எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, December 20, 2019

பாரம்பரியச் சமையல்கள்! மிளகாய்த் தொக்கு, கொத்துமல்லித் தொக்கு!

பச்சைக்கொத்துமல்லி உடலுக்கு நல்லது. அதைச் சட்னியாக அரைத்தும் சாப்பிடலாம், துவையலாக அரைத்தும் சாப்பிடலாம். கொத்துமல்லி சாதமாகவும் சாப்பிடலாம். இங்கே கொடுக்கப் போவது பாரம்பரிய முறைப்படியில் செய்யும் கொத்துமல்லி மிளகாய்ப் பொடி (எங்க வீட்டில் சொல்லுவது) என்னும் சம்பாரப் புளி! கொத்துமல்லித் தொக்கு என்றும் சொல்லிக்கலாம்.

தேவையான பொருட்கள்: பச்சைக் கொத்துமல்லி ஒரு பெரிய கட்டு. நன்கு ஆய்ந்து கழுவி நடுத்தண்டைத் தூக்கி எறியாமல் வேரை மட்டும் நீக்கிவிட்டு அலம்பி வடிகட்டி வைக்கவும்.  மாலை வரை தண்ணீர் வடிந்தால் கொத்துமல்லித் தழைகள் உலர்ந்து இருக்கும். தொக்குச் செய்ய ஏதுவாக இருக்கும். ஆனால் உடனே செய்ய வேண்டும் எனில் இப்படி வடிகட்டின கொத்துமல்லித் தழையை நல்லெண்ணெயில் நன்கு வதக்கிக் கொள்ளலாம்.

மிளகாய் வற்றல் பத்து முதல் பதினைந்து, புளி ஓர் நெல்லிக்காய் அளவுக்கு. பெருங்காயம் ஒரு துண்டு. வதக்க நல்லெண்ணெய் இரண்டு சின்னக் கரண்டி, கடுகு, உளுத்தம்பருப்பு.இந்தப் படத்தில் எல்லாம் தயாராக வறுத்து வைத்திருக்கிறேன். மிளகாய் வற்றல், பெருங்காயம், கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் கொத்துமல்லி வாணலியில் புளி ஒரு சின்னக் கிண்ணத்தில் ஊற வைத்திருக்கேன்.
மிளகாய் வற்றல், புளி, உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை முதலில் ஓர் சுற்றுச் சுற்றிக் கொண்டு பொடியாக ஆக்கிக் கொள்ளவேண்டும். பின்னரே கொத்துமல்லித் தழையைச் சேர்க்கலாம்.கொத்துமல்லித் தழையைச் சேர்த்து அரைத்த பின்னரே கடுகு, உளுத்தம்பருப்பைச் சேர்க்க வேண்டும்.கொத்துமல்லித் தழையை அரைத்த பின்னர்.


கடுகு, உபருப்பு சேர்க்கையில் எடுத்த படம்! இதை ஒன்றிரண்டாக அரைத்துக் கொண்டால் போதும். கெட்டியாக இருக்கும். சுமார் பத்து நாட்கள் இதைப் பயன்படுத்திக்கலாம். 

அடுத்ததாகப் பச்சை மிளகாய்த் தொக்கு,  

பச்சை மிளகாய் கால் கிலோ

புளி ஒரு எலுமிச்சை அளவு

உப்பு தேவைக்கேற்ப

வெல்லம் நூறு கிராம் தூள் செய்தது (வெல்லம் கட்டாயம் தேவை)

நல்லெண்ணெய் ஒரு கிண்ணம் சுமார் 200 கிராம் இருக்கலாம்.

தாளிக்க 

கடுகு, உ,பருப்பு, பெருங்காயம்

முதலில் பச்சை மிளகாயை நன்கு கழுவி நீரை வடிகட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணம் நல்லெண்ணெயில் இருந்து அரைக் கரண்டி நல்லெண்ணெயை அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் பச்சை மிளகாயைப் போட்டு நன்கு சுருள வதக்கவும். மிளகாய் நன்கு வதங்கியதும் எடுத்து ஆற வைக்கவும். புளியைக் கொஞ்சம் நீரில் ஊற வைத்துக் கொள்ளவும். வதக்கிய மிளகாயோடு உப்பையும் ஊற வைத்த புளியையும் சேர்த்து அரைக்கவும். ஒரு கரண்டியால் கிளறி விட்டுக் கொண்டு நன்கு அரைக்கவும். பின்னர் கரண்டியாலேயே அந்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். (கை எரியும் கையால் தொட்டால்)

பின்னர் மிளகாய் வதக்கிய அதே கடாயில் மீதம் உள்ள எண்ணெயை ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் போதவில்லை போல் தோன்றினால் இன்னும் ஒரு கரண்டி ஊற்றலாம். நன்கு எண்ணெயில் வதங்கணும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டுப் பொரிந்ததும் உளுத்தம்பருப்புச் சேர்க்கவும். பெருங்காயத் தூள் அல்லது கட்டிப் பெருங்காயம் ஊற வைத்தது சேர்க்கவும். மிளகாய் வதக்கும்போதே கூடப் பெருங்காயத்தையும் பொரித்துச் சேர்த்துக் கொண்டு வதக்கிய மிளகாயோடு அரைக்கலாம். கடுகு, உ.பருப்பு தாளித்ததும் அரைத்த விழுதைப் போட்டு நன்கு கிளறவும். மிக்சி ஜாரில் நீர் விட்டுக் கரைத்திருந்தால் அதையும் ஊற்றலாம். நன்கு கிளறும்போது கெட்டியாகி விடும். நன்கு கெட்டிப் பட்டு வரும் சமயம் வெல்லம் சேர்க்கவும். வெல்லம் சேர்த்துக் கிளறியதும் எண்ணெய் பிரிந்து வர ஆரம்பிக்கும். அப்போது கீழே எடுத்து ஆற வைத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளவும். தோசை, சப்பாத்தி, மோர் சாதம் போன்று எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொள்ளலாம். வெல்லம் போடாவிட்டால் காரம் அதிகமாகத் தெரியும். 

இதை 2,3 மாதங்கள் வைத்துக்கொள்ளலாம்.

6 comments:

 1. கொத்துமல்லி தொக்குக்கு படங்கள் அருமை.  மிளகாய்த் தொகுக்கும் படங்கள் சேர்க்க முடியவில்லை போல...   நேற்றைய செய்தியில் இஞ்சித் துவையலை இரண்டு வருடங்கள் வைத்துக்கொள்ளலாம் என்பது ஆச்சர்யம் கொடுத்தது.

  ReplyDelete
  Replies
  1. ஹா,ஹா, உங்கள் தளத்தில் கொத்துமல்லித் தொக்கு வெளிவந்தது மறந்துட்டீங்க போல! அதைத் தான் காப்பி, பேஸ்ட் பண்ணிப் போட்டேன்.மிளகாய்த் தொக்கு இப்போக் கொஞ்ச வருடங்களாகப் பண்ணவில்லை. அதனால் படங்கள் ஏதும் இல்லை. விரைவில் பண்ணிப் படம் எடுத்துச் சேர்க்கணும். புளி மிளகாய் வேறே, இது வேறே! நெல்லைத் தமிழருக்கு இதெல்லாம் பிடிக்காது போல! வரதே இல்லை.

   Delete
  2. நெல்லை ஏதோ பயணத்தில் இருக்கிறார் என்று சொன்னார்.  

   Delete
  3. ஆமாம், நேற்று ஸ்ரீரங்கத்தில் இருந்தார்.

   Delete
 2. பச்சைமிளகாய்த் தொக்கு கவர்கிறது.  புளிமிளகாய் நினைவுவுக்கு வருகிறது.   ப மி தொக்கு செய்து பார்க்க வேண்டும்!

  ReplyDelete
 3. பச்சை மிளகாய்த்தொக்குக்கு அதிகக் காரமான மிளகாய் வாங்காதீங்க! வயிறு வெந்துடும். வெல்லம் கட்டாயமாய்ச் சேர்க்கணும்.

  ReplyDelete