எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, April 12, 2013

பருப்பு உருண்டை மோர்க்குழம்பு!சாதாரணமாகப் பருப்புருண்டை செய்யும் முறை:

து,பருப்பு ஒரு கிண்ணம், அரைக்கிண்ணம் கடலைப் பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மூன்றையும் களைந்து கல்லரித்து ஒன்றாக ஊற வைக்க வேண்டும். இரண்டு மணி நேரம் ஊறலாம்.

இதற்கு ஐந்து அல்லது ஆறு மி.வத்தல், உப்பு, பெருங்காயம் சேர்த்து  நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொண்டு கருகப்பிலை, கொத்துமல்லி சேர்க்கவும்.  பின் நிதானமாக ஒரு எலுமிச்சம்பழ அளவு உருண்டைகளாக உருட்டிக் கொதிக்கும் நீரில் போட்டும் வேக வைக்கலாம்.  இம்முறையில் கொஞ்சம் மாவு வீணாகும்.  ஆகவே உருட்டிய உருண்டைகளை இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேக வைக்கவும்.  பின்னர் சாம்பாரிலோ, அல்லது மோர்க்குழம்பிலோ கொதிக்க ஆரம்பிக்கையில் சேர்த்துவிட்டுக் கொதிக்க விட்டுக் கீழே இறக்கித் தாளிக்கவும்.  கருகப்பிலை, கொத்துமல்லி சேர்க்கவும்.


மோர்க்குழம்பு.  கெட்டியான புளித்த மோர் ஒரு பெரிய கிண்ணம்.  (உருண்டை தாராளமாய்க் கொதிக்க வேண்டும்) பச்சை மிளகாய் நான்கு அல்லது ஐந்து(விருப்பம் போல்) தனியா ஒரு டேபிள் ஸ்பூன், துவரம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு இரண்டு டீஸ்பூன், மிளகு கால் டீஸ்பூன், தேங்காய்த் துருவல், இரண்டு டேபிள் ஸ்பூன், உப்பு ருசிக்கு ஏற்ப,மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, பெருங்காயம் தாளிக்க கடுகு, கருகப்பிலை, எண்ணெய்.(தே. எண்ணெய் நல்லது)

 முதலில் தனியா, பருப்பு வகைகளை மிளகோடு சேர்த்துக் குறைந்தது ஒன்றரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் பச்சை மிளகாய், தனியா, பருப்பு வகைகள், மிளகு தேங்காய்த் துருவலைச் சேர்த்து நன்கு நைசாக அரைக்கவும்.  மோரில் மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்துக் கொண்டு அரைத்த விழுதைப் போட்டுக் கலக்கவும்.  அடுப்பில் ஏற்றிக் கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பிக்கையில் வெந்த பருப்பு உருண்டைகளை ஒவ்வொன்றாய்ப் போடவும்.  மேலே மிதந்து வரும்.  நன்கு கொதித்துச் சேர்ந்ததும் அடுப்பை அணைத்துக் கீழே இறக்கி எண்ணெயில் கடுகு, கருகப்பிலை தாளிக்கவும்.

இந்தப் பருப்பு உருண்டைகளை சாம்பாரிலும் போட்டுக் கொதிக்க வைக்கலாம்.  தஞ்சை ஜில்லாவில் இதைப் பருப்பு உருண்டை ரசம் என்பார்கள். 

7 comments:

 1. சாம்பார், ரசம், மோர் - மூன்றிலும்...

  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வாங்க டிடி. நன்றிக்கு நன்றி.

   Delete
 2. வேகவைத்த உருண்டையை வறுத்தெடுக்க வேண்டுமோ? சில கல்யாண சமையல்களில் சாப்பிட்டிருக்கிறேன். சாம்பாரில் ஊறியும் ப உ முறுமுறுப்பாக இருக்கிறதே? என்ன காரணம்?

  ReplyDelete
  Replies
  1. இல்லை அப்பாதுரை, அது வேக வைச்சதா இருக்காது. மாவு அரைத்து அரிசிமாவு கலந்து ஒரு சிலர் பருப்பு உசிலிக்கு உதிர்க்கிறாப்போல் மொறுமொறுவென வறும்படி எண்ணெயில் உதிர்த்தெடுப்பார்கள். பின்னர் உருண்டை பிடித்திருக்கலாம். ஆனால் அது சேர்ந்து வராதே? ஒரு முறையாவது பார்த்தால் புரியும்.

   Delete
 3. ஆமை வடை (தவலை?) போல முறமுறவென்று டேஸ்ட் - ஊறி கொஞ்சம் மெதுவாக ஆனபின்னும் கூட. சின்ன சின்ன உருண்டைகளாக சாம்பாரில் போடுகிறார்கள். வடக்கே கோப்தா என்பார்களே அது போல, ஆனால் இது நிச்சயம் பருப்புருண்டை தான். சமீபமாகத் தான் கல்யாண சமையல்களில் இதைப் பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஓ, அது வடை மாவையே வடையாகப் பொரித்து எடுத்துப் பின் சாம்பார், மோர்க்குழம்பு, பச்சடியில் சேர்ப்பார்கள். அதைச் சொல்கிறீர்களோனு நினைக்கிறேன். இது ஏற்கெனவே செய்து வந்தது தான். முழுக் கத்திரிக்காய், சேப்பங்கிழங்கையும் இம்மாதிரி நைசாக அரைச்ச மாவில் முக்கிப் பொரித்து சாம்பாரில், மோர்க்குழம்பில் சேர்ப்பார்கள்.

   Delete