எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, April 7, 2013

மழை வேணும்னா மரியாதையா வற்றல் போடுங்க!

வெயில் தாங்கலை.  இருக்கிறதுக்குள்ளே திருச்சியில் தான் ஜாஸ்தி வெயில் போல இருக்கு.  ஆனால் நேத்து, முந்தாநாளெல்லாம் வெளியே போனப்போ நடந்து போனால் கூட சூடு தெரியலை.  வேர்த்து வழியலை. :)) இன்னிக்கு மத்தியானமா வெயில் தாங்காமல், மின்சாரமும் இல்லாமல் இன்வெர்ட்டரில் வர காத்தை அனுபவிக்கிறச்சே, பேசாமா ஏதானும் வடாம், வத்தல் போட்டுடலாமானு தோணித்து.  கொஞ்ச நேரத்துக்கெல்லாம் சூரிய பகவான் மனமிரங்கினார்.  தெற்கே இருந்து குளிர்ந்த காற்று வீச ஆரம்பிச்சிருக்கு. ஹிஹி நாம நினைக்க வேண்டியதுதான்.  குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமே உருவாயிடும்.

அதுக்கு இப்போ என்ன செய்யணும்னு கேட்டீங்கன்னா, உருளைக்கிழங்கில் வற்றல் போட்டுடுவோம்.  வட மாநிலங்களில் இருக்கிறச்சே ஜனவரியில் ஆரம்பிச்சா ஏப்ரல் வரை உருளைக்கிழங்கு ரொம்பவே விலை மலிவாக் கிடைக்கும்.  எல்லார் வீட்டிலும் இந்த வற்றல் தான் போடுவாங்க.  மொட்டை மாடி இல்லாதவங்க வீட்டுக்கு வெளியே கயிற்றுக்கட்டிலில் துணி அல்லது ப்ளாஸ்டிக் ஷீட்டை அல்லது பாயைப்போட்டுக் காய வைப்பாங்க. இதையும் வருஷக் கணக்கா வைச்சுக்கலாம். தேவையான பொருட்களைப் பார்ப்போமா?

உருளைக்கிழங்கு நான்கிலிருந்து ஐந்து கிலோ வரை.  அசந்துடாதீங்க.  எல்லாம் நறுக்கிட்டாக் கொஞ்சமாப் போயிடும்.  கூட உங்க ரங்க்ஸைக் கூப்பிட்டுக்குங்க.  மாட்டேன்னார்னா அன்னிக்கு "நான் தான் சமைப்பேன்!" அப்படின்னு பிடிவாதம் பிடிங்க.  உங்க சமையலைச் சாப்பிடாமல் தப்பிப்பதற்காகவே அவர் ஒத்துப்பார்.  மாமியார், நாத்தனார் இருந்தால் இரண்டு, மூன்று நாட்களுக்கு அவங்களோட ஒத்துழைப்புத் தேவைங்கறதாலே காபி, டீ அப்படினு அப்போப்போ உபசாரம் செய்து வைச்சுக்குங்க. :))))

ஐந்து கிலோ உருளைக்கிழங்கு, தேவையான உப்பு, ஒரு பெரிய வாயகன்ற பாத்திரம்,  ஐந்து கிலோவையும் ஒண்ணாப்போடறாப்போல் வேண்டும்.  கொதிக்க வைக்க நீர்.

நாளைக்குக் காலம்பர வற்றல் போடப் போறீங்கன்னா, இன்னிக்கே எல்லாருமா உட்கார்ந்து பழைய கதைகளைப் பேசிக் கொண்டே உருளைக்கிழங்குகளை நன்கு நீர் விட்டுக் கழுவி விட்டு உருளைக்கிழங்கை வட்ட வட்டமாகச் சீவிக் கொள்ளுங்கள்.  சும்மா இஷ்டத்துக்கு எல்லாம் சீவித் தள்ளக் கூடாது.  வட்டமாய் இருந்தால் தான் நல்லா இருக்கும். சீவித் தள்ளிய வட்டமான உருளைக்கிழங்கு ஸ்ட்ரைக்கர்களை, (சீச்சீ, வால்கள் கலாட்டா நீனைவு) உருளைக்கிழங்கு வட்டங்களை ஒரு பெரிய வாளியில் முக்காலுக்கு நீர் வைத்துக் கொண்டு அதில் போட்டு நன்கு அலசவும்.  உருளைக்கிழங்கின் ஸ்டார்ச் எனப்படும் மாவுச் சத்து அதிலிருந்து போகும் வரை மீண்டும் மீண்டும் அலசவும்.  அலசிய உருளைக்கிழங்கு வட்டங்களை நீரிலேயே மூழ்க வைத்து இரவு பூரா வைக்கவும்.

மறுநாள் காலையில் வாயகன்ற பெரிய பாத்திரத்தில் அரைக்கும் மேல் நீர் வைத்து நன்கு கொதிக்க வைக்கவும்.  தேவையான உப்பைச் சேர்க்கவும்.  நீரில் மூழ்கி இருக்கும் உருளைக்கிழங்கு வட்டங்களை அதில் போட்டு நன்கு கிளறவும்.  அடுப்பை அணைக்கவும்.  அரை மணி நேரம் உருளைக்கிழங்கு அதிலேயே இருக்கட்டும்.  பின்னர் வெந்நீரை வடிகட்டி உருளைக்கிழங்கு வற்றல்களை வெயிலில் காய வைக்கவும்.  நன்கு காய்ந்ததும் எடுத்து ஒரு டப்பாவில் போட்டு நன்கு காற்றுப் போகாமல் மூடி வைக்கவும்.  தேவைப்படும்போது எடுத்துக் கொண்டு எண்ணெயில் பொரித்துக் காரம், பெருங்காயத் தூள் சேர்த்துச் சாப்பிடலாம்.  வட மாநிலங்களில் மாலை தேநீரோடு அநேகமாய் இதுவும் இருக்கும்.

இந்தக் கொதிக்கும் வெந்நீரிலேயே காரத்தைச் சேர்ப்பவர்களும் உண்டு.  மசாலா வாசனை பிடிக்குமெனில் அதையும் சேர்க்கலாம். உருளைக்கிழங்கை இரவு முழுதும் நீரில் மூழ்க வைப்பதால் வற்றல் வெள்ளையாக இருக்கும் என்பதோடு அதில் மிச்சம் இருக்கும் மாவுச் சத்தும் போய்விடும்.  உருளைக்கிழங்கு சாப்பிட்டால் கொழுப்புச் சேரும் என்பதெல்லாம் மாயை.  தாராளமாய்ச் சாப்பிடலாம்.  வயிறு ஒத்துக்கணும்.  குழந்தை ஒல்லியாக இருந்தால் அந்தக் குழந்தைக்கு ஒரு சின்ன உ.கி. வேக வைத்துத் தோலுரித்துக் கொண்டு நடுவில் குழி போல் செய்து அதில் வெண்ணெயை வைத்துக் கொடுக்கவும்.   புஷ்டியாக வளரும் என்பதோடு எலும்புகளுக்கும் பலம் தரும்.

12 comments:

  1. மழை வந்ததா:)

    உ.கிழங்கு சீவ ஒரு ஆளை வைத்துக் கொள்ளணும்..5 கிலோவா!!! சாமி. இது பகாசுர ஏற்பாடா இருக்கே:)

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, என்ன இன்னிக்கு இந்தப் பக்கம்? :))))) இணையம் சரியா வேலை செய்யுது போல! பகாசுர ஏற்பாடெல்லாம் இல்லை. சொல்லத்தான் ஐந்து கிலோ. வற்றல் போட்டு முடிச்சுக் காய்ஞ்சதும் எடுத்து வைச்சா ஒண்ணுமே இருக்காது. சொந்த அனுபவம். :)))))

      Delete
  2. எல்லாம் சரியாக செய்து வந்தேன். அடுப்பை அணைக்கவும் என்று இருந்ததைப் பார்த்து, அடுப்பை அணைத்தேன். கைகள், மார்பு எல்லாம் இப்பொழுது தீயினால் சுட்ட புண்! (நல்ல வேளை எல்லாம் கற்பனையிலேயே செய்து வந்ததால் பிழைத்தேன்!)

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, கெளதம் சார், எங்கேயோ கவனமா இருக்கீங்க போல! ஜாக்கிரதை. ஏறுக்கு மாறாச் செய்து வைக்காதீங்க. த.ம. பக்கத்திலே இல்லையா? :P :P :P அவங்க மெயில் ஐடி கொடுங்க. ஒரு மெயில் போடுவோம். :))))

      Delete
  3. உங்கள் குறிப்பு போல் செய்து பார்ப்போம்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி, பயப்படாதீங்க முதல்லே வேணும்னா இரண்டு கிலோவிலே செய்து பாருங்க. சரியா வந்தால் கொஞ்சம் கொஞ்சமாச் செய்து வைச்சுக்கோங்க. :))))))

      Delete
  4. ஆமா.. கழுவ ஊறவைக்க 'மீண்டும் மீண்டும்' அலச - இத்தனை தண்ணீருக்கு எங்கே போக?

    kgg :-)

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, அது உருளைக்கிழங்கு வற்றல் போடறவங்க பாடு, எனக்கென்ன? :)))))

      ஆனால் உண்மையாகவே சென்னையில் தண்ணீர்ப் பஞ்சம். :(

      Delete
  5. 1) தோல் சீவ வேண்டாமா?

    2) ஒருநாள் காய வைத்தால் போதுமா?

    3) இதைக் குறித்துக் கொண்டேன் என்றாலும் பாஸ் கிட்ட சொல்லலை! :))

    ReplyDelete
    Replies
    1. தோல் சீவ வேண்டாம் ஸ்ரீராம், உங்களுக்கு இஷ்டமானால் சீவிக்கலாம். ஒரு நாளில் காய்ஞ்சுடுச்சுன்னால் போதும். இல்லைனா நல்லாக் காயற வரை காய வைச்சுத்தான் ஆகணும். :))))

      எல்லாம் நடுங்கறீங்க போல! :))))

      Delete
  6. மழை வரும் என்றால் வத்தல் போடலாம் நம்மால் ஊர் மக்கள் நலம்பெறுவார்களே!
    நீங்கள் போட்ட போது மழை பெய்ததா?
    பேப்பரிம் ஸ்ரீரங்கத்தில் மழை என்று படிக்கவில்லையே!

    ReplyDelete
  7. நான் உருளைக்கிழங்கு வற்றல் போடலை கோமதி. குழந்தைகள் இல்லாததால் எனக்குச் செலவு ஆகாது. :)))) ஆனால் வேறு வற்றலுக்கு ஏற்பாடு பண்ணினால் அன்னிக்கு சூரியன் அறிவிக்கப்படாத விடுமுறை எடுத்துக்கொண்டு சிறு தூற்றலானும் போடும். ஸ்ரீரங்கத்தில் பெரு மழை பெய்யாது. அரங்கனுக்கு ஒத்துக்காது! :)))))

    ReplyDelete