எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, July 15, 2016

உணவே மருந்து! நாரத்தங்காய்!

இப்போ நாரத்தங்காயில் குழம்பு பண்ணும் விதம் கொடுக்கப் போகிறேன். ஒரு நல்ல ஜாதி நாரத்தங்காயை எடுத்துக் கொள்ளவும். இரண்டாக நறுக்கிக் கொண்டு ஒரு பாதியின் சாறைப் பிழிந்து தனியாக வைக்கவும். ஒரு அரை டீஸ்பூன் உப்பை அந்தச் சாறில் கலந்து வைக்கவும். மீதிப் பாதியோடு சாறு பிழிந்ததின் தோலையும் சேர்த்துப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்துக் கரைத்துக் கொள்ளவும். இரண்டு கிண்ணம் இருக்கலாம். கல்சட்டி அல்லது வாணலியை அடுப்பில் ஏற்றிக் கொண்டு அதில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உ,பருப்பு, கபருப்பு, துபருப்பு ஆகியன தலா ஒரு டீஸ்பூன், மி.வத்தல் 2, கருகப்பிலை, பெருங்காயம் போட்டுத் தாளிக்கவும். நறுக்கிய நாரத்தங்காய்த் துண்டங்களைப் போட்டு வதக்கவும். குழம்புப் பொடி இரண்டு டீஸ்பூன் போட்டு நாரத்தங்காய்த் துண்டங்களோடு வதக்கிக் கொண்டு கரைத்த புளிக்கரைசலை ஊற்றி உப்புச் சேர்க்கவும். நன்கு கொதிக்கட்டும். சேர்ந்து வரும்போது ஒரு சின்னத் துண்டு வெல்லம் சேர்க்கவும். கீழே இறக்கி சூடான சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றிச் சாப்பிடவும்.

நாரத்தை இலைகளைக் கொஞ்சம் இளசாக இருக்கும்போதே பறித்து நன்கு கழுவி நிழலில் உலர்த்திக் கொள்ளவும். ஒரு கிண்ணம் நிறைய இலைகள் இருந்தால் அவற்றிற்குத் தேவையான அளவு சாமான்கள் கீழ்க்கண்டவாறு எடுத்துக் கொள்ளவும். கருகப்பிலையும், எலுமிச்சை இலையும் கூட இருந்தால் நல்லதே!

பத்து அல்லது பனிரண்டு மிளகாய் வற்றல்

வெள்ளை உளுத்தம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

ஓமம் இரண்டு டீஸ்பூன் (இதற்குப் பெருங்காயம் வேண்டாம்)

ஒரு சிலர் புளி, பெருங்காயம் சேர்ப்பார்கள். சேர்த்தாலும் தவறில்லை. புளியையும் வெறும் வாணலியில் பிரட்டிக் கொண்டு இலைகளை அரைக்கையில் சேர்த்து அரைக்க வேண்டும்.

இவை எல்லாவற்றையும் வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு பின்னர் அதே வாணலியில் இலைகளையும் போட்டுச் சூடு வரப் பிரட்டிக் கொள்ளவும். ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். வாயில் ருசி இல்லாமல் இருந்தாலோ அல்லது வாந்தி வரும்போல் இருந்தாலோ இந்தப் பொடியை வாயில் போட்டுக் கொள்ளலாம். அல்லது சூடான சாதத்தில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயுடன் பொடி சேர்த்துக் கலந்து உண்ணலாம். மோர் சாதத்திற்குத் தொட்டுக் கொள்ளலாம். கரைத்த மோரில் இந்தப் பொடியை ஒரு ஸ்பூன் போட்டுக் கரைத்துக் குடிக்கலாம்.

தேவையான பொருட்கள்: நாரத்தை இலைகள் இரண்டு பெரிய கிண்ணங்கள், எலுமிச்சை இலையும் சம அளவு. செடிகளிலிருந்தும் கொடிகளிலிருந்தும் பறித்துச் சுத்தம் செய்து நரம்பை நீக்கி வைத்துக்கொள்ளவும்.

மேலே சொன்ன அளவிற்குக் காரம் வேண்டுமெனில் 15 முதல் 20 மிளகாய் வற்றல், ஓமம் ஒரு டேபிள் ஸ்பூன், பெருங்காயம் ஒரு சின்னக் கட்டி அல்லது தூள் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.

மேலே சொன்ன சாமான்களை நன்கு வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும். வாணலிச் சூட்டிலேயே நாரத்தை, எலுமிச்சை இலைகளைப் போட்டுக்கொண்டு சூடானதும், எல்லா சாமான்களையும் மிக்சியில் போட்டு அரைக்கவும். அல்லது இடித்தும் வைத்துக்கொள்ளலாம்.

பச்சை நாரத்தங்காயைக் கழுவிக் கொண்டு வட்டமாகச் சுருள் சுருளாக வரும்படி நறுக்கிக் கொள்ளவும். நாரத்தங்காய் சுமார் பத்து இருந்தால் ஒரு கிண்ணம் உப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டேபிள் ஸ்பூன் பெருங்காயப் பொடி எடுத்துக் கொண்டு. மூன்றையும் ஒன்றாகக் கலந்து கொண்டு நாரத்தங்காய்ச் சுருளுக்குள் அடைத்து வைக்கவும். இரண்டு அல்லது மூன்று நாட்கள் அந்தச் சுருளைப் பாத்திரத்திலேயே வைத்துக் கிளறி விட்டு நல்ல வெயிலில் எடுத்துக் காய வைக்கவும். ரொம்பவும் காயவும் கூடாது. கையால் கிள்ளும் பதம் வந்ததும் எடுத்து வைக்கலாம். இதையே வெந்நீரில் ஊற வைத்துக் கொண்டு மிளகாய்ப்பொடி, கடுகு, வெந்தயப் பொடி சேர்த்து நல்லெண்ணெயில் கடுகு தாளித்துக் கார ஊறுகாயாகவும் பயன்படுத்தலாம். விருந்தினர் வரும்போது வீட்டில் ஊறுகாய் இல்லை எனில் கை கொடுக்கும்.

1 comment:

  1. நாரத்தை பொடி சாதத்தில் போட்டு சாப்பிடதுண்டு. நார்த்தங்காய் குழம்பு சாப்பிட்டதில்லை.

    ReplyDelete