எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, March 18, 2019

பாரம்பரியச் சமையல்கள்! பொடி போட்ட சாம்பார் செய்முறை 1 & 2

பொதுவாக சாம்பாருக்கு அனைவரும் மி.வத்தல், தனியா, கடலைப்பருப்பு, வெந்தயம், து.பருப்பு, மிளகு, மஞ்சள் போன்றவை வாங்கிக் காய வைத்து  மாவு மிஷினில் கொடுத்து அரைத்து மொத்தமாக வைத்துக் கொள்வார்கள். அதில் தான் சாம்பார் எனச் செய்வார்கள்.  இந்த மாவு மிஷினெல்லாம் கடந்த இருநூறு வருடங்களுக்குள்ளாக வந்தது. அதற்கு முன்னெல்லாம் கல்லால் ஆன கை இயந்திரம் தான்! அதில் தான் பொடிகள் எல்லாம் திரிப்பார்கள். மர அச்சு இருக்கும். கொஞ்சமாகச் செய்வதெனில் மர உரல்களில் போட்டு இடித்துக் கொள்வார்கள். கல் உரல்களில் இடிப்பதும் உண்டு.எப்போ வந்தது எனத் தெரியலை. ஆனால் தஞ்சாவூர்ப் பக்கங்களில் பெரிய பெரிய கல்யாணம், சஷ்டிஅப்த பூர்த்தி, ஶ்ரீமந்தம் போன்ற விசேஷங்களில் கூட மேற்சொன்னவாறு மிஷினில் சாமான்களைக் கொடுத்துப் பொடி அரைத்து வைத்துக் கொண்டு அதைப் போட்டு மேல் சாமான்களைக் கொஞ்சமாக வறுத்து அரைப்பார்கள். இது பெரிய பெரிய சமையல் குழுவினருக்கும் இது தான் வழக்கமாக இருந்து வந்தது என்பதை நான் கல்யாணம் ஆகி வந்ததும் புக்ககத்தில் என் ஶ்ரீமந்தம், மாமனார் சஷ்டி அப்தபூர்த்தி, நாத்தனார், மைத்துனர்கள் கல்யாணங்களில் ஆகியவற்றில் கண்டிருக்கிறேன்.

ஆனால் மதுரை, திருநெல்வேலிப் பக்கம் இந்த மாதிரிப் பொடி அரைத்து வைத்துக் கொண்டு பண்ண மாட்டார்கள் எல்லா மசாலா சாமான்களையும் வறுத்து அரைத்துத் தேங்காய் சேர்த்துப் பண்ணுவார்கள். அல்லது தேங்காய் இல்லாமல் மசாலாப் பொருட்களை மட்டும் வறுத்துப் பொடித்துப் போடுவார்கள். இந்த வறுத்துப் பொடித்துப் போட்டுச் செய்யும் சாம்பாரையே அங்கே எல்லாம் பொடி போட்ட சாம்பார் என்பார்கள். தேங்காய் அரைத்து விட்டால் அரைத்து விட்ட சாம்பார்.  இப்போ இங்கே கொடுப்பது

 பொடி போட்ட சாம்பார் செய்முறை 1  சுமார் நான்கு நபர்களுக்கு

தேவையான சாமான்கள்:  துவரம்பருப்பு  2 கிண்ணம் மஞ்சள் பொடி சேர்த்து நல்லெண்ணெய் விட்டுக் குழைய வேக வைக்க வேண்டும்.

புளி ஒரு சின்ன எலுமிச்சை அளவு. புளி ஜலம் நீர்க்க இருக்க வேண்டும். புளியை கெட்டியாகக் கரைத்துக் கொள்ளக் கூடாது. 

வறுத்துப் பொடிக்கத் தேவையான சாமான்கள்: 

மிளகாய் வற்றல் 3 தனியா இரண்டு டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு 2 டீஸ்பூன், வெந்தயம் அரை டீஸ்பூன், பெருங்காயம் ஒரு துண்டு. வறுக்கத் தேவையான சமையல் எண்ணெய் அவரவர் பழக்கத்திற்கேற்ப. நான் நல்லெண்ணெய் தான் எடுத்துக் கொண்டேன். தேங்காய் எண்ணெயும் நன்றாக இருக்கும். வறுத்து ஆற வைத்துப் பொடித்துக் கொள்ளவேண்டும்.

சாம்பாரில் போடத் தான்கள், முருங்கை, கத்திரி,பறங்கி, அவரை, சின்ன வெங்காயம், சேப்பங்கிழங்கு, முள்ளங்கி, சிவப்பு முள்ளங்கி, நூல்கோல் போன்றவை எதுவானாலும் போடலாம். வெள்ளைப் பூஷணிக்காயும் போடலாம். இன்று என்னிடம் முருங்கைக்காய் இருந்ததால் அதை எடுத்துக் கொண்டேன். தனியாக வேக வைத்துச் சேர்த்தால் நன்றாக இருக்கும். சின்ன வெங்காயமும் அப்படிச் சேர்க்கலாம். முள்ளங்கி, நூல்கோல் போன்றவையும் வேக வைத்துச் சேர்த்தல் நலம்.

உப்பு தேவைக்கேற்ப. மஞ்சள் பொடி பருப்பு வேக வைக்கையில் ஒரு டீஸ்பூன் சேர்க்கலாம். பெருங்காயமும் பருப்பு வேக வைக்கையில் சேர்க்கலாம்.

தாளிக்க நல்லெண்ணெய் அல்லது தே.எண்ணெய்: கடுகு ஒரு டீஸ்பூன், வெந்தயம் ஒரு டீஸ்பூன், சின்னதாய் ஒரு மி.வத்தல், கருகப்பிலை ஆர்க்கோடு கிள்ளி எடுத்துக் கொள்ள வேண்டும். பச்சைக்கொத்துமல்லி தண்டோடுபொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
                                                         
                                                                துவரம்பருப்பு இதால் 2 கிண்ணம் போட்டேன்.


                      ரசத்துக்கும் சேர்த்துக்  கரைத்து வைத்திருக்கும் புளி ஜலம், முருங்கைக்காய்த் துண்டங்கள்.
   

                                          மி.வத்தல் , தனியா, கடலைப்பருப்பு, வெந்தயம், பெருங்காயம் எண்ணெயில் வறுத்திருக்கேன்.

சாம்பாருக்குத் தேவையான புளி ஜலம் திட்டமாக. முன்னர் பார்த்ததில் ரசத்துக்கான புளி ஜலமும் சேர்ந்திருந்தது. அதில் இருந்து சாம்பாருக்கு மட்டும் அரைப் பாத்திரம் எடுத்துக் கொண்டேன். எங்கள் இருவருக்குத் தேவையானது.
கல்சட்டியில் பருப்பை வேக வைத்திருந்தேன். மஞ்சள் பொடி சேர்த்து நல்லெண்ணெயும் விட்டால் பருப்புக் குழைந்து விடும். குக்கர் தான் பழக்கம் என்பவர்கள் குக்கரிலும் வேக வைக்கலாம். நான் சுமார் 20 வருடங்களுக்கு மேல் அன்றாட சமையலுக்குக் குக்கர் பயன்படுத்துவதில்லை.


முருங்கைக்காய்களைச் சிலர் புளி ஜலத்தில் அப்படியே போடுகின்றனர். பின்னர் தான் வேகும் வரை சாம்பார் கொதிக்கட்டும் என நிறைய நேரம்கொதிக்க விடுகின்றனர். நான் பருப்பு வேகும்போதே வேறொரு கடாயில் கொஞ்சம் நல்லெண்ணெயில் முருங்கைக்காய்களை வதக்கிக் கொண்டு நீர் விட்டு வேக வைத்து விடுவேன். கீழே நீரில் வேகும் காய்கள். முருங்கைக்காய்க்கு மட்டும் உள்ள உப்பைப் பாதி வேகும்போது சேர்க்கலாம்.


எண்ணெயில் வறுத்த பொருட்களை மிக்சி ஜாரில் பொடித்திருக்கிறேன். நல்ல நைஸாகப் பொடிக்கலாம்.


கல்சட்டியில் பருப்பு வெந்ததோடு புளி ஜலம் சேர்த்து அதற்குத் தேவையான உப்பை மட்டும் போட்டுப் புளி வாசனை போகக் கொதித்ததும் வெந்த முருங்கைக்காய்த் தான்களையும், பொடித்த பொடியையும் சேர்த்து ஒரு கொதி விட வேண்டும்.


தான்களோடு சேர்ந்து கொதித்த சாம்பார். பொடியைப் போட்டாச்சு!


தே.எண்ணெயில் கடுகு, வெந்தயம், மி.வத்தல், கருகப்பிலை தாளித்தேன். இன்று கொத்துமல்லி என்னிடம் இல்லை. இந்த சாம்பாரில்  சுமார் நான்கு பேர் வரை நிதானமாகச் சாப்பிடுபவர்கள் சாம்பார் சாதம் சாப்பிடலாம். இந்த அளவை அவரவர் தேவைக்கேற்பக் கூட்டியோ, குறைத்தோ செய்து கொள்ளலாம்.

இதைத் தான் எங்க பக்கம் பொடி போட்ட சாம்பார் என்போம். நான் இந்த சாம்பாரைக் கற்றுக் கொண்டது மதுரைக்கருகே தேனிப்பக்கம் உள்ள சின்னமனூரில் என் சித்தி வீட்டில் இருந்தபோது அங்கே சமையல் வேலை செய்த திருமதி பத்மாசனி அம்மாள் என்பவரிடம் கற்றுக் கொண்டேன். அவர் மிக ருசியாகச் சமைப்பார்! தினம் சாம்பார் எனில் அன்றன்றே வறுத்துப் பொடிப்பார். முன்னால் வறுத்துப் பொடித்தால் சிக்கு வாசனை வரும் என்பார். அதே போல் அந்த மாமி வைக்கும் ரசமும் அருமையாக இருக்கும். அந்தப் பக்குவத்தில் ரசம் வைக்க எனக்கு வரவில்லை என்றே சொல்லணும். 

இதே பொடி போட்ட சாம்பார்  என் மாமியார் வீட்டில் செய்வது. பருப்பைத் தனியாக வேக வைத்துக் கொண்டு உருளி அல்லது கல்சட்டியில் புளி ஜலத்தை விட்டுக் கொண்டு அதில் உப்பு, பெருங்காயம், முருங்கைக்காய்த் தான்கள், சாம்பார்ப் பொடி எல்லாம் சேர்த்துப் போட்டுக் கொதிக்க வைப்பார்கள். பின்னர் வெந்த பருப்பைச் சேர்ப்பார்கள். முருங்கைக்காய்களைத் தனியாக வேக விடுவதில்லை. இந்த முறையில் சாம்பார் கொஞ்சம் கூடுதல் நேரம் கொதிக்க விடுவார்கள். தான்கள் வேகும் வரை சாம்பார் கொதிக்கும். பின்னர் தாளிதம் செய்து பச்சைக்கொத்துமல்லி மட்டும் இலையாகக் கிள்ளிப் போடுவார்கள். காம்பெல்லாம் போடுவதில்லை. நான் காம்பெல்லாம் சேர்ப்பேன்.  இரண்டிலும் ருசி மாறுபாடு இருக்கும்.

சில முக்கியக் குறிப்புகள்

அவரைக்காய், பீன்ஸ், கொத்தவரைக்காய், புடலங்காய், பாகற்காய் போன்றவை வேக விட்டுச் சமைக்கையில் கடாயில் ஒரு முட்டை நல்லெண்ணெய் விட்டுக் கொண்டு நறுக்கிய காய்களை அதில் போட்டு ஓர் இரண்டு நிமிடம் வதக்கிய பின்னர் நீர் ஊற்றி மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும். சீக்கிரம் வேகும். காய்கள் நிறம் மாறாது.

பாகற்காய், வெண்டைக்காய் போன்றவை வதக்கலாகச் செய்யும் போது கொஞ்சம் தயிரில் மஞ்சள்பொடி, உப்புச் சேர்த்துக் கொண்டு நறுக்கிய காய்களை அதோடு சேர்த்துப் பிசறி வைத்து விட்டுப் பின்னர் வதக்கலாம். இதில் வெண்டைக்காயில் தயிர் விட்டால் சில சமயம் வழவழப்பு அதிகமாக இருக்கும். வெண்டைக்காயை நறுக்கும் முன் நன்கு அலம்பித்துடைத்து விட்டுப் பின்னர் நறுக்கினால் வழவழப்புக்குறைவாக இருக்கும். எண்ணெயில் போட்டுக் கொஞ்சம் வதங்கிய பின்னரே வதக்கல் காய்களுக்குத் தேவையான உப்பைச் சேர்க்கவும். முன்பே சேர்த்தால் உப்புத் திட்டம் தெரியாமல் அதிகம் ஆகிவிடும்/

கீரை எந்தக்கீரையானாலும் திறந்து வைத்தே வேக விடவும். மூடி போட்டோ, குக்கரிலோ வேக வைக்கக் கூடாது! அதில் உள்ள விஷ உப்புக்கள் திறந்து வைத்து வேகை வைத்தால் ஆவியாகிப் போய்விடும். மூடி வைத்தால் கீரையிலேயே தங்கும்.

36 comments:

 1. அதில் தான் பொடிகள் எல்லாம் திரிப்பார்கள்//

  ஹப்பா எங்க பிறந்த வீட்டுச் சொல்...திரிப்பார்கள்...சென்னைக்கு வந்த புதிதில் புகுந்த வீட்டில் எல்லோரும் பொடி அரைத்தல், மாவு அரைத்தல் எல்லாமே அரைத்தல்தான். நம் பிறந்த வீட்டில் அரைத்தல் என்றால் தண்ணீர் விட்டு அரைத்தல்...திரித்தல் என்றால் அரிசி மாவு...சாம்பார் பொடி...வகைகள்...

  பொடித்தல் என்றால் ஒன்றிரண்டாக அல்லது கொஞ்சம் னைசாக...

  இப்படிப் பழகியது முதலில் கொஞ்சம் ஞே என்று விழித்திருக்கேன்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. கீதா ரங்கன்... ரொம்ப கீதா சாம்பசிவத்தைப் புகழவேண்டாம். 'திரிப்பது' என்பது 'அரைப்பதற்கான' ஒருஜினல் நெல்லை வழக்குச் சொல். கீசா மேடம், எங்களிடம் இருந்து அந்தச் சொல்லைக் கடன் வாங்கியிருக்காங்க.

   Delete
  2. //ஒரு முட்டை நல்லெண்ணெய்// - இதுவும் நெல்லைச் சொல்தான். இது தெரியாமல் தேம்ஸ் இங்க வந்து புலம்பப் போகுது.

   Delete
  3. தி/கீதா, கல் இயந்திரத்தில் திரிப்பது என்னும் சொல்லே பயன்படுத்துவார்கள். பின்னாட்களில் மிஷினில் திரிப்பதற்கும் தென் மாவட்டங்களில் இதுவே சொல்வார்கள். நான் கல்யாணம் ஆகி வந்து தான் அரைத்தல் என்னும் வார்த்தைப் பிரயோகம் கேட்டேன். தண்ணீர் விட்டு அரைக்க மிஷினில் எப்படி முடியும் என நினைச்சுப்பேன். இஃகி,இஃகி, அப்போக் குழந்தை தானே! அப்புறமாப் புரிஞ்சது! ஆங்கிலத்தில் எழுதுகையில் வேறுபாடு காட்டிடலாம்.

   Delete
  4. நெல்லைத்தமிழரே, நாங்க கொடுத்தது தான் "திரிப்பது" என்னும் சொல் உங்களுக்கு. ஞாபகம் இருக்கட்டும். தமிழ் வளர்த்தது என்றாலே மதுரை தான் என உலகுக்கே தெரியுமாக்கும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதே போல் தான் முட்டையும். முட்டை அளவு என்ன என்பது பழகியவங்களுக்குப் புரியும். நான் இப்போதும் நெய் முட்டை, எண்ணெய் முட்டை என்றே வீட்டில் சொல்லுவேன். முட்டைக்கரண்டி என்றும் சொல்லுவதுண்டு. இதெல்லாம் பாண்டிய நாட்டு வட்டார வழக்குச் சொற்கள். விரைவில் ஓர் அருஞ்சொற்பொருள் கொடுக்கணும் போல் இருக்கே! :))))))

   Delete
  5. நீங்க சொல்ற பாயிண்ட் வேலிட். தமிழ் என்னும் குழந்தையை வளர்த்து, குமரியானபிறகு நெல்லைச் சீமையில் மணமுடித்துக் கொடுத்துவிட்டீர்கள் போலிருக்கு.

   தமிழில் no.1 யாழ்ப்பாணத் தமிழ் no.2 திருனெல்வேலித் தமிழ். ஹாஹா

   Delete
  6. ஹலோவ் யாரது கீதாக்காவை சீண்டுறது :)
   நானும் பாதி மதுரை பாதி நாரோல் .
   நாங்களும் திரித்து என்றே சொல்வோம் .
   மிஷினில் திரிச்சிட்டு வந்திருக்கோம் இந்த மாவுகளை எனக்கு நினைவிருக்கே

   Delete
  7. //தமிழில் no.1 யாழ்ப்பாணத் தமிழ் no.2 திருனெல்வேலித் தமிழ். ஹாஹா..//
   ஆமா அவங்க D நீங்க C :)))))))))))))

   Delete
  8. ஹாஹா, ஏஞ்சல், நெல்லைக்குத் தமிழ் தொல்லை! அதனால் எப்படி எல்லாமோ யோசிக்கிறார்.

   Delete
 2. ஆமாம் கீதாக்கா எங்க பிறந்த வீட்டுல கூடச் சாம்பார் பொடி எதுவும் திரித்து வைக்க மாட்டார்கள். கொஞ்சமாக அவ்வப்போதுதான் வறுத்துப் பொடித்து அல்லது தேங்காயோடு அரைத்துப் போடுவாங்க..அல்லது மிக்சி வந்த பிறகு ஒரு 4,5 நாள் வருவது போலக் கொஞ்சமாகப் பொடித்து வைத்துக் கொள்வதுண்டு.

  புகுந்த வீட்டில் சாம்பார்ப்பொடி மெஷினில் கொடுத்துத் திரித்து வைத்துக் கொள்வார்கள்....நான் இப்பவும் மிக்சியில்தான் கொஞ்சம் கொஞ்சமாகப் பொடித்துக் கொள்வதுதான்.. இப்போது எங்கள் தேவையும் குறைவு. பையனுக்கு மட்டும் மெஷினில் கொடுத்து திரித்துக் கொடுத்துவிட்டேன்..நிறைய என்பதால். அதிலும் ரசப்பொடி வீட்டிலேயேதான் செய்து கொடுத்துவிட்டேன்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இஃகி,இஃகி, தி/கீதா, இந்தப் பழக்கத்தில் நான் கல்யாணம் ஆகி வந்தப்போ மாமியாரிடம் பொடி எல்லாம் நிறையத் திரிச்சு வைச்சால் பழசு வாசனை வருமேனு சொல்லிட்டு வாங்கிக் கட்டிக்கொண்டேன். :)))) எங்க வீட்டில் ஒரு முறை பொடி செய்தால் 2 நாட்கள் தான் வைச்சுப்பாங்க! தொடர்ந்து பொடி தேவை எனில் வெறும் வாணலியில் வறுத்து இயந்திரத்தில் போட்டுத் திரித்து வைப்பார்கள். அது கூட அம்மா ஒரு வாரத்துக்கு மேல் பயன்படுத்த மாட்டார். வாசனை போயிடும் என்பார்கள்.

   Delete
  2. நான் கால் கிலோ மி.வத்தலுக்கு உள்ள சாமான்களைத் தான் போட்டு மிஷினில் திரிப்பேன். அதுவும் சாம்பார்ப் பொடி எல்லாம் பண்ணுவது இல்லை. நான் பண்ணுவதே ரசப்பொடி தான்! :))))) மாமியாரெல்லாம் ஒரு கிலோ வரை தயார் செய்து வைச்சுடுவாங்க!

   Delete
 3. அக்கா இதே இதே மெத்தட் தான். நான் புளித்தண்ணியில் வேக வைப்பதில்லை காய்களை. தனியாக வெந்த பிறகுதான் சேர்ப்பேன். நானும் பருப்பில் மஞ்சள் பொடி நல்லெண்ணை விட்டு வேக வைப்பேன் சீக்கிரம் வேகும் என்பதால். கல்சட்டியிலும் சில சமயம் அவசரம் என்றால் குக்கரிலும்.

  பின் குறிப்புகள் டிட்டோ. அதுவும் கீரை டிட்டோ...இன்று கூட எபியில் கீரை வேக வைப்பது சொல்லிருந்தேன் என்று நினைக்கிறேன்...எந்தக் கீரையையும் நானும் மூடி போட்டோ குக்கரிலோ வேக வைப்பதில்லை...

  உங்கள் குறிப்புகளையும் குறித்து வைத்துக் கொண்டேன். அளவு..நம் சமையல் எல்லாம்..நான் கையாலேயே கண்ணளவில் போட்டுவிடுவதால்...எபிக்கு அனுப்பும் போது மட்டும் சாமானை நான் எடுக்கும் அளவை அளந்து குறிப்புகள் கொடுப்பதுண்டு.

  நான் துல்லியமாக அளப்பது என்றால் பட்சணங்கள், கேக் வகையறாக்கள்தான்.

  சூப்பரா இருக்கு அக்கா படங்கள் நீங்க செஞ்சுருக்கறது எல்லாம். சாப்பிடனும் போல...இருக்கு..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தி/கீதா, நானும் அளவெல்லாம் பெரும்பாலும் கண்ணளவு தான். எல்லாக் காய்களையுமே கொஞ்சம் வெந்த பின்னர் சாம்பாரிலே சேர்த்தால் நன்றாக இருக்கும். புளி ஜலத்தில் போட்டு வேக வைத்தால் நேரம் எடுக்கும் என்பதோடு மரத்தாற்போல் இருக்கும் என்பது என் கருத்து.

   Delete
 4. நானும் கொத்தமல்லி தண்டுகளையும் பயன்படுத்துவேன். அடி வேர் மட்டும் தான் எடுத்துவிட்டு நன்றாகக் கழுவி வைத்துவிடுவதுண்டு. தண்டையும் சேர்த்து நறுக்கித்தான் போடுவேன். நல்ல டேஸ்டியாக இருக்கும்.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், அதே போல் கீரைத்தண்டுகளும். பொடியாக இருந்தால் நறுக்கிச் சேர்த்து வேக வைத்து மசிக்கும்போது மசித்து விடலாம். பெரிய தண்டுகளை மட்டுமே தனியாக எடுத்து வைத்துப் பொரிச்ச குழம்பு, மோர்க்கூட்டு அல்லது சாம்பாரில் எனப் போடுவேன்.

   Delete
 5. //ஒரு முட்டை நல்லெண்ணெய் விட்டுக் கொண்டு // சாம்பாரில் முட்டையோ? செய்ங்க. ஒரு குழிகரண்டி நல்லெண்ணெய் என்று எழுதப்படாதோ?
  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. ஜேகே அண்ணா, ஏதேனும் ஒரு குற்றம் கண்டு பிடிக்காவிட்டால் உங்களுக்கு மன நிறைவு வராது இல்லையா? :)))))) டீஸ்பூன் என்னும் வார்த்தைப் பிரயோகமே சமீப காலங்களில் தான்! குழிக்கரண்டி என்றால் அது நான் சாம்பாரில் போட்டிருப்பது போன்ற பெரிய கரண்டி. புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன். மற்றபடி உங்கள் பாராட்டுக்கு நன்றி.

   Delete
  2. ஆடிட்டிங் என்றால் என்ன> குற்றம் கண்டுபிடிப்பது. மாமா பெரிய ஆடிட்டர், நான் சின்ன (சிஷ்ய) ஆடிட்டர். ஹி ஹி ஹி.
   Jayakumar

   Delete
 6. படங்கள் ரொம்ப நல்லா எடுத்துருக்கீங்க. செய்முறை விளக்கமும் அருமை.

  ஆரம்பமே அமர்க்களமாக இருக்கு. (ஆனால் இது தொடருமா? சந்தேகம்தான். எதுக்கும் ஒன்றுக்கு இரண்டு சார்ஜரும், தினமும் வல்லாரை யூசும் சாப்பிடுங்கள்)

  ReplyDelete
  Replies
  1. நெல்லைத் தமிழரே, சந்தேகம் உங்கள் உடன் பிறப்பு!

   Delete
  2. அட... அதுக்குத்தான் உங்களை 'அக்கா'ன்னு கூப்பிடச் சொன்னீங்களா (கீசா மேடம் என்று எழுதாமல்). சரிங்க 'உடன்பிறப்பே'.

   Delete
 7. புடலங்காயை தானாக குழம்பில் போடுவார்களா? சாப்பிட்ட நினைவு இல்லை.

  ReplyDelete
  Replies
  1. //சாம்பாரில் போடத் தான்கள், முருங்கை, கத்திரி,பறங்கி, அவரை, சின்ன வெங்காயம், சேப்பங்கிழங்கு, முள்ளங்கி, சிவப்பு முள்ளங்கி, நூல்கோல் போன்றவை எதுவானாலும் போடலாம். வெள்ளைப் பூஷணிக்காயும் போடலாம். //

   சாம்பாருக்கான தான்கள் குறித்து இங்கே சொல்லி இருக்கேன். எங்கே! ஒழுங்காப் படிச்சாத்தானே! ஆனால் புடலைங்காயில் பொரிச்ச குழம்பு செய்யலாம். புடலை தவிர்த்து அங்கே வதக்கச் சொல்லி இருக்கும் காய்கள் எல்லாவற்றிலும் பொரிச்ச குழம்பு, பொரிச்ச கூட்டுப் பண்ணலாம். அப்போ வேக விடுகையில் வதக்கிக் கொண்டு வேக வைக்கலாம். அவரவர் விருப்பம். :))))

   Delete
 8. முதல் செய்முறைக் குறிப்பையே படங்களோடு செய்து எ.பி.க்கு என்னுடைய செய்முறையா அனுப்பிடலாம்னு நினைத்தால், அந்த நினைப்பில் மண்ணைப்போட்டுட்டீங்களே.

  கல்சட்டிப் பீத்தல் கொஞ்சம் ஜாஸ்தியாத்தான் இருக்கு. இதேபோல ரசம் செய்யும்போது ஈயச் சொம்பை ஒன்றுக்கு இரண்டாக படம் போடுவீர்கள் என்றும் தெரியும்

  ReplyDelete
  Replies
  1. கல்சட்டிச் சமையல் சாப்பிட்டதில்லை போல, ஊறுகாய்கள் கல்சட்டியில் வைத்துச் சாப்பிட்டிருக்கீங்களா? பழையது? மோர்? ஹூம்! அதான் அருமை தெரியலை! :))))))

   Delete
 9. விரிவான குறிப்புகள். முன்பெல்லாம் இப்படி பொடிகளைச் செய்து தான் வீடுகளில் செய்து கொண்டிருந்தார்கள். இப்போது மெஷினில் கூட அரைத்து வருவதற்கு வணங்காமல், கடையிலேயே வாங்கிக் கொள்வது வழக்கமாகி இருக்கிறது! :( திருச்சியில் கடை வீதி அருகே ஒரு மாவு மில் உண்டு - அங்கே பல வித பொடிகளை அரைத்துத் தருவார்கள். இப்போது அந்த மில் இருக்கிறதா இல்லையா எனத் தெரியவில்லை. என்.எஸ்.பி. ரோடில் பல பழைய கடைகளை பெரிய கடைகள் விழுங்கிவிட்டன!

  குறிப்புகளைத் தொடர்ந்து எழுதுங்கள். பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

  ReplyDelete
 10. வாங்க வெங்கட், நான் இந்தத் தயாரிப்புப் பொடிகளை வாங்குவதே இல்லை. முன்னெல்லாம் கரம் மசாலா கூட வீட்டுத் தயாரிப்புத் தான். இப்போ அத்தனை தேவை இல்லை என்பதால் சின்னதாகக் கடையில் வாங்கி வைச்சிருக்கேன். அதுவே ஒரு வருஷம் வருது! :))) ஆனாலும் பல சமயங்களில் பொடி தயாரித்தே சேர்க்கிறேன். அந்த ருசி தனியாத் தான் இருக்கும். ஆனால் இன்றைய அவசர யுகத்தில் யாராலும் தயாரிக்கவும் முடியலை. அடிப்படிப் பொருட்கள் சேர்க்கும் விதமும் தெரியாது. :(

  ReplyDelete
 11. அம்மாவும் இப்படிதான்க்கா பொடியை திரித்து வச்சிருப்பாங்க . பத்மாசினி அம்மா சொன்னது சரிதான் எங்கம்மா எப்பவும் சொல்வாங்க சிக்கு வாசம் வருதுன்னு அதனால் பின்னாளில் மிக்சில பவுடர் செஞ்சு உடனே செய்வாங்க .
  இப்போ நானும் அப்படிதான் தேங்காய் அரைச்சி பொடி போட்டு சாம்பரைதான் செய்றேன் .
  இறுதியில் சொல்லியுள்ள குறிப்புகளும் அருமை ..நாங்க சமையல் டவுட்சும் கேக்கலாமா ??
  இதோ நம்பர்
  1, ஊரில் அம்மா கார குழம்பு வத்த குழம்பு செய்யும்போது ஒரு கெட்டியான கன்சிஸ்டன்சி வரும் தேங்காய் சேர்க்காமலேயே ஆனால் இங்கே அப்படி வரலை என்ன காரணம் ?

  2,அதே போல ஊரில் அம்மா செய்யும் வெண்டைக்காய் குழம்பில் வழுவழுப்பு இல்லா ஆனா நானா செஞ்சா அப்படி ஆகுது ஏன்
  ?

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சல், வெண்டைக்காயை சாம்பாரில் சேர்த்தாலும் சரி, வெறும் குழம்பில் சேர்த்தாலும் சரி, அடியில் தாளித்துக்கொண்டு காய்களைப் போட்டு வதக்கிய பின்னர் புளி ஜலத்தைச் சேர்த்தால் வெண்டைக்காயின் வழவழப்புக் குழம்பில் வராது!

   Delete
 12. காரக்குழம்பு, வற்றல் குழம்பு வகையறாக்களை நன்கு கொதிக்க விட்டாலே போதும். பின்னர் அடுப்பை அணைத்து அடுப்புச் சூட்டிலேயே வைத்திருந்தால் தானே கெட்டியாகிடும். மாவெல்லாம் விடவே வேண்டாம். தேங்காயெல்லாம் அரைத்தும் விட வேண்டாம். நான் எந்தக் குழம்பு, கூட்டு வகையறாக்களுக்கும் மாவெல்லாம் கரைத்து விடுவதே இல்லை.

  ReplyDelete
 13. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். :(

  ReplyDelete
 14. சாம்பார் ஊசிப்போச்சு. வந்து அடுத்த சாம்பாரை செய்யவும்.

  ReplyDelete
  Replies
  1. @ஜேகே அண்ணா, இந்த வெயில் காலத்தில் இன்னுமா அதே சாம்பாரைச் செலவு செய்யாமல் வைச்சிருக்கீங்க! தூக்கிக் கொட்டுங்க!

   Delete