எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, October 8, 2019

பாரம்பரியச் சமையலில் கொள்ளு ரசம், முருங்கை இலை ரசம் வகைகள்!

ரச வகைகளில் அடுத்து நாம் பார்க்கப் போவது கொள்ளு ரசம். கொள்ளை ஊற வைத்து வேக வைத்தும் ரசம் வைக்கலாம். அல்லது கொள்ளை வறுத்து மிளகு, ஜீரகத்தோடு பொடித்துக் கொண்டும் ரசம் வைக்கலாம். எங்களுக்குக் கொள்ளு ஒத்துக்கொள்ளுவது இல்லை. முன்னால் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். இப்போக் கொள்ளு, கண்டந்திப்பிலி, பிரண்டை, பூண்டு போன்றவை ஒத்துக்கொள்வதில்லை. என்றாலும் ரசம் வைத்திருக்கேன். கொள்ளை ஊற வைத்து முளைக்கட்டிச் சுண்டல் செய்திருக்கேன். நன்றாக இருக்கும். உடல் இளைக்கக் கொள்ளை விடச்சிறந்த தானியம் இல்லை. இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளு என்பார்கள். தினம் ஏதேனும் ஓர் முறையில் கொள்ளைச் சேர்த்து வந்தால் கட்டாயமாய் உடல் இளைக்கும். சாம்பாருக்கு வேகவிடும் பருப்பில் பாதிக்குப் பாதிக் கொள்ளைப் போட்டும் செய்யலாம். இதோடு வெந்தயத்தையும் சேர்த்துச் சாம்பார் செய்தால் நன்றாக இருக்கும்.

Image result for கொள்ளு

கொள்ளு ரசம் 1 தேவையான பொருட்கள் புளி ஓர் எலுமிச்சை அளவுக்கு, ரசப்பொடி ஒரு டீஸ்பூன், உப்பு தேவைக்கு, பெருங்காயம் சிறிதளவுக்கு, தக்காளி தேவையானால் சின்னதாக ஒன்று, பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு, மிளகு, ஜீரகம், கருகப்பிலை ஊற வைத்துக்கொண்டு அதோடு கொள்ளையும் சேர்த்து ஊற வைக்கவும். ஜீரக ரசத்துக்குத் துவரம்பருப்பு ஊற வைப்போம். அதற்கு மாற்றாக இங்கே கொள்ளு.  அல்லது ஊறிய கொள்ளைத் துவரம் பருப்பு வேக வைப்பது போல் வேக வைத்துக்கொண்டு மிளகு ஜீரகம் கருகப்பிலையோடு சேர்த்து அரைத்தும் விடலாம். இது அவரவர் ருசிக்கு ஏற்பச் செய்து கொள்ளவும்.

புளி ஜலத்தை உப்பு, ரசப்பொடி, தக்காளி, பெருங்காயம் சேர்த்துக் கொதிக்கவிடவும். புளி வாசனை போகக் கொதித்ததும் ஊற வைத்திருந்த பொருட்களைக் கொரகொரவென அரைத்துக் கொண்டு ரசத்தில் விட்டு விளாவவும். ரசம் கொதித்து வந்ததும் கீழே இறக்கி நெய்யில் கடுகு, ஜீரகம் தாளித்துக்கொண்டு கருகப்பிலை, கொத்துமல்லி தூவவும்.

இதே வேக வைத்த கொள்ளு என்றால் வேக வைத்த பருப்பை அப்படியே ரசத்தில் போட்டால் அடியில் தங்கிவிடும். பின்னர் அடியில் இருப்பதைத் தூரக் கொட்டி விட்டால் கொள்ளுச் சேர்த்ததின் பலன் தெரியாது. ஆகவே மிளகு, ஜீரகம், கருகப்பிலையைப் பச்சையாக எடுத்துக்கொண்டு வெக வைத்த கொள்ளையும் சேர்த்து மிக்சியில் ஒன்றிரண்டாக அரைத்து ரசத்தில் விடவும். இம்முறையில் கொள்ளு நன்கு மசிந்து விடும் என்பதால் உடம்பில் சேரும்.

வறுத்து அரைத்த கொள்ளு ரசம் 2. தேவையான பொருட்கள்.

புளி சின்ன எலுமிச்சை அளவு எடுத்து நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும். உப்பு, தேவைக்கு, பெருங்காயம் சின்னத் துண்டு. தக்காளி தேவையானால். ரசப்பொடி சேர்த்தால் மி.வத்தல் வறுக்க வேண்டாம். இல்லை எனில் மி.வத்தல் ஒன்று, மிளகு ஒரு டீஸ்பூன், ஜீரகம் பச்சையாக, கொள்ளு இரண்டு டீஸ்பூன், கருகப்பிலை ஆகியவற்றை எண்ணெயில் சிவக்க வறுக்கவும். ரசப்பொடி சேர்த்தால் மி.வத்தல் இல்லாமல் மற்றவற்றை வறுத்துக்கொள்ளவும். புளி ஜலத்தில் முன் சொன்னமாதிரி உப்பு, பெருங்காயம் சேர்த்துத் தக்காளி போட்டால் அதையும் பொடியாக நறுக்கிச் சேர்த்துப் புளி வாசனை போகக் கொதிக்கவிடவும். வறுத்த பொருட்களைக் கொஞ்சம் நீர் சேர்த்து ரொம்பக் கொரகொரவென இல்லாமல் கொஞ்சம் நிதானமான கொரகொரப்பில் அரைத்துக் கொள்ளவும். விளாவத் தேவையான நீர் விட்டுக் கரைத்துக் கொண்டு புளி வாசனை போகக் கொதித்த ரசத்தில் விட்டு விளாவவும். நுரைத்து வந்ததும் கீழே இறக்கி நெய்யில் கடுகு, மி.வத்தல், கருகப்பிலை தாளிக்கவும். இந்த ரசத்துக்குக் கொத்துமல்லி தேவை இல்லை. பிடித்தால் போடலாம். தப்பில்லை.

ரேவதி முருங்கை இலை ரசம் கேட்டிருந்தார். நான் ரசமாகச் செய்தது இல்லை. ஆனால் சூப் மாதிரி நிறைய வைத்துச் சாப்பிட்டிருக்கோம். அதற்குத் தேவையான பொருட்கள்.

Image result for முருங்கை இலை

இளம் முருங்கை இலை இரண்டு கைப்பிடி, நன்கு ஆய்ந்து அலம்பிக்கொண்டு நறுக்கி வைக்கவும்.

இதற்கு நான் புளி சேர்த்தது இல்லை. நன்கு பழுத்த தக்காளி இரண்டு வெந்நீரில் போட்டுச் சாறு எடுத்து வைத்துக்கொள்ளவும்.

உப்பு தேவைக்கு, பெருங்காயம் சிறிதளவு, மிளகு இரண்டு டீஸ்பூன், ஜீரகம் இரண்டு டீஸ்பூன் இரண்டையும் வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். மஞ்சள் பொடி தேவையானால் கால் டீஸ்பூன்.

வதக்க நெய் இரண்டு டீஸ்பூன், வெண்ணெய் மேலே போட இரண்டு டீஸ்பூன், கொத்துமல்லித் தழை, புதினாத்தழை(பிடித்தமானால்(

வாணலியில் அல்லது அடிகனமான பாத்திரத்தில் நெய்யை ஊற்றிக்கொண்டு பொடியாக நறுக்கிய முருங்கை இலைகளைப் போட்டு நன்கு வதக்க வேண்டும். சுருள வதங்கும். வதங்கிய பின்னர் எடுத்து வைத்திருக்கும் தக்காளிச் சாறைச் சேர்க்கவும். உப்பு, பெருங்காயம், மஞ்சள் பொடி சேர்க்கவும். நன்கு கொதிக்கட்டும். சேர்ந்து வரும்போது தேவையான நீரைச் சேர்த்துக் கொண்டு வறுத்துப் பொடித்திருக்கும் மிளகு, ஜீரகப் பொடியைப் போட்டுக் கீழே இறக்கி வெண்ணெய் இரண்டு டீஸ்பூன் சேர்க்கவும். கொத்துமல்லித் தழை, புதினாத் தழை சேர்த்துக் குடிக்கலாம். இலைகளை வடிகட்டாமல் சாப்பிட்டால்/குடித்தால் நல்லது . பிடிக்கவில்லை எனில் வடிகட்டிக் கொண்டு அதன் மேல் வெண்ணெய் சேர்த்துக் கொத்துமல்லி, புதினா தூவிச் சாப்பிடலாம். இதைச் சாப்பிடுவதற்கு அரை மணி முன்னால் சாப்பிட்டு வந்தால் நல்லது. ஸ்ரீரங்கத்தில் இருந்தவரை அடிக்கடி/சொல்லப் போனால் தினம் தினம் செய்து சாப்பிட்டு வந்தோம்.

இத்துடன் ரச வகைகள் முடிந்தன. அடுத்துக் காய் வகைகளில் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

13 comments:

  1. கொள்ளு ரசம் முன்னர் செய்து சாப்பிட்டிருக்கிறோம்.  பிழைப்பதற்காக வேண்டி கொள்ளுப்பொடி செய்து சாப்பிட்டுப் பார்த்து, வாசனை, ருசி பிடிக்காமல்நிறுத்தி விட்டேன்.  கொள்ளு ரசம் தொடரலாமா என்று யோசனை.  இல்லை சாம்பார்ப்பொடியோடு அவ்வப்போது சேர்த்து அரைத்து விடலாமோ!

    ReplyDelete
    Replies
    1. சாம்பார்ப் பொடியோடும் சேர்த்துப் போட்டுக்கலாம். உங்களுக்குக் கொள்ளு பிடிக்கும் எனில் தாராளமாகச் சேர்க்கலாம்.

      Delete
    2. இளைப்பதற்கு வேண்டி - தவறாக பிழைப்பதற்கு வேண்டி என்று வந்திருக்கு

      Delete
  2. முருங்கை இலை சூப் கவர்கிறது.  செய்ததில்லை.  வாசலிலேயே முருங்கை மரம்.  ஆனால் நாங்கள் முருங்கை இலை அவ்வளவு உபயோகிப்பது இல்லை. 

    ReplyDelete
    Replies
    1. மிளகு பொடி தூக்கலாக இருக்கலாம் சூப்பில்! தனி மிளகு பொடி மட்டும் கூடப் போட்டுப் பண்ணலாம்.

      Delete
    2. @ஸ்ரீராம்.. நீங்களும் உபயோகிப்பதில்லை. அப்புறம் யார் பறித்துக்கொண்டு போனால் என்ன?

      Delete
  3. முருங்கை இலை உடலுக்கு அவ்வளவு நல்லது. நான் அடை, வடை, முருங்கைக்கீரைச் சுண்டல், பொரிச்ச குழம்பு, பருப்பு உசிலி என்று பண்ணுவதோடு முருங்கைக்கீரையை நன்கு வதக்கி சாம்பாரில் போடலாம். முருங்கைக்கீரைப் பருப்புக் குழம்பு நன்றாக இருக்கும். முருங்கைக்காய் போட்ட மாதிரியே வாசனை ஊரைத் தூக்கும்.

    ReplyDelete
  4. அன்பு கீதா மா,
    இங்கே பெண் முருங்கை இலையோடுதான் சாப்பாடு என்று வைத்திருக்கிறாள்.
    நிறையக் கிடைக்கிறதே. நான் வறுத்துக் கொண்டு சாப்பிடுவேன். நீங்கள் சொன்ன செய்முறையை அவளிடம் சொல்கிறேன்.
    நல்ல வாசனையாக இருக்கும். முன்பு வெண்ணெய்க் காய்ச்சும்போது
    முருங்கை இலை போட்டு இறக்குவது வழக்கம்.

    கொள்ளு ரசம் ஒத்துக்குமான்னு தெரியலை.
    ஒரு நாள் செய்து பார்க்கிறேன். மிக மிக நன்றி மா.

    @ ஸ்ரீராம் ,,,,வாசல்ல முருங்கை மரமா. பார்த்தும்மா:)

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, முருங்கை இலை இங்கே அவ்வளவாய்க் கிடைப்பதில்லை. ஸ்ரீரங்கத்தில் வேலை செய்யும் பெண் முருங்கைக்காய், முருங்கை இலை கொண்டு வந்து கொடுப்பாள். இல்லைனாலும் காய்கறிச் சந்தையில் நிறையக் கிடைக்கும். சென்னையில் வீட்டில் வாசலில் முருங்கை மரமே இருந்தது. போறவங்க, வரவங்க எல்லாம் பறித்துக்கொண்டு போவாங்க. இலை ரொம்பவே நன்றாக இருந்தது. பின்னால் பக்கத்து வீட்டுக்காரங்க புகார் செய்ததால் வெட்டி விட்டோம்.

      Delete
  5. முருங்கைக்கீரை கொஞ்சம் கசக்குமோ? பெண்ணுக்காக நாங்கள் சில முறை அந்தக் கீரை சாப்பிட்டிருக்கோம். ஆனால் ரசம்.... செய்ததே இல்லை.

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத் தமிழரே, எங்களுக்குப் பிடித்தது. ஆகையால் சாப்பிடுகிறோம். கசப்பெல்லாம் தெரியலை. மெந்தயக்கீரையே சாம்பாரில் போடுவேன். சப்பாத்தி பண்ணுவேன். உருளைக்கிழங்கோடு சேர்த்து சப்பாத்திக்கு சப்ஜிசெய்வேன். அதை விட முருங்கைக்கீரை கசப்பெல்லாம் இல்லை.

      Delete
    2. நெல்லை முருங்கைக் கீரை அடைல எதுல போட்ட்டு செஞ்சாலும் நல்லாருக்கும்...கீதாக்கா சொல்லிருப்பது போல வெந்தயக் கீரை நானும் அப்படிச் செய்வேன் உசிலியும் கூட செம டேஸ்டியா இருக்கும்...மு கீ உசிலியும் நல்லாருக்கும்

      கீதா

      Delete
  6. கொள்ளு ரசம் நிறைய வகைகளில் செய்வதுண்டு கீதாக்கா...கொள்ளு சாம்பார் கூடச் செய்தாச்சு..

    முருங்கை இலை சூப் செய்திருக்கேன்...இப்படித்தான் ஆனால் ஜீரகம் போடாமல் பூண்டு போட்டு இதே தான்..

    இப்ப உங்க முறை நோட்டட். இப்படியே ஜீரகம் போட்டு ரசமாகவும் செய்துடலாம் போல...முருங்கை இலையை நெய்யில் வதக்கி சேர்த்து!! கொஞ்சம் புளி போட்டு...செய்துவிட்டால் போச்சு....

    நோட்டட் அக்கா

    கீதா

    ReplyDelete