எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, February 16, 2016

உணவே மருந்து--மிளகு முடிவு!

இவற்றைத் தவிர மிளகு அவல், மிளகு போட்ட காராசேவு, மிளகு மிக்சர் போன்ற காரப் பொருட்களும் உண்டு.  நல்ல கெட்டி அவலை உப்புச் சேர்த்து ஊற வைத்துக் கொண்டு, நல்லெண்ணெயில் கடுகு, உபருப்பு, கருகப்பிலை தாளித்துக் கொண்டு, அவலைப் போட்டுக் கிளறிக் கீழே இறக்கும்போது ஒரு டீஸ்பூன் பொடித்த மிளகு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறிச் சாப்பிடலாம். எங்க வீட்டில் அமாவாசையன்று மாலை அநேகமாக மிளகு அவல் தான்! காராசேவுக்குக் கடலை மாவு+ அரிசிமாவில் உப்பு, பெருங்காயம், மிளகுப் பொடி சேர்த்துக் கொண்டு நன்கு நீர் விட்டுப் பிசைந்து காராசேவு தட்டில் போட்டுத் தேய்க்க வேண்டும். மிளகு வடை கூட உண்டு.

உளுத்தம்பருப்பு ஒரு கிண்ணம் எடுத்துக் கொண்டு நன்கு களைந்து கொண்டு நீரை வடித்து அதில் உள்ள ஈரத்தோடு பத்து நிமிடம் வைக்க வேண்டும். பின்னர் மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்தால் மாவு புசுபுசுவென வரும். மாவை நன்கு அரைத்ததும் தேவையான உப்பு, மிளகுப் பொடி (பெருங்காயம் தேவையானால்) சேர்க்கவேண்டும்.  பின்னர் மெலிதாக வடையாகத் தட்டி எடுக்கலாம். பருப்புத் தெரிய வேண்டும் என நினைப்பவர்கள் பாதி உடைத்த உளுத்தம்பருப்பைக் களைந்து இந்த மாவோடு சேர்த்துக் கொண்டு வடை தட்டலாம்.  ஒரு சிலர் உடைத்த உளுத்தம்பருப்பையே ஊற வைத்துக் கொரகொரப்பான மாவாக்கிக் கொண்டு அதில் கொஞ்சம் ரவை சேர்த்து, மிளகு பொடி, உப்புச் சேர்த்தும் வடை தட்டுவது உண்டு. மிக்சருக்குத் தேவையான சாமான்களைச் சேர்த்ததும் நெய்யில் கருகப்பிலை வறுத்துக் கொண்டு மிளகுப் பொடி, உப்புச் சேர்த்துக் கொண்டு மிக்சர் கலவையில் கொட்டி நன்கு கிளற வேண்டும்.  கோயிலில் புளியோதரைக்குப் புளிக்கரைசலை மட்டும் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொதிக்க வைத்துக் கொண்டு அந்தப் புளி விழுதைச் சாதத்தில் போட்டுக் கலந்து கொண்டு நெய்யில் மிளகை வறுத்து நைசாகப் பொடி செய்து போட்டுச் சேர்ப்பார்கள். பின்னர் தாளிதம் சேர்க்கப்படும். நிவேதனங்களில் பொதுவாக மிளகாய் சேர்ப்பதில்லை.

மிளகில் நம் உடலுக்குத் தேவையான நிறைய சத்துக்கள் உண்டு. மிளகுப் பொடியையும் உப்பையும் கலந்து பற்களைச் சுத்தம் செய்தால் ஈறுகளில் ரத்தம் கசிவது நிற்கும். வாய் துர்நாற்றம் போகும்.

ஏதேனும் பூச்சி கடித்ததோ என்ற சந்தேகம் வந்தால் ஐந்து மிளகை வாயில் போட்டு மென்றால் மிளகின் காரம் சுரீர் என நாக்கில் பட்டால் பூச்சிக்கடி இல்லை எனப் புரிந்து கொள்ளலாம். அப்படி உணர்ச்சி தெரியாவிட்டால் பூச்சிக்கடி எனப் புரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் மருத்துவம் செய்து கொள்ளலாம். மிளகு எப்போதும் நம் சமையலறையில் இருக்குமாறு பார்த்துக் கொள்வோம்.

8 comments:

  1. மிளகு - மனிதனுக்குக் கடவுள் கொடுத்த வரம்!

    ReplyDelete
    Replies
    1. உண்மை. வாய்ப்பாட்டுப் பாடும் பாடகர்கள் மிளகுப் பொடி தூவிய இளம் சூட்டு வெந்நீரை அடிக்கடி பருகுவார்கள் எனக் கேள்விப் பட்டிருக்கேன்.

      Delete
  2. எங்க அம்மா வைத்தியம் இது தான்.

    பூச்சி கடித்து உடம்பு அரிக்கிறது, என்றால்,
    இரண்டு மிளகு ஒரு கிராம்பு , அடுத்த இரண்டு மணி நேரம் கழித்து, இரண்டு கிராம்பு ஒரு மிளகு என்று நான்கு வேளை இரண்டு நாட்கள்.

    கூடவே, மகமாயி தாயார் கோவிலில் மந்திரிப்பார்.

    இப்பதான்,
    அலர்கான் , செற்றிசைன் , போதாத குறைக்கு ஸ்டெராய்ட் மாத்திரைகள்.

    போதுமடா சாமி.

    அது இருக்கட்டும்.
    மிளகு குழம்பிலே வதக்கின முத்திய தேங்காய், பூண்டு அரைச்சு கலக்கணும் இல்லையா?

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சு.தா. பத்தியத்துக்குச் செய்யும் மிளகு குழம்பிலே நிச்சயமாய்த் தேங்காய் போட்டுப் பார்க்கவில்லை. பூண்டு, சின்ன வெங்காயம் வதக்கிச் சேர்த்தாலும் அந்தக் குழம்பை 2 நாட்களுக்கு மேல் வைத்திருப்பதில்லை. அநேகமாய் எந்தத் தானும் போடாமலே மிளகு குழம்பு செய்து அதைப் பல நாட்கள் வைத்திருந்து பார்த்திருக்கேன்.

      Delete
    2. விஷப் பூச்சிக்கடி எனில் ஏழு மிளகை வாயில் போட்டு மென்றால் காரம் சுரீர் என நாக்கில் பட்டால் விஷம் ஏறவில்லை என்பார்கள். காரமே தெரியவில்லை எனில் விஷம் ஏறி இருக்கிறது என்று சொல்லி மந்திரிப்பார்கள்.

      Delete
    3. பாரம்பரிய பூச்சிக்கடி வைத்தியத்திற்கு நன்றி சுப்பு தாத்தா

      Delete
  3. பாரம்பரிய கோயில் புளிசாதம் செய்யும் முறை பற்றி மிக அற்புதமாக விளக்கி உள்ளீர்கள் நன்றி கீதாம்மா. இவையெல்லாம் இந்தக் காலத்தில் கிடைத்தற்கு அரிய விஷயங்கள் (பொக்கிஷங்கள்)என்று நான் நினைக்கிறேன்.

    ReplyDelete