எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, April 23, 2013

உடம்பெல்லாம் இல்லாட்டியும் இந்தக் கஞ்சி சாப்பிடலாம். :)

பிடிச்சால் சாப்பிடுங்க.  இப்போ எங்க வீட்டிலே கஞ்சி சீசன்.  :))) புழுங்கலரிசிக் கஞ்சி போடறேன். ஐய னு சொல்றவங்க கொஞ்சம் பொறுமையாகக் கேட்டால் கஞ்சியைப் பத்தித் தெரிஞ்சுக்கலாம்.


அரை கிலோ புழுங்கலரிசி, இட்லி அரிசியானாலும் பரவாயில்லை.  அதோடு நூறு கிராம் பாசிப்பருப்பு இரண்டையும் சேர்த்துக் களைந்து நீரை வடிகட்டிக் கொள்ளவும்.  வெறும் வாணலியில் இரண்டையும் வறுக்கவும்.  வாசனை வரும்வரை வறுக்கலாம்.   ஆற வைத்து மிக்சி ஜாரில் போட்டுக் குருணை அல்லது ரவை பதத்துக்குப் பொடித்து ஒரு டப்பாவில் போட்டுக் கொள்ளவும்.  இந்தக் குருணை அல்லது ரவை ஒருத்தருக்கு ஒரு கரண்டி வீதம் எடுத்துக்கொள்ளவும்.

அதுக்கு முன்னால் ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை ஊறவைத்து முளைகட்டிக்கொள்ளவும்.  வெந்தயம் ஊறிய மஞ்சள் நீரைக் கொட்ட வேண்டாம்.  பச்சைக்காய்கள் புடலை, வெள்ளரிக்காய், காரட், பீன்ஸ், கீரை போன்றவை பொடிப்பொடியாக நறுக்கி ஒரு கிண்ணம்.  தேங்காய் கீறியது(விருப்பமானால்) ஒரு டேபிள் ஸ்பூன், பால் ஏதேனும் ஒரு பால் 200 கிராம்.  அல்லது விருப்பமிருந்தால் தேங்காய்ப் பால் ஒரு மூடித் தேங்காயில் இருந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.  உப்பு தேவையான அளவு, பெருங்காயம், மிளகுத் தூள், பச்சை மிளகாய் ஒன்று, ஒரு துண்டு இஞ்சி. தாளிக்க நெய் ஒரு டேபிள் ஸ்பூன், ஜீரகம், கருகப்பிலை. கொத்துமல்லி, புதினா பொடிப் பொடியாக நறுக்கிக் கடைசியில் மேலே தூவ வைத்துக்கொள்ளவும்.  முழுப்பயறு இருந்தாலும் ஊற வைத்து முளைகட்டிச் சேர்க்கலாம்.

புழுங்கலரிசி ரவையை வெந்தயம், முளைகட்டிய பயறோடு இரண்டு கிண்ணம் நீரில் நன்கு கரைய விடவும்.  நன்கு வெந்து கெட்டியாக ஆகும் சமயம் நறுக்கிய காய்களைச் சேர்த்துக் கொஞ்சம் நீரும் பாலும் சேர்க்கவும்.  காய்கள் வெந்து வரும் சமயம் உப்பு, மிளகுத்தூள், பச்சைமிளகாய், இஞ்சி(சிதைத்துக் கொண்டு) சேர்க்கவும். நன்கு கெட்டியாகக் குழைவாக வெந்து வந்ததும், மீதம் இருக்கும்தேங்காய்ப் பால்/ பாலையும் சேர்க்கவும்.  கஞ்சி ரொம்ப கெட்டியாகவும் இல்லாமல், நீர்க்கவும் இல்லாமல் கையால் எடுத்துச் சாப்பிடும் பதத்தில் இருக்க வேண்டும்.  நெய்யில் ஜீரகம், கருகப்பிலை தாளித்துக் கொண்டு கொத்துமல்லி, புதினா தூவிவிட்டுக் கஞ்சியை எலுமிச்சை ஊறுகாய் அல்லது பொடிப்பொடியாக நறுக்கிய மாங்காய் ஊறுகாயோடு சாப்பிடலாம். 

18 comments:

  1. /// 1) வெந்தயத்தை ஊறவைத்து முளைகட்டிக்கொள்ளவும். 2) முழுப்பயறு இருந்தாலும் ஊற வைத்து முளைகட்டிச் சேர்க்கலாம். ///

    நல்லாத் தான் இருக்கு... பொறுமையாக இதை வீட்டில் செய்தால் அதிசயம் தான்... ஹிஹி... இருந்தாலும் நன்றி...

    ReplyDelete
    Replies
    1. டிடி, ஒரு கிலோ அரிசிக்குக் கால்கிலோ பாசிப்பருப்புப் போட்டு மிஷினில் கொடுத்து உடைச்சு வைச்சுக்கலாம். தேவையானப்போ எடுத்துக் கஞ்சி போட்டுக்கலாம். பயறை ஊற வைச்சு முளைகட்டுவதோ, வெந்தயம் முளை கட்டுவதோ பிரச்னை இல்லை. :)))))

      Delete
  2. சுவையான கஞ்சி.....

    சாதாரணமா புழுங்கலரிசி கஞ்சி அம்மா செய்வார்கள் - கூடவே தொட்டுக்கொள்ள மோர் மிளகாய். அம்ருதமாக உள்ளே இறங்கும்!

    ReplyDelete
    Replies
    1. அட? வெங்கட்,?? வாங்க, புழுங்கலரிசிக் கஞ்சிக்கு மோர் மிளகாயா? ஓகே, நாளைக்கு முயற்சி செய்துடுவோம். :)))))

      Delete
  3. கஞ்சி எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸுடன் வித்தியாசமாக இருக்கும் போலத் தெரிகிறது. முயற்சி செய்கிறேன். தேங்காய்ப் பால் எல்லாம் போட்டால் அவபத்தியம் இல்லையோ?

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், ஏற்கெனவே கொடுத்த பதில் போகலை. இந்தக் கஞ்சி பத்தியத்துக்காக இல்லை. எங்க வீட்டில் ப்ரெக்ஃபாஸ்ட். எங்க கேரள நண்பர்கள் வீட்டில் மதிய உணவிலேயே இந்தக் கஞ்சியை உணவாக எடுத்துக் கொண்டு பார்த்திருக்கேன். சபரிமலையில் ஸ்வாமி தரிசனம் முடிஞ்சு கீழே இறங்குகையில் தேவஸ்தானம் சார்பாக இந்தக் கஞ்சியை பக்தர்களுக்கு வழங்குவதாக என் கணவர், பையர் எல்லாம் சொல்லி இருக்காங்க. கேரள நண்பர்கள் இதோடு கொள்ளு சேர்ப்பாங்க.

      Delete
  4. தேங்காய் சேர்ப்பது கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துமே தவிர, கொலஸ்ட்ரால் வராது. இந்த அலோபதிக்காரங்களும், மேற்கத்திய நாடுகளும் தேங்காயை ஒதுக்கச் சொல்லிச் செய்த பிரசாரத்தில் நாம ஒரேயடியா ஒதுக்கிட்டோம். எங்க வீட்டில் இப்போவும் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் தான் சமையலுக்கு. தேங்காயும் பயன்படுத்துவோம்.

    ReplyDelete
  5. புழுங்கலரிசி கஞ்சி பால் சர்க்கரை சேர்த்து தான் சாப்பிட்டிருக்கிறேன். இந்த செய்முறை படி செய்து பார்க்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோவை2தில்லி, இன்னிக்குக் கூட இந்தக்கஞ்சி தான் காலை ஆகாரம். :))) கூட மாங்காய்த் தொக்கு! :))))தக்காளிப் பழம் கூடப் போட்டுக்கலாம்.

      Delete
  6. முழு பயறு என்பது, பாசிப்பயறையா சொல்கிறீர்கள்? முன்னேற்பாடாக எல்லாம் செய்துகொண்டால் சட்டுன்னு செஞ்சுரலாம் போலதான் இருக்கிறது. காய்ச்சல் வந்தால் மட்டும் கஞ்சி குடித்து, அது பத்திய உணவு என்பதாகவே ஆகிவிட்டது எனக்கு! :)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், மஹி, முழுப்பயறு என்பது பாசிப் பயறுதான். சட்டுனு செஞ்சுடலாம் தான். கஞ்சி பத்திய உணவு அல்ல. எப்போவும் எடுத்துக்கலாம். ராணுவத்தில் ராணுவ வீரர்களுக்குக் காலை ஆகாரமாக வாரம் இரு முறை கஞ்சி கொடுப்பாங்க. கூடவே கோதுமை அப்பம். அது என்ன காம்பினேஷன்னு தெரியலை. :)))))

      Delete
  7. இந்தக் கஞ்சி நன்றாக இருக்கின்றது.

    நாங்கள் இதேபோல நாட்டு அரிசியில் அரிசியை உடைக்காமல் தடிமன் காச்சலுக்கு புளிக்கஞ்சி செய்வோம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாதேவி, கஞ்சி புளிக்கஞ்சியாகவும் செய்யலாம், அதிலும் இந்த மாதிரிக் காய்கள் போட்டுச் செய்யலாம், வருகைக்கு நன்றி.

      Delete
    2. புளிக்கஞ்சி என்றால் என்ன

      Delete
    3. நீர்க்கப் புளி விடலாம், அல்லது தக்காளி நிறையப் போடலாம்.

      Delete
  8. சூப்பர் ரிசிபி மேடம்! ஜுரம் வரும் போதெல்லாம் மிளகு தட்டிப் போட்டு அம்மா தரும் புழுங்கலரிசி கஞ்சி நினைவிலாடுகிறது. மிக எளிமையான உணவு வகை இது.. செய்து பார்த்துட வேண்டியது தான். கொஞ்ச நாளா சுயம்பாகம்தான். என் காதலி அம்மா வீட்டிற்கு போயிருக்காப்பல...

    ReplyDelete
    Replies
    1. அட?? மோகன் ஜி, உங்களை இந்தப் பக்கம் எதிர்பார்க்கவே இல்லை. :)))) நல்வரவு. கருத்துக்கும் நன்றி. அநேகமா இந்தக் கஞ்சி தான் பெரும்பாலும் எங்க வீட்டில் காலை ஆகாரம். :)))) சில நாட்கள் மாறுதலுக்காக தோசை, உப்புமா போன்றவை.

      Delete