எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, February 20, 2018

உணவே மருந்து! கீரை வகைகள்

பசலைக்கீரை மசியல்: தேவையான பொருட்கள்

பசலைக்கீரை ஒரு கட்டு

உப்பு தேவைக்கு

ஜீரகம் ஒரு டீஸ்பூன்   , பெருங்காயம் சின்னத் துண்டு

தாளிக்க

கடுகு, உளுத்தம்பருப்பு, மி.வத்தல்.

பசலைக்கீரையைப் பொடியாக நறுக்கி நன்கு அலசவும். கீரையை அலம்பிவிட்டு நறுக்குவது கொஞ்சம் கஷ்டம். ஆகவே நறுக்கிய பின்னர் அலம்பலாம். ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு அரிசி களைவதைப் போல் நிறைய தண்ணீர் ஊற்றி அலசவேண்டும். பின்னர் அதை வடிகட்டி நீர் சேர்க்காமல் கல்சட்டி, உருளி அல்லது சமைக்கும் பாத்திரத்தில் போட்டு வேக வைக்கவும். கீரையைச் சமைக்கும்போது அது எந்தக் கீரையாக இருந்தாலும் மூடிய பாத்திரத்தில் வேக வைக்க வேண்டாம். அப்படி வேக வைத்தால் கீரையிலுள்ள ஒருவிதமான உப்புக்கலந்த நச்சுக்காற்று வெளியேறாமல் கீரையிலேயே தங்கிவிடும்.

கீரை நன்கு வெந்த பின்னர் ஜீரகத்தைப் பச்சையாகக் கைகளால் தேய்த்துச் சேர்க்கவும். உப்பையும் பெருங்காயத்தையும் சேர்க்கவும். ஐந்து நிமிடம் கழித்துக் கீரை மத்தால் மசித்தால் கீரை நன்கு மசிந்து விடும். நீர் இருந்தால் நீர் வற்றும் வரைக்கும் கீரையைக் கொதிக்கவிடவும். பின்னர் தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, ஒரு மி.வத்தல் தாளித்துக் கீரையில் சேர்க்கவும். துருவிய தேங்காய்த் துருவல் இருந்தாலும் சேர்க்கலாம். இது பொதுவாக எந்தக்கீரை மசியலுக்கும் இதே குறிப்பில் செய்யலாம்.

பசலைக்கீரைக் கறி அல்லது பொரியல்!

கீரை ஒரு கட்டு

உப்பு தேவையான அளவுக்கு

பாசிப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் (ஊற வைக்கவும்)

தாளிக்க

தேங்காய் எண்ணெய் இரண்டு டீஸ்பூன்

கடுகு, உளுத்தம்பருப்பு, மி.வத்தல், தேங்காய்த் துருவல்

வெங்காயம்(தேவைப்பட்டால்) பொடியாக நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன்

பாசிப்பருப்பை ஊற வைத்துக் கொண்டு பொடியாக நறுக்கிய கீரையுடன் சேர்த்து வேக வைக்கவும். பாதி வெந்ததும் உப்பைச் சேர்க்கவும். முதலிலேயே உப்பைச் சேர்த்தால் கீரை நிறம் மாறி விடும். கீரை வெந்ததும் அதில் உள்ள நீரை வடிகட்டவும். அந்த நீரைக் கொட்ட வேண்டாம். சாம்பாருக்குப் புளி கரைக்கப் பயன்படுத்தலாம். அல்லது அந்த நீரில் மிளகு, சீரகப் பொடி கலந்து சூப் மாதிரி குடிக்கலாம்.

கடாயில் தேங்காய் எண்ணெயைக் காய வைத்துக் கொண்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மிவத்தல் தாளிக்கவும். வடிகட்டி வைத்திருக்கும் கீரையைப் போட்டு நன்கு கிளறவும். ஒரு டீஸ்பூன் சர்க்கரையைச் சேர்க்கலாம். (விருப்பம் இருந்தால்) பின்னர் தேங்காய்த் துருவலைச் சேர்த்து நன்கு கிளறிய பின்னர் கீழே இறக்கவும்.

வெங்காயம் போடுவதெனில் கடுகு, உபருப்பு தாளித்த பின்னர் வெங்காயத்தையும் மிவத்தலையும் போட்டு நன்கு வதக்கிக் கொண்டு கீரையைச் சேர்க்கவும். இதற்குத் தேங்காய்த்துருவல் போடாமலும் இருக்கலாம். அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது!

பசலைக்கீரைக் குழம்பு/சாம்பார்! புளி சேர்த்தது.

தேவையான சாமான்கள்

பசலைக்கீரை ஒரு சின்னக் கட்டு! நன்கு கழுவிக் கொண்டு பொடியாக நறுக்கிக் கொண்டு கடாய் அல்லது கல்சட்டி அல்லது உருளியில் கீரையை வேக விடவும்.

புளி ஒரு சின்ன எலுமிச்சை அளவுக்கு நீர் விட்டுக் கரைத்துக் கொண்டு இரண்டு கிண்ணம் எடுத்துக் கொள்ளவும்.

துவரம்பருப்பு குழைந்தது ஒரு சின்னக் கிண்ணம்

சாம்பார்ப் பொடி இரண்டு டீஸ்பூன்

உப்பு தேவையான அளவுக்கு

பெருங்காயம்

தாளிக்க தே.எண்ணெய் அல்லது ஏதேனும் சமையல் எண்ணெய்

கடுகு, வெந்தயம், ஒரு பச்சை மிளகாய், ஒரு சின்ன மி.வத்தல்

கல்சட்டியில் வெந்து கொண்டிருக்கும் பசலைக்கீரையை ஒன்றிரண்டாக மசித்துக் கொள்ளவும். பச்சை மிளகாயைச் சேர்க்கவும். மசித்த கீரையில் புளி ஜலத்தைச் சேர்த்துக் கொண்டு சாம்பார்ப் பொடி, உப்பு, பெருங்காயம் சேர்க்கவும். நன்கு கொதித்து வரும்போது வெந்த துவரம்பருப்பையும் சேர்க்கவும். சிறிது நேரம் கொதிக்கவிட்டுத் தேங்காய் எண்ணெயில் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துச் சேர்க்கவும். சூடான சாதத்தோடு சேர்த்துச் சாப்பிட அருமையாக இருக்கும். 

8 comments:

 1. பசலைக்கீரை இங்கே கிடைக்கிறது எனக்கு டேஸ்ட்டே இல்லாத மாதிரி இருக்கும் .ஸ்பினாச் இங்குள்ளது வெறும் லீவ்ஸ் தான் பெரிசு .
  இலங்கை தமிழர் கடையில் நம்மூர் வெரைட்டி வாங்கி தண்டை மீண்டும் நட்டு ஒரு போகம் விளைச்சல் கூட பார்த்தேனே :)
  எல்லாம் சூர்யன் அருள் இருந்தா இந்த வருஷம் செய்யலாம் .
  நீங்க சொன்ன ரெசிபில புளி சேர்ப்பது எங்கம்மா செய்வாங்க ஆனா நான் சேர்த்த ஓவர் புளிப்பு வர உணர்வு .

  செய்து பார்க்கிறேன் இதே முறையில்

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சல், பசலைக்கீரைகிடைக்கலைனா பாலக்கில் செய்து பாருங்க! :)

   Delete
 2. இன்று கே ஜி வீட்டில் பசலை, பொன்னாங்கண்ணி உட்பட்ட பல்வகை பூச்செடிகள், கீரை, காய்கறி வகைகள் உள்ள மொட்டைமாடித் தோட்டத்தைக் கண்டு வந்தேன்.

  பாலக் வாங்கியதில்லை. பசலைக்கீறீரே நான் சொன்ன மாதிரி பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டிருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. பாலக் எனக்கும் அவ்வளவாப்பிடிக்காது! ஆனாலும் வடமாநிலங்களில் அதான் அதிகம் கிடைக்கும்.

   Delete
 3. எனக்கு பசலைக் கீரை பிடிக்காது. அதனால் என்ன. தண்டுக் கீரையோ அல்லது அரைக் கீரையோ உபயோகப்படுத்தி இவைகளைச் செய்துபார்க்கிறேன்.

  இதெல்லாம் எழுதறது என்பது பெரிய உழைப்பு. வித விதமான தளங்கள். வேகமாக தட்டச்சு செய்யமுடிவதால் தான் இவைகள் சாத்தியம். பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெ.த. அடிக்கடி இந்தத் தளத்துக்கு வர முடியறதில்லை! பல்வேறு காரணங்கள்! :) முடிந்தவரை வருகிறேன். ஒரு காலத்தில் ஏழு,எட்டு வலைத்தளம் ஒரே சமயம் எழுதிட்டு இருந்தேன்.

   Delete
 4. பசலைக்கீரை இங்கே கிடைப்பதில்லை. பாலக் தான். கிடைத்தால் செய்ய்னும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், செய்து பாருங்க! :)

   Delete