எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, September 7, 2025

புளிக்காய்ச்சல், புளியஞ்சாதம் வகைகள்!

 முதல்லே கோயில் புளியோதரைக்குப் புளிக்காய்ச்சல் செய்யறதைப் பத்திப் பார்ப்போம்.  கோயில்னு இல்லை;  பொதுவாகவே நிவேதனம் செய்யும்  உணவுகளில் பாரம்பரியமாக வரும் மிளகுக் காரமே சேர்க்கப்படும்.  உதாரணமாக ஆஞ்சநேயருக்கான வடைமாலைக்கு உள்ள வடை, புளியோதரை போன்றவற்றில் மிளகாய் வத்தல், பச்சை மிளகாய் சேர்ப்பதில்லை.  தயிர்சாதம் என்றால் கூடப் பெருங்காயம் கூடப் போட மாட்டார்கள்.  பாலில் குழைய வேக வைத்து வெண்ணெய் சேர்த்து, சுக்குத் தட்டிப் போட்டு அல்லது இஞ்சி, கருகப்பிலை போட்டுக் கடுகு மட்டும் தாளித்திருப்பார்கள்.  ஆகவே இந்தக் கோயில் புளிக்காய்ச்சலுக்கும் மி.வத்தல் எல்லாம் வேண்டாம்.

நூறு கிராம் புளி, தேவையான உப்பு, மஞ்சள் பொடி, நல்லெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன்.  மிளகு இரண்டு டீஸ்பூன் வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து கொள்ளவும்.  ஒரு டீஸ்பூன் வெந்தயம் வெறும் வாணலியில் வறுத்துத் தனியாகப் பொடி செய்து கொள்ளவும்.

தாளிக்க:  கடுகு, கடலைப்பருப்பு/கொண்டைக்கடலை(கறுப்பு)/வேர்க்கடலை, இவை ஏதானும் ஒன்று அல்லது கொஞ்சம் போல் கடலைப்பருப்புப் போட்டுவிட்டு, வேர்க்கடலை தோல் நீக்கி வறுத்துச் சேர்க்கலாம். கருகப்பிலை இரண்டு ஆர்க்கு.  தாளிக்க நல்லெண்ணெய்,  சாதத்தில் கலக்க ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்.

இப்போது புளியை நன்கு கரைத்துக் கொண்டு கெட்டியாக எடுத்துக்கொள்ளவும்.  உருளி அல்லது கல்சட்டி இருந்தால் நல்லது.  இல்லை எனில் நீங்கள் சமைக்கும் ஏதேனும் ஒரு அடி கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெயை ஊற்றவும்.  நல்லெண்ணெய் காய்ந்ததும்  மஞ்சள் தூளைச் சேர்த்து, புளிக்கரைசலை ஊற்றவும்.  உப்புச் சேர்க்கவும்.  புளிக்கரைசல் நன்கு கொதித்துக் கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.  பேஸ்ட் மாதிரி ஆனதும் கீழே இறக்கி வைக்கவும்.  இதை முதல் நாளே பண்ணி வைத்துக்கொள்ளலாம்.

மறு நாள் ஒரு ஆழாக்கு அல்லது 200கிராம் அரிசியைப் பொலபொலவென சாதம் ஆக்கிக் கொள்ளவும்.  சாதத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணையை ஊற்றிக் கலக்கவும். அரை  டீஸ்பூன் உப்புச் சேர்க்கவும்.  புளிப் பேஸ்டையும் சாதத்தில் தேவையான அளவு போடவும்.  இந்த அளவுக்கு ஒரு டேபிள் ஸ்பூன் பேஸ்ட் சரியாக இருக்கும்.  நன்கு கலந்ததும் மிளகுபொடி, வெந்தயப் பொடி சேர்க்கவும்.

இப்போது கடாயில் நல்லெண்ணெய் வைத்துக் காய்ந்ததும், கடுகு, க.பருப்பு, வேர்க்கடலை அல்லது முந்திரிப்பருப்புப் போட்டு வறுக்கவும்.  இறக்குகையில் கருகப்பிலையைச் சேர்க்கவும்.  தாளிதத்தைத் தயாராய் இருக்கும் சாதத்தில் கொட்டிக் கலக்கவும்.  அரை மணி நேரம் நன்றாய் ஊறியதும் சுவாமிக்கு நிவேதனம் செய்து விட்டுப் பரிமாறவும்.  பெருமாள் கோயில் புளியோதரை தயார்.

அடுத்தது புளிக்காய்ச்சல் வீடுகளில் தயாரிக்கும் இரு முறைகளும், பச்சைப் புளியஞ்சாதம் தயாரிப்பு முறையும்.  நாளை வரை காத்திருக்கவும்.

சாதம் வடிக்கையிலேயே புளியைக் கரைத்து ஊற்றி உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடியைப் போட்டுப் பின்னர் தாளிதம் சேர்த்தும் புளியஞ்சாதம் தயாரிப்பது உண்டு. அரிசியைச் சாதமாக வடிக்கையில் பாதி வேகும்போதே நீர் அதிகம் இருந்தால் எடுத்து விட்டு அதற்குப் பதிலாகப் புளிக்கரைசலைச் சேர்த்து உப்பு, பெருங்காயம், மஞ்சள் பொடி சேர்த்துக் கொண்டு அரிசியைப் பொல பொலவென வடித்துக் கொண்டு பின்னர் நல்லெண்ணெயில் முதலில் மி.வத்தலைக் கருக வறுத்துக் கொண்டு அதிலேயே கடுகு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை அல்லது முந்திரிப்பருப்புப் போட்டுக் கொண்டு கருகப்பிலை சேர்த்துச் சாதத்தில் கொட்டிக் கிளற வேண்டும். இது புளிக்காய்ச்சல் செய்யாமல் புளியோதரை தயாரிக்கும் விதம். இது எல்லோருக்கும் பிடிக்குமானு சந்தேகம் தான். இன்னொரு முறை அப்போது தான் வடித்த சாதத்தைத் தாம்பாளத்தில் கொட்டிவிட்டுப் பின்னர் அதில் புளிஜலம்/தாளிப்புச் சேர்த்துக் கொண்டு சாதத்தைக் குவித்து மூடி விட்டுப் பின்னர் அரை மணி கழிச்சு நன்கு கலந்து விட்டும் தயாரிக்கலாம்.

18 comments:

  1. புளிக்காய்ச்சல் செய்து வைத்துக் கொண்டு அவ்வப்போது பயன்படுத்துவது இன்னும் பல வீடுகளில் தொடர்கிறது. உங்கள் குறிப்புகளும் நன்று. தொடரட்டும் உங்கள் சமையல் குறிப்புகள்.

    ReplyDelete
  2. புளிக்காய்ச்சல் செய்து, அதனை சாதத்தில் கலப்பதுதான் எங்கள் வீட்டில் வழக்கம்.

    சமீபத்தில் மனைவி செய்திருந்தார். ருசியோ ருசி. திரும்ப இன்னொருநாள் செய்யச் சொல்லிச் சாப்பிட்டேன். புளிக்காய்ச்சலை, சூடான பொலபொல சாதத்தில்தான் நல்லெண்ணெயுடன் கலக்கணும். புளிக்காய்ச்சல் இருக்கே என்று ஆறின சாதத்தில் கலந்தால் நல்லா இருக்காது

    ReplyDelete
    Replies
    1. ரொம்பச் சூடான சாதத்தில் கலந்தால் சமயங்களில் உதிராக வராது நெல்லை. சேர்ந்துக்கும். மற்றபடி புளிக்காய்ச்சல் செய்தே நாங்களும் புளியோதரை பண்ணுவோம்.

      Delete
  3. நாங்க யாத்திரை போன்ற பயணங்களில் புளியோதரை சாப்பிடுவதில்லை. காரணம் வயிறுக்கு ஒத்துக்கொள்ளாது என்று (பொதுவா யாத்திரையில் இதுவும் ஒரு உணவாக வரும்).

    ReplyDelete
    Replies
    1. நாங்க பெரும்பாலும் குழுவாக யாத்திரை போனது அஹோபிலம், கயிலை யாத்திரை, ஐஆர்டிசி மூலம் பாரத் தர்ஷன் யாத்திரை போன்ற மிகச் சிலவே. பத்ரிநாத் கூடத் தனியாத் தான் போனோம். ஆகவே எங்கள் குழுவில் எல்லாம் புளியோதரை எல்லாம் போட்டதாக நினைவில் இல்லை. வழக்கமான சாம்பார், ரசம், மோர், கறி, கூட்டுத் தான் சாப்பிட்ட நினைவு.

      Delete
  4. நீங்க எழுதியிருக்கும் விதத்திலேயே பசி உண்டாகிறது. ஆனால் இன்று மதியம் 12 மணிக்கு மேல் சாப்பாடு கிடையாது, சந்திர கிரஹணம் என்பதால். இனி நாளைதான் சாப்பாடு

    ReplyDelete
    Replies
    1. இங்கேயும் இரவு ஏழரைக்கே தொடங்கியதால் நாங்களும் கடைப்பிடித்தோம். காலை எழுந்து குளிச்சதும் தான் காஃபி.

      Delete
  5. ​இரண்டு பேருக்கு வேண்டி இவ்வளவு கஷ்டப்படாமல் நாங்கள் திடீர் புளியோதரை பேஸ்ட் வாங்கிக் கொள்கிறோம். இப்போ கூட ஆச்சிக்கு ஆன்லைனில் புளியோதரை பேஸ்ட், பிசி பேலா பாத் பேஸ்ட் கோங்குரா, நார்த்தங்காய் ஊறுகாய் ஆர்டர் போட்டிருக்கிறேன்.

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. We avoid purchasing of Aachi products. Will purchase Sakthi once in a way. otherwise homemade only.

      Delete
    2. கடைகளில் வாங்கும் புளியோதரை மிக்ஸ் நம் ருசிக்கு ஏற்ப இருப்பதில்லை.  நாமே வீட்டில் நம் வாசனைக்கு, ருசிக்கு செய்துகொள்வதே சிறந்தது!

      Delete
    3. டிட்டோ. கடைகளில் அந்தச் சுவை இருக்காது. மிக்ஸ். வீட்டில் கொஞ்சமாகச் செய்து கொள்ளலாம். அத்தனை சிரமம் எதுவும் இல்லை.

      கீதா

      Delete
  6. எவ்வளவோ புளியோதரைகள் சாப்பிட்டிருக்கிறேன்.  90 களில் சுகுமார் செய்த புளிக்காய்ச்சல் போல நாக்கு அப்புறம் சுவையை சந்தித்ததில்லை. 

    எல்லாம் சரிவிகிதத்தில் கலந்து பார்க்கவே கவர்ச்சியாய் அருமையாக இருக்கும். 

    இப்போது அவருக்கு 76 வயதாகிறது.  அவர் சொல்லி அதேபோல யார் (நான், அவர் மகன், பாஸ்) செய்தாலும் சரி, அவரே இறங்கி செய்தாலும் அந்த பழைய கைப்பக்குவம் வரவில்லை. 

    காரணம் அவர் அப்புறம் அதில் சில மாறுதலான சோதனை முயற்சிகளை மேற்கொண்டு, அதில் பழகி, இதை மறந்து விட்டார்.

    ReplyDelete
    Replies
    1. பொதுவாகவே சில மாற்றங்கள் தானாக ஏற்பட்டு விடுகின்றன. நமக்கே ஏன் எனப் புரிவதில்லை.

      Delete
  7. தரமான புளியோதரை கிடைக்காமல் எதையோ அடிக்கடி சுவைக்கும் சந்தர்ப்பமே வருவதால் அதன் மீதான பற்று குறைந்து வருகிறது!

    ReplyDelete
    Replies
    1. புளியோதரை எல்லாம் வெளியில் வாங்கிச் சாப்பிட்டு வருஷங்கள் ஆகின்றன. ஆகவே அதைப் பற்றிச் சொல்லத் தெரியவில்லை.

      Delete
  8. அக்கா நம் வீட்டிலும் புளிக்காய்ச்சல்தான், மகனுக்குச் செய்து அனுப்புவது இதோ இப்போது கூட செய்ய வேண்டும்.

    இரண்டு வகை ஒன்று எள்ளு போட்டு இன்னொன்று எள்ளு போடாமல் திருக்குறுங்குடி கோயில் வகை. செய்ய வேண்டும்.

    அக்கா திருக்குறுங்குடி கோவிலில் புளியோதரையில் மிளகாய் கிள்ளிப் போட்டுத்தான் செய்வது வழக்கம். நம் வீட்டில் அப்ப, யுகாதிக்குக் கோவிலில் மண்டகப்படி நம் வீட்டு உபயம். அப்ப பெருமாளுக்கு அப்படிச் செய்து அதை அப்பா வீட்டிற்குக் கொண்டு வருவார்.

    நான் அந்த ராமானுஜம் மாமாவிடம் தான் கற்றேன் செய்யும் முறை. அந்தக் கோவில் புளியோதரை அத்தனை ருசியாக இருக்கும்.

    கீதா

    ReplyDelete