எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, December 6, 2019

பாரம்பரியச் சமையலில் மசியல் வகைகள்

மசியல் என்பது கிட்டத்தட்டக் கூட்டுப் போல் கெட்டியாக இருந்தாலும் ருசியில் மாறுபடும். இதைத் தொட்டுக்கொள்ளவும் பண்ணலாம். பிசைந்து சாப்பிடவும் பண்ணலாம். இது பொதுவாகக் கருணைக்கிழங்கிலேயே அதிகம் பண்ணப்படுகிறது. கருணைக்கிழங்கு கொஞ்சம் காறல் வகை கொண்டது. பலருக்கும் பிடிக்காதது. ஆனால் உடலுக்கு நல்லது. முக்கியமாய் மூல வியாதிக்காரர்களுக்கு ரொம்பவே நல்லது. மூல நோய் உள்ளவர்களுக்குக் கருணைக்கிழங்கை லேகியமாகச் செய்தும் சாப்பிடக் கொடுப்பார்கள். இதில் சின்னச்சின்னதாக உருண்டையாகச் சில சமயங்களில் கோள வடிவில் இருப்பதே கருணைக்கிழங்கு ஆகும்.

Image result for கருணைக்கிழங்கு

 இது கட்டாயமாய்க் காறும். ஆனால் பருத்த உடல் கொண்டவர்கள், வயிற்றுக்கோளாறு உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பருத்த உடல் இளைக்கும், வயிற்றில் செரிமானம் அதிகரிக்கும். மூட்டு வலி உள்ளவர்களும் தினம் சாப்பிடலாம். இதன் சகோதர வகையே சேனைக்கிழங்கு ஆகும். இதைக் காராக்கருணை என்பார்கள்.

Image result for கருணைக்கிழங்கு

படங்களுக்கு நன்றி கூகிளார்

இரண்டுமே சமைத்துச் சாப்பிட உகந்தது என்றாலும் பெரும்பாலும் உருண்டையாக இருக்கும் கருணைக்கிழங்கை அதிகம் சாப்பிடுவதில்லை. சேனைக்கிழங்கைச் சாப்பிடுபவர்கள் அதிகம். உடல் உஷ்ணம், மூலச்சூடு, எரிச்சல் போன்றவற்றுக்கு இந்தக் கிழங்கைச் சமைத்து உண்ணலாம். முதல் வகைக்கிழங்கை அரிசி களைந்த கழுநீரில் வேகவைத்துத் தோலை உரித்துக்கொண்டு புளி ஜலத்தில் சமைக்கலாம். அல்லது எலுமிச்சை பிழியலாம். இரண்டாம் வகை சேனைக்கிழங்கையும் கழுநீரில் வேக வைத்துக்கொண்டு புளி சேர்த்துக் கறி அல்லது மசியல் போன்றவை செய்யலாம். இரண்டிலுமே மசியல் நன்றாக இருக்கும். எலுமிச்சை சேர்த்து மசியல் பண்ணினால் அதைத் தொட்டுக்கொள்ள வைத்துக்கொள்ளலாம். புளி சேர்த்து மசியல் செய்தால் அதைப் பிசைந்து சாப்பிடலாம்.ஆயுர்வேதத்தில் இது முக்கிய மூலிகையாகப் பயன்படுகிறது.
மசியலுக்குத் தேவையான பொருட்கள்:
உருண்டை வடிவக் கருணைக்கிழங்கு கால் கிலோ, புளி ஓர் எலுமிச்சை அளவுக்கு எடுத்து ஊற வைத்துக் கரைத்துக் கொள்ளவும். இரண்டு கிண்ணம் நீர் இருக்கலாம். புளி சேர்ப்பதால் காறல் கொஞ்சம் குறையும்.
உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம், குழைய வேக வைத்த துவரம்பருப்பு ஒரு சின்னக் கிண்ணம்.
வறுத்துப் பொடிக்க: மி.வத்தல் 2, கொத்துமல்லி விதை ஒரு டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு, வெந்தயம், மிளகு வகைக்கு 2 டீஸ்பூன், பெருங்காயம் ஒரு சின்னத்துண்டு, தேங்காய் தேவையானால். எல்லாவற்றையும் வறுக்க சமையல் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், இதிலேயே தாளிக்க 2 டீஸ்பூன் எடுத்துக்கொள்ளலாம். தாளிக்கக் கடுகு, கருகப்பிலை, பச்சை மிளகாய், கொத்துமல்லித் தழை. வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்துப் பொடிக்கவும்.

உருண்டை வடிவக் கருணைக்கிழங்கை நன்கு மண் போகக்கழுவி அலசி விட்டுத் துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். அரிசி களைந்த கழுநீரில் நன்கு குழைய வேக வைக்கவும். முன்பெல்லாம் அப்படியே மண் சட்டி அல்லது கல்சட்டியில் போட்டு வேக விடுவோம். இப்போது எல்லோரிடமும் குக்கர் பயன்பாடு இருப்பதால் அதிலேயும் வேக விட்டுக்கொள்ளலாம். ஆறிய பின்னர் வெளியே எடுத்துத் தோலை உரித்துக் கொண்டு ஒரு பாத்திரத்தில் போட்டுக் கை படாமல் மத்தால் மசித்துக்கொள்ளவும். கையால் மசித்தால் அரிப்புத் தாங்காது.  பின்னர் கரைத்து வைத்த புளி ஜலத்தைச் சேர்த்து உப்பு, மஞ்சள் பொடி போட்டு நன்கு கலந்து வைக்கவும்.

இப்போது அடுப்பில் கடாய் அல்லது கல்சட்டி அல்லது அடி கனமான பாத்திரத்தை வைத்துத் தாளிக்க வைத்திருக்கும் எண்ணெயை ஊற்றிக்கொண்டு கடுகு, பெருங்காயப் பொடி, கருகப்பிலை, பச்சை மிளகாய் தாளித்துக் கொண்டு கலவையை அதில் ஊற்றவும். உப்புச் சேர்க்கவில்லை எனில் சேர்க்கவும். நாம் ஏற்கெனவே எல்லாமும் கலந்து வைத்திருக்கிறோம் என்பதால் அப்படியே ஊற்றவும். நன்கு கொதித்து வரும்போது வறுத்துப் பொடித்ததையும், வெந்த துவரம்பருப்பையும் சேர்க்கவும். ஒரு கொதி வந்த பின்னர் கீழே இறக்கிக் கொத்துமல்லி தூவவும். இதைக் குழம்புக்குப் பதிலாகச் சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம். சேனைக்கிழங்கையும் இதே முறையில் பண்ணலாம்.

6 comments:

  1. மசியல் - சுவை எனக்கும் பிடிக்கும். இங்கே செய்வதில்லை. இப்போது செய்து பார்க்கத் தோன்றுகிறது. ஒரு நாள் சப்பாத்தியுடன் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும்! :) குளிர் நாட்கள் என்பதால் சப்பாத்தி பயன்பாடு அதிகம்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், நீண்ட நாட்கள் கழித்து வந்திருக்கிறீர்கள். வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      Delete
  2. கருணைக்கிழங்கை இனி அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. செய்ங்க,ஸ்ரீராம், உடம்புக்கு ரொம்ப நல்லது!

      Delete
  3. படித்துவிட்டேன். அப்புறம் வருகிறேன்

    ReplyDelete
    Replies
    1. மெதுவா வாங்க நெல்லைத்தமிழரே!

      Delete