எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, October 19, 2019

பாரம்பரியச் சமையலில் கத்திரிக்காயில் கறி வகைகள்

கத்திரிக்காய்க் கல்யாணக்கறி இரு வகையில் பண்ணலாம். இரண்டுமே வேகவிட்டுக் கொட்டிக்கொண்டு பண்ணுவது தான். ஒன்றில் பொடி வறுத்துச் சேர்க்க வேண்டும். இன்னொன்றில் தாளிதத்தில் பச்சைமிளகாய், இஞ்சி, தேங்காய்த்துருவல் சேர்த்துப் பண்ண வேண்டும். இரண்டிற்கும் வெள்ளைக்கத்திரிக்காய், பச்சைக்கத்திரிக்காய் இருந்தால் நன்றாக இருக்கும். வேகவிட்டால் இவை இரண்டும் அதிகம் குழையாது. நீலக் கத்திரிக்காய் சில/பல சமயங்களிலும் குழைந்து விடும். அப்படி வெள்ளையோ, பச்சையோ கிடைக்காத பட்சத்தில் கோடு போட்ட நீலக்கத்திரிக்காய் கொஞ்சம் கெட்டியாக இருக்கும். வேலூர்க் கத்திரிக்காயும் நன்றாக இருக்கும். ஆகவே இவை எதிலாவது பண்ணலாம்.

தேவையான பொருட்கள்: கத்திரிக்காய் அரைக்கிலோ.புளி ஜலம் நீர்க்க எடுத்துக்கொள்ள வேண்டும். சின்ன நெல்லிக்காய் அளவுக்குப் புளியை எடுத்துக்கொண்டு நீர்க்கக் கரைத்துக்கொள்ளவும். உப்பு தேவைக்கு, மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்.
வறுத்துப் பொடிக்க: மிளகாய் வற்றல், ஒரு டேபிள் ஸ்பூன் கொத்துமல்லி விதை, இரண்டு டீஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, அரை டீஸ்பூன் மிளகு, ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய்த்துருவல், பெருங்காயம், சின்னத்துண்டு. வறுக்கத் தேவையான எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்.

தாளிக்க: சமையல் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் இரண்டு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மி.வத்தல் தேவையானல் ஒன்று, கருகப்பிலை, இதில் தேங்காய்த் துருவலை வறுக்காமல் மற்ற சாமான்களை வறுத்துக் கொண்டு பொடியைப் போடும்போதுப் பச்சைத் தேங்காய்த் துருவலாகவும் சேர்க்கலாம்.

கத்திரிக்காயை நீளத்துண்டங்களாக நறுக்கிக் கொண்டு புளி ஜலத்தைக் கொதிக்கவிட்டு அதில் கத்திரிக்காய்த் துண்டங்களைப் போடவும். மஞ்சள் பொடி சேர்க்கவும். நசுங்கும் பதம் வந்ததும் உப்புச் சேர்த்துக் கொஞ்ச நேரம் வேகவிட்டுப் பின்னர் வடிகட்டி வைக்கவும். கடாயில் வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு சிவக்க வறுத்துக் கொண்டு தேங்காய்த் துருவலோடு பொடிக்கவும். தேங்காய்த் துருவலையும் வறுத்துச் சேர்த்தால் அது ஒரு சுவை. பச்சையாகச் சேர்த்தால் அது இன்னொரு சுவை. தேங்காய்த் துருவலைச் சேர்த்து அரைக்காமல் கறி தாளிதத்தில் சேர்த்தால் அது ஒரு சுவை. அவரவருக்குப் பிடித்தமான முறையில் செய்து கொள்ளலாம்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மி.வத்தல், கருகப்பிலையை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளிக்கவும். வெந்த கத்திரிக்காய்த் துண்டங்களை சேர்த்துக் கிளறி வறுத்துப் பொடித்த  பொடியையும் மேலே தூவவும். தேவையானால் பச்சைத் தேங்காய்த் துருவலை அதிகம் போடலாம்.

கத்திரிக்காய்க் கல்யாணக்கறி இன்னொரு முறையில் முன் சொன்ன மாதிரி கத்திரிக்காய்களை நறுக்கிக் கொண்டு புளி ஜலத்தில் வேகவிட்டு வடிகட்டி வைத்துக்கொள்ளவும். தாளிக்கக் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மி.வத்தல் கருகப்பிலை போட்டுத் தாளித்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய்த் துருவலைக் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த விழுதைக் கறியில் சேர்த்துக் கிளறவும். கீழே இறக்கிப் பரிமாறவும். இதிலும் பச்சைத் தேங்காய்த் துருவலை மேலே தூவிக் கொள்ளலாம்.

கத்திரிக்காய் வதக்கல்: அரைக்கிலோக் கத்திரிக்காயைக் கழுவிக் கொண்டு நீளமாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும். தாளிக்கக் கடுகு,பெருங்காயம் மட்டும் போடவும். நறுக்கிய கத்திரிக்காயை அதில் சேர்த்துக் கொஞ்சம் போல் மஞ்சள் பொடி சேர்த்துக் கிளறவும். கொஞ்சம் வதங்கியதும் தேவையான உப்பைச் சேர்க்கவும். உப்பு நன்கு கலக்கும்வரை வதக்கிவிட்டுப் பின்னர் இரண்டு டீஸ்பூன் சாம்பார்ப் பொடி சேர்க்கவும். இல்லை எனில் ஒரு டீஸ்பூன் தனி மிளகாய்ப் பொடி, ஒரு டீஸ்பூன் கொத்துமல்லிப் பொடி சேர்க்கவும். நன்கு கிளறவும். மூடி வைக்காமல் அப்படியே கிட்டே இருந்து கிளறிக்கொடுக்கவும். காய் நன்கு வதங்கி தனித்தனியாக ஆனதும் கீழே இறக்கவும். இதிலேயே ஒரு பெரிய வெங்காயத்தையோ பத்துப் பதினைந்து சின்ன வெங்காயத்தையோ நறுக்கி தாளிதத்தில் கடுகு தாளித்ததும் சேர்த்து வதக்கிப் பின்னர் கத்திரிக்காயைப் போட்டுக் கிளறலாம். உருளைக்கிழங்கு இருந்தாலும் அதையும் கத்திரிக்காயோடு போட்டு வெங்காயம் சேர்த்து வதக்கிப் பண்ணலாம்.


கத்திரிக்காய் பொடி அடைத்த எண்ணெய்க்கறி அல்லது கத்திரிக்காய் ஸ்டஃப். இதற்கு ஒரே மாதிரியாகக் கத்திரிக்காய் இருக்க வேண்டும். கொஞ்சம் பொறுக்கி வாங்கணும். கடைக்காரர் விடலைனா சண்டை போடத் தெரிஞ்சிருக்கணும். ஒரே மாதிரிக் கத்திரிக்காயாக அரைக்கிலோவுக்கு  அடைக்கத்தேவையான பொருட்கள்.

மிளகாய் வற்றல் சுமார் ஆறு அல்லது எட்டு, கொத்துமல்லி விதை இரண்டு டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு வகைக்கு இரண்டு டீஸ்பூன், தேங்காய்த் துருவல்(போடாமலும் பண்ணலாம்.) ஒரு டேபிள் ஸ்பூன். பெருங்காயம் சின்னத் துண்டு. உப்பு தேவைக்கு, மஞ்சள் பொடி அரை டீஸ்பூன் ஒரு சிலர் வெள்ளை எள்ளோ அல்லது கறுப்பு எள்ளோ வெறும் வாணலியில் வறுத்துச் சேர்ப்பார்கள். இது அவரவர் ருசி. எல்லாவற்றையும் வறுக்கத் தேவையான எண்ணெய்.வறுத்து நன்கு நைசாகப் பொடி செய்து கொள்ளவும்.

வதக்கத் தேவையான எண்ணெய் சுமார் இரண்டு டேபிள் ஸ்பூன், கடுகு தாளிக்க புளி ஜலத்துக்குத் தேவையான உப்பு, தேவையானால் கொஞ்சம் வெல்லம், புளி ஜலம் ஒரு சின்னக் கிண்னம்.

கத்திரிக்காயை முழுவதும் நறுக்காமல் காம்புப்பகுதியுடன் நாலாகப்பிளந்து கொள்ளவும். உப்பு, மஞ்சள் பொடி தடவித் தனியாக வைக்கவும். வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். தயாரான பொடியை நான்காக நறுக்கிய கத்திரிக்காயுனுள் சமமாக அடைக்கவும். எல்லாக் கத்திரிக்காய்க்குள்ளும் பொடியை இப்படி அடைத்துச் சிறிது நேரம் வைக்கவும்.  பின்னர் அடுப்பில் அடி கனமான கொஞ்சம் அகலமான வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றிக்கொண்டு கடுகைத் தாளிக்கவும். தேவையானால் மஞ்சள் பொடி சேர்க்கலாம். அடைத்து வைத்திருக்கும் கத்திரிக்காய்களை மெதுவாக ஒவ்வொன்றாகப் போடவும். லேசாகப் பிரட்டிக் கொடுக்கவும். புளி ஜலம் சேர்க்கவும். தேவையானால் அரை டீஸ்பூன் உப்புப் புளி ஜலத்துக்கு மட்டும் சேர்க்கவும். கத்திரிக்காய் உடையாமல் நன்கு கிளறிக்கொடுக்கவும். பின்னர் ஒரு தட்டை மேலே வைத்து மூடி வைக்கவும். அடிக்கடி கிளறாமல் சிறிது இடைவெளி விட்டுக் கிளறவும். கத்திரிக்காய் நன்கு வெந்ததும் தண்ணீர் எல்லாம் வற்றிவிடும். தேவையானால் வெல்லம் சேர்க்கலாம். கறியைக் கீழே இறக்கிப் பாத்திரத்தில் மாற்றவும். அந்தச் சட்டியிலேயே நாம் சூடாகச் சாதத்தைப் போட்டுக் கிளறிக் கொஞ்சம் போல் உப்புச் சேர்த்துச் சாப்பிடலாம். பிடிக்கிறவங்களுக்குப் பிடிக்கும்.


கத்திரிக்காய் மஹாத்மியம் தொடரும்!

37 comments:

 1. நான் கத்தரிக்காய் சமைக்க ரொம்ப மெனக்கெடுவதில்லை நறுக்கி ஒரு ஒயர் மெஷ் பவுலில் போட்டு, க்ளாஸ் டாப் எவர்சில்வர் வாணலியில் ஒருலிட்டர் தண்ணீரில் அதை வேகவைத்து எடுத்து, கத்தரிக்காய்த் துண்டுகளில் கொஞ்சம் மஞ்சள் தூள், சாம்பார்ப்பொடி, உப்புத்தூள் தூவி, கையால் பிசறி, வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு + உ ப தாளித்து, அதில் இந்தத் துண்டுகளைப் போட்டு, வதக்கி எடுத்து வைத்துக்கொள்வேன். அவ்வளவுதான்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கௌதமன் சார், நீங்க சொல்றாப்போலயும் பண்ணலாம். ஆனால் நான் பெரும்பாலும் சப்பாத்திக்குத் தொட்டுக்கப் பண்ணும்போது தான் இப்படி மசாலா சாமான்கள் சேர்ப்பேன். சாப்பாடுக்கு, அதுவும் நம் தென்னிந்தியச் சாப்பாட்டுக்குப் பாரம்பரிய முறைப்படி பண்ணினால் தான் நல்லா இருக்குனு என்னோட தனிப்பட்ட கருத்து. முதல் வருகை தந்திருக்கீங்க. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. முடிஞ்சால் மற்றப் பதிவுகளையும் நேரம் இருந்தால் படித்துப் பார்த்துக் கருத்துச் சொல்லுங்க.

   Delete
  2. ஆகட்டும் பார்க்கலாம்! (அடிக்கடி சொன்னவர் யார்?)

   Delete
  3. Haahaahaahaa, Kamarajar, vere yaaru? :D

   Delete
 2. நான் செய்யும் தவறு புரிந்தது. நான் கடாயிலேயே சிம்மில் வைத்து வதக்குவேன். அதுக்கு நேரம் எடுக்கும். ரொம்ப நேரம் வதங்குவதால் போட்ட மசாலாக்களின் வாசனை போய்விடும்.

  நீங்கள் சொல்லியிருக்கும் மெதட்டை உபயோகப்படுத்திப் பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நெல்லைத்தமிழரே, நீங்க எந்த முறைக்கறிக்குச் சொல்றீங்கனு புரியலை!

   Delete
  2. கத்தரிக் கறிக்குத்தான். நீளத் துண்டமா கட் பண்ணி புளி ஜலத்தில் வேகவைப்பதுன்னு சொல்லியிருக்கீங்களே....

   Delete
  3. ஓஓ, சரிதான்,பண்ணிச் சாப்பிட்டுப் பார்த்துட்டுச் சொல்லுங்க!

   Delete
  4. வாவ்.... ஆஹா... நாளையும் அதேதான் செய்யப்போறேன்

   Delete
 3. கத்தரிக்காய் பொடி தூவி கரேமது... நான் அதில் எக்ஸ்பர்ட் (என்று நானே நினைத்துக்கொள்வேன்)

  ReplyDelete
 4. அவங்க அவங்க வழியிலே செய்யும்போது அவங்க அவங்க திறமைசாலி தான். நிபுணர்கள் தான். :)))))

  ReplyDelete
 5. நான் இந்த வகையில் எல்லாம் எப்போதோ செய்திருக்கிறேன்.  ஆனால் ஒருதரம் கூட புளிஜலத்தில் கத்தரிக்காயை ஊற/வேக விட்டதில்லை.  அப்படிச் செய்தால் வித்தியாசமான சுவை கிடைக்கும் என்று தெரிகிறது.  பொடிதூவிக் கறி கூட முழுசாக  ஸ்டப் செய்து செய்ததில்லை.

  ReplyDelete
  Replies
  1. வாழைக்காயைக்கூட திருத்தி, புளி ஜலம், பெருங்காயத்தில் கொஞ்சம் வேகவைத்துவிட்டு, நீரை இரத்துவிட்டு, கறி செய்தால் ரொம்ப சுவையா இருக்கும் ஸ்ரீராம்... நாங்க அரைக்கரேமது என்போம். கீசா மேடம்கூட அதன் செய்முறையை இங்க எழுதியிருக்காங்க.

   Delete
  2. பொதுவாகவே புளி ஜலத்தில் வேகவிட்டால் (ஊற வைப்பது இல்லை) சுவை மாறுபடும். சும்மா வதக்கினா சுவை வேறே மாதிரி இருக்கும். கத்திரிக்காய், சேனைக்கிழங்கு, வாழைக்காய் போன்றவை புளி ஜலத்தில் வேகவிட்டுச் செய்யும்போது நன்றாகவே இருக்கும்.

   Delete
  3. வெறும் நாட்களிலும் பண்ணினாலும் நாங்க இதைப் பெரும்பாலும் அமாவாசைக்கறி என்போம்.

   Delete
  4. ஒருமுறை சேனைக்கிழங்கை, ஒருமுறை வாழைக்காயை அதுபோல புளி ஜலத்திலும், ஒருமுறை புளிப்புமோரிலும் (மோர்/புளிஜலத்தில் காரப்பொடி, உப்பு, பெருங்காயம் எல்லாம் சேர்த்து ஊறவைத்து (!) எடுத்து அப்படியே வாணலியில் மொத்தமாகக் கொட்டி வேகவைத்து செய்த ஞாபகம் இருக்கிறது.

   Delete
  5. செய்முறையே தப்பு. நீங்க சொன்னமாதிரிப் புளி ஜலம், மோர் ஆகியவற்றில் பாகர்காயை ஊற வைச்சுச் செய்தால், அதாவது வதக்கினால் நன்றாக இருக்கும். சேனைக்கிழங்கு,வாழைக்காய் இம்மாதிரிக் காய்களை ஜலத்தில் வேக விட்டுச்செய்தால் நன்றாக இருக்கும். சேப்பங்கிழங்குக் காரக்கறிக்குக் கூடச் சிலர் புளி விடுவார்கள்.

   Delete
 6. கிடைக்கும் கத்தரிக்கரையை வைத்துதான் கறி செய்வது.  மார்க்கெட் பக்கம் போகும்போது கவர்ச்சியாக கண்ணில்பட்டால் வாங்கப்படும்.  ஆனாலும் நான் கத்தரிக்காய் வாங்கினாலே வீட்டில் அலர்ஜி வந்துவிடும்.  சின்னவன் சரியாய்ச் செய்தால் சாப்பிடுவான்.  மற்றபடி எனக்காக மட்டுமே செய்யவேண்டும் என்பதால் அதிகம் செய்வதில்லை.

  ReplyDelete
  Replies
  1. இங்கே ஸ்ரீரங்கத்தில் மேலூர்க்காய் எனக் கிடைக்கும். மதுரையில் முன்னெல்லாம் நான் சின்னவளா இருந்தப்போ மாடக்குளம் கம்மாய்க்காய் எனக் கத்திரிக்காய் வரும். அந்தச் சுவை இப்போல்லாம் கிடையாது. இப்போ வரும் காய்கள் அநேகமாப் பூச்சி மருந்து தெளித்தவையே! அதனால் அதன் மூலத்தன்மை பாழ்பட்டு சுவை மாறி விடுகிறது.

   Delete
  2. மதுரையில் கம்மாகத்தரிக்காய் வாங்கி சமைத்திருக்கிறோம்.  நன்றாய் இருக்கும்.  ஆனால் தஞ்சாவூர்க் கத்தரிக்காய்க்குதான் முதல் இடம்!  ஹெட்போஸ்ட் ஆபீஸ் தாண்டி சென்றால் மாலை நேர காய்கறி மார்க்கெட் இருக்கும்.  அங்கு கிடைக்கும் இந்த கத்தரிக்காய் மற்றும் கீரைத்தண்டு, கீரை உள்ளிட்ட பசுபசு காய்கறிகள்.

   Delete
  3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மதுரைக்கம்மாய்க் காய் நீங்க சாப்பிட்டப்போ சுமாரா இருந்திருக்கும். ஆனால் அதற்கும் முன்னால் நாங்கள் சாப்பிட்டிருக்கோம் இல்லையா?

   Delete
 7. இப்போதெல்லாம் நான் கத்தரிக்காய் செய்து நாளாச்சு என்று புலம்பினால் உடனே கத்தரிக்காய் வாங்கப்பட்டு நான்காய் மறுக்கப்பட்டு, வதக்கப்பட்டு, காரப்பொடியோ, சாம்பார்ப்பொடியோ சேர்த்து பிரட்டி வழங்கப்படும். நோ மஞ்சள்பொடி.  பாஸ் எப்போதுமே மஞ்சள்பொடிக்குஎதிரி!

  ReplyDelete
  Replies
  1. அதிலேயே பாதி பெரிய வெங்காயம் (உங்களுக்கு மட்டும் என்பதால்) அல்லது சின்னவெங்காயம் 10,15 நறுக்கிச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டுப் பாருங்க! ஒரு சின்ன உருளைக்கிழங்கும் போட்டுக்கலாம். வித்தியாசமான சுவையில் சாப்பிட முடியும்.

   Delete
 8. எனக்குத் தெரிந்து தஞ்சாவூர்க் கத்தரிக்காய் பெஸ்ட்.   அப்புறம் அந்த ருசியை ஹோசூர் கத்தரிக்காயில் கொஞ்சம் பார்த்தேன்.  வேலூர் கத்தரிக்காய்வாங்கியதில்லை.  சென்னையில் வாங்கப்படும் கத்தரிக்காய் வாச்சுக்கறதுதான் அமைஞ்சுக்கறதுதான் டைப்!  பச்சை கத்தரிக்காய் மேல் முன்பெல்லாமொரு அவெர்ஷன் இருந்தது.  சென்னையில் பெரும்பாலும் அதுதான் கிடைக்கிறது என்பதால் பழகி விட்டது!

  ReplyDelete
  Replies
  1. பச்சைக்கத்திரிக்காய் விளையும் இடத்தைப் பொறுத்துச் சுவை. மதுரையில் என் அம்மா பச்சைக்கத்திரிக்காயில் தான் புளிவிட்ட கூட்டு, பிட்லை எல்லாம் பண்ணுவார். அந்த ருசி இப்போல்லாம் இருப்பதில்லை.

   Delete
  2. ஸ்ரீராம்... இங்க நான் இருக்கும் இடத்தில் 5 வகையான கத்தரிக்காய் கிடைக்கிறது. வரி கத்தரிக்காய், வயலெட் கத்தரி, பச்சைக் கத்தரி, பெரிய சைஸ் பிடி கத்தரி-பஹ்ரைன்ல கிடைக்கும் போன்று... பெங்களூர்ல பச்சைக் கலர் நீளக்கத்தரி. பஹ்ரைன்ல நான் புடலங்காய் சைஸுக்கு கத்தரி பார்த்திருக்கேன். பொதுவா வரி பிரிஞ்சால் நல்லாருக்கும். சமீபத்துல பச்சைக் கத்தரியும் நல்லா இருந்தது.

   Delete
  3. அம்பத்தூர் மார்க்கெட்டிலும் 2,3 வகைக்கத்திரிக்காய்கள் கிடைக்கும். அதிகம் வயலட் காயும் வரிக்கத்திரியும் கிடைக்கும்.

   Delete
 9. கத்திரிக்காய் பொடி அடைத்த எண்ணெய்க்கறி அல்லது கத்திரிக்காய் ஸ்டஃப். இதற்கு ஒரே மாதிரியாகக் கத்திரிக்காய் இருக்க வேண்டும். கொஞ்சம் பொறுக்கி வாங்கணும். கடைக்காரர் விடலைனா சண்டை போடத் தெரிஞ்சிருக்கணும்///hahahaha. This is what I like most.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா, பின்னே? ஸ்ரீராம் மாதிரிக் கிடைக்கும் காய்களை வாயை மூடிக்கொண்டு வாங்கிச் சமைச்சால் என்ன அர்த்தம்? அதுக்குத் தான் என்னை (மார்க்கெட்டுக்கே) கறிகாய் வாங்கவே கூட்டிப் போக மாட்டார். நான் கொஞ்சம் இதெல்லாம் கேட்பேன்.

   Delete
 10. கத்திரிக்காய் கத்திரிக்காய் முங்கி எழுந்தால்
  தினமும் ஆப்பிட்டால் கூட எனக்குப் போறாது. கீதா மா, இத்தனை அழகா யார் சொல்லித் தருவார்கள்.
  நானெல்லாம் செய்திருந்தாலும், இத்தனை விவரமாகப் பெண்ணுக்குச் சொல்லிக் கொடுத்ததில்லை. அவளாகப் புதிது புதிதாகச் செய்கிறாள்.
  அத்தனையும் அமிர்தம் ஆனந்த முடிச்சு உங்கள் கத்திரிப் பதிவு.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரேவதி, எங்கள் குடும்பத்திலும் ஜீன்ஸிலேயே கத்திரிக்காய் ருசி இருக்குப்போல! அனைவருக்கும் கத்திரிக்காய் என்றால் உயிர்.

   Delete
 11. நம்ம வீட்டில கத்தரிக்காய் என்றால் அன்று ஆவலோடு இருப்பாங்க..எல்லாருக்கும் மிகவும் பிடித்த ஐட்டம்...

  முழுவதும் வாசித்து விட்டு, முந்தையதும் பார்த்துவிட்டு வருகிறேன்...வீட்டு வேலைகள் + கணினி படுத்தல்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இங்கே என் புக்ககத்தில் கத்திரிக்காய் என்றால் சிரிப்பு வரும். ஆனாலும் ரொம்ப பிகுவோடு சாப்பிடுவாங்க. :) அவங்களுக்குச் சேப்பங்கிழங்கு தான் (விளைந்து வந்ததால்) அதிகம் பிடிக்கும். சேம்பு இலைக் கறி பிடிக்கும். சேப்பங்கிழங்கையே பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுப்பது இம்மாதிரிப் பொரிக்கும் உணவுகள் தான் அதிகம். எண்ணெயும் வீட்டிலேயே தேங்காய் ஆட்டினதால் கிடைத்து வந்தது. :))))

   Delete
 12. அக்கா இதே முறையில் தான் புளித் தண்ணீரில் வேக வைத்து செய்யும் கறி, அப்புறம் பொடி போட்டு...ஸ்டஃப்டு வெறும் ஃப்ரை என்று...

  சப்பாத்திக்கு என்றாலும் ஸ்டஃப்ட் அப்புறம் க்ரேவியாக அப்புறம் நீங்க சொல்லிருக்காப்ல, உகி, வெங்காயம் சேர்த்து அல்லது கு மி சேர்த்து என்று செம டேஸ்டியா இருக்கும்.

  ஊர்ல இருந்த வரை ப மி, தே, இஞ்சி சேர்த்து சும்மா அம்மியில் ஓட்டி அல்லது சின்ன உரலில் போட்டு நசுக்கிச் சேர்ப்பாங்க. அப்புறம் இஞ்சி இல்லாம ஜீரகம் கொஞ்சமே கொஞ்சம் போட்டும் ப மி க்குப் பதில் சி மி போட்டும்...இப்படிச் செய்வாங்க. கீதாக்கா உங்க்ளுக்கும் தெரிந்ததுதான்...

  உங்களுக்கு அழகா சொல்லவும் வருகிறது கீதாக்கா...எனக்கு எல்லாம் இதை இப்படிச் சொல்ல வருவதில்லை ஹிஹிஹி கண்ணளவிலேயே செய்வதால் திங்க பதிவுக்குக் கூட எழுதுவது கொஞ்சம் குறித்து வைத்து எழுதணுமே...ஹிஹிஹி

  இதையும் குறித்து வைத்துக் கொண்டாயிற்று.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. சப்பாத்திக்கு 2,3 வகையில் கறி, க்ரேவி எனப் பண்ணுவேன். கத்தரிக்காய் ஸ்டஃப் கறியே வட இந்திய முறையில் வேறே மாதிரிப் பண்ணுவாங்க. நான் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற முறையில் பண்ணுவது உண்டு. ஹாஹா, நீங்க தான் சமைக்கப் போனால் ஆளுக்கு ஒரு வேலை கொடுத்துடறீங்களே! எனக்கு அந்தத் திறமை இல்லை. எல்லோரும் உட்கார்ந்து பேசிக்கொண்டு, "இன்னுமா ஆகலை?"னு கேட்டுக் கேலி பண்ணிப் பேசிட்டு இருக்கையில் நான் மட்டும் தனியாக சமையலறையில் வேலையாக இருப்பேன்.

   Delete
 13. இங்கும் பச்சைக் கத்தரிதான் பெரும்பாலும் கிடைக்கிறது. அல்லது வெள்ளை...வெள்ளையும் பச்சையும் கலந்தற்போல் இப்படிக் கிடைக்கிறது. பெரிய குண்டு கத்தரி கிடைக்குது அதிலும் சுட்டக் கத்தரி கொத்ஸு, பெய்ங்கன் மசலா என்று ஓடுகிறது.

  சின்னக் கத்தரி கிடைத்துவிட்டால் கண்டிப்பாக ஸ்டஃப்ட் கத்தரிதான்...

  கீதா

  ReplyDelete
 14. குண்டுக் கத்திரிக்காயைச் சுட்டு கொத்சு, பைங்கன் பர்த்தா, துவையல் எனப் பண்ணலாம். ஆனாலும் முன்னெல்லாம் அடுப்புத் தணலில் சுட்டெடுத்துப் பண்ணின சுவை இல்லை. பர்த்தா பண்ணும்போது பஞ்சாபில் இந்த குண்டுக்கத்திரிக்காயைக் காம்பை நீக்காமல் ஐந்தாறு இடங்களில் கீறிவிட்டு அந்தக் கீறலினுள் பச்சைமிளகாயைக் கீறி அடைத்துவிட்டுப் பின்னர் அடுப்பில் போட்டுச் சுடுவார்கள். காரம் உச்சிக்கு ஏறும் என்று நினைச்சேன். ஆனால் பர்த்தா சாப்பிடும்போது நிதானமான காரத்தில் இருந்தது.

  ReplyDelete