எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, June 13, 2017

உணவே மருந்து! முருங்கை!

இன்னைக்கு முருங்கைக்காய்தான் சாம்பார். அதிலே போட்டும் இன்னும் 2 நாளைக்கு வரும் முருங்கைக்காய்கள்! :) அது போகட்டும். சாம்பாரில் எந்தத் தான் போடுவதாக இருந்தாலும் பூஷணி, பறங்கி, முள்ளங்கி தவிர மற்ற எந்தத் தானாக இருந்தாலும் கொஞ்சம் வதக்கிட்டுச் சேர்த்தால் நிறமும் மாறாது. சுவையும், வாசனையும் கூடும். வெண்டை, முருங்கை, கத்திரி, வெங்காயம், தக்காளி, குடமிளகாய் போன்ற எதுவாக இருந்தாலும் கொஞ்சம் வதக்கிட்டுச் சேர்ப்பேன். இனி முருங்கைக்காய் சாம்பார் செய்முறை எல்லோருக்கும் தெரிந்தது தான் என்றாலும் மீண்டும் ஒரு முறை!

துவரம்பருப்பு அரைக்கிண்ணம் நன்கு குழைய வேக வைத்தது. (நான் கல்சட்டியிலேயே வேகப் போட்டுவிடுவேன்)

புளி ஒரு எலுமிச்சை அளவு ஊற வைத்துக் கரைத்து எடுத்துக் கொண்டது 3 கிண்ணம் அளவு.

உப்பு தேவையான அளவு

சாம்பார்ப் பொடி போடும் வழக்கம் எனில் சாம்பார்ப் பொடி. நான் அரைத்து விடுவேன். அரைத்து விட்டால் தான் எனக்கு அது சாம்பார்! ஆகவே கீழ்க்கண்ட சாமான்களை வறுத்து அரைத்துக் கொள்ள வேண்டும்

சிவப்பு மிளகாய் வற்றல் 2 அல்லது 3

தனியா(கொத்துமல்லி விதை) ஒரு டேபிள் ஸ்பூன்

கடலைப்பருப்பு 2 டீஸ்பூன்

பெருங்காயம் ஒரு துண்டு

வெந்தயம் ஒரு டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன்

வறுக்க எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

சாம்பாரில் போட முருங்கைக்காய்த் தான்கள். குறைந்த பட்சமாக ஒரு முருங்கைக்காயின் தான்கள் தேவைப்படும். அவரவர் வீட்டில் சாப்பிடும் அளவைப் பொறுத்து 2 அல்லது 3 வரை சேர்க்கலாம்.

தாளிக்க எண்ணெய் இரண்டு டீஸ்பூன்

கடுகு அரை டீஸ்பூன், வெந்தயம் அரை டீஸ்பூன், மி.வத்தல் ஒன்று, கருகப்பிலை. கொத்துமல்லி பொடியாக நறுக்கியது இரண்டு டீஸ்பூன்  பச்சை மிளகாய் தேவையான சின்னதாக ஒன்று

சாம்பாரே கெட்டியாக வந்துவிடுவதால் நான் எப்போவுமே மாவு கரைத்து ஊற்றுவதில்லை. மாவு ஊற்றினால் சாம்பாரின் உண்மையான சுவை தெரியாமல் போய்விடும் என்னும் கருத்து எனக்கு! ஆகையால் மாவே விடமாட்டேன். மாவு வேண்டும் என்கிறவர்கள் ஒரு டேபிள் ஸ்பூன் அரிசிமாவை நீர் விட்டுக் கரைத்துத் தனியாக வைத்துக் கொள்ளவும்.

இப்போக் கடாய், உருளி அல்லது கல்சட்டியில் அடியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு முருங்கைக்காய்களைப் போட்டு வதக்கிக் கொள்ளவும்.  இதனுடனேயே பச்சை மிளகாயையும் போட்டு வதக்கிக் கொள்ளலாம். கரைத்து வைத்த புளி ஜலத்தைச் சேர்த்து உப்பும் சேர்க்கவும். சாம்பார்ப் பொடி போடுவதெனில் சாம்பார்ப் பொடி 2 அல்லது 3 டீஸ்பூன் அவரவர் காரத்திற்கு ஏற்பச் சேர்க்கவும். பொடி வாசனை போகக் கொதித்த பின்னர் வெந்த துவரம்பருப்பைச் சேர்க்கவும். சாம்பார் கெட்டியாகவும் இல்லாமல் ரொம்பவே நீர்க்கவும் இல்லாமல் நிதானமாக இருக்கும். இந்நிலையில் அடுப்பில் இன்னொரு பக்கம் இரும்புக் கரண்டி அல்லது சின்ன வாணலியை வைத்துத் தாளிக்க எண்ணெய் ஊற்றவும். கடுகு, வெந்தயம், மிளகாய்வற்றல் சேர்த்துக் கருகப்பிலையைப் போட்டு வதக்கவும். அப்படியே எண்ணெயோடு சாம்பாரில் கொட்டவும். பொடியாக நறுக்கிய கொத்துமல்லியைச் சேர்க்கவும். சாம்பார் நீர்க்க இருக்கும் எனத் தோன்றினால் கரைத்து வைத்துள்ள அரிசி மாவைச் சேர்த்து ஒரு கொதி விடவும். சாம்பார் பரிமாறத் தயார்.

அரைத்து விட்ட சாம்பார்

வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் (தேங்காய் உட்பட) வறுத்து நன்கு அரைத்துக் கொள்ளவும். தானைப் போட்டு வதக்கிப் புளி ஜலம் சேர்த்த பின்னர் உப்புச் சேர்த்துக் கொஞ்ச நேரம் கொதிக்க விடவும். புளி வாசனை போனதும் அரைத்த விழுதையும் வெந்த பருப்பையும் சேர்க்கவும். ஒரு கொதி விடவும். சாம்பார் நிதானமான பக்குவத்தில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு எண்ணெயில் கடுகு, வெந்தயம், மி.வத்தல், பச்சை மிளகாய்(சேர்க்கவில்லை எனில்) கருகப்பிலை சேர்த்து வதக்கி சாம்பாரில் சேர்க்கவும். பச்சைக் கொத்துமல்லியைச் சேர்த்துப் பரிமாறவும். இதுக்குப் பொடியே போட வேண்டாம். 

10 comments:

 1. இதைச் செய்துபார்க்கிறேன். (அரைத்துவிட்ட சாம்பார்) என்ன முருங்கைக்காய்க்குப் பதிலா வேற சேக்கவேண்டியதுதான். இதுவரை பரங்கிக்காய் உபயோகப்படுத்தியதில்லை. அது ALLOWED. என் ஹஸ்பண்ட் ஒண்ணும் சொல்லமாட்டா.

  ReplyDelete
  Replies
  1. முள்ளங்கி, வெங்காயம், வெள்ளைப் பூசணி, பறங்கி(பச்சையாக இருந்தால் நல்லது) போன்றவற்றில் செய்யலாம். எதுக்கும் உங்க ஹஸ்பென்டையும் கேட்டுடுங்க! :)

   Delete
 2. பரங்கியா, பறங்கியா?!!

  நான் வெந்தயக் குழம்புக்கு மட்டும்தான் முன்னதாக வதக்கிட்டு சேர்ப்பேன். அல்லது சேர்ப்போம்!

  துப குக்கரில்தான். கல் சட்டி கிடையாது. மேலும் பாத்திரத்தில் போட்டு வேகவைத்தால் கேஸுக்குப் (Gas) பிடித்த கேடு! நானும் மாவு கரைத்து ஊற்றுவதில்லை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், முந்தைய பதிவில் ஆளையே காணோமே! நெ.த. மட்டும் தான் வந்திருந்தார்! :) உங்களைப் போல் பலர் நினைக்கின்றனர். வெண்கலப்பானை, கல்சட்டி, இரும்புச் சட்டி போன்றவை பயன்படுத்தினால் எரிவாயு தீரும்னு! தீராது என உறுதிபடச் சொல்கிறேன். :) முன்னரும், இப்போதும், எப்போதுமே பொங்கல், அரிசி உப்புமா போன்றவை வெண்கலப் பானை, உருளி போன்றவற்றில் தான். சாதம் கூட அதற்கென ஓர் எவர்சில்வர் பாத்திரத்தில் போட்டு நேரிடையாக வைக்கிறேன். குக்கரில் இல்லை. குக்கரில் சமைப்பது அவ்வளவு பிடிக்கிறதில்லை. ருசியும் குறைகிறது.

   Delete
 3. ஒரே மாதிரி தலைப்பு வைக்கிறீர்கள். அதனால் வரும் குழப்பம்!

  ReplyDelete
  Replies
  1. ஹெஹெஹெ, எண்கள் கொடுத்துக் கொண்டு இருந்தேன். அப்புறமா என்னமோ கொடுக்காமலேயே போட்டுட்டு வரேன். :)

   Delete
 4. ஸ்ரீராம்... இதை நான் வழிமொழிகிறேன். ஆமாம், படித்த தலைப்பு ஏன் இப்போ எங்கள் பிளாக்கில் திரும்பவும் மேலே வருகிறது (அதாவது புதிய பதிப்பு போல) என்று யோசித்தேன். எதுக்கும் பார்க்கலாம் என்றுதான் மீண்டும் இங்கு வந்தேன். கீதா மேடம், 1, 2 என்று கடைசியில் சேர்க்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி,மேலே வந்தால் அது புதுசு என்றறிக! எண்கள் கொடுக்கணும்தான்! என்னமோ தோன்றுவதில்லை! :)

   Delete
 5. "2 நாளைக்கு வரும் முருங்கைக்காய்கள்!" - வீட்டுல சமையலுக்கா அல்லது இடுகைகளாகவா? திடும் என்று சந்தேகம் வந்துவிட்டது. இன்னும் வேறு என்ன என்ன முருங்கைக்காய்களை வைத்துச் செய்யச் சொல்லப்போகிறீர்களோ என்று. :(

  ReplyDelete
  Replies
  1. முருங்கைக்காய்க் குழம்பு இருக்கே! முருங்கைக்காய்ப் பொரிச்ச குழம்பு வேறே இருக்கு! :)

   Delete