எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, February 18, 2021

பச்சை மஞ்சள் தொக்குச் சாப்பிட்டுப் பாருங்க!

 நாங்க முதல் முதல் அம்பேரிக்கா போயிருந்தப்போப் பையர் பச்சை மஞ்சள் ஊறுகாய் வாங்கி வைச்சிருந்தார், அங்கே கிடைத்த ஆலு (உ.கி.) பராத்தாவோட சாப்பிட நன்றாக இருந்தது. ஒரு மாதிரியா எப்படிப் போட்டிருப்பாங்கனு புரிஞ்சு இங்கே வந்ததும் அநேகமா ஒவ்வொரு வருஷமும் சங்கராந்திக்கு வாங்கும் மஞ்சள் கிழங்கில் போட்டுப் பார்ப்பேன். உடனடியாகச் செலவும் செய்துடுவேன். இப்போத் தான் சமீபத்தில்  இந்த மஞ்சள் தொக்கு பற்றித் தெரிய வந்தது. இதுக்குத் தேவையான பொருட்கள்



பச்சை மஞ்சள் கால் கிலோ /தோல் சீவிக்கொண்டு துருவிக் கொள்ளவும்.



நல்லெண்ணெய் கால் கிலோ

மிளகாய்ப் பொடி ஒரு மேஜைக்கரண்டி

உப்பு தேவைக்கு

பெருங்காயப் பொடி ஒரு தேக்கரண்டி

கடுகு தாளிக்க இரண்டு தேக்கரண்டி


வறுத்துப் பொடிக்க

மி.வத்தல் சுமார் 25 (காரம் அதிகம் உள்ள மிளகாய் எனில் 10,15 போதும்.) நான் காரப்பொடி தான் உபயோகித்தேன். 

காரப்பொடி எனில் காரமாக இருந்தால் 5 தேக்கரண்டி. காரம் இல்லை எனில் ஒரு மேஜைக்கரண்டி

 மிளகாய் வற்றலை வறுத்துப் பொடிக்கவில்லை எனில் ஒரு மேஜைக்கரண்டி கடுகு, ஒரு மேஜைக்கரண்டி வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும்.



வறுத்துப் பொடித்த வெந்தயம், கடுகுப்பொடி. இது ஊறுகாய் விரைவில் வீணாகாமல் இருக்கப் போடுகிறோம். இதுக்கு மஞ்சள் பொடி தேவை இல்லை. கடைசியில் எலுமிச்சைச் சாறு சுமாராக 3,4 பழங்களின் சாறு தேவைப்படும். நல்ல சாறுள்ள பழம் எனில் 3 போதும். நான் 3 பழங்களின் சாறைத்தான் பிழிந்து சேர்த்தேன்.

மஞ்சளைத் துருவிக் கொண்டு அடுப்பில் வாணலியை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றவும். 



எண்ணெய் சூடானதும் கடுகைப் போட்டுப் பொரிந்ததும் பெருங்காயப் பவுடரைச் சேர்க்கவும். துருவிய மஞ்சளைச் சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது நேரம் மஞ்சள் வதங்க வேண்டும். பின்னர் அதில் தேவையான உப்பு, மிளகாய்ப் பொடி சேர்த்து மீண்டும் வதக்கவும். மிளகாய் வற்றலைக் கடுகு, வெந்தயத்தோடு சேர்த்து வறுத்துப் பொடித்து வைத்திருந்தால் அதைச் சேர்க்கலாம். 



நான் கடுகு, வெந்தயப் பொடி மட்டும் சேர்த்துத் தயார் செய்து வைத்ததால் மஞ்சள் துருவல் கொஞ்சம் வதங்கியதும் உப்பு, மிளகாய்ப் பொடியைச் சேர்த்துக் கிளறினேன். அது கொஞ்சம் வதங்கியதும் கடுகு, வெந்தயப் பொடியைச் சேர்த்துக் கிளறி விட்டுப் பின்னர் எலுமிச்சைச் சாறைச் சேர்த்தேன். 



பின்னர் எண்ணெய் பிரியும் வரை வதக்கிப் பின் ஆற வைத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைக்கலாம். சிலர் வெல்லம் சேர்ப்பார்கள். இது அவரவர் வீட்டு வழக்கம், ருசியைப் பொறுத்தது. சின்னக் கட்டி வெல்லம் எலுமிச்சைச் சாறைச் சேர்க்கும்போது போடலாம். வெல்லம் நன்கு கரையும் வரை வதக்கிய பின்னர் ஆற வைத்து எடுத்து வைக்கவும். இதற்கு வினிகர் போன்ற எந்தப் பாதுகாப்பு உபகரணங்களும் தேவை இல்லை. மஞ்சளைப் பொடியாக நறுக்கியும் ஊறுகாய் போடலாம்.அதை நாளை போட்டுப் பின்னர் பகிர்கிறேன்.



ஊறுகாய் தயார் நிலையில். கொஞ்சம் காரம். ஏனெனில் நான் வாங்கிய மிளகாய்த்தூள் கொஞ்சம் காரமானதாகவே இருக்கிறது. ஆகவே ருசி பார்த்த பின்னர் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கிளறி வைத்தேன்.  மோர் சாதத்துக்குத் தொட்டுக்கொள்ள நன்றாக இருந்தது. இதைச் சப்பாத்தி, தேப்லா, பராத்தா போன்றவற்றுடனும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

23 comments:

  1. சுவையான குறிப்பு.  இதுபோல பச்சை மஞ்சளில் இதுவரை எதுவுமே முயற்சித்ததில்லை.  பாஸ் கிட்ட சொல்லிப் பார்க்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், பச்சை மஞ்சள் வயிற்றுக்கு நல்லது. கொஞ்சமாய்ப் பண்ணிப் பாருங்க.

      Delete
  2. கடுகு அரைத்துப் போட்டால் ஆவக்காய் ஊறுகாய் வாசனை வருமோ... கசக்காதோ...

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் கசக்காது. நான் இத்தனை பொடி அரைத்து வைத்திருப்பதைப் பார்த்துக் கேட்கறீங்களோ? இந்தத் தொக்குக்குத் தேவையானதைப் போட்டுட்டு மிச்சத்தை வைச்சிருப்பேன். அவ்வப்போது மாங்காய்த் துண்டம் மாங்காய் ஊறுகாய் போடும்போது அதற்கும் சேர்ப்பேன். எல்லா ஊறுகாய்களிலும் இது தான் ஊறுகாய் வீணாகாமல் இருப்பதற்குச் சேர்க்க வேண்டியது.

      Delete
  3. நன்றாக இருக்கிறது துளி வெல்லம் சேர்ப்பது உப்பு காரம் யாவற்றையும் சமன்செய்து ருசியாக இருக்கும் பசு மஞ்சளில் இதுவரை யாரும் செய்து இருக்க மாட்டார்கள் புதுமையாக இருக்கும் நல்ல தொக்கு அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க அம்மா, நமஸ்காரங்கள். வெல்லம் சேர்த்தேன். மாமியார் வீட்டில் கட்டாயமாய்ச் சேர்ப்பார்கள். சமையலிலும் தினசரி வெல்லம் உண்டு. சாம்பாரெல்லாம் பாயசமாக இருக்கும். புளிக்காய்ச்சலுக்கு நான் கொஞ்சம் சேர்ப்பேன். தோசை மிளகாய்ப் பொடிக்கும் கொஞ்சம் சேர்ப்பேன்.

      Delete
  4. பச்சை மஞ்சள் தொக்கு செய்முறை மிக அருமையாச் சொல்லியிருக்கீங்க. படங்களும் நல்லா எடுத்துப் போட்டிருக்கீங்க (பொதுவா உங்க சமீப கால ஸ்டாண்டர்டுக்கு, தொக்கு பாட்டிலையும், காலியாக் கிடக்கும் இலுப்புச் சட்டியையும்தான் போட்டிருக்கணும், படம் எடுக்க மறந்துவிட்டேன் என்ற கேப்ஷனோடு)

    இப்போ எங்க பச்சை மஞ்சள் கிடைக்கும்? நான் போகிக்கு இரண்டு நாளுக்கு அப்புறம் தேடியும் இங்க பச்சை மஞ்சள் கிடைக்கலை.

    ReplyDelete
    Replies
    1. இங்கே பச்சை மஞ்சள் நிறையக் கிடைக்கும். கஸ்தூரி மஞ்சளும் வரும். கஸ்தூரி மஞ்சளை வாங்கிக் கழுவி நறுக்கிச் சீவித்துண்டங்களை வெயிலில் காய வைத்துவிட்டு மிஷினில் கொடுத்து மஞ்சள் பொடியாக அரைச்சும் வைச்சுக்கலாம். பச்சை மஞ்சளையும் நிறைய வாங்கிக் காய வைச்சு மஞ்சள் பொடியாக அரைச்சு வைச்சுக்கலாம். அரக்குப் போல் நிறம்.

      Delete
  5. மாங்காய் தொக்கு எஃபெக்ட் வருவதற்கு மஞ்சளுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்திருக்கீங்க.

    நிச்சயம் சப்பாத்திக்கு, மோர் சாதத்துக்கு, ஏன் தோசைக்கும் சூப்பராக இருக்கும்னு தோணுது.

    ReplyDelete
    Replies
    1. நன்றாகவே இருந்தது நெல்லை. தோசைக்கெல்லாம் ஊறுகாய் தொட்டுக்க மாட்டோம். அதுக்குத் தக்காளி, வெங்காயச் சட்னிகள் தான். பச்சைக்கொத்துமல்லி+பச்சை மிளகாய்ச் சட்னியும் தோசைக்குத் தொட்டுப்போம்.

      Delete
  6. 1 மேசைக்கரண்டி = 3 டீ ஸ்பூன்.

    அதனால காரமா இருந்தால் 5 டீ ஸ்பூன் காரப்பொடியும், காரம் இல்லை என்றால் ஒரு மேசைக்கரண்டியும் என்று எழுதியிருப்பது தவறுன்னு தோணுது.

    நீங்க சொன்ன 3 எலுமிச்சையில் 2 1/2 எலுமிச்சைதான் இருக்கு. மீதி 1/2 மூடி, அந்த பிழியும் சாதனத்துலயே இருக்கு போலிருக்கு.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்லும் அளவுக்கெல்லாம் நான் அளவு கரெக்டாப் போடுவதில்லை. உத்தேசம் தான். எலுமிச்சை பிழியும் சாதனம் என் கைகள் தான். வலக்கையால் பிழிவேன்.

      Delete
  7. ஆவ் கீதாக்கா இந்த ரெசிப்பி  சூப்பர்.இவ்ளோ நாளும் சும்மா எலுமிச்சைச்சாறில் நறுக்கின மஞ்சள்  உப்பு மிளகாத்தூள் கலந்து ப்ரிட்ஜில் வச்சி 5 நாளில் சாப்பிட்டு முடிப்பேன் .இனிமே தொக்கா செய்வேன்.இங்கே வெளிநாட்டுக்காரங்களுக்கும் மஞ்சள் மகிமை நிறைய தெரிஞ்சி சூப்பர்மார்கெட்டில் விக்கிறாங்க .TURMERIC டீ எல்லாம் நிறைய விற்கிறாங்க .

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல், நல்லா இருக்கீங்களா? பார்த்தே ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன. உங்க பதிவில் கருத்துச் சொல்ல வந்தால் அந்த டெல் மடிக்கணினியின் மவுஸ் ஒரே ஓட்டம். >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> இப்படியே தானாகப் போய்க்கொண்டே இருக்கு. ஷட்டவுனும் பண்ணுவது சிரமமாகப் போய் விட்டது. இப்போத் தான் போய்ப் பார்க்கணும்.எலுமிச்சைச் சாறில் தோல் சீவி நறுக்கிய மஞ்சளோடு உப்புச் சேர்த்துக் கொண்டு, பெருங்காயப்
      பொடியும் போட்டுவிட்டுக் கடுகு, வெந்தயம், மிளகு, ஜீரகம், கருஞ்சீரகம், சோம்பு ஆகியவற்றை வகைக்கு ஒரு தேக்கரண்டி வெறும் வாணலியில் பொடித்துச் சேர்த்துவிட்டுப் பின்னர் மி.பொடியும் போடுங்க. பச்சை மிளகாய் 2,3 கீறியும் சேர்க்கலாம்.

      Delete
    2. நல்லெண்ணெய் நூறுகிராமாவது நன்கு காய்ச்சி ஆற வைச்சுச் சேர்க்கணும்.

      Delete
  8. மஞ்சள் தொக்கு மிக அருமை.

    மஞ்சள் இங்கே நிறையக் கிடைக்கிறது.
    எனக்கு அளவெல்லாம் கண் திட்டம் தான்.
    நீங்கள் அழகாகச் செய்து படங்கள்
    எடுத்தும் சிறப்பாகப் பதிவிட்டிருக்கிறீர்கள்.

    மிக நன்றி கீதாமா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, ஆமாம், பையர் வாங்கிக்கொண்டு வந்துடுவார் பார்த்ததுமே. வெறும் வயிற்றில் கடித்துச் சாப்பிடுவார். பாராட்டுக்கு நன்றி. செய்து பாருங்க.

      Delete
  9. மஞ்சளும் நல்லெண்ணெயும் ஒரே அளவு. உப்பும் காரமும்
    நம் அளவு.சரிதான்.

    ReplyDelete
    Replies
    1. வேண்டுமானால் எண்ணெய் கொஞ்சமாக விட்டுக்கலாம் வல்லி.

      Delete
  10. பச்சை மஞ்சளில் தொக்கு - ஊறுகாயாக சுவைத்ததுண்டு. பச்சை மஞ்சள் இங்கேயும் கிடைக்கிறது - சில சமயங்களில். செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வடக்கே, அதுவும் குஜராத்தில் மஞ்சளும் அம்பா ஹல்தி எனப்படும் மாங்காய் இஞ்சி ஊறுகாயும் ரொம்பவே பிரபலம் வெங்கட்! கிடைத்தால் செய்து பாருங்கள்.

      Delete
  11. நான் இந்த blog follow பண்றேன், ஆனாலும் அலர்ட் வர மாட்டேங்குது why

    ReplyDelete