எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, September 11, 2025

புளிக்காய்ச்சல் செய்முறைகள்!

 இது நிறையத் தரம் எழுதி ஆச்சு. இருந்தாலும் மீண்டும் போடுகிறேன்.

வீடுகளில் செய்யும் புளிக்காய்ச்சல், இதை இரு முறைகளில் செய்யலாம்.  ஒன்று மிளகாய் மட்டுமே தாளித்துச் செய்வது. இன்னொன்று தாளிப்பில் மிளகாயைக் குறைத்துக் கொண்டு, வறுத்துப்பொடி செய்து சேர்ப்பது.  முதலில் மிளகாய் தாளிப்புப் புளிக்காய்ச்சல்.

தேவையான பொருட்கள்:  புளி 200 கிராம், மி.வத்தல் காரம் உள்ளதானால் 10 முதல் 12 வரை. வெந்தயம் ஒரு டீஸ்பூன் வறுத்துப் பொடி செய்தது.  உப்பு தேவையான அளவு, மஞ்சள் பொடி ஒரு டீஸ்பூன். நல்லெண்ணெய், ஒரு சின்னக் கிண்ணம் அல்லது குறைந்த பக்ஷமாக நூறு எண்ணெய். தாளிக்கக் கடுகு, கடலைப்பருப்பு, கொண்டைக்கடலை என்றால் முன்னாடியே ஊற வைத்துக்கொள்ளவும்.  வேர்க்கடலை எனில் அப்படியே தாளிப்பில் போடலாம்.  கருகப்பிலை. பெருங்காயம்.

புளியைக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்.  உருளி அல்லது கல்சட்டி அல்லது அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றிக் காய வைக்கவும்.  காய்ந்ததும் முதலில் மிளகாய் வற்றலை இரண்டாகக் கிள்ளிப் போடவும். மிளகாய் நன்கு கறுப்பாக ஆக வேண்டும்.  அதன் பின்னர் கடுகு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை அல்லது ஊறிய கொண்டைக்கடலையைப் போடவும்.  அனைத்தும் நன்கு வறுபட்டதும், கருகப்பிலை சேர்த்துக் கரைத்து வைத்த புளிக்கரைசலை ஊற்றவும்.  நன்கு  கொதிக்க வேண்டும்.  கொதித்து எண்ணெய் பிரிந்து வருகையில் வறுத்த வெந்தயப் பொடியைச் சேர்க்கவும்.  பின் கீழே இறக்கவும். 

இதை நேரிடையாகச் சாதத்தில் போட்டுக் கலந்து விடலாம்.  தனியாக சாதத்தில் தாளிப்பு தேவை இல்லை.

வறுத்துப் பொடி செய்து போடும் முறை: மேலே சொன்ன அளவுக்கு எல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.  தாளிப்பில் இருந்து எல்லாவற்றுக்கும் அதே சாமான் தான், கூடுதலாகச் செய்ய வேண்டியது.  ஒரு டீஸ்பூன் எள், ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் வெந்தயம் ஆகியவை வெறும் வாணலியில் வறுத்துப்பொடி செய்து கொள்ளவும்.  இதைத் தவிர தனியா ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் வறுக்கவேண்டும்.  அதோடு பெருங்காயத்தையும் வறுத்துக் கொண்டு மிளகாய் வற்றலில் நாலைந்தை மட்டும் தாளிப்புக்கு வைத்துக் கொண்டு மிச்சத்தை எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும். மிளகாய், தனியாவையும் பெருங்காயத்தோடு சேர்த்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.  தேவைப் பட்டால் வெல்லத்தூள்  ஒரு டேபிள் ஸ்பூன். வெல்லம் பிடிக்காதவர்கள் போட வேண்டாம்.

புளியைக் கரைத்துக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வைக்கவும்.  பின்னர் கடாயில் மேலே சொன்னபடி  முதலில் மிளகாயைத் தாளிக்க வேண்டும்.  இம்முறையில் தாளித்த மிளகாய் நாலைந்து தான் இருக்கும்.  அவை கறுப்பாக ஆனபின்னர் மற்றவற்றைத் தாளித்துப்புளிக்கரைசலை ஊற்றவும்.  கொதிக்க வேண்டும்.  எண்ணெய் பிரிந்து வருகையில் வறுத்த பொடிகளைச் சேர்க்கவும்.  ஒரு கொதி விட்டதும் கீழே இறக்கவும்.  வெல்லம் சேர்ப்பதானால் பொடிகளைச் சேர்க்கும்போதே போட்டு விடலாம்.

அடுத்துப் பச்சைப் புளியஞ்சாதம் என்னும் திடீர்த் தயாரிப்பு.  வீட்டுக்குத் திடீரென யாரோ வந்துடறாங்க.  சாம்பார் , ரசம் ஒண்ணும் வேண்டாம்னு சொல்றாங்க.  புளியோதரைனா சாப்பிடறதாச் சொல்றாங்க. என்ன பண்ணலாம்னு யோசிப்போம் இல்லையா?

ஆழாக்கு அரிசியைக் களைந்து கொள்ளவும்.  தேவையான தண்ணீர் இரண்டு கிண்ணம் எனில் ஒரு கிண்ணம் தண்ணீர் மட்டும் சேர்த்துக் குக்கரிலோ அல்லது வேறு சாதம் வடிக்கும் முறையிலோ வேக வைக்கவும்.  அரை வேக்காடு வெந்திருக்கும்.  இப்போது எலுமிச்சை அளவுப் புளியை எடுத்துக் கரைத்து ஒரு கிண்ணம் வரும்படி எடுத்துக்கொள்ளவும்.  அரை வேக்காடு வெந்திருக்கும் சாதத்தில் இந்தப்புளிக்கரைசலை ஊற்றி, ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய், உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்க்கவும்.  அரிசியை நன்கு வேக விட வேண்டும்.  சாதம் உதிர் உதிராக ஆனதும் பாத்திரத்தில் இருந்து எடுத்து ஒரு தாம்பாளத்தில் பரத்திக் கொள்ளவும்.

 இரண்டு டீஸ்பூன் வறுத்த மிளகாய், கொத்துமல்லிப்பொடியுடன், கடுகு, வெந்தயம், எள் வறுத்த பொடியையும் ஒரு டீஸ்பூன் போட்டுக் கலக்கவும்.  பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் வைத்துக் கொண்டு கடுகு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, ஒன்றிரண்டு மிளகாய்(முதலில் போட்டுக் கறுப்பாக்கியது), கருகப்பிலை, தேவைப்பட்டால் மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்துத் தாளிதம் செய்து சாதத்தில் கலக்கவும்.  இது ஊற ஊற நன்றாக இருக்கும். புளிக்காய்ச்சலே செய்யாமல் செய்யும் விதம் இது.  திடீரென வீட்டில் சமாராதனை, வேறு நிவேதனம் கோயில்களில் கேட்டால் இம்முறையில் வெண்கலப்பானை அல்லது உருளி அல்லது ரைஸ் குக்கர் போன்றவற்றில் வைத்துச் செய்து விடலாம்.

4 comments:

  1. வீட்டில் இன்னும் என் கையால் நான் புளிக்காய்ச்சல் செய்ததில்லை.  ஒருமுறை முயற்சித்து பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்!

    ReplyDelete
  2. புளிக்காய்ச்சல்்செய்முறை நன்று. அடுத்து மிளகுப் புளியோதரை வருமா?

    ReplyDelete
  3. பச்சைப் புளியஞ்சாதம் சாப்பிட்ட அனுபவம் இல்லை.

    புளியோதரைக்கு கொண்டைக்கடலை நல்லா இருக்குமா? சிலர் முந்திரி சேர்க்கிறார்கள். அது எனக்கு ருசிப்பதில்லை.

    ReplyDelete
  4. கீதாக்கா இப்படியேதான் நம்ம வீட்டிலும் இந்த இரண்டு முரையும் செய்வதுண்டு. பொதுவாக எள் சேர்க்காமல். சிலப்போ எள் சேர்த்து.

    இந்த முறை மகனுக்கு இரண்டும் செய்ய லாம் என்றிருக்கிறேன். 15 ஆம் தேதிக்கும் பிறகு கொஞ்சம் பிஸி. எல்லாம் தயாரிக்க வேண்டும். ஆனால் பார்சல் இல்லை. பார்சல் அனுப்பணும்னா 50 % டாரிஃப் கட்டணும். மருமகளிடம் கொடுத்து அனுப்ப. கூடவே சில பொடிகளும்.

    கீதா

    ReplyDelete