எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, February 22, 2016

உணவே மருந்து--சீரகம்

Image result for ஜீரகம்

நன்றி விகடன்.காம், கூகிளார் வாயிலாக!

நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அன்றாட சமையலில் அதிகம் பயன்படுத்தும் பொருள் சீரகம். இதைத் தமிழில் சீரகம் என்று சொன்னாலும் வடமொழி, ஹிந்தியில் ஜீரா என்று சொல்கின்றனர். ஒரு சிலர் ஜீரகம் என்றும் கூறுவார்கள். சீர்+அகம்  என்று பிரிக்கப்படும் இது நம் உள்ளுறுப்பை அதாவது அகத்தைச் சுத்தம் செய்வதாலேயே இந்தப் பெயர் என்றும் சொல்கின்றனர்.  ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு மேஜைக்கரண்டி ஜீரகத்தைப் போட்டுக் கொதிக்க வைத்து ஆறிய பின்னர் அந்த நீரை அருந்தினால் செரிமானம் சரியாகும். வாயுத் தொல்லை ஏற்படாது.

நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், வங்காளம் தவிர மற்ற மாநிலங்கள் அனைத்திலும் இது பயிராக்கப்படுகிறது.  சின்னஞ்சிறு செடியாக இருக்கும் இது ஒரு வருடத்தில் பலன் கொடுக்க ஆரம்பிக்கும். இலைகள் துண்டு துண்டாகக் காட்சி அளிக்கும். செடியிலேயே ஒருவித வாசனை நிறைந்திருக்கும். பூக்கள் வெண்மை அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். ஜீரகத்தை உள்ளே கொண்ட கனிகள் தடித்த உரோமங்களால் பாதுகாக்கப்பட்டுப் பக்கவாட்டில் அமுங்கிக் காணப்படும்.

வாயுத் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு டீஸ்பூன் ஜீரகத்தில் இரண்டு கிண்ணம் நீரை விட்டு அரைக்கிண்ணமாக வற்றக் கொதிக்கவிட்டு அதிலே ஒரு ஸ்பூன் வெண்ணையைப் போட்டுக் கொடுத்தால் சற்று நேரத்தில் வலி அமுங்கும். வாயுவும் பிரியும். பொதுவாகத் தாளிப்பில் பயன்படுத்தப்பட்டாலும் மசாலாப் பொடி செய்யவும் ஜீரகம் அவசியம் தேவை. ஜீரகத்தை மட்டும் வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு அதைச் சமையலிலும் சேர்க்கலாம். ஒரு ஸ்பூன் பொடியை வாயில் போட்டுக் கொண்டு இளம் சூடான வெந்நீரைக் குடித்தால் ஜீரணமும் ஆகும்.

ஜீரகம் ரசம் மிகவும் பெயர் போன ஒன்று. இதை மூன்று நான்கு விதங்களில் தயாரிக்கலாம்.

முதல்முறை

ஒரு சின்ன நெல்லிக்காய் அளவுப் புளி. சிறிய தக்காளி ஒன்று,
ரசப்பொடி ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு! பெருங்காயம்(தேவையானால்). ஜீரகம் போட்டால் சிலர் பெருங்காயம் சேர்க்க மாட்டார்கள்.

அரைக்க:- ஒரு சின்ன மிளகாய் வற்றல், இரண்டு டீஸ்பூன் ஜீரகம், இரண்டு டீஸ்பூன் துவரம்பருப்பு, கருகப்பிலை ஒரு டேபிள் ஸ்பூன். மி.வத்தல், ஜீரகம், துபருப்பு ஆகியவற்றை நன்கு ஊற வைத்துக் கருகப்பிலையுடன் சேர்த்து மிக்சியில் அல்லது அம்மியில் நன்கு அரைக்கவும்.

தாளிக்க: நெய் ஒரு டீஸ்பூன், கடுகு, கருகப்பிலை, சின்ன மி.வத்தல்

மேலே சொன்ன அளவுப்படி புளிக்கரைசலைத் தக்காளி, உப்பு, ரசப்பொடி, பெருங்காயம் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்ததும் அரைத்த கலவையை மேலும் கொஞ்சம் நீர் விட்டுக் கலக்கி ரசத்தில் விட்டு தேவையான அளவுக்கு நீர் விட்டு விளாவவும். மேலே பொங்கி வருகையில் நுரையை எடுத்துவிடவும். நுரை இருந்தால் ரசம் கெட்டியாகக் குழம்பு போல் இருக்கும். அப்படி இருந்தால் பிடிக்குமெனில் அப்படியே வைச்சுக்கலாம். ரசம் தெளிவாக வேண்டுமெனில் நுரையை எடுத்தால் தான் நல்லது. பின்னர் நெய்யில் கடுகு, கருகப்பிலை ஒரு சிறு மி.வத்தல் போட்டுத் தாளிக்கவும்.

இன்னொரு முறை:

அதே அளவுப் புளி, உப்பு, தக்காளி எடுத்துக்கொள்ளவும். பெருங்காயம் தேவை எனில் சேர்க்கவும். ஆனால் ரசப்பொடி போட வேண்டாம்.

மி.வத்தல் ஒன்று, ஒரு டீஸ்பூன்  மிளகு, ஒன்றரை டீஸ்பூன் ஜீரகம், துவரம்பருப்பு ஒரு டீஸ்பூன், கருகப்பிலை எடுத்துக் கொண்டு முதலில் சொன்ன பொருட்களை நீரில் ஊற வைத்துக் கொண்டு கருகப்பிலை சேர்த்து அரைக்கவும். புளிக் கரைசல், உப்பு, தக்காளி சேர்த்துப் புளி வாசனை போகக் கொதித்ததும் அரைத்த விழுதில் நீர் விட்டுத் தேவையான அளவுக்கு விளாவவும். இதற்கும் நுரையை எடுக்கலாம். எடுக்காமலும் பயன்படுத்தலாம். பின்னர் மேலே சொன்ன மாதிரி நெய்யில் கடுகு, ஜீரகம், கருகப்பிலை, மி.வத்தல் தாளிக்கவும்.

இன்னொரு முறை புளிக்கரைசலில் உப்புச் சேர்த்து ரசப்பொடி சேர்த்துப் பெருங்காயம் போட்டுக் கொதிக்க விடவும். பின்னர் அரைத் தக்காளியுடன் டீஸ்பூன் ஜீரகம், பத்து மிளகு சேர்த்துக் கொண்டுக் கருகப்பிலையுடன் அரைத்து ரசத்தில் சேர்த்து விளாவவும். நெய்யில் தாளிக்கலாம்.  மிளகு, ஜீரகம் அரைத்த ரசம் ஏற்கெனவே மிளகு பதிவில் வந்து விட்டது.

ஜீரக ருசி தொடரும்.

8 comments:

  1. அருமையான சீரகப் பதிவு. ரசம் தினம் செய்து சாப்பிடலாம். அத்தனை ருசி. நன்றி கீதாமா.

    ReplyDelete
    Replies
    1. தினம் சாப்பிட்டால் போர் அடிக்காதோ! பிடிக்காதவங்க விருந்துக்கு வந்தால் சீரக ரசமும், வத்தக்குழம்புத் தான் செய்து போடுவாங்கனு என் புக்ககத்தில் சொல்வாங்க! :) மோருக்குக் கூட சீரக ரசத்தின் அடிமண்டியைப் போடுவாங்களாம் தொட்டுக்க! :)

      Delete
  2. அருமை. நேத்து நம்ம வீட்டில் ஜீரக ரசம்தான்.

    ReplyDelete
    Replies
    1. அந்தக் குளிருக்கு இதமாக இருக்கும்.

      Delete
  3. சிறு வயதில் அநேகமாகத் தினமும் சீராக ரசம். மாதத்தின் தொடக்கத்திலேயே பருப்பு தீர்ந்து போய்விடும் என்பதால். அப்போது கடுப்பாக இருக்கும். இப்போது ருசிக்கிறது.

    (கொட்டு ரசம் என்று செய்வார்கள். மறந்தே விட்டது. உங்கள் பழைய பதிவுகளில் தேடிப் பார்க்கிறேன். எழுதியிருப்பீர்கள்.. )

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம், இது அநேகமா என் பிறந்தகத்திலும் உண்டு. ஆனால் சீரக ரசம் இல்லை. சீரகத்தின் வாடையே என் அப்பாவுக்குப் பிடிக்காது. கொட்டு ரசம்னு நீங்க சொல்லும் ரசம்தான் தினம் தினம் எங்க வீட்டில்! அதிலும் பருப்பை அள்ளி எல்லாம் போட மாட்டாங்க! பருப்பே இல்லாக் கொட்டு ரசம்! :)

      Delete