தப் பொடி முழுவதும் குழம்புக்குத் தேவை இருக்காது. ஆகையால் பொடித்துக் கொண்டு ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக்கொண்டு தேவையானபோது பயன்படுத்தலாம்.

அடுப்பில் கல்சட்டி அல்லது வெண்கல உருளி அல்லது நான் ஸ்டிக் பான் ஏதேனும் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றவும். கடுகு, பருப்பு வகைகளை ஒவ்வொன்றாகத் தாளித்து மி,வத்தல், கருகப்பிலை பெருங்காயம் சேர்க்கவும். புளிக்கரைசலை ஊற்றவும். உப்புச் சேர்க்கவும். முழுவதுமாக இந்தப் பொடியே போடுவதானால் புளி வாசனை போகக் குழம்பு கொதித்ததும் வற்றலைச் சேர்த்து இந்தப் பொடியைப் போட்டுக் கீழே இறக்கவும். முழுவதுமாக இந்தப் பொடி தேவையில்லை எனில் கொஞ்சம் போல் சாம்பார்ப் பொடி போட்டுக் கொண்டு வற்றலும் சேர்த்துக் கொதித்துச் சேர்ந்து வருகையில் இந்த மிவத்தல் துவரம்பருப்பு, வெந்தயம் வறுத்த பொடியை ஒரு டீஸ்பூன் மட்டும் சேர்த்துக் கீழே இறக்கவும். ஒரு சிலர் மிவத்தல் துவரம்பருப்புப் போடாமல் வெறும் வெந்தயம் மட்டும் வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்து வைத்திருப்பார்கள். அதையும் ஒரு அரை டீஸ்பூன் சேர்க்கலாம். இறக்கியதும் கூட இந்த வெந்தயப் பொடியைச் சேர்க்கலாம். இது தான் வெந்தயக் குழம்பு!


3 comments:

 1. சத்தான சுவையான உணவுக் குறிப்புக்கள்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 2. வெந்தயக்கீரை சப்பாத்தி சாப்பிட்டுப் பார்க்க ஆவல் வருகிறதே...

  ReplyDelete
 3. சுவையான குறிப்புகள்....

  நன்றி.

  ReplyDelete