எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, April 30, 2013

கடலைப்பருப்பில் என்ன செய்யலாம்?

திரும்பத் திரும்ப பாசிப் பருப்பிலே மட்டுமே சப்பாத்திக்கு தால் பண்ணி அலுத்துப் போக ஆரம்பிச்சாச்சு.  அவ்வப்போது பயறு, முழு உளுந்து, காராமணி, கொண்டைக்கடலை, பட்டாணி என்று பண்ணினாலும் எல்லாமே அலுக்க ஆரம்பிச்சது.  நேத்திக்கு மாறுதலா இருக்கட்டும்னு கடலைப்பருப்பிலே பண்ணினேன். நல்லாவே இருந்தது.

கடலைப்பருப்பு 200 கிராம்(இந்த அளவில் நான்கு பேருக்கு வரும்) நன்கு களைந்து கொண்டு ஊற வைக்கவும்.

வெங்காயம் பெரிதாக ஒன்று, தக்காளி இரண்டு, பச்சை மிளகாய் 2 இஞ்சி ஒரு துண்டு, மி.வத்தல் ஒன்று, கருகப்பிலை, பெருங்காயம்,சிட்டிகை மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி, வகைக்கு ஒரு டீஸ்பூன், கரம் மசாலாப் பொடி அரை டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.

தாளிக்க, சோம்பு, ஜீரகம், லவங்கப் பட்டை, பெரிய ஏலக்காய், கிராம்பு ஒன்று, தேஜ் பத்தா எனப்படும்மசாலா இலை(விருப்பமிருந்தால்) தாளிக்க எண்ணெய். மேலே தூவ கொத்துமல்லி, புதினா பொடியாக நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன்.

ஊற வைத்த கடலைப்பருப்பை நன்கு குழைய வேக வைக்கவும்.  தேவையானால் குக்கரில் கூட வேக வைத்துக் கொள்ளலாம். கடாயில் அல்லது அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு ஜீரகம், சோம்பு, மி.வத்தல், பச்சை மிளகாய், இஞ்சி மற்ற மசாலா சாமான்களைப் போட்டுத் தாளிக்கவும்.  வெங்காயத்தைச் சேர்த்துப் பெருங்காயம் (விருப்பமிருந்தால்) போட்டு வதக்கவும்.  கருகப்பிலையைச் சேர்க்கவும்.  வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.  தக்காளி வதங்குகையில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத் தூள் சேர்த்துக் கிளறவும்.  தக்காளியும் வெங்காயமும் நன்கு வதங்கியதும் வேக வைத்த கடலைப்பருப்பைச் சேர்த்து உப்புச் சேர்க்கவும். தேவையான நீர் சேர்க்கவும். நன்கு கொதித்துச் சேர்ந்து வரும்போது கரம் மசாலாப் பொடி தூவிக் கீழே இறக்கி, கொத்துமல்லித் தழை, புதினாத் தழை சேர்க்கவும்.



பூண்டு விருப்பமுள்ளவர்கள் ஒன்றிரண்டு பல் பூண்டை உரித்துப் பாதி கொதிக்கையில் சேர்க்கலாம்.  இதை சாதத்தோடும் பஞ்சாப், ஹரியானாவில் சாப்பிடுவாங்க.  நாங்க ஃபுல்கா ரொட்டிக்கு சைட் டிஷாகப்பயன்படுத்தினோம்.

தேவையானால் சாப்பிடும்போது அரை மூடி எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். இது அவரவர்  விருப்பம்.

Tuesday, April 23, 2013

உடம்பெல்லாம் இல்லாட்டியும் இந்தக் கஞ்சி சாப்பிடலாம். :)

பிடிச்சால் சாப்பிடுங்க.  இப்போ எங்க வீட்டிலே கஞ்சி சீசன்.  :))) புழுங்கலரிசிக் கஞ்சி போடறேன். ஐய னு சொல்றவங்க கொஞ்சம் பொறுமையாகக் கேட்டால் கஞ்சியைப் பத்தித் தெரிஞ்சுக்கலாம்.


அரை கிலோ புழுங்கலரிசி, இட்லி அரிசியானாலும் பரவாயில்லை.  அதோடு நூறு கிராம் பாசிப்பருப்பு இரண்டையும் சேர்த்துக் களைந்து நீரை வடிகட்டிக் கொள்ளவும்.  வெறும் வாணலியில் இரண்டையும் வறுக்கவும்.  வாசனை வரும்வரை வறுக்கலாம்.   ஆற வைத்து மிக்சி ஜாரில் போட்டுக் குருணை அல்லது ரவை பதத்துக்குப் பொடித்து ஒரு டப்பாவில் போட்டுக் கொள்ளவும்.  இந்தக் குருணை அல்லது ரவை ஒருத்தருக்கு ஒரு கரண்டி வீதம் எடுத்துக்கொள்ளவும்.

அதுக்கு முன்னால் ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை ஊறவைத்து முளைகட்டிக்கொள்ளவும்.  வெந்தயம் ஊறிய மஞ்சள் நீரைக் கொட்ட வேண்டாம்.  பச்சைக்காய்கள் புடலை, வெள்ளரிக்காய், காரட், பீன்ஸ், கீரை போன்றவை பொடிப்பொடியாக நறுக்கி ஒரு கிண்ணம்.  தேங்காய் கீறியது(விருப்பமானால்) ஒரு டேபிள் ஸ்பூன், பால் ஏதேனும் ஒரு பால் 200 கிராம்.  அல்லது விருப்பமிருந்தால் தேங்காய்ப் பால் ஒரு மூடித் தேங்காயில் இருந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.  உப்பு தேவையான அளவு, பெருங்காயம், மிளகுத் தூள், பச்சை மிளகாய் ஒன்று, ஒரு துண்டு இஞ்சி. தாளிக்க நெய் ஒரு டேபிள் ஸ்பூன், ஜீரகம், கருகப்பிலை. கொத்துமல்லி, புதினா பொடிப் பொடியாக நறுக்கிக் கடைசியில் மேலே தூவ வைத்துக்கொள்ளவும்.  முழுப்பயறு இருந்தாலும் ஊற வைத்து முளைகட்டிச் சேர்க்கலாம்.

புழுங்கலரிசி ரவையை வெந்தயம், முளைகட்டிய பயறோடு இரண்டு கிண்ணம் நீரில் நன்கு கரைய விடவும்.  நன்கு வெந்து கெட்டியாக ஆகும் சமயம் நறுக்கிய காய்களைச் சேர்த்துக் கொஞ்சம் நீரும் பாலும் சேர்க்கவும்.  காய்கள் வெந்து வரும் சமயம் உப்பு, மிளகுத்தூள், பச்சைமிளகாய், இஞ்சி(சிதைத்துக் கொண்டு) சேர்க்கவும். நன்கு கெட்டியாகக் குழைவாக வெந்து வந்ததும், மீதம் இருக்கும்தேங்காய்ப் பால்/ பாலையும் சேர்க்கவும்.  கஞ்சி ரொம்ப கெட்டியாகவும் இல்லாமல், நீர்க்கவும் இல்லாமல் கையால் எடுத்துச் சாப்பிடும் பதத்தில் இருக்க வேண்டும்.  நெய்யில் ஜீரகம், கருகப்பிலை தாளித்துக் கொண்டு கொத்துமல்லி, புதினா தூவிவிட்டுக் கஞ்சியை எலுமிச்சை ஊறுகாய் அல்லது பொடிப்பொடியாக நறுக்கிய மாங்காய் ஊறுகாயோடு சாப்பிடலாம். 

Friday, April 19, 2013

ரொம்ப சாதாரணமான சமையல் குறிப்பு ஒண்ணு!


சூரி சார் உ.கி. பொடிமாஸ் பத்தி கூகிள்+இல் கேட்டிருந்தார்.  நேத்துத் தான் பார்த்தேன். :))) அப்புறமா நேத்தி இணையமும் இல்லை.  விருந்தினரும் வருகை தந்திருந்ததால் உடனடியா எதுவும் எழுத முடியலை.  ஊரிலே இருந்து வந்த அலுப்பு வேறே!  இன்னிக்கு எழுதிடறேன்.


நான்கு பேருக்கான செய்முறைக்குறிப்பு:-

அரை கிலோ உருளைக்கிழங்கு, தேங்காய் மூடி ஒன்றின் துருவல், பச்சை மிளகாய் நான்கு, இஞ்சி ஒரு துண்டு, உப்பு, தாளிக்க கடுகு, உபருப்பு, க.பருப்பு, பெருங்காயத் தூள், கருகப்பிலை, கொத்துமல்லி, எலுமிச்சை மூடி ஒன்று. தாளிக்க எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்.

உருளைக்கிழங்கை வேக வைத்துத் தோலை உரித்துக்கொண்டு (ஹிஹிஹி) உதிர்த்துக் கொள்ளவும்.  உப்புப் பொடி சேர்த்துக் கிளறிக்கொள்ளவும்.  கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, ப.மிளகாய், இஞ்சி, கருகப்பிலை போட்டுத் தாளித்துக் கொண்டு, உப்புப் போட்டுக் கலந்த உருளைக்கலவையைக் கொட்டிக் கிளறவும்.  தேங்காய்த் துருவல் சேர்க்கவும். நன்கு கிளறி விட்டுக் கீழே இறக்கிக் கொத்துமல்லிப்பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.  சற்று ஆறியதும் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.  வத்தல் குழம்போடு அருமையான துணை!




நேத்திக்கு உருளைக்கிழங்கு பொடிமாஸ் செய்தேன்.  நல்லவேளையா சாப்பிடும் முன்னர் படம் எடுக்கத் தோணித்து.  உடனே படம் எடுத்துப் போட்டிருக்கேன். எங்கே? யாரும் கண்டுக்கிறதே இல்லை. :))))

Friday, April 12, 2013

சித்திரை விஷுவுக்கான பாயசம்!



பச்சரிசி அரிசி ஒரு சின்னக் கிண்ணம் எடுத்துக் களைந்து நெய்யில் பொரித்துக் கொண்டு குருணையாக உடைத்துக் கொள்ளவும். தேங்காய் நடுத்தர அளவில் ஒன்று. உடைத்துத் துருவிக் கொள்ளவும்.  கால் கிலோவுக்குக் குறையாமல் வெல்லம்(பாகு) வேண்டும்.  கூடவே இருந்தாலும் நல்லாவே இருக்கும்.  ஏலக்காய்த் தூள், முந்திரிப்பருப்பு, வறுக்க நெய் அரைக்கிண்ணம்.

குருணையாக உடைத்த அரிசியைத் தேவையான நீர் மட்டும் விட்டு  நன்கு கரைய விடவும்.  குழைய வேகும்போது துருவிய தேங்காயில் இரண்டு டேபிள் ஸ்பூன் எடுத்து வைத்துவிட்டு மிச்சத் துருவலை மிக்சியில் போட்டு நன்கு அரைக்கவும்.  பால் எடுக்கவும் தனியாக வைக்கவும்.  இரண்டாம் முறையும் இதே போல் அரைத்துப் பால் எடுக்கவும்.  அந்தப் பாலை வேகும் அரிசியில் சேர்க்கவும்.  மூன்றாம் பால் எடுக்க வருதானு பார்க்கவும். வந்தால் எடுத்து அதையும் வேகும் அரிசியில் சேர்க்கவும்.  நன்கு சேர்ந்து வரும்போது வெல்லத்தூளைச் சேர்க்கவும்.  வெல்ல வாசனை போகக் கொதிக்க விடவும்.  நன்கு கொதித்து வந்ததும், தனியாக வைத்திருக்கும் முதல் பாலைச் சேர்க்கவும்.  நெய்யில் முந்திரிப்பருப்பு வறுத்துப் போட்டுத் தனியாக வைத்திருக்கும் பச்சைத் தேங்காய்த் துருவலையும் ஒருமுறை நெய்யில் பிரட்டிவிட்டுப் பாயசத்தில் சேர்க்கவும்.  பால் எடுத்த சக்கைத் தேங்காய் பயன்படாது.  உங்களுக்குத் தேவையானால் அதையும் இந்தப் பாயசத்திலேயே சேர்க்கலாம்.  ஏலத்தூள் சேர்க்கவும்.  பாயசம் சூடாகச் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.  அதோடு பாயசம் நீர்க்க இருக்கக் கூடாது.  கையால் எடுத்துச் சாப்பிடும் பதத்தில் கெட்டியாக, அதே சமயம் சர்க்கரைப் பொங்கல் போல் ரொம்பக் கெட்டியாகவும் இருக்கக் கூடாது.

பருப்பு உருண்டை மோர்க்குழம்பு!



சாதாரணமாகப் பருப்புருண்டை செய்யும் முறை:

து,பருப்பு ஒரு கிண்ணம், அரைக்கிண்ணம் கடலைப் பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மூன்றையும் களைந்து கல்லரித்து ஒன்றாக ஊற வைக்க வேண்டும். இரண்டு மணி நேரம் ஊறலாம்.

இதற்கு ஐந்து அல்லது ஆறு மி.வத்தல், உப்பு, பெருங்காயம் சேர்த்து  நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொண்டு கருகப்பிலை, கொத்துமல்லி சேர்க்கவும்.  பின் நிதானமாக ஒரு எலுமிச்சம்பழ அளவு உருண்டைகளாக உருட்டிக் கொதிக்கும் நீரில் போட்டும் வேக வைக்கலாம்.  இம்முறையில் கொஞ்சம் மாவு வீணாகும்.  ஆகவே உருட்டிய உருண்டைகளை இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேக வைக்கவும்.  பின்னர் சாம்பாரிலோ, அல்லது மோர்க்குழம்பிலோ கொதிக்க ஆரம்பிக்கையில் சேர்த்துவிட்டுக் கொதிக்க விட்டுக் கீழே இறக்கித் தாளிக்கவும்.  கருகப்பிலை, கொத்துமல்லி சேர்க்கவும்.


மோர்க்குழம்பு.  கெட்டியான புளித்த மோர் ஒரு பெரிய கிண்ணம்.  (உருண்டை தாராளமாய்க் கொதிக்க வேண்டும்) பச்சை மிளகாய் நான்கு அல்லது ஐந்து(விருப்பம் போல்) தனியா ஒரு டேபிள் ஸ்பூன், துவரம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு இரண்டு டீஸ்பூன், மிளகு கால் டீஸ்பூன், தேங்காய்த் துருவல், இரண்டு டேபிள் ஸ்பூன், உப்பு ருசிக்கு ஏற்ப,மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, பெருங்காயம் தாளிக்க கடுகு, கருகப்பிலை, எண்ணெய்.(தே. எண்ணெய் நல்லது)

 முதலில் தனியா, பருப்பு வகைகளை மிளகோடு சேர்த்துக் குறைந்தது ஒன்றரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் பச்சை மிளகாய், தனியா, பருப்பு வகைகள், மிளகு தேங்காய்த் துருவலைச் சேர்த்து நன்கு நைசாக அரைக்கவும்.  மோரில் மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்துக் கொண்டு அரைத்த விழுதைப் போட்டுக் கலக்கவும்.  அடுப்பில் ஏற்றிக் கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பிக்கையில் வெந்த பருப்பு உருண்டைகளை ஒவ்வொன்றாய்ப் போடவும்.  மேலே மிதந்து வரும்.  நன்கு கொதித்துச் சேர்ந்ததும் அடுப்பை அணைத்துக் கீழே இறக்கி எண்ணெயில் கடுகு, கருகப்பிலை தாளிக்கவும்.

இந்தப் பருப்பு உருண்டைகளை சாம்பாரிலும் போட்டுக் கொதிக்க வைக்கலாம்.  தஞ்சை ஜில்லாவில் இதைப் பருப்பு உருண்டை ரசம் என்பார்கள். 

Sunday, April 7, 2013

மழை வேணும்னா மரியாதையா வற்றல் போடுங்க!

வெயில் தாங்கலை.  இருக்கிறதுக்குள்ளே திருச்சியில் தான் ஜாஸ்தி வெயில் போல இருக்கு.  ஆனால் நேத்து, முந்தாநாளெல்லாம் வெளியே போனப்போ நடந்து போனால் கூட சூடு தெரியலை.  வேர்த்து வழியலை. :)) இன்னிக்கு மத்தியானமா வெயில் தாங்காமல், மின்சாரமும் இல்லாமல் இன்வெர்ட்டரில் வர காத்தை அனுபவிக்கிறச்சே, பேசாமா ஏதானும் வடாம், வத்தல் போட்டுடலாமானு தோணித்து.  கொஞ்ச நேரத்துக்கெல்லாம் சூரிய பகவான் மனமிரங்கினார்.  தெற்கே இருந்து குளிர்ந்த காற்று வீச ஆரம்பிச்சிருக்கு. ஹிஹி நாம நினைக்க வேண்டியதுதான்.  குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமே உருவாயிடும்.

அதுக்கு இப்போ என்ன செய்யணும்னு கேட்டீங்கன்னா, உருளைக்கிழங்கில் வற்றல் போட்டுடுவோம்.  வட மாநிலங்களில் இருக்கிறச்சே ஜனவரியில் ஆரம்பிச்சா ஏப்ரல் வரை உருளைக்கிழங்கு ரொம்பவே விலை மலிவாக் கிடைக்கும்.  எல்லார் வீட்டிலும் இந்த வற்றல் தான் போடுவாங்க.  மொட்டை மாடி இல்லாதவங்க வீட்டுக்கு வெளியே கயிற்றுக்கட்டிலில் துணி அல்லது ப்ளாஸ்டிக் ஷீட்டை அல்லது பாயைப்போட்டுக் காய வைப்பாங்க. இதையும் வருஷக் கணக்கா வைச்சுக்கலாம். தேவையான பொருட்களைப் பார்ப்போமா?

உருளைக்கிழங்கு நான்கிலிருந்து ஐந்து கிலோ வரை.  அசந்துடாதீங்க.  எல்லாம் நறுக்கிட்டாக் கொஞ்சமாப் போயிடும்.  கூட உங்க ரங்க்ஸைக் கூப்பிட்டுக்குங்க.  மாட்டேன்னார்னா அன்னிக்கு "நான் தான் சமைப்பேன்!" அப்படின்னு பிடிவாதம் பிடிங்க.  உங்க சமையலைச் சாப்பிடாமல் தப்பிப்பதற்காகவே அவர் ஒத்துப்பார்.  மாமியார், நாத்தனார் இருந்தால் இரண்டு, மூன்று நாட்களுக்கு அவங்களோட ஒத்துழைப்புத் தேவைங்கறதாலே காபி, டீ அப்படினு அப்போப்போ உபசாரம் செய்து வைச்சுக்குங்க. :))))

ஐந்து கிலோ உருளைக்கிழங்கு, தேவையான உப்பு, ஒரு பெரிய வாயகன்ற பாத்திரம்,  ஐந்து கிலோவையும் ஒண்ணாப்போடறாப்போல் வேண்டும்.  கொதிக்க வைக்க நீர்.

நாளைக்குக் காலம்பர வற்றல் போடப் போறீங்கன்னா, இன்னிக்கே எல்லாருமா உட்கார்ந்து பழைய கதைகளைப் பேசிக் கொண்டே உருளைக்கிழங்குகளை நன்கு நீர் விட்டுக் கழுவி விட்டு உருளைக்கிழங்கை வட்ட வட்டமாகச் சீவிக் கொள்ளுங்கள்.  சும்மா இஷ்டத்துக்கு எல்லாம் சீவித் தள்ளக் கூடாது.  வட்டமாய் இருந்தால் தான் நல்லா இருக்கும். சீவித் தள்ளிய வட்டமான உருளைக்கிழங்கு ஸ்ட்ரைக்கர்களை, (சீச்சீ, வால்கள் கலாட்டா நீனைவு) உருளைக்கிழங்கு வட்டங்களை ஒரு பெரிய வாளியில் முக்காலுக்கு நீர் வைத்துக் கொண்டு அதில் போட்டு நன்கு அலசவும்.  உருளைக்கிழங்கின் ஸ்டார்ச் எனப்படும் மாவுச் சத்து அதிலிருந்து போகும் வரை மீண்டும் மீண்டும் அலசவும்.  அலசிய உருளைக்கிழங்கு வட்டங்களை நீரிலேயே மூழ்க வைத்து இரவு பூரா வைக்கவும்.

மறுநாள் காலையில் வாயகன்ற பெரிய பாத்திரத்தில் அரைக்கும் மேல் நீர் வைத்து நன்கு கொதிக்க வைக்கவும்.  தேவையான உப்பைச் சேர்க்கவும்.  நீரில் மூழ்கி இருக்கும் உருளைக்கிழங்கு வட்டங்களை அதில் போட்டு நன்கு கிளறவும்.  அடுப்பை அணைக்கவும்.  அரை மணி நேரம் உருளைக்கிழங்கு அதிலேயே இருக்கட்டும்.  பின்னர் வெந்நீரை வடிகட்டி உருளைக்கிழங்கு வற்றல்களை வெயிலில் காய வைக்கவும்.  நன்கு காய்ந்ததும் எடுத்து ஒரு டப்பாவில் போட்டு நன்கு காற்றுப் போகாமல் மூடி வைக்கவும்.  தேவைப்படும்போது எடுத்துக் கொண்டு எண்ணெயில் பொரித்துக் காரம், பெருங்காயத் தூள் சேர்த்துச் சாப்பிடலாம்.  வட மாநிலங்களில் மாலை தேநீரோடு அநேகமாய் இதுவும் இருக்கும்.

இந்தக் கொதிக்கும் வெந்நீரிலேயே காரத்தைச் சேர்ப்பவர்களும் உண்டு.  மசாலா வாசனை பிடிக்குமெனில் அதையும் சேர்க்கலாம். உருளைக்கிழங்கை இரவு முழுதும் நீரில் மூழ்க வைப்பதால் வற்றல் வெள்ளையாக இருக்கும் என்பதோடு அதில் மிச்சம் இருக்கும் மாவுச் சத்தும் போய்விடும்.  உருளைக்கிழங்கு சாப்பிட்டால் கொழுப்புச் சேரும் என்பதெல்லாம் மாயை.  தாராளமாய்ச் சாப்பிடலாம்.  வயிறு ஒத்துக்கணும்.  குழந்தை ஒல்லியாக இருந்தால் அந்தக் குழந்தைக்கு ஒரு சின்ன உ.கி. வேக வைத்துத் தோலுரித்துக் கொண்டு நடுவில் குழி போல் செய்து அதில் வெண்ணெயை வைத்துக் கொடுக்கவும்.   புஷ்டியாக வளரும் என்பதோடு எலும்புகளுக்கும் பலம் தரும்.

Thursday, April 4, 2013

ஆரஞ்சுப் பழத்திலே என்னெல்லாம் பண்ணலாம்?

எதிர் வீட்டிலே ஆரஞ்சுப் பழம் வாங்கிக் கொடுத்தாங்க.  ஆரஞ்சுப் பழம் உடம்புக்கு ரொம்பவே நல்லது.  எல்லாவகையிலும் நன்மை தரும் பழம் அது.  சர்க்கரை நோய்க்காரங்க கூடச் சாப்பிடலாம். ஒரு ஆரஞ்சுப் பழத்தை உரிச்சுச் சாப்பிட்டேன்.  தோலை எறியலாமானு யோசிக்கையில் அம்மா செய்யும் துவையலும் புளிப்பச்சடியும் நினைவில் வந்தது.  பிறந்த வீட்டோடு சில சமையல் பக்குவங்கள் போயாச்சு.  சிலது இங்கே இவங்களுக்கும் பிடிச்சால் செய்யறது உண்டு.  ஆனால் இந்த ஆரஞ்சுத் தோலில் இன்னும் செய்து காட்டலை.  நார்த்தங்காயில் புளிப்பச்சடி செய்திருக்கேன். வேறே வழியே இல்லைனு கால் ஸ்பூன் போட்டுப்பார்.

இன்னிக்கு ஆரஞ்சுத் தோலில் துவையலும் பச்சடியும் செய்துடலாம்னு ஒரு எண்ணம்.

தேவையான பொருட்கள்: ஆரஞ்சுப் பழத்தின் தோல் ஒரு கிண்ணம், சின்னச் சின்னதாகக் கிள்ளிக் கொள்ளுங்கள் அல்லது நறுக்கிக் கொள்ளுங்கள்.  மி.வத்தல் ஆறிலிருந்து பத்துவரை(அவரவர் காரத்துக்கு ஏற்றாற்போல்) உப்பு, தேவையான அளவு, இஞ்சி(தேவையானால்) ஒரு துண்டு, பெருங்காயம், ஒரு சின்ன அரிநெல்லிக்காய் அளவுப் புளி, கடுகு, உளுத்தம்பருப்பு. வதக்க நல்லெண்ணெய்

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு மிளகாய் வற்றல், பெருங்காயம் வறுத்துத் தனியாக வைக்கவும்.  கடுகு, உபருப்பு வறுத்துத் தனியாக வைக்கவும்.  பின்னர் மிச்சம் எண்ணெய் இருந்தால் அதிலேயே அல்லது தேவைப்பட்டால் எண்ணெய் ஊற்றிக் கொண்டு ஆரஞ்சுத் தோலையும், இஞ்சியையும் (சிதைத்துப் போட்டு) நன்கு சுருள வதக்கவும்.  ஆற விடவும். மிக்சி ஜாரில் மி.வத்தல், புளி, ஆரஞ்சுத் தோல், இஞ்சி, பெருங்காயம், உப்புச் சேர்த்துக் கொஞ்சம் நீர் ஊற்றி அரைக்கவும்  நன்கு அரைத்ததும் தனியாக வைத்துள்ள கடுகு, உபருப்பைச் சேர்த்து ஒரே சுற்றுச் சுற்றி எடுக்கவும்.  கடுகு, உபருப்புச் சேர்த்தால் ரொம்ப அரைக்கக் கூடாது.  சூடான சாதத்தில் துவையலைப் போட்டுக் கொண்டு நல்லெண்ணெய் ஊற்றிச் சாப்பிடவும்.

புளிப்பச்சடி:  ஆரஞ்சுத் தோல் ஒரு கிண்ணம், புளி எலுமிச்சை அளவு ஊறவைத்துக் கரைத்துக் கொள்ளவும், உப்பு தேவையான அளவு, மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, பெருங்காயம், மி.வத்தல் நான்கு, பச்சை மிளகாய் நான்கு, மி.பொடி தேவையானால் ஒரு டீஸ்பூன், வெல்லம் தேவையானால் ஒரு டீஸ்பூன், தாளிக்க, வதக்கத் தேவையான எண்ணெய் ஒரு குழிக்கரண்டியில். நல்லெண்ணெயாக இருத்தல் நல்லது.  கடுகு, வெந்தயம், கருகப்பிலை.


அடிகனமான பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றிக் கொண்டு கடுகு, வெந்தயம், பெருங்காயம், கருகப்பிலை தாளித்துக் கொண்டு மி.வத்தல், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.  ஆரஞ்சுத் தோலையும் பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்த்து வதக்கவும்.  மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்க்கவும்.  நன்கு சுருள வதங்கியதும் புளிக் கரைசலைச் சேர்த்து உப்புச் சேர்க்கவும்.  கொதிக்கவிடவும்.  நன்கு கொதித்துச் சேரும்போது கொஞ்சம் வெல்லம் சேர்க்கவும்.  வெல்லம் கரையும் வரை கொதித்ததும் ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.  இது வாரக்கணக்கில் வீணாகாது.  வாய் அருவருப்பாய் உணரும்போது இதைப் போட்டுக் கொண்டு ஒரு பிடி சாதம் சூடாய்ச் சாப்பிட்டால் போதும். பித்தம் குறையும்.  அதிக உமிழ்நீர் சுரந்தாலோ, உமிழ்நீரே சுரக்காமலோ இருந்தாலோ இது சாப்பிடுவது நன்மை தரும்.

Monday, April 1, 2013

மாவடு போடலாம், வாங்க! நான் போட்டாச்சு!

நேத்திக்குத்/முந்தா நாள்(?) தற்செயலாக ஒரு பெண்கள் மலரை(?) படிக்கையில் மாவடு போடும் விதம் குறித்துச் சொல்லி இருந்தது.  அதிலே நீர் சேர்க்க வேண்டும்னு சொல்லி இருந்தாங்க.  அது தேவை இல்லை.  மாவடு போடும்போதே அதில் சேர்க்கும் உப்பு, மிளகாய் வற்றல், கடுகு, மஞ்சள் ஆகியவற்றில் உள்ள நீரை அதி தாராளமாக விட்டுக்கும்.  போதாதற்கு மாங்காயிலே உள்ள நீர் வேறே.  ஆகவே நீங்க நீரெல்லாம் சேர்க்க வேண்டாம்.

இப்போ மாவடு போடும் விதம் குறித்துப் பார்க்கலாமா?  போடுகிறபடி போட்டால் நீங்க குளிர்சாதனப் பெட்டியிலெல்லாம் வைக்கவே வேண்டாம்.  அதோடு உயர் ரத்த அழுத்தமோ, குறைந்த ரத்த அழுத்தமோ உள்ளவர்கள் கூட ஒன்றிரண்டு மாவடு ஒரு நாளைக்குச் சேர்த்துக்கொள்ளலாம். 

மாவடு உருண்டை இரண்டு கிலோ, அல்லதுகிளி மூக்கு மாவடு இரண்டு கிலோ,  ஐம்பது கிராம் மிளகாய் வற்றல், பச்சை மஞ்சள் கிழங்கு, அநேகமாய் எல்லாரிடமும் இருக்கணும்.  பொங்கலுக்கு வாங்கி இருப்பீங்களே, அதில் சேகரித்தது கூடப் போதும்.  அப்படி மஞ்சள் கிழங்கு இல்லைனால் ஐம்பது கிராம் நல்ல தூள் மஞ்சள் வாங்கிக்கவும்.  கடுகு சுத்தம் செய்து ஐம்பது கிராம், கல் உப்பு  நூற்றைம்பதில் இருந்து இருநூறு கிராம் வரை. (இதுவும் எதிலோ பார்த்ததில் இரண்டு படி உப்புனு போட்டிருந்தது.  மயக்கமே வந்து விட்டது.) உப்பு சரியாகப் போட்டாகணும். இல்லைனு சொல்லலை.  அதுக்கும் ஓர் அளவு இருக்கு.  முக்கியமாய் ஊறுகாயைப் போட்டு வைக்க ஜாடி அல்லது கண்ணாடி பாட்டில் பெரியதாக வேண்டும்.  கண்ணாடிக் கடைகளில் கேட்டால் நல்ல பெரிய பாட்டிலாகக் கிடைக்கும்.  வாய் அகலமாக இருக்கணும்.  தினம் தினம் கிளறி விடறாப்போல் இருக்கட்டும்.  விளக்கெண்ணெய் ஐம்பது கிராம்.

இப்போ மாவடு வாங்கிட்டீங்களா?  மாவடுவை ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தில் போட்டு நன்றாக அலசிக்கோங்க.  காம்புகள் இருந்தால் பரவாயில்லை.  ரொம்பப் பெரிசாக இருந்தால் மட்டுமே அகற்றவும்.  இல்லைனால் வேண்டாம்.  அலசிய மாவடுவை நல்ல வடிகட்டியில் போட்டு வடிகட்டிக்கோங்க.  மிளகாய் வற்றல், கடுகு, மஞ்சளை மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.  கொஞ்சம் கொரகொரப்பாய் இருந்தாலும் பரவாயில்லை.  உப்பை அப்படியே வைச்சுக்கவும்.

இப்போ மாவடு போடும் பாத்திரம்/ஜாடி/பாட்டிலை எடுத்துக்கவும்.  அடியில் ஒரு கை உப்பைப் போடவும்.  அரைச்சு வைச்ச மிளகாய், கடுகு, மஞ்சள் கலவையையும் அதே போல் போடவும்.  இப்போ அலசி வைச்சிருக்கும் மாவடுவை அதன் மேல் போடவும்.  இரண்டு மூன்று கை மாவடு போடலாம்.  பின்னர் மீண்டும் அதே போல் உப்பு, மஞ்சள் கலவை, மாவடு போடவும். இப்படியே போட்டுக் கடைசியில் மிஞ்சிய மாவடுகளைப் போட்டு அதன் மேல் மிச்சம் இருக்கும் கலவையையும், உப்பையும் போட்டுவிட்டு ஒரு தட்டால் அல்லது ஜாடி மூடியால், அல்லது பாட்டில் மூடியால் மூடவும்.  தனியாக வைக்கவும்.  மறுநாள் காலையில் குளித்துவிட்டு ஒரு மரக்கரண்டியால் நன்கு கிளறவும். லேசாக ஜலம் விட ஆரம்பிச்சிருக்கும்.  இரண்டாம் நாள், மூன்றாம் நாள் மாவடு பாதி முழுகும் வண்ணம் ஜலம் விட்டிருக்கும்.  ஐந்து நாட்களில் அனைத்து மாவடுகளும் ஜலத்தில் முழுகிச் சுருங்க ஆரம்பிச்சிருக்கும்.

ஒரு சிலர் மாவடு சுருங்கக் கூடாதுனு சொல்றாங்க.  அதுக்காக ஐஸெல்லாம் போட்டு வைப்பாங்க. குளிர்சாதனப் பெட்டியிலும் வைப்பாங்க.  இதெல்லாம் செய்தால் மாவடு வெளியே அரை நாள் இருந்தாலும் அழுக ஆரம்பிக்கும்.  மாவடு எத்தனை சுருங்குதோ அத்தனைக்கு உப்புப் பிடிச்சு, உறைப்பும் ஏறி இருக்குனு அர்த்தம்.  இப்படி இருக்கும் மாவடு ஊறுகாய் ஒரு வருஷம் ஆனாலும் கெட்டுப் போகாது. ஐந்து நாட்கள் ஆனதும் விளக்கெண்ணெயை மாவடுவின் மேலே ஊற்றி நன்கு கிளறி விடவும்.  மாவடு சாப்பிடுவதன் சூட்டை விளக்கெண்ணெய் சமனப் படுத்துவதோடு, வயிற்றுக்கும் நல்லது.  வெளிநாடுகளில் அல்லது இங்கேயே கடையில் வினிகர் ஊற்றிப் பதப்படுத்துவதை விட இது இன்னமும் பயனுள்ளது.  ஊறுகாய் கெட்டுப் போகாது.


சரி, மாவடு எல்லாம் தீர்ந்து போச்சு, இந்த ஜலத்தை என்ன பண்ணறது?  கோபமா வருதா?  கவலை வேண்டாம்.  ஜலம் எவ்வளவு இருக்குனு பார்த்துக் கொண்டு அதுக்கு ஏற்றாற்போல் பச்சைச் சுண்டைக்காய் அரைகிலோ அல்லது ஒரு கிலோ வாங்கி நன்கு கீறி மாவடு ஜலத்தில் ஊற வைக்கவும்.  நான்கைந்து நாட்கள் ஊறிய பின்னர் வெயிலில் உலர்த்தவும். சுண்டைக்காய் வற்றலை வறுத்துச் சாப்பிட்டால் அப்புறமா விடவே மாட்டீங்க! :))))