எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, June 12, 2017

உணவே மருந்து! முருங்கை!

எல்லா வீட்டிலேயும் முருங்கைக்காயைச் சாதாரணமாக வாங்கிச் சமைக்கலாம். ஆனால் நம்ம வீட்டிலோ கதையே வேறே மாதிரி! முருங்கைக்காயால் எங்க ரெண்டு பேருக்கும் "கத்தி"  யுத்தம் நடக்கும்.  ஏற்கெனவே வாங்கின முருங்கைக்காய் இருக்கும்போதே போன வாரம் மேலும் இரண்டு முருங்கைக்காய்கள் வந்தன. அப்போவே சொல்லிட்டேன். ஏற்கெனவே முருங்கைக்காய்கள் இருக்கு! அதோட 7 ஆம்தேதி சென்னை போயிட்டு 8 ஆம் தேதி தான் திரும்பறோம். இரண்டு நாட்கள் சமையல் கிடையாது என! வந்து உபயோகம் செய்துக்கோனு சொன்னாரா! அப்படியே வைச்சால் கூடு விட்டுக்கும்னு துண்டங்களாக நறுக்கி வைச்சிருந்தேன். கிளம்பும் முதல் நாள் முருங்கைக்காய் போட்டு வெறும் குழம்பு வைத்தேன். பழைய துண்டங்களைத் தான் போட்டிருந்தேன். குழம்பில் தானும் அதிகம் போடக் கூடாது என்பார்! அப்புறமா எப்படிச் செலவு செய்யறது!

இப்போப் பாருங்க ஊரிலேருந்து வந்ததும் வெள்ளிக்கிழமை முருங்கைக்காயில் சாம்பார் செய்தேன், சனியன்று  மறுபடி ஒரு முருங்கைக்காய்! ஏற்கெனவே முருங்கைக்காய்கள் இருக்க, திங்களன்று வாங்கின இரண்டு காய்களின் துண்டங்கள் வேறே காத்திருக்க இன்னும் ஒரு முருங்கைக்காயா? கிட்டத்தட்ட மயக்கம் போடும் நிலைக்கு ஆயிட்டேன்னா பாருங்க! "கத்தி" சண்டை தான்!  அன்னிக்குப் பருப்புருண்டைக் குழம்பு வைச்சதாலே முருங்கைக்காயைப் போட முடியலை! நேற்று மறுபடி முருங்கைக்காய்க் குழம்பு! வேறே காயே மறந்துடுமோனு தோணுது! :))))

விடுங்க, நம்ம ராமாயணம் தீராத ஒன்று! முருங்கைக்காய் நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்து! அதைக் கேட்டதில்/படிச்சதில் இருந்து தான் நம்ம ரங்க்ஸ் முருங்கை மோகராக மாறி விட்டார்! இல்லைனா ஜாஸ்தி வாங்கினதில்லை. பாவம்! எப்படியானும் சர்க்கரை குறையணும்னு ஒரே எண்ணம்! அதோடு வலியையும் குறைக்கும்னு சொல்றாங்களா! அப்புறம் வேறே என்ன வேணும்? முருங்கைப் பூக்கள் கூட சத்து நிறைந்தது என்றும் ஆண்களின் விந்துப் பிரச்னையைச் சீராக்குவதாகவும் தெரிய வருகிறது.  நாக்கில் உணவு சுவைக்காமல் இருந்தால் முருங்கைப் பூவைச் சமைத்துச் சாப்பிடலாம்.

முருங்கை ஈர்க்கு, கருகப்பிலை ஈர்க்கு இரண்டையும் சம அளவில் போட்டு சுமார் பத்துகிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைத்துப் பாதியாகச் சுண்ட விட்டுக் குடித்து வர வேண்டும். வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும். முருங்கைக்கீரையை நெய்யில் வதக்கி உணவு உண்ணும் முன்னர் ஒரு பிடி சாப்பிட்டு வரக் கண் பார்வை தெளிவடையும். கீரையை வேக வைத்தும் சாப்பிடலாம். நெய்யில் வெங்காயம், முருங்கைக்கீரையை வதக்கி மிளகு, ஜீரகம், உப்புச் சேர்த்து சாதத்தோடு சேர்த்தும் சாப்பிடலாம்.  தலைவலிக்கு முருங்கை இலையோடு மிளகைச் சேர்த்து நசுக்கிச் சாறு எடுத்து வலியுள்ள இடத்தில் பற்றாகப் போட்டு வந்தால் குணமாகும்.

முருங்கை மரத்தின் பிசினை எடுத்து உலர வைத்துக் கொண்டு தூளாக்கி அரைத்தேக்கரண்டி பிசினோடு காய்ச்சிய பசும்பாலைக் கலந்து சாப்பிட்டு வர உடலில் தெம்பு ஊறும். உடல் நல்ல பலம் பெறும். வைடமின் ஏ மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும். ரத்த விருத்திக்கும் நல்லது.  பத்திய உணவிலே கூட முருங்கைக்கீரை, காய்கள், பூக்கள் முக்கியமான இடம் பெறுகின்றன. 

10 comments:

  1. "முருங்கை மரத்தின் பிசினை எடுத்து" - அவசரத்துல கம்பளிப்பூச்சியை எடுத்துடப்போறாங்க. அதுனாலதான் முதல்ல 'கண் பார்வை தெளிவடைய' வழி சொல்லியிருக்கீங்களா?

    எப்பயாச்சும் முருங்கைக்காய் சாம்பார், அதன் வாசனைக்காக ஹோட்டல்ல சாப்பிட்டது உண்டு. இப்போ என்ன அங்க முருங்கை சீசனா?

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, கம்பளிப் பூச்சியை எடுத்தால் அரிப்புத் தாங்காதே! முருங்கைக்காய் சாம்பார் வாசனை மட்டும் நல்லா இருக்கும். ஆனால் எங்க சித்தி வீட்டிலே (சின்னமனூர்) முருங்கைக்காய்களை நிறையப் போடுவாங்க. சாயந்திரமானா குழந்தைங்களுக்கு ஒரு கிண்ணத்தில் நிறையத் தான்களைப் போட்டுச் சாப்பிடக் கொடுப்பாங்க! அப்போவும் நான் விநியோகத்தோடு நிறுத்திப்பேன். சாப்பிட்டதில்லை. :) முருங்கை சீசனோ என்னமோ தெரியலை!

      Delete
  2. முன்னரே நறுக்கி டப்பர்வேரில் போட்டு வைத்திருப்பார் என் பாஸ். ஆனால் எனக்கு ஏனோ அது பிடிப்பதில்லை. காய்களை சமைக்கும்போதுதான் நறுக்கவேண்டும். நீங்கள் சொல்வது போல முருங்கை எல்லாம் முன்னரே வாங்கி ஸ்டாக் வைக்கக் கூடாது!

    ReplyDelete
    Replies
    1. எங்க வீட்டில் ஒரு நாள் விட்டு ஒருநாள் வாங்குவதால் நறுக்கித் தான் வைச்சாகணும். இல்லைனா உள்ளே கூடு விட்டுக்கும்! பொதுவாக் காய்களை அன்றாடம் வாங்குவதே சிறப்பு என்றாலும் அப்படி முடியறதில்லை. முக்கியமா எங்க வீட்டில் வெள்ளைப் பூசணி, வாழைத்தண்டு, வெண்டைக்காய் போன்றவை ஒரே நாளில் வாங்கி வந்தால் எனக்கு டென்ஷன் எகிறிடும்! எதை முதலில் சமைப்பது? கொத்தவரை கூட வைத்திருந்து சமைத்தால் வதங்கி விடுகிறது.

      Delete
  3. முருங்கைப் பூ போட்டு பொரியல் செய்து சாப்பிடவேண்டும் என்று ஆசை. அவ்வளவு பூக்கள் கிடைப்பதில்லை! முருங்கைப்பிசினை எல்லாம் சாப்பிடுவார்களா? உவ்வே!

    :)))

    ReplyDelete
    Replies
    1. முருங்கைப் பிசின் மருந்தாகத் தான் பயன்படுத்தலாம்! :)

      Delete
  4. உங்கள் பிறந்தநாள் அன்றே பிறந்தநாள் காணும் என் மாமா ஒருவர் காலை வெறும்வயிற்றில் முருங்கைஇலையை எலுமிச்சைச் சாற்றுடன் .பச்சையாகவே அரைத்துக் குடித்துக் கொண்டிருந்தார். தொப்பை குறையும் என்று சொன்னார்களாம்.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம்ம் நெல்லிக்காய், பாகல்காய்ச் சாறில் பலன் தெரிகிறது. தொடர்ந்து சாப்பிட முடியாமல் இருக்கு!

      Delete
  5. சமீபத்தில் மறைந்த என் அத்தை ஒருவர் முருங்கையில் ஊறுகாய் செய்திருக்கிறார். முருங்கைச் சதையை மட்டும் எடுத்துக் போட்டு வெங்காயம் பச்சைமிளகாயுடன் வதக்கியும் முயற்சி செய்திருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. கேரளாவில் முருங்கைச் சதையை மட்டும் வேகவிட்டு எடுத்துக் கொண்டு ஏதோ செய்வார்கள். என்னனு மறந்துட்டேன். :)

      Delete