எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, July 14, 2017

உணவே மருந்து! முருங்கை 4

முருங்கைக்காய்க் குழம்பு! இதை வெறும் குழம்பு என்றே சொல்லணும். என்றாலும் என் மாமியார் வீட்டில் முருங்கைக்காய் வத்தக்குழம்பு என்பார்கள். இது செய்யத் தேவையான பொருட்கள். வழக்கம்போல் முருங்கைக்காய்கள் உங்க இஷ்டத்துக்கு எடுத்துக்கலாம்.

நேத்திக்கும் நம்ம ரங்க்ஸ் 3,4 முருங்கைக்காய்கள் வாங்கி வந்துட்டார். அப்படியாவது சர்க்கரை குறையாதா என்ற சபலம். ஆனால் அவருக்கு என்னமோ அரை இட்லி அதிகம் ஆனால் கூட சர்க்கரை எகிறும். அதுவே எனக்குச் சாப்பிட்டால் ஏறாது. சாப்பிடும் முன்னர் கொஞ்சம் கூட இருக்கிறாப்போல் தெரியும். 110க்குக் கீழே இருக்க வேண்டியது 124 அல்லது 130 என இருக்கும். அதுக்கெல்லாம் நான் கவலைப்படறதே இல்லை.

முருங்கைக்காய்கள் 2

புளி ஒரு எலுமிச்சை அளவு ஊற வைத்து ஒன்றரைக்கிண்ணம் சாறு எடுத்துக் கொள்ளவும்.

சாம்பார்ப் பொடி 2 டீஸ்பூன். (நம்ம வீட்டிலே ரசப்பொடிதான், அதைத் தான் இந்த மாதிரிக் குழம்புகளுக்குப் போடுவோம்.)

உப்பு தேவையான அளவு

தாளிக்க நல்லெண்ணெய் ஒரு குழிக்கரண்டி அல்லது இரண்டு டேபிள் ஸ்பூன்

கடுகு,

கடலைப்பருப்பு, துபருப்பு, உபருப்பு, வெந்தயம் தலா அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் வற்றல் ஒன்று அல்லது இரண்டு

பெருங்காயம் ஒரு சின்னக் கட்டி அல்லது அரை டீஸ்பூன் பவுடர்

கருகப்பிலை ஒரு ஆர்க்கு

அடுப்பில் உருளியை வைத்து அல்லது கடாய் அல்லது நான் ஸ்டிக் பான் ஏதோ ஒண்ணை வைத்து நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் முதலில் பெருங்காயம் கட்டி எனில் போடவும். கூடவே கடுகையும் சேர்க்கவும். கடுகு வெடித்ததும் பருப்புவகைகள், வெந்தயம் சேர்க்கவும். மி.வத்தல், கருகப்பிலை சேர்க்கவும். முருங்கைக்காய்களை நீளவாட்டத்தில் நறுக்கி தாளிதத்தில் சேர்த்து நன்கு பிரட்டிக் கொடுக்கவும். ஒரு இரண்டு நிமிஷம் முருங்கைக்காய்கள் வதங்க வேண்டும். பின்னர் கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை ஊற்றி உப்புச் சேர்த்துக் கொதிக்க விடவும். குழம்பு ஓரளவுக்குக் கெட்டியாகவும் வரும். அதே சமயம் புளிவாசனை, பொடிவாசனை போகக் கொதித்தும் இருக்கும். அப்போது இறக்கி வைக்கவும். அல்லது குழம்பிலிருந்து எண்ணெய் பிரிய ஆரம்பிக்கையில் இறக்கவும். சூடான பருப்பு சாதம் (நெய் ஊற்றியது) அல்லது நெய் ஊற்றிய வெறும் சாதத்தோடு இந்தக் குழம்பைப் பரிமாறவும்.

முருங்கைக்காய்ப் பொரிச்ச குழம்பு

இதற்குத் தான்கள் நிறைய இருந்தால் தான் நன்றாக இருக்கும். நான்கு பேர் என்றால் குறைந்தது நடுத்தர அளவு முருங்கைக்காய் ஏழு, எட்டு அல்லது பத்து வரை தேவை. எல்லாவற்றையும் நீளவாட்டத்தில் நறுக்கிக் கொள்ளவும். ஒரு உருளி அல்லது, கடாயைக் காய வைத்து தே.எண்ணெய் ஊற்றிக் கொண்டு முருங்கைக்காய்களை அதில் போட்டு வதக்கிக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து ஒரு தம்பளர் தண்ணீரில் வேக விடவும். இது ஒருபக்கம் இருக்கட்டும்.

பாசிப்பருப்பு குழைய வேக வைத்தது அரைக்கிண்ணம்

வறுத்து அரைக்க

தே எண்ணெய் இரண்டு டீஸ்பூன்

மிளகு ஒரு டீஸ்பூன், மி.வத்தல் ஒன்று, உளுத்தம்பருப்பு இரண்டு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், பெருங்காயம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக வறுத்து ஆற வைத்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

வெந்து கொண்டிருக்கும் முருங்கைக்காய்களில் காய்கள் நன்கு வெந்ததும் வெந்த பாசிப்பருப்பைச் சேர்த்து அரைத்த விழுதையும் சேர்த்துக் கொதிக்க விடவும். பின்னர் கீழே இறக்கி வைத்து ஒரு இரும்புக்கரண்டியில் தே.எண்ணெய் ஊற்றிச் சூடாக்கிக் கடுகு, உபருப்பு, ஒரு சின்ன மி.வத்தல், கருகப்பிலை தாளித்துக் குழம்பில் ஊற்றவும். தேவையானால் பச்சைக்கொத்துமல்லி ஊற்றிச் சூடான சாதத்தோடு பரிமாறவும்.

முருங்கைக்கீரை

முருங்கைக்கீரையை அடையில் சேர்க்கலாம். பருப்பு உசிலி செய்யலாம். பாசிப்பருப்புச் சேர்த்துத் தேங்காய் போட்டுக் கறி மாதிரிச் செய்யலாம். வெங்காயம் தக்காளி சேர்த்து நெய் ஊற்றி வதக்கலாம். (இதைச் சாதத்தோடு சேர்த்துச் சாப்பிடலாம்.)

முருங்கைக்கீரை அடை:

எப்போதும் அரைக்கிறாப்போல் அடைக்கு அரைத்துக் கொள்ளவும். முருங்கைக்கீரையை ஆய்ந்து நறுக்கிச் சுத்தம் செய்து கழுவி வடிகட்டி வைத்துக் கொள்ளவும். அடை மாவில் இந்த கீரையைச் சேர்க்கவும். தோசைக்கல்லைக் காய வைத்து அடையாக வார்க்கவும். கொஞ்சம் கனமாகவே வரும். முடிந்த வரை மெலிதாக ஆக்கவும். அடை ஒரு பக்கம் வெந்த பின்னர் திருப்பிப் போட்டு வேக வைத்துச் சூடாகப் பரிமாறவும்.

முருங்கைக்கீரைப் பருப்புசிலி

முருங்கைக்கீரையை ஆய்ந்து நறுக்கிச் சுத்தம் செய்து கழுவி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

துவரம்பருப்பு+ கடலைப்பருப்பு இரண்டும் சேர்ந்து ஒன்றரைக்கிண்ணம் ஊற வைக்கவும். இரண்டு மணி நேரம் ஊறினால் போதும். காலை ஒன்பது மணிக்குள் சமைக்கிறாப்போல் இருந்தால் காலை எழுந்ததுமே ஐந்து மணிக்கு ஊற வைக்கலாம். ஏழு மணி ஏழரைமணிக்கெல்லாம் அரைக்க முடியும்.

அரைத்த விழுதை நறுக்கிய முருங்கைக்கீரையோடு சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் இட்லிப்பானையில் ஒரு ஒற்றைத்தட்டில் துணி அல்லது இலையைப் போடவும். இதைப் பழங்காலம் என்போர் ஓட்டைகள் இல்லாத ஒற்றைத் தட்டில் நன்கு ததும்ப எண்ணெய் தடவி முருங்கைக்கீரைக்கலவையை அதில் பரத்தவும். துணி அல்லது இலை போட்டிருந்தால் அவற்றில் பரப்பவும். மூடி வைத்து வேக விடவும். பதினைந்து நிமிஷம் ஆகும் முருங்கைக்கீரை வேக! அதன் பின்னர் வெளியே எடுத்துக் கைகளாலேயே உதிர்க்கலாம்.

வாணலியில் சமையல் எண்ணெய் அல்லது தே.எண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, உளுத்தம்பருப்புத் தாளித்துக் கொண்டு உதிர்த்த கலவையைப் போட்டு நன்கு கிளறவும். உதிர் உதிராக வரும். அதோடு கொஞ்சம் முறுகலாகவும் வர ஆரம்பிக்கும். அப்போது கீழே இறக்கிச் சூடான சாதம், குழம்புடன் பரிமாறவும். இதிலேயே சூடான சாதத்தைப் போட்டுக் கொண்டு நெய் ஊற்றிக் கொண்டு சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும். 

Tuesday, June 13, 2017

உணவே மருந்து! முருங்கை!

இன்னைக்கு முருங்கைக்காய்தான் சாம்பார். அதிலே போட்டும் இன்னும் 2 நாளைக்கு வரும் முருங்கைக்காய்கள்! :) அது போகட்டும். சாம்பாரில் எந்தத் தான் போடுவதாக இருந்தாலும் பூஷணி, பறங்கி, முள்ளங்கி தவிர மற்ற எந்தத் தானாக இருந்தாலும் கொஞ்சம் வதக்கிட்டுச் சேர்த்தால் நிறமும் மாறாது. சுவையும், வாசனையும் கூடும். வெண்டை, முருங்கை, கத்திரி, வெங்காயம், தக்காளி, குடமிளகாய் போன்ற எதுவாக இருந்தாலும் கொஞ்சம் வதக்கிட்டுச் சேர்ப்பேன். இனி முருங்கைக்காய் சாம்பார் செய்முறை எல்லோருக்கும் தெரிந்தது தான் என்றாலும் மீண்டும் ஒரு முறை!

துவரம்பருப்பு அரைக்கிண்ணம் நன்கு குழைய வேக வைத்தது. (நான் கல்சட்டியிலேயே வேகப் போட்டுவிடுவேன்)

புளி ஒரு எலுமிச்சை அளவு ஊற வைத்துக் கரைத்து எடுத்துக் கொண்டது 3 கிண்ணம் அளவு.

உப்பு தேவையான அளவு

சாம்பார்ப் பொடி போடும் வழக்கம் எனில் சாம்பார்ப் பொடி. நான் அரைத்து விடுவேன். அரைத்து விட்டால் தான் எனக்கு அது சாம்பார்! ஆகவே கீழ்க்கண்ட சாமான்களை வறுத்து அரைத்துக் கொள்ள வேண்டும்

சிவப்பு மிளகாய் வற்றல் 2 அல்லது 3

தனியா(கொத்துமல்லி விதை) ஒரு டேபிள் ஸ்பூன்

கடலைப்பருப்பு 2 டீஸ்பூன்

பெருங்காயம் ஒரு துண்டு

வெந்தயம் ஒரு டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன்

வறுக்க எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

சாம்பாரில் போட முருங்கைக்காய்த் தான்கள். குறைந்த பட்சமாக ஒரு முருங்கைக்காயின் தான்கள் தேவைப்படும். அவரவர் வீட்டில் சாப்பிடும் அளவைப் பொறுத்து 2 அல்லது 3 வரை சேர்க்கலாம்.

தாளிக்க எண்ணெய் இரண்டு டீஸ்பூன்

கடுகு அரை டீஸ்பூன், வெந்தயம் அரை டீஸ்பூன், மி.வத்தல் ஒன்று, கருகப்பிலை. கொத்துமல்லி பொடியாக நறுக்கியது இரண்டு டீஸ்பூன்  பச்சை மிளகாய் தேவையான சின்னதாக ஒன்று

சாம்பாரே கெட்டியாக வந்துவிடுவதால் நான் எப்போவுமே மாவு கரைத்து ஊற்றுவதில்லை. மாவு ஊற்றினால் சாம்பாரின் உண்மையான சுவை தெரியாமல் போய்விடும் என்னும் கருத்து எனக்கு! ஆகையால் மாவே விடமாட்டேன். மாவு வேண்டும் என்கிறவர்கள் ஒரு டேபிள் ஸ்பூன் அரிசிமாவை நீர் விட்டுக் கரைத்துத் தனியாக வைத்துக் கொள்ளவும்.

இப்போக் கடாய், உருளி அல்லது கல்சட்டியில் அடியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு முருங்கைக்காய்களைப் போட்டு வதக்கிக் கொள்ளவும்.  இதனுடனேயே பச்சை மிளகாயையும் போட்டு வதக்கிக் கொள்ளலாம். கரைத்து வைத்த புளி ஜலத்தைச் சேர்த்து உப்பும் சேர்க்கவும். சாம்பார்ப் பொடி போடுவதெனில் சாம்பார்ப் பொடி 2 அல்லது 3 டீஸ்பூன் அவரவர் காரத்திற்கு ஏற்பச் சேர்க்கவும். பொடி வாசனை போகக் கொதித்த பின்னர் வெந்த துவரம்பருப்பைச் சேர்க்கவும். சாம்பார் கெட்டியாகவும் இல்லாமல் ரொம்பவே நீர்க்கவும் இல்லாமல் நிதானமாக இருக்கும். இந்நிலையில் அடுப்பில் இன்னொரு பக்கம் இரும்புக் கரண்டி அல்லது சின்ன வாணலியை வைத்துத் தாளிக்க எண்ணெய் ஊற்றவும். கடுகு, வெந்தயம், மிளகாய்வற்றல் சேர்த்துக் கருகப்பிலையைப் போட்டு வதக்கவும். அப்படியே எண்ணெயோடு சாம்பாரில் கொட்டவும். பொடியாக நறுக்கிய கொத்துமல்லியைச் சேர்க்கவும். சாம்பார் நீர்க்க இருக்கும் எனத் தோன்றினால் கரைத்து வைத்துள்ள அரிசி மாவைச் சேர்த்து ஒரு கொதி விடவும். சாம்பார் பரிமாறத் தயார்.

அரைத்து விட்ட சாம்பார்

வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் (தேங்காய் உட்பட) வறுத்து நன்கு அரைத்துக் கொள்ளவும். தானைப் போட்டு வதக்கிப் புளி ஜலம் சேர்த்த பின்னர் உப்புச் சேர்த்துக் கொஞ்ச நேரம் கொதிக்க விடவும். புளி வாசனை போனதும் அரைத்த விழுதையும் வெந்த பருப்பையும் சேர்க்கவும். ஒரு கொதி விடவும். சாம்பார் நிதானமான பக்குவத்தில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு எண்ணெயில் கடுகு, வெந்தயம், மி.வத்தல், பச்சை மிளகாய்(சேர்க்கவில்லை எனில்) கருகப்பிலை சேர்த்து வதக்கி சாம்பாரில் சேர்க்கவும். பச்சைக் கொத்துமல்லியைச் சேர்த்துப் பரிமாறவும். இதுக்குப் பொடியே போட வேண்டாம். 

Monday, June 12, 2017

உணவே மருந்து! முருங்கை!

எல்லா வீட்டிலேயும் முருங்கைக்காயைச் சாதாரணமாக வாங்கிச் சமைக்கலாம். ஆனால் நம்ம வீட்டிலோ கதையே வேறே மாதிரி! முருங்கைக்காயால் எங்க ரெண்டு பேருக்கும் "கத்தி"  யுத்தம் நடக்கும்.  ஏற்கெனவே வாங்கின முருங்கைக்காய் இருக்கும்போதே போன வாரம் மேலும் இரண்டு முருங்கைக்காய்கள் வந்தன. அப்போவே சொல்லிட்டேன். ஏற்கெனவே முருங்கைக்காய்கள் இருக்கு! அதோட 7 ஆம்தேதி சென்னை போயிட்டு 8 ஆம் தேதி தான் திரும்பறோம். இரண்டு நாட்கள் சமையல் கிடையாது என! வந்து உபயோகம் செய்துக்கோனு சொன்னாரா! அப்படியே வைச்சால் கூடு விட்டுக்கும்னு துண்டங்களாக நறுக்கி வைச்சிருந்தேன். கிளம்பும் முதல் நாள் முருங்கைக்காய் போட்டு வெறும் குழம்பு வைத்தேன். பழைய துண்டங்களைத் தான் போட்டிருந்தேன். குழம்பில் தானும் அதிகம் போடக் கூடாது என்பார்! அப்புறமா எப்படிச் செலவு செய்யறது!

இப்போப் பாருங்க ஊரிலேருந்து வந்ததும் வெள்ளிக்கிழமை முருங்கைக்காயில் சாம்பார் செய்தேன், சனியன்று  மறுபடி ஒரு முருங்கைக்காய்! ஏற்கெனவே முருங்கைக்காய்கள் இருக்க, திங்களன்று வாங்கின இரண்டு காய்களின் துண்டங்கள் வேறே காத்திருக்க இன்னும் ஒரு முருங்கைக்காயா? கிட்டத்தட்ட மயக்கம் போடும் நிலைக்கு ஆயிட்டேன்னா பாருங்க! "கத்தி" சண்டை தான்!  அன்னிக்குப் பருப்புருண்டைக் குழம்பு வைச்சதாலே முருங்கைக்காயைப் போட முடியலை! நேற்று மறுபடி முருங்கைக்காய்க் குழம்பு! வேறே காயே மறந்துடுமோனு தோணுது! :))))

விடுங்க, நம்ம ராமாயணம் தீராத ஒன்று! முருங்கைக்காய் நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்து! அதைக் கேட்டதில்/படிச்சதில் இருந்து தான் நம்ம ரங்க்ஸ் முருங்கை மோகராக மாறி விட்டார்! இல்லைனா ஜாஸ்தி வாங்கினதில்லை. பாவம்! எப்படியானும் சர்க்கரை குறையணும்னு ஒரே எண்ணம்! அதோடு வலியையும் குறைக்கும்னு சொல்றாங்களா! அப்புறம் வேறே என்ன வேணும்? முருங்கைப் பூக்கள் கூட சத்து நிறைந்தது என்றும் ஆண்களின் விந்துப் பிரச்னையைச் சீராக்குவதாகவும் தெரிய வருகிறது.  நாக்கில் உணவு சுவைக்காமல் இருந்தால் முருங்கைப் பூவைச் சமைத்துச் சாப்பிடலாம்.

முருங்கை ஈர்க்கு, கருகப்பிலை ஈர்க்கு இரண்டையும் சம அளவில் போட்டு சுமார் பத்துகிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைத்துப் பாதியாகச் சுண்ட விட்டுக் குடித்து வர வேண்டும். வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும். முருங்கைக்கீரையை நெய்யில் வதக்கி உணவு உண்ணும் முன்னர் ஒரு பிடி சாப்பிட்டு வரக் கண் பார்வை தெளிவடையும். கீரையை வேக வைத்தும் சாப்பிடலாம். நெய்யில் வெங்காயம், முருங்கைக்கீரையை வதக்கி மிளகு, ஜீரகம், உப்புச் சேர்த்து சாதத்தோடு சேர்த்தும் சாப்பிடலாம்.  தலைவலிக்கு முருங்கை இலையோடு மிளகைச் சேர்த்து நசுக்கிச் சாறு எடுத்து வலியுள்ள இடத்தில் பற்றாகப் போட்டு வந்தால் குணமாகும்.

முருங்கை மரத்தின் பிசினை எடுத்து உலர வைத்துக் கொண்டு தூளாக்கி அரைத்தேக்கரண்டி பிசினோடு காய்ச்சிய பசும்பாலைக் கலந்து சாப்பிட்டு வர உடலில் தெம்பு ஊறும். உடல் நல்ல பலம் பெறும். வைடமின் ஏ மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும். ரத்த விருத்திக்கும் நல்லது.  பத்திய உணவிலே கூட முருங்கைக்கீரை, காய்கள், பூக்கள் முக்கியமான இடம் பெறுகின்றன. 

Sunday, June 11, 2017

உணவே மருந்து! முருங்கை!

அநேகமாக முருங்கைக்காய் பிடிக்காதவங்க இருக்கமாட்டாங்க. ஆனால் எனக்குப் பிடிக்காது. அதைச் சாப்பிடவே அலுப்பாக இருக்கும். என்றாலும் முருங்கைக்கீரையைச் சமைப்பேன். முருங்கைப் பூவையும் சமைப்பேன். முருங்கைப்பூவைப் பாசிப்பருப்புச் சேர்த்துக் கூட்டுச் செய்யலாம்.முருங்கைக்கீரையையும் நெய் சேர்த்து வெங்காயம், தக்காளி போட்டு வதக்கலாம். அல்லது பாசிப்பருப்புச் சேர்த்துக் கூட்டு, கறி செய்யலாம். எளிதில் ஒடிக்கக் கூடிய கிளைகள் இருப்பதால் இதற்கு முருங்கை என்று பெயர் என்று சொல்கிறார்கள். ஒரே ஒரு பிரச்னை என்னவெனில் முருங்கை மரத்துக்குக் கம்பளிப் பூச்சி வரும் என்பதால் இந்த மரத்தை வளர்க்கையில் அக்கம்பக்கத்தவர் ஆக்ஷேபணை கிளப்புவார்கள். கிளப்பி இருக்கிறார்கள். மரத்தை வெட்டிட்டோம். :)

Image result for முருங்கை


படத்துக்கு நன்றி கூகிளார்

முருங்கை மரம் 30 அடி வரை வளரும். பெரும்பாலும் தென்னிந்தியர்களே இதை அதிகம் சாப்பிட்டு வந்தாலும் இதன் பூர்விகம் இமயமலை அடிவாரம் என்கிறார்கள். வடக்கே ராஜஸ்தானில் நாங்க இருந்தப்போ முருங்கைப் போத்துத் தமிழ்நாட்டிலிருந்து எடுத்துச் சென்று நட்டு வளர்த்தோம். :) பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்காள தேசம், ஃபிலிப்பைன்ஸ், ஆஃப்ரிக்கா ஆகிய நாடுகளிலும் காணப்படுகின்றன. இது அதிகம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில்காணப்பட்டாலும், இலங்கையிலும் உள்ளது.  தாய்லாந்து, தாய்வானிலும் காணப்படுவதாகச் சொல்கின்றனர்.

எல்லாவகை மண்ணிலும் வளரக் கூடிய முருங்கை வறண்ட, நீர்ப்பாசன வசதி குறைவாக உள்ள, வெப்பம் அதிகமான பகுதியிலும் கூட நன்கு வளரக் கூடிய இயல்பு உள்ளது.  இது ஓராண்டுப் பயிர் என்கின்றனர். நட்டு வளர்ந்து ஆறு மாதத்தில் பயன் கொடுக்கும். ஒரு மரத்திற்கு 200 முதல் 300 வரை காய்கள் கிடைக்கலாம்.  மூலிகை மருத்துவத்தில் முருங்கை அதிகம் பயன்படுத்தப் படுகிறது. இதன் இலை சத்து அதிகம் உள்ளது. நஞ்சு எதிர்ப்பு மற்றும்நீர் சுத்திகரிப்புக்குப் பயன்படும்.  இதன் இலைகளில் வைடமின் பி, சி, கே, புரோவிடமின் ஏ எனப்படும் பீட்டா கரோட்டின், மங்கனீசு மற்றும் புரதம் ஆகியவை அடங்கியுள்ளதால் உடல் தெம்புக்கும் சத்தான உணவுக்காகவும் இதைப் பரிந்துரை செய்கின்றனர்.  ரத்தத்தை சுத்திகரித்துக் கிருமிநாசினியாகச் செயல்படுவதால் தோலைப் பளபளப்பாக வைப்பதோடு அல்லாமல் முகப்பருக்கள் வராமல் தடுப்பதாகவும் சொல்கின்றனர். 

Sunday, May 28, 2017

உணவே மருந்து! எலுமிச்சை!

எலுமிச்சை கல்யாண ஊறுகாய்! இதை இரண்டு விதமாய்ப் போடலாம். ஒரு முறை பாரம்பரிய முறை!  எலுமிச்சை அதிகம் கிடைக்கும் நாட்களில் பத்து முதல் இருபத்தைந்து வரையான நடுத்தர அளவு எலுமிச்சம்பழங்களை நாரத்தங்காய் போலச் சுருளாகவோ அல்லது பெரிய துண்டங்களாகவோ நறுக்கிக் கொண்டு விதைகளை நீக்கிவிட்டு உப்பு, பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு ஊற வைக்கவும். பின்னர் அதை வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அவசரமாக ஊறுகாய் தேவைப்படும் சமயங்களில் இந்தக் காய்ந்த எலுமிச்சைத் துண்டங்களைத் தேவையான அளவில் நறுக்கிக்கொண்டு தேவையான அளவு கொதிக்கும் வெந்நீரில் போட்டுச் சிறிது நேரம் வைக்கவும். பின்னர் வாணலியில் நல்லெண்ணெயை நன்கு காய்ச்சிக் கொண்டு, மிளகாய்ப் பொடியை ஊறிக் கொண்டிருக்கும் எலுமிச்சைத் துண்டங்களின் மீது போட்டுக் காய்ச்சிய நல்லெண்ணெயை ஊற்றிக் கடுகு, வெந்தயப்பொடி போட்டுக் கிளறி உடனடியாகப் பரிமாறலாம். இம்மாதிரிக் காய்ந்த நாரத்தங்காயிலும் செய்யலாம்.

இதே இன்னொரு முறையில் எலுமிச்சம்பழங்களைக் கொதிக்கும் வெந்நீரில் வேக வைத்தோ அல்லது குக்கரில் ஒரு விசில் கொடுத்து வேக வைத்தோ எடுத்து ஆற வைத்துக் கொண்டு விதைகளை நீக்கிவிட்டுத் துண்டங்களாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் மேலே சொன்னபடி மிளகாய்ப் பொடியோடு மறக்காமல் உப்புச் சேர்த்து நல்லெண்ணெயைக் காய்ச்சிச் சூடாக ஊற்றிக் கடுகு, வெந்தயப் பொடி கலந்து பரிமாறலாம். இம்முறையில் எலுமிச்சைத் துண்டங்களில் லேசான கசப்புத் தெரியும். ஆனால் அவசரமாகத் தயாரிக்க இது தான் வசதி!

எலுமிச்சைத் தொக்கு! சாறு எடுத்த எலுமிச்சைத் தோல்களை வைத்தும் பண்ணலாம். ஆனால் சாறுள்ள எலுமிச்சையில் செய்வதே நன்றாக இருக்கும். எலுமிச்சம்பழங்களை மேலே சொன்ன மாதிரியில் வெந்நீரில் ஊற வைத்தோ அல்லது வேக வைத்தோ எடுத்துக் கொண்டு விதைகளை நீக்க வேண்டும். பின்னர் நல்லெண்ணெயில் அவற்றை வதக்கிக் கொண்டு மிக்சி ஜாரில் போட்டு நன்கு விழுதாக அரைக்கவேண்டும். அதன் பின்னர் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு தாளித்துக் கொண்டு அரைத்த விழுதைப் போட்டுக்கிளறிக் கொள்ள வேண்டும். கொஞ்சம் கிளறியதும் மிளகாய்த் தூள், உப்பு, மஞ்சள் பொடி சேர்க்கவும். நன்கு கிளறிச் சேர்ந்து வரும் சமயம் கொஞ்சம் சர்க்கரை அல்லது வெல்லத் தூள் சேர்த்துக் கிளறவும். ஆறியதும் ஒரு பாட்டிலில் அல்லது பீங்கான் ஜாடியில் கண்ணாடி ஜாடியில் எடுத்து வைத்துக்கொண்டு பயன்படுத்தவும்.  

எலுமிச்சை இனிப்பு ஊறுகாய்

பத்து எலுமிச்சம்பழங்களை நறுக்கிக் கொண்டு தேவையான உப்பு, மஞ்சள் பொடி, இரண்டு டீஸ்பூன் காரப்பொடி, ஒரு குழிக்கரண்டி வெள்ளைச் சர்க்கரை சேர்த்து நன்கு ஊற வைக்கவும். நல்ல வெயில் காலம் எனில் ஊறுகாயை தினமும் வெயிலில் வைத்து எடுக்கலாம். சர்க்கரைப் பாகு பதத்துக்கு வரும். இம்மாதிரி ஒருவாரம் வைத்து எடுத்த பின்னர் வெறும் வாணலியில் இரண்டு டீஸ்பூன் ஜீரகம், இரண்டு டீஸ்பூன் சோம்பு சேர்த்து வறுத்து மிக்சி ஜாரில் பொடித்துக் கொண்டு ஊறுகாயில் சேர்க்கவும். கடுகு எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் கடுகு தாளிக்கவும். சப்பாத்திக்கு இந்த ஊறுகாய் நல்ல துணையாக இருக்கும்.

Wednesday, April 19, 2017

உணவே மருந்து! எலுமிச்சை!

எலுமிச்சை ஊறுகாய்! முதலில் எலுமிச்சைக்கு உப்பு மட்டும் போட்டு ஊறுகாய் போடுவோம். அதற்குத் தேவையான பொருட்கள்.

எலுமிச்சை நடுத்தர அளவில் 10

உப்பு  ஒரு பெரிய குழிக்கரண்டி

மஞ்சள் பொடி  மூன்று டீஸ்பூன்

பெருங்காயப் பொடி அல்லது கட்டிப் பெருங்காயம் ஒரு துண்டு

இஞ்சி 50 கிராம்

பச்சை மிளகாய் 50 கிராம்

வெந்தயம்  ஒரு டேபிள் ஸ்பூன்

தாளிக்க நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு

எலுமிச்சம்பழத்தைத் துண்டாக நறுக்கிக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்க்கவும். கூடவே இஞ்சி தோலைச் சீவிக் கொண்டு, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். எலுமிச்சை நல்ல புளிப்பான பழமாக இருந்தால் 50 கிராம் இஞ்சியும், 50 கிராம் பச்சை மிளகாயும் தேவைப்படும். இல்லை எனில் பழத்தின் அளவுக்கும் புளிப்புக்கும் ஏற்றவாறு கூட்டியோ குறைத்தோ சேர்க்கலாம். இதை இரண்டு, மூன்று நாட்கள் ஊற வைக்கவும். வெந்தயம் ஊறினால் பிடிக்கும் எனில் எலுமிச்சையை நறுக்கிச் சேர்க்கையிலேயே வெந்தயத்தையும் சேர்த்துடலாம். இல்லை எனில் ஊறுகாய் ஊறிய பின்னர் நல்லெண்ணெயில் கடுகு தாளிக்கையில் வெந்தயத்தையும் தாளித்துச் சேர்க்கலாம். குழம்பு சாதம், ரசம் சாதம், சப்பாத்தி, மோர் சாதம் போன்ற எல்லாவற்றுக்கும் இது நல்ல துணை. முக்கியமாய் வற்றல் குழம்பு சாதத்துக்கு!


எலுமிச்சைக் கார ஊறுகாய்

பத்து நடுத்தர அளவு எலுமிச்சம்பழம்

உப்பு தேவையான அளவு

பெருங்காயப் பொடி அல்லது கட்டிப் பெருங்காயம்

மிளகாய்த் தூள் ஒரு டேபிள் ஸ்பூன்

மஞ்சள் பொடி இரண்டு டீஸ்பூன்

நல்லெண்ணெய்  100 கிராம் அல்லது இரண்டு குழிக்கரண்டி

கடுகு

முதலில் எலுமிச்சையை நன்கு நறுக்கி உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி சேர்த்து நான்கு அல்லது ஐந்து நாட்கள் ஊற வைக்கவும். நறுக்கிய துண்டத்தை எடுத்துப் பார்த்தால் கைக்கு மிருதுவாக ஊறி இருப்பது தெரிய வரும். அப்போது அதில் மிளகாய்ப் பொடியைச் சேர்த்துக் கலக்கவும். ஒரு வாணலியில் நல்லெண்ணெயைக் காய வைத்துக் கடுகைப் போட்டு வெடிக்க விடவும். எண்ணெயை ஆறிய பின்னர் ஊறுகாயில் ஊற்றிக் கலந்து பாட்டிலில் எடுத்து வைக்கவும். ஊறுகாய்களைக் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது அவ்வளவு சரியில்லை. ஊறுகாய்கள் வெளியேயே இருக்க வேண்டும். தினம் தினம் எடுத்துப் பார்த்து ஒரு மரக்கரண்டியால் அல்லது நீளமான கரண்டியால் கிளறி விட வேண்டும்.

Tuesday, March 21, 2017

உணவே மருந்து! எலுமிச்சை!

எலுமிச்சை ரசம்: தேவையான பொருட்கள்.

நான்கு பேருக்கு

ஒரு நடுத்தர அளவிலான எலுமிச்சை ஒன்று

துவரம்பருப்பு அல்லது பாசிப்பருப்புக் குழைய வேக வைத்தது (மஞ்சள் பொடி சேர்த்து) அரைக்கிண்ணம்

தக்காளி (நாட்டுத் தக்காளி தான் நன்றாக இருக்கும்.) நடுத்தர அளவிலானது எனில் 2 அல்லது 3, பெரிது எனில் ஒன்று போதும். (இங்கே அம்பேரிக்காவில் தக்காளி ஒன்று ஆப்பிள் சைசுக்கு இருக்கு, ஆகவே பாதி தான் போடுவேன். நேத்தித் தான் எலுமிச்சை ரசம் வைச்சேன், படம் எடுக்கலை!)

பச்சை மிளகாய் காரம் அதிகம் இல்லை எனில் இரண்டு! காரம் அதிகம் இருந்தால் பாதி போதும்.

ரசப்பொடி  ஒன்றரை டீஸ்பூன், மிளகு, ஜீரகப் பொடி அரை டீஸ்பூன்

பெருங்காயம் ஒரு கட்டி அல்லது அரை டீஸ்பூன் பவுடர்

பொடி போடுவதற்கு பதிலாக மி.வத்தல், கொ.விதை, துபருப்பு, மிளகு, ஜீரகம் வறுத்துக் கொண்டு பொடி செய்து கீழே இறக்கும்போது போடலாம். 

உப்பு தேவைக்கு ஏற்ப

கருகப்பிலை(தேவையானால்) கொத்துமல்லி

தாளிக்க நெய் ஒரு டீஸ்பூன், கடுகு, ஜீரகம்

துவரம்பருப்பு அல்லது பாசிப்பருப்பை மஞ்சள் பொடி சேர்த்துக் குழைய வேக வைத்துக் கொண்டு அதிலே தக்காளி,பச்சை மிளகாய், ரசப்பொடி, பெருங்காயம், உப்புச் சேர்த்துத் தேவையான அளவு நீர் விட்டுக் கொதிக்க விடவும். தக்காளி நன்கு குழைந்து உருத்தெரியாமல் ஆனதும். தேவைக்கு ஏற்ப ரசத்தை நீர் விட்டு விளாவவும். தக்காளியை முதலில் வேக வைத்துக் கொண்டு பின்னர் பருப்பு ஜலம் விட்டும் கொதிக்க விடலாம். அல்லது தக்காளியை மிக்சி ஜாரில் போட்டு அடித்துக் கொண்டு அந்தச் சாறோடு பருப்பு ஜலம் சேர்த்தும் பொடி, உப்பு, பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்த்துக் கொதிக்க விடலாம்.

கருகப்பிலை, கொத்துமல்லியைக் கொதிக்கும்போதே போடப் பிடித்தால் போடலாம். அல்லது ரசம் விளாவிய பின்னர் போட்டு நுரைத்து வந்ததும் கீழே இறக்கி நெய்யில் கடுகு, ஜீரகம் தாளித்துக் கொண்டு எலுமிச்சைச் சாறைச் சேர்க்கவும். எலுமிச்சைச் சாறைச் சேர்த்ததும் ரசத்தைச் சூடு செய்யக் கூடாது.

எலுமிச்சைச் சாதம்

தேவையான பொருட்கள்

சமைத்த சாதம் உதிர் உதிராக இரண்டு கிண்ணம்

எலுமிச்சை நல்ல சாறுள்ளது எனில் பெரிதாக ஒன்று போதும். இல்லை எனில் இரண்டு தேவை.

தாளிக்க நல்லெண்ணெயே இதற்கு நன்றாக இருக்கும்.

நல்லெண்ணெய் ஒரு குழிக்கரண்டி

கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை ஆகியவை தாளிக்கலாம்.

பச்சைமிளகாய் அவரவர் காரத்திற்கு ஏற்றாற்போல் 2 அல்லது மூன்று.

கருகப்பிலை

பெருங்காயத் தூள்

மஞ்சள் பொடி

உப்பு தேவைக்கு.

சமைத்த சாதத்தில் எலுமிச்சைச்சாறு,  உப்பு, நல்லெண்ணெய் அரைக்கரண்டி, மஞ்சள் தூள், பெருங்காயப் பொடி சேர்த்துக் கலந்து வைக்கவும். மீதமுள்ள எண்ணெயைச் சூடு பண்ணித் தாளிக்கும் பொருட்களை வரிசையாகச் சேர்த்துக் கடைசியில் பச்சைமிளகாய், கருகப்பிலை சேர்த்துக் கொண்டு சாதத்தில் கொட்டிக் கலக்கவும்.  சற்று நேரம் எல்லாவற்றையும் நன்கு கலக்கவும். பின்பு பரிமாறவும்.