எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, February 18, 2018

உணவே மருந்து! கீரை வகைகள்!

ஏற்கெனவே வெந்தயக் கீரை, முருங்கைக் கீரை பார்த்துட்டோம். ஆனாலும் இப்போப் பார்க்கப் போவது நாம் அன்றாடப் பயன்பாட்டில் வரும் கீரை வகைகளான முளைக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, பசலைக்கீரை, பாலக் கீரை போன்றவை. பாலக்கும் பசலையும் ஒன்றே என்று சிலர் சொன்னாலும் பசலைக்கீரைத் தண்டு கொஞ்சம் அடர் சிவப்பாகவே இருக்குனு நினைக்கிறேன்.

Image result for பசலைக்கீரை     இது பசலைக்கீரை, தானாகவே தோட்டங்களில் காணப்படும். நல்ல காய்ச்சல் இருப்பவர்களுக்கு இதைச் சமைத்துக் கொடுப்பார்கள். தரையிலும் படரும். கொடியாகவும் படர்ந்து மேலேறிச் செல்லும். குத்துச் செடியாகவும் காணப்படும். ஶ்ரீலங்காவில் அதிகம் காணப்படும் இதை சிலோன் கீரை என்றும் சொல்வார்கள். இதன் பூர்விகம் அமெரிக்கா என்று சொல்லப்பட்டாலும் எங்கு வேண்டுமானாலும் வளரும். தண்டைக் கிள்ளி நட்டால் போதும்! தானாக முளைக்க ஆரம்பிக்கும்.

Image result for பாலக் கீரை

இது பாலக் கீரை! இரண்டுமே ஆங்கிலத்தில் ஸ்பினாச் என்றே அழைக்கப்படுகிறது. இதுவும் பசலைக்கீரையின் குடும்பத்தைச் சேர்ந்ததே இதன் இலைகள் வட்டமாகவும் பச்சையாகவும் காணப்படும். இரண்டுமே மருத்துவ குணம் நிரம்பியவை!

பெரிய அளவில் வைடமின்கள் நிறைந்திருப்பதோடு இரும்புச் சத்தும் தேவையான அளவுக்கு இருக்கிறது.  தொற்று நோய்களால் ஏற்படும் பாதிப்புகளைச் சரி செய்து விடும். அவற்றை எதிர்க்கும் ஆற்றல் இந்தக்கீரைகளில் உண்டு. இவற்றில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் நறுக்கி வேக விடும்போது அதிகத் தண்ணீர் சேர்க்கக் கூடாது! பார்வைக்கோளாறைச் சரி செய்வதோடு ரத்த விருத்தியையும் ஏற்படுத்தும். கொழுப்புச் சத்தே இல்லாததால் எளிதில் செரிமானம் ஆகிவிடும். குளிர்ச்சி தருவதோடு உடலுக்கு ஊட்டத்தையும் கொடுக்கும். எரிச்சல், பித்தம் போன்றவைக்கு நல்லது. 

இதை நீர் விட்டுச் சமைத்தால் கீரையில் மிகுதியாக இருக்கும் நீரைக் கீழே கொட்டாமல் அதில் உப்பு, மிளகுத் தூள் சேர்த்துக் கொண்டு சூப் மாதிரிக் குடிக்கலாம். அல்லது மிளகு, பூண்டு சேர்த்து இந்த நீரை விட்டு அரைத்து ரசத்தில் கலக்கலாம். இளம் கீரைகளை நறுக்கி வதக்கிப் பச்சடி போல் செய்யலாம். பருப்புக்களுடன் சேர்த்துக் கடைந்து சாப்பிடலாம். நல்ல மலமிளக்கியாகவும் செயல்படும்.  நீரிழிவுக்காரர்கள் தினம் ஒரு கீரை என்னும் விதத்தில் வாரம் ஒரு முறை இந்தக்கீரையையும் சமைத்துச் சாப்பிடலாம்.  உடலில் ரத்தக்குறைவு இருந்தால் அதைச் சமன் செய்துவிடும் இந்தக்கீரை!  கால்களில், விரல்களில் உள்ள வீக்கத்தைக் குறைக்கவும் சிறுநீரகக் கற்களைக் கரைக்கவும் பெரிய அளவில் இந்தக்கீரை பயன்படும். தொண்டைப்புண்ணும் இந்தக்கீரையின் நீரை வடிகட்டிக் குடிப்பதால் சரியாகும்.

குழந்தைகளுக்குச் சிறு வயதில் இருந்தே கீரையைச் சமைத்துக் கொடுத்துப் பழக்கப்படுத்த வேண்டும். முக்கியமாக இளம்பெண்களுக்குக் கீரையை தினம் சேர்த்தால் அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியும், ரத்த விருத்தியும் ஏற்படும். 

10 comments:

 1. உபயோகமான குறிப்புகள்.

  இதையெல்லாம் பார்த்துக்கொண்டேன். என் மனைவியிடம்தான் செய்துதரச் சொல்லணும்.

  ReplyDelete
  Replies
  1. நெ.த. ஏன் அங்கே கீரை கிடைப்பதில்லையா? அல்லது செய்ய வரலையா?

   Delete
 2. பாலக் - வடக்கே நிறையவே கிடைக்கும். அடிக்கடி செய்வதுண்டு.

  மருத்துவ குணங்கள் பற்றி அறிந்து கொண்டேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், பாலக் தவிர ராஜ்கீர் எனப்படும் சிவப்புக்கீரையும் அங்கே கிடைக்கும். அதுவும் நன்றாக இருக்கிறது.

   Delete
 3. குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே கீரை வகைகளை பழக்க வேண்டும் என்பது நல்ல குறிப்பு. கீரை என்றில்லை, எல்லாக் காய்கறிகளையும் பழக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் ஶ்ரீராம். ஆனால் எங்க பெண்ணுக்கு அப்படிப் பழக்கியது தலைகீழாகப் போய்விட்டது. அவள் என்னமோ நாங்க கட்டாயப்படுத்திச் சாப்பிட வைக்கிறாப்போல் நினைச்சுக் காய்களையே ஒதுக்கிடுவா! :(

   Delete
 4. தஞ்சையில் தண்டு கீரை என்று வாங்குவோம். நீண்ட தடித்த ஆனால் இளம் தண்டுகள். சாம்பாரில் போடலாம். வதக்கலாம். அது என்ன வகைக் கீரை என்று தெரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. தண்டுக்கீரை கும்பகோணத்திலும் உண்டு. தண்டு அப்படியே கரையும். அதில் பொரிச்ச குழம்பு நன்றாக இருக்கும்.

   Delete
 5. அரைக்கீரையைவிட முளைக்கீரை பிடிக்கும். பசலையில் சிறிய வெங்காயம் சேர்த்து, பாசிப்பருப்பு சேர்த்து மசித்து (தேவைப்பட்டால் தக்காளி) சாம்பார்ப்பொடி சேர்த்து சாப்பிடுவது எங்கள் வீட்டு வழக்கம். பாலக் கீரை வாங்கியதே இல்லை.

  ReplyDelete
  Replies
  1. ஶ்ரீராம், எனக்கும் சின்ன வயசில் அரைக்கீரை அவ்வளவாப் பிடிக்காது. முளைக்கீரை தான் பிடிக்கும். ஆனால் வயசு ஏற ஏற அரைக்கீரையும் பிடிக்க ஆரம்பித்து விட்டது. கீரை வடைன்னா அநேகமா அரைக்கீரை தான் சேர்க்கிறேன். :)

   Delete