எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, July 14, 2016

உணவே மருந்து! நாரத்தங்காய்!

உண்மையில் நான் அடுத்து நெல்லிக்காய் குறித்தே எழுத இருந்தேன். அம்பி வந்ததும் நாரத்தங்காய் சாதம் செய்ததும் பற்றிச் சொல்லப் போக நாரத்தங்காய்க்கு எக்கச்சக்கமான விளம்பரம் கிடைச்சுடுத்து! ஆகவே நாரத்தங்காயைப் பத்தியே முதல்லே எழுதிடலாம்னு ஒரு எண்ணம்!

நாரத்தங்காய் மரமாக வளரக் கூடியது. எங்க அம்பத்தூர் வீட்டிலே இரண்டு உண்டு. காய்க்காமல் இருந்ததைப் பௌர்ணமி தினத்தன்று வேரில் வெட்டுப் போட்டுச் செருப்பால் அடித்துப் பின்னர் புட்டு நிவேதனம் செய்து காய்க்க வைத்தேன். நல்ல ஜாதி நாரத்தங்காய்! அங்கிருந்து கிளம்புகையில் மரத்தையே வெட்டியாச்சு! ரொம்பவே மனசுக்கு வேதனையா இருந்தது. என்ன செய்ய முடியும்! இப்போ விலை கொடுத்து நாரத்தங்காய் வாங்கறோம்.

நாரத்தங்காய் மரம் குறைந்த பட்சமாக நூறு வருடங்களுக்கு மேல் இருக்கும். இதன் வேரிலிருந்து பூக்கள், காய்கள், பழங்கள் எல்லாமும் பயன் தரக்கூடியவையே!  நாரத்தம்பழத்தில் வைடமின்களோடு மட்டுமில்லாமல் கொழுப்பு அமிலங்களும், அமினோ அமிலங்களும் இருக்கின்றன. அவை யாவன,  அஸ்கார்பிக் அமிலம், அலனைன், நியசின், வைட்டமின் பி, அஸ்பார்டிக் அமிலம், இனிசைன், குளுடாமிக் அமிலம், பெர்கமோட்டின், நாரிங்கின், சிட்ரல், லிமோனின், நார்டென்டாடின், வெலென்சிக் அமிலம் ஆகியன ஆகும்.

இதன் பூக்கள் தசையை இறுக்கமடைய வைக்கும். ஊக்குவிக்கும் சக்தி கொண்டது. வேர் வாந்தியைக் கட்டுப்படுத்தும். வயிற்றுப் புழுக்கள், மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக் கல் போன்றவற்றிற்கும் மருந்தாகும். வயிற்றுப் புண்ணிற்கு நாரத்தங்காய் சிறந்த மருந்தாகும்.  இதன் தோல் வயிற்றுப் போக்கை நிறுத்தும். இதை எவ்வகையிலாவது உணவில் தினமும் சேர்த்து வர ரத்தம் சுத்தியடையும். வாதத்தை நீக்கி வயிற்றுப் புண்களை ஆற்றிப் பசியை அதிகரிக்கச் செய்யும்.  இதன் கனிகளைச் சாறு எடுத்துச் சாத்துக்குடி ஜூசைப் போல் குடிக்கலாம். கொஞ்சம் சர்க்கரை சேர்க்கவேண்டும். இந்தச் சாறு உடலுக்கும் வாய்க்கும் ரொம்பவே நன்மை தரும். வாயில் ஏற்படும் பித்தசம்பந்தமான நோய்கள் தீரும்.

உணவு ருசிக்காமல் இருந்தால் அதை ருசிக்கச் செய்யும் ஆற்றல் உள்ளது நாரத்தங்காய். இதைச் சாறாகவோ அல்லது ஊறுகாயாகவோ அல்லது சாதத்திலோ சேர்த்துச் சாப்பிட்டால் வாயின் ருசிகள் மீண்டும் வரும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தந்து  தாகம் போக்கும். தோலைத் தேனில் ஊற வைத்தும் சாப்பிடலாம். அல்லது நெல்லிக்காயை ஊற வைப்பது போல் சர்க்கரைப் பாகிலும் ஊற வைத்துச் சாப்பிடலாம். சீதக் கழிச்சலுக்கு இது நன்மை பயக்கும்.  உடல் சூடு உள்ளவர்களுக்கு சூடு தணியும்,. வெயில் வேளையில் நாரத்தங்காய்ச் சாறு எடுத்துச் சர்க்கரை, நீர் சேர்த்து அருந்தினால் வெயிலின் தாக்கம் குறையும்.

நாரத்தம்பழச் சாறுடன் பனங்கல்கண்டு அல்லது தேன் சேர்த்துச் சாப்பிட்டால் வெள்ளை அணுக்கள் நன்றாக உற்பத்தி ஆகி உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.  கர்ப்பிணிப் பெண்களுக்கும் சுகப்பிரசவத்திற்கு இதன் சாறை சர்க்கரையோ வெல்லமோ பனங்கல்கண்டோ சேர்த்துச் சாப்பிட்டால் சுகப் பிரசவம் ஆகும். வயிற்றில் வாயுத் தொல்லை அதிகரித்து வயிறு உப்புசமாக இருக்கையில் சாறோடு வெந்நீர் கலந்து சாப்பிடலாம். உடனடி நிவாரணம் கிடைக்கும்.

தொடரும்

2 comments:

  1. எங்கள் வீட்டுக்கருகில் இருந்த நாரத்தை மரமும் சென்ற வருடம் விழுந்து விட்டது. ஏகப்பட்ட காய்கள் கொடுத்துக் கொண்டிருந்தது. நாரத்தை காய் வடிவத்தில் தவிர மற்ற வடிவத்தில் சாப்பிட்டதில்லை.

    ReplyDelete
  2. நெய்வேலி வீட்டில் இருந்தது. இப்போது காசு கொடுத்து தான் வாங்க வேண்டியிருக்கிறது. எத்தனை பலன்கள் இதில்.....

    ReplyDelete