எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, December 1, 2016

உணவே மருந்து! கருணைக் கிழங்கு!

கருணைக்கிழங்கு க்கான பட முடிவு

இந்தக் கிழங்கு இரு வகைப்படும். இப்போச் சொல்லப் போவது மேலே இருக்கும் உருண்டையான சின்னக் கிழங்குகள் பற்றியே. இதைப் பிடி கருணை என்பார்கள். கொஞ்சம் காரல் இருப்பதால் காரும் கருணை என்றும் சொல்வார்கள். இதை வேக விடுவதற்கு அரிசி கழுவிய நீரைப் பயன்படுத்தலாம். இந்தக் கருணைக்கிழங்கு மூல நோய் உள்ளவர்களுக்கு அருமருந்தாகும். அதோடு உடல் குண்டாகி மூட்டு வலி உள்ளவர்கள் சாப்பிட்டாலும் எடை குறையும். ஜீரண சக்தியை அதிகப்படுத்தி ஜீரண மண்டல உறுப்புகளை நன்கு செயல்பட வைக்கும்.  உடல் உஷ்ணம், நாள்பட்ட காய்ச்சல் சரியாகும். மூலச் சூடு, எரிச்சல் நீங்குவதோடு மலச்சிக்கலையும் நீக்கும்.  உடல்வலி மற்றும் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுதல் போன்றவற்றிற்கு நல்ல தீர்வைக் கொடுக்கும்.

இந்தக் கிழங்கு உருண்டையாகவும் இருக்கும். நீள் உருண்டை வடிவிலும் கிடைக்கும். இதை நன்கு குழைய வேக வைத்துவிட்டால் அதிகம் காராது. புளி சேர்த்துச் சமைக்க வேண்டும். கருணைக்கிழங்கில் குழம்பும் வைப்பார்கள்.  கருணைக்கிழங்கில் லேகியமும் தயாரிக்கப்படுகிறது. மசியல் செய்தும் சாப்பிடலாம். கருணைக்கிழங்கு மசியலை இரு வகையில் தயாரிக்கலாம். முதல் வகை புளி சேர்த்துச் செய்வது. இதை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.

நான்கு பேருக்குத் தேவையானது கருணைக்கிழங்கு அரைக் கிலோ

புளி ஒரு சின்ன எலுமிச்சை அளவு

துவரம்பருப்பு ஒரு கரண்டி அளவுக்கு எடுத்துக் குழைய வேக வைக்கவும்.

உப்பு தேவையான அளவு

வறுத்துப் பொடிக்க

மி.வத்தல் காரம் இல்லாதது மூன்று

ஒரு மேஜைக்கரண்டி கொத்துமல்லி விதை

ஒரு டீ ஸ்பூன் உளுத்தம்பருப்பு,

இரண்டு டீஸ்பூன் கடலைப்பருப்பு

வெந்தயம் அரை டீஸ்பூன், மிளகு அரை டீஸ்பூன்

பெருங்காயம் ஒரு துண்டு அல்லது ஒரு டீஸ்பூன் பெருங்காயப் பவுடர்

நல்லெண்ணெயில் மேற்சொன்னவற்றை வறுத்துப் பொடிக்கவும்.

தாளிக்க

கடுகு,
உபருப்பு,
பச்சை மிளகாய்
கருகப்பிலை
மஞ்சள் தூள்
கொத்துமல்லி இலை பொடியாக நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன்

முதலில் கருணைக்கிழங்கை அரிசி களைந்த நீரில் நன்கு குழைய வேக வைக்கவும். வேக வைத்த கிழங்கை ஒரு கரண்டியால் நன்கு மசித்துக் கொள்ளவும். அதில் புளிக்கரைசலையும், வெந்த துவரம்பருப்பையும் சேர்த்து மஞ்சள் தூள், உப்புச் சேர்த்துத் தனியாக வைக்கவும்.

ஒரு கடாயில் அல்லது உருளியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டுக் கடுகு, உபருப்பு, பச்சை மிளகாய், கருகப்பிலை, பெருங்காயம் தாளிக்கவும். தேவையானால் ஒரு மிவத்தலும் தாளிக்கலாம். அவரவர் காரத்துக்கு ஏற்றவாறு செய்யவும். பின்னர் கலந்து வைத்திருக்கும் கலவையைத் தாளிதத்தில் கொட்டவும். புளி வாசனை போகக் கொதித்ததும் வறுத்துப் பொடித்திருக்கும் பொடியைத் தூவவும். தேவையான அளவு பொடியைத் தூவியதும் ஒரு கொதி விட்டுக் கீழே இறக்கிப் பச்சைக் கொத்துமல்லி சேர்க்கவும். சாதத்தோடு சேர்த்துச் சாப்பிடலாம். 

Saturday, November 12, 2016

புதுவிதமான மோர்க்குழம்பு சாப்பிட வாங்க!

நமக்குத் தான் மண்டையிலே ஏதானும் ஓடிட்டே இருக்குமா! இன்னிக்கு என்ன சமைக்கிறதுனு ஒரே தலையாய பிரச்னை! நேத்திக்கு தோசைக்காகத் தக்காளித் தொக்கு அரைச்சிருந்தேன். அதிலேயே சாதம் கலக்கலாமானு ரங்க்ஸ் கேட்க சரி கலக்கலாம்னு சொல்லி இருந்தேன். அது முடிவாச்சு! அப்புறம் ரசம். அதை விட முடியாது! ரசம் இல்லைனா சாப்பிட்ட மாதிரியே இருக்காது! என்றாலும் மோர் கொஞ்சம் நிறைய மிஞ்சி இருந்தது. கலந்த சாதத்துக்குப் பச்சடிக்குப் பதிலா மோர்க்குழம்பு வைக்கலாமானு யோசனை. அப்போத் தான் திடீர்னு நினைவில் வந்தது ராஜஸ்தான், குஜராத்தில் வைக்கும் ghகட்டே கி khகடி செய்யலாமானு நினைச்சேன். இது கிட்டத்தட்ட நம்ம ஊர்ப் பருப்புருண்டைக் குழம்பு போலத் தான்! ஆனால் பருப்பு ஊற வைச்செல்லாம் அரைக்க மாட்டாங்க. கடலை மாவிலே செய்வாங்க. செய்முறையைப் பார்ப்போமா?

கடலை மாவு ஒரு கிண்ணம், உப்பு தேவைக்கு! மிளகாய்ப் பொடி, பெருங்காயம், மஞ்சள் பொடி, ஓமம் ஒரு டீஸ்பூன், எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், தயிர் இரண்டு டேபிள் ஸ்பூன்.  கடலைமாவோடு உப்பு, பெருங்காயத் தூள், ஓமம், மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் தயிர் சேர்த்துச் சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து வைக்கவும். அரைமணி நேரம் இருக்கட்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் ஜலம் வைத்துக் கொதிக்க விடவும். இந்தக் கடலைமாவு பிசைந்ததை உருளை வடிவில் உருட்டி வைக்கவும். உருட்டி வைத்ததை வெந்நீரில் போடவும். வெந்ததும் மேலே மிதந்து வரும். ஹிஹிஹி, பண்ணும்போது படம் எடுக்க மறந்து போச்சுங்க! திட்டாதீங்க! இன்னொரு தரம் பண்ணினால் படம் எடுத்துடறேன்.  மிதந்து வருபனவற்றைத் தனியாக எடுத்து வைக்கவும். அடுத்து இப்போக் கடி.


கடியில் போட்ட ghகட்டாக்கள்
மோரை நன்றாகக் கடைந்து கொள்ளவும். கடைந்த மோரில் ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவு, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி, வறுத்த சீரகப் பொடி, பெருங்காயப் பொடி, (தேவையானால் கரம் மசாலாப்பொடி) உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இந்த மோர்க் கரைசலை அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். கொதிக்கும் நேரம் வெந்து எடுத்திருக்கும் கட்டாக்களைப் போடவும். கட்டாக்கள் மிதந்து வரும்போது மோர்க்குழம்பைக் கீழே இறக்கவும். இன்னொரு வாணலி அல்லது இரும்புக் கரண்டியில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றிக் கடுகு, ஜீரகம், சோம்பு, ஏலக்காய், கிராம்பு, ஒரு சின்னத் துண்டு லவங்கப் பட்டை, மிவத்தல், கருகப்பிலை போட்டுத் தாளிக்கவும். தாளிதத்தை மோர்க்குழம்பில் ஊற்றவும். பச்சைக் கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். இந்த மோர்க்குழம்பு ஃபுல்கா ரோட்டி, சூடான சாதம் போன்றவற்றுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.


khகடி

தக்காளித் தொக்கு

பொதுவாய்த் தக்காளித் தொக்குக்கு மிவத்தல், தக்காளி இரண்டையும் நன்றாக எண்ணெயில் வதக்கிப்பேன். ஆனால் இப்போதெல்லாம் பச்சையாகவே பண்ணுகிறேன். மிவத்தல் ஒரு இருபது கால் கிலோ நல்ல சிவப்பான பழுத்த தக்காளி இரண்டையும் மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைக்கவும். அடி கனமான வாணலி அல்லது நான் ஸ்டிக் பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு தாளித்துக் கொண்டு பெருங்காயம் சேர்த்து மஞ்சள் பொடியும் சேர்க்கவும். அரைத்து வைத்திருக்கும் விழுதைக் கொட்டவும். உப்புச் சேர்க்கவும். நன்கு கிளறவும் சிறிது நேரம் நன்கு கொதித்ததும் ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும். அப்போது அடுப்பை நிறுத்திவிட்டு ஆறியதும் ஒரு காற்றுப் புகா டப்பாவில் போட்டு பத்திரப் படுத்தவும். தோசை, சப்பாத்தி, இட்லி, போன்ற எல்லாவற்றிற்கும் இது தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.


தக்காளித் தொக்கு சாதம்

சாதம் கலக்க! சாதத்தை உதிர் உதிராக வடிக்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை, ஒன்று அல்லது இரண்டு மி.வத்தல், கருகப்பிலை, பெருங்காயம் போட்டுத் தாளித்துக் கொள்ளவும். இந்தத் தாளிதத்தை எண்ணெயோடு சாதத்தில் கொட்டவும். நினைவாக சாதத்துக்கு ஒரு அரை டீஸ்பூன் உப்புச் சேர்க்கவும். ஹிஹிஹி, இன்னிக்குத் தொக்கிலே இருக்கும் உப்புப் போதும்னு சாதத்திலே போடலையா! உப்புப் போறலை! :) பின்னர் உங்கள் ருசிக்குத் தக்கவாறு தேவையான தொக்கைப் போட்டு நன்கு கிளறவும். அரை மணி நேரம் ஊற வைத்துவிட்டுப் பின் பரிமாறவும். அரைப் புளியோதரை மாதிரி இருக்கும். :) 

Monday, November 7, 2016

சிய்யம், சுகியம், சீயன், சுய்யம் எதுவேணா சரி!

இது ஒரு பாரம்பரிய பட்சணம் என்றே சொல்லலாம். ஏனெனில் இது சிராத்தங்களில் பரிமாறப்படும் ஓர் பட்சணமாகவும் இருக்கிறது. திரு நெல்லைத் தமிழன் சொல்லி இருக்கிறாப்போல் எங்க வீட்டிலும் கிருஷ்ண ஜயந்தி, சரஸ்வதி பூஜை, சில சமயங்களில் ஆவணி அவிட்டம், மற்றும் சிராத்தங்களில் சிய்யம், அல்லது சீயன் செய்யப் படுவது உண்டு. அநேகமா இது தென் மாநில பட்சணங்களில் ஒன்று என்றே நினைக்கிறேன். எனெனில் என் மாமியார் வீட்டில் இதைச் செய்தே பார்த்தது இல்லை. என் ஓரகத்தில் சரஸ்வதி பூஜைக்குச் செய்வதாகச் சொல்லி இருக்கிறாள். ஆனாலும் நான் அதிகம் செய்ததில்லை. ரங்க்ஸுக்கு இது அவ்வளவாப் பிடிக்கலை என்பதே முக்கியக் காரணம். ஆனாலும் இது எனக்குப்பிடிக்கும்.

அம்மா வீட்டில் சிராத்ததில் தேங்காய் சேர்ப்பதில்லை என்பதால் சீயனுக்குப் பருப்புப் பூரணம். அதுவும் பாசிப்பருப்புப் பூரணம் வைத்திருப்பார்கள். மற்ற நாட்களில் பண்டிகை தினங்களில் திரு நெ.த. சொல்லி இருப்பது போல் தேங்காய்ப் பூரணம் தான். ஆனால் மேல் மாவுக்கான செய்முறை முற்றிலும் வேறு. இதுக்கு மைதா மாவே பயன்படுத்தி நான் பார்த்ததில்லை. பொதுவா சிராத்தம் அன்னிக்கு மைதாவுக்குத் தடா இருக்குமே! அதோடு இதற்கான மாவைத் தயாரிப்பதில் தான் சீயனின் ருசியும் அடங்கி இருக்கிறது. இதற்கு அரிசியை ஊற வைத்துப் பின் நீரை வடிகட்டிப் பின்னர் மிக்சியில் அல்லது மிஷினில் பொடியாக்கிய அரிசி மாவு வேண்டும். சிராத்தம் அன்று எல்லா மாவுகளும் அப்போதே தயாரிக்கப்படும். மற்ற நாட்களில் அரிசி மாவை மட்டும் முன்னாடியே தயாரிச்சு வைப்பாங்க. என் அம்மா அந்தக் காலத்தில் கையால் திரிக்கும் இயந்திரத்தினால் மாவு திரிச்சு வைப்பாங்க. இல்லைனா கல் உரலில் போட்டு இடித்துச் சலித்து எடுத்துக்கணும். இப்போதெல்லாம் ஈர அரிசியே மிஷினில் அரைத்துக் கொடுப்பதால் அப்படி அரைச்சு வாங்கி வைச்சுக்கலாம்.

இப்போ அடுத்துச் செய்ய வேண்டியது, சீயன் தயாரிக்கத் தேவையான பொருட்கள்.

ஒரு அரைக்கிண்ணம் அரிசி மாவு

உளுந்து ஒரு கிண்ணம் குவியலாக

உப்பு தேவைக்கு

சீயனுக்கான பூரணம் தயாரிக்க

தேங்காய் நடுத்தரமாக ஒன்று

வெல்லம் பாகு வெல்லம் சுத்தமானதும் தூளாக்கியதும் இரண்டு கிண்ணம்

ஏலக்காய்த் தூள் ஒரு டீஸ்பூன்

பொரிக்கத் தேவையான எண்ணெய்

உளுந்தை ஒரு இரண்டு மணி நேரம் ஊற வைத்து நன்கு தளதளவென்று அரைத்துக்கொள்ளவும். அரைத்து எடுத்த உளுந்து மாவில் அரிசிமாவு, உப்புச் சேர்த்துக் கலக்கவும். கலந்த மாவை ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும்.
தேங்காயைத் துருவி எல்லாத் துருவலையும் எடுத்துக் கொள்ளவும். வெல்லம் சுத்தமானதாக இருந்தால் தேங்காய்த் துருவலையும், வெல்லத்தையும் சேர்த்தே ஒரு அடி கனமான பாத்திரத்தில் போட்டுக் கிளறிப் பூரணம் தயாரிக்கலாம். வெல்லம் அழுக்காக இருந்தால் வெல்லத் தூளை நீரில் கரைத்து வடிகட்டி அழுக்குகளை எடுத்து விட்டுப் பாகு காய்ச்ச வேண்டும். பின்னர் அந்தப் பாகில் தேங்காய்த் துருவலைப் போட்டுக் கிளற வேண்டும். கிளறிய பூரணத்தில் ஏலக்காய்த் தூளைச் சேர்த்து ஆற விட வேண்டும். ஆறிய பின்னர் ஒரு சின்ன எலுமிச்சை அளவு உருண்டையை எடுத்துக் கொண்டு கலந்து வைத்திருக்கும் மாவில் போட்டு முக்கி எடுத்து எண்ணெயில் போட்டுப் பொரிக்கவும்.உங்கள் சீயன்கள் மேலே மொறு மொறுவென்றும் உள்ளே மிருதுவாகவும், தித்திப்பாகவும் வரும்.
Image result for சுகியம்

படத்துக்கு நன்றி தினமணி.காம். வலைப்பக்கம் கூகிளார் வாயிலாக

இந்த மாவையே காலையில் அரைத்துக் கலந்து வைத்து விட்டு அப்படியே வைத்திருந்து மாலையில் மாவில் கடுகு, உபருப்பு, கபருப்பு, இஞ்சி, பச்சைமிளகாய், கருகப்பிலை, கொத்துமல்லி, பெருங்காயம் தாளித்துக் கரண்டியால் எண்ணெயில் எடுத்து ஊற்றி வெள்ளை அப்பம் தயாரிக்கலாம். அல்லது குழிச் சட்டியில் ஊற்றிக் குழி ஆப்பமாகவும் தயாரிக்கலாம்.

    

இது நான் முன்னர் பண்ணினப்போ எடுத்த படங்கள். மேல் மாவு தயாரிக்கும் முறை சீயனுக்கும் இதுக்கும் ஒண்ணு தான். மேல்மாவு

Monday, October 31, 2016

பொரிச்ச குழம்பா அல்லது மொளகூட்டலா? எது சரி? :)

உணவே மருந்து தொடர் தான் தொடரணும். ஆனால் இன்று நெல்லைத் தமிழன் எங்கள் ப்ளாகில் போட்டிருந்த புடலைப் பொரிச்ச குழம்பைப் பார்த்ததும் இங்கே கொஞ்சம் விளக்கம் எழுதலாம்னு கை துறு துறு! நெல்லைத் தமிழன் சொல்லி இருப்பது முழுக்க முழுக்கப் பொரிச்ச குழம்பு வகையே! ஏனெனில் மிளகூட்டல் அல்லது மொளகூட்டல் என்றால் அதுக்கு மிளகு வைக்கவே கூடாது. :) இது குறித்து ஏற்கெனவே எழுதி இருக்கேன். பொரிச்ச குழம்புக்கும் மிளகூட்டல் அல்லது மொளகூட்டலுக்கும் வித்தியாசம் உண்டு.

அதோடு பொரிச்ச கூட்டையும் சிலர் இப்படித் தான் ஜீரகம் வைத்துத் தேங்காய் சேர்த்து அரைத்துட்டுப் பொரிச்ச கூட்டுனு சொல்றாங்க. உண்மையில் பொரிச்ச கூட்டுக்குப் பருப்பே போட வேண்டாம். காய்களை நறுக்கிக் கொண்டு அலம்பிப் போட்டு லேசாக நல்லெண்ணெயில் ஒரு வதக்கு வதக்கிக் கொண்டு நீர் சேர்த்து உப்பு, மஞ்சள் பொடி போட்டு வேக வைத்துக் கொண்டு வெறும் தேங்காயும்,கொஞ்சம் ஊற வைத்த அரிசி அல்லது அரிசி மாவு சேர்த்து அரைத்துக் காயில் கலந்து ஒரு கொதி விட்டுப் பின்னர் கடுகு, உபருப்பு, கருகப்பிலை, மி.வத்தல் தாளித்தால் பொரித்த கூட்டு!

அல்லது காய்கள் வேகும்போதே ஒரு ஸ்பூன் சாம்பார்ப் பொடி, பெருங்காயம் சேர்த்து உப்போடு வேக வைத்துப் பின் தேங்காய், அரிசி மாவு அரைத்துக் கலப்பதும் பொரித்த கூட்டு வகை தான். ஆனால் பொரித்த கூட்டுக்கு நாட்டுக் காய்கள் தான் நன்றாக இருக்கும். உதாரணம் புடலை, கத்திரி, அவரை, கொத்தவரை போன்றவை. அபூர்வமாகச் சில சமயம் சௌசௌவும் பொரித்த கூட்டுக்கு எடுபடும். இதில் கொத்தவரையில் பொரித்த கூட்டுச் செய்கையில் கடலைப்பருப்பை ஊற வைத்துக் கொத்தவரை வேகும்போது சேர்த்துக் கொண்டு ஒரு டீஸ்பூன் சாம்பார்ப் பொடி, பெருங்காயம் உப்போடு சேர்த்து வேக வைத்துக் கொண்டு, தேங்காயத்துருவலை அரைத்து விடாமல் தாளிதத்தில் போட்டு வறுத்துக் கொட்டுவதும் ஒரு முறை பொரிச்ச கூட்டு.

ஆனால் பொரிச்ச குழம்பு என்றால் மி.வத்தல், மிளகு, உபருப்பு, தேங்காய்த் துருவல் வறுத்து அரைத்துச் சேர்க்க வேண்டும். இதற்குப் பாசிப் பருப்பு மட்டும் போதும். மொளகூட்டல் எனில் துவரம்பருப்புச் சேர்த்தால் தான் நன்றாக இருக்கும். அல்லது துவரம்பருப்பும் பாசிப்பருப்பும் கலந்தும் போடலாம்.  மொளகூட்டலுக்கு இரண்டு, மூன்று காய்கள் கலந்தும் போடலாம். நாட்டுக்காய்கள் அதிகம் இருந்தால் நன்றாக இருக்கும். பூஷணி, பறங்கி, அவரை, கத்திரி, புடலை போன்றவற்றில் மொளகூட்டல் நன்றாக இருக்கும். முளைக்கீரையிலும் மொளகூட்டல் செய்வது உண்டு! அதுவும் நன்றாக இருக்கும். 

Friday, September 2, 2016

உணவே மருந்து! நெல்லிக்காய்--தொடர்ச்சி--3

நெல்லிக்காய் சாதம்.

தேவையான பொருட்கள்: நான்கு அல்லது ஐந்து பெரிய நெல்லிக்காய்கள். துருவிக் கொள்ளவும்.

பச்சை மிளகாய் அவரவருக்கு காரத்துக்கு ஏற்ப 2 அல்லது 3
இஞ்சி  ஒரு சின்னத் துண்டு
தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன்
கொத்துமல்லித் தழை பொடியாக நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன்
சமைத்த சாதம் ஒரு கிண்ணம் அல்லது அரைக்கிண்ணம் அரிசியைக் களைந்து ஊற வைத்து உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும்.

உப்பு தேவையான அளவு

தாளிக்க
நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு,
உ.பருப்பு, கபருப்பு வகைக்கு ஒரு டீஸ்பூன்
வேர்க்கடலை ஒரு டேபிள் ஸ்பூன்
மி.வத்தல் ஒன்று அல்லது இரண்டு
பெருங்காயம் தூளானால் கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
கருகப்பிலை

நெல்லிக்காய்த் துருவலைத் தனியாக வைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாய், தேங்காய், இஞ்சி, கொத்துமல்லி ஆகியவற்றை மிக்சி ஜாரில் போட்டுக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் நல்லெண்ணெயைச் சூடாக்கிக் கொண்டு கடுகு, உ.பருப்பு, கபருப்பு, வேர்க்கடலை தாளிக்கவும். பெருங்காயமும், கருகப்பிலையும் சேர்த்து மிவத்தலையும் அதில் சேர்க்கவும். அரைத்த விழுதை அதில் போட்டுக் கலக்கவும். நன்கு கலக்கவும். நெல்லிக்காய்த் துருவலையும் சேர்த்து மஞ்சள் பொடி போட்டுத் தேவையான உப்புச் சேர்த்து நன்கு வதக்கவும். கலவை நன்கு வதங்கியதும் சமைத்த சாதத்தைச் சேர்த்துத் தேவையானால் அரை டீஸ்பூன் உப்புச் சேர்க்கவும். ஏற்கெனவே உப்புப் போட்டிருப்பதால் சாதத்தைச் சுவைத்துப் பார்த்த பின்னர் கூட உப்புத் தேவை எனில் சேர்க்கலாம். சாதம் கலவையோடு நன்கு கலந்த பின்னர் தயிர்ப் பச்சடி ஏதேனும் துணைக்கு வைத்துப் பரிமாறவும்.  இது ஒரு தனிச் சுவையோடு இருக்கும்.

நெல்லிக்காய் ரசம்

நெல்லிக்காய் ஐந்து அல்லது ஆறு

குழைவாக வேக வைத்த துவரம்பருப்புக் கரைத்த நீர் ஒரு கிண்ணம்

தக்காளி ஒன்று

மிளகு, ஜீரகம் ஒன்றிரண்டாகப் பொடித்தது ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் ஒன்று

கருகப்பிலை, கொத்துமல்லி

பெருங்காயம்

தாளிக்க நெய் ஒரு டீஸ்பூன், கடுகு ஒரு டீஸ்பூன்

உப்பு, தேவையான அளவு

மஞ்சள் பொடி

நெல்லிக்காய்களைத் துருவிக் கொண்டு பச்சை மிளகாயோடு சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பு நீரில் உப்பு, மஞ்சள் பொடி , தக்காளி, பெருங்காயம் சேர்த்துக் கொதிக்கவிடவும். அரைத்து வைத்த நெல்லிக்காய் விழுதைச் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும். பொங்கி வரும்போது அணைத்து விட்டு ஓர் இரும்புக்கரண்டியில் நெய்யை ஊற்றிக் கடுகு, கருகப்பிலை தாளிக்கவும். பொடித்த மிளகு, ஜீரகத்தை அதில் சேர்க்கவும். பின்னர் நெய்யோடு சேர்த்து அந்தக் கலவையை ரசத்தில் கொட்டிக் கலக்கவும். தேவையானால் கொத்துமல்லித் தழை சேர்க்கலாம்.

நெல்லி முறப்பா

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் அரைக்கிலோ

சர்க்கரை அரைக்கிலோ

வேகவைக்கவும் சர்க்கரைப் பாகு வைக்கவும் தேவையான நீர்

நெல்லிக்காயை முதலில் நீரில் வேக வைக்கவும். ரொம்பக் குழைவாக வேகக் கூடாது. கையால் அழுத்தினால் அழுந்த வேண்டும். பின்னர் ஓர் பெரிய ஊசியால் நெல்லிக்காய்களைச் சுற்றிப் பொறுமையாகத் துளை போட வேண்டும். சர்க்கரையை அடுப்பில் ஏற்றி நீர் விட்டுக் கரைந்ததும் சர்க்கரையின் அழுக்கை எடுத்து விட்டுப் பாகு வைக்கவும். பாகு கையால் உருட்டும் பதம் வந்ததும், வேகவைத்த, ஊசியால் குத்தப்பட்ட நெல்லிக்காய்களை அதில் சேர்க்கவும். பத்து நிமிஷம் கொதிக்க விடவும். பாகும் நெல்லிக்காயும் சேர்ந்து வரும். அப்போது இறக்கி ஆறவைத்துக் கொண்டு ஒரு கண்ணாடி பாட்டில் அல்லது பீங்கான் ஜாடியில் போட்டுக் கொள்ளவும். தினம் காலை ஒரு நெல்லிக்காயை இதில் இருந்து எடுத்துச் சாப்பிட்டால் உடலுக்கும் நல்லது. தொண்டையில் இருக்கும் பிரச்னைகளும் சீராகும்.குரல் வளம் பெறும்.

Friday, August 19, 2016

உணவே மருந்து! நெல்லிக்காய்

சிறுநீரகக் கல் கரைய நெல்லிக்காய்ச் சாறு எடுத்துக் குடிக்கலாம். இத்துடன் இஞ்சி சேர்க்கவேண்டும். இஞ்சியைத் தோல் சீவிப் பொடியாக நறுக்கிக் கொண்டு அத்துடன் இரண்டு பெரிய நெல்லிக்காய்களையும் துண்டுகளாக்கிச் சேர்த்து மிக்சி ஜாரில் போட்டு அரைக்கவும். அப்படியே நீர் சேர்த்துக் கொண்டு தேன் சேர்த்துக் குடிக்கலாம். அல்லது வடிகட்டிக் கொண்டு சர்க்கரை, தேன், உப்பு ஒரு சிட்டிகை, ஜீரகத் தூள் ஒரு சிட்டிகை சேர்த்துக் கலந்தும் குடித்து வரலாம். இரண்டுமே பயன் தரக் கூடியது!  ஆயுர்வேத மருத்துவத்தில் நெல்லிக்காயின் பயன்பாடு அதிகம். தலை மயிர் நன்கு செழித்து வளரவும் நெல்லிக்காயைக் காயவைத்துத் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துத் தைலம் காய்ச்சித் தேய்த்து வரலாம்.

சர்க்கரை நோயுள்ளவர்கள் தினம் காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் மற்றும் பாகல்காய் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்துத் தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல பலன் தரும். இது அனுபவத்தில் கண்டது. இதன் மூலம் நாள்பட்ட அல்சரும் குணமாகும். தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான வைடமின் சி கிடைப்பதோடு, மலச்சிக்கல் இல்லாமலும், கட்டுப்பாடான உயர் ரத்த அழுத்தத்துடனும் இருக்கும் என்பதோடு குண்டானவர்களுக்கு உடல் எடையும் குறையும். நெல்லிக்காயை எப்படிச் சமைத்து உண்டாலும் அதன் சத்துகள் வீணாவதில்லை. நெல்லிக்காயை ஊறுகாயாகவும் செய்து சாப்பிடலாம்.

நெல்லிக்காய் ஊறுகாய்: தேவையானன் பொருட்கள்

அரைக்கிலோ நாட்டு நெல்லிக்காய் அல்லது மலை நெல்லிக்காய்

உப்பு தேவையான அளவு

மிளகாய்த் தூள் கால் கிண்ணம் (அவரவருக்குத் தேவையான காரத்துக்கு ஏற்ப)

நல்லெண்ணெய் அரைக்கிண்ணம்

கடுகு, வெந்தயம் வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்தது ஒரு டேபிள் ஸ்பூன்

தாளிக்க கடுகு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள்

நெல்லிக்காயைக் குக்கர் அல்லது அடி கனமான பாத்திரத்தில் போட்டு நன்கு வேக வைக்கவும். வெந்த நெல்லிக்காயிலிருந்து கொட்டைகளைப் பிரிக்கவும். கொட்டைகளும் பயன்படும். பிடிக்குமெனில் அவற்றையும் காய வைத்துப் பயன்படுத்தலாம். இப்போது வெந்த நெல்லிக்காயைத் தனியே வைக்கவும். ஓர் வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றிக் காய வைத்துக் கடுகு சேர்க்கவும். மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் சேர்க்கவும். வெந்து எடுத்திருக்கும் நெல்லிக்காயை அதில் சேர்க்கவும். மிளகாய்த் தூள், உப்புச் சேர்த்து நன்கு கிளறவும். பத்து நிமிடம் போல் கிளறிய பின்னர் கடுகு, வெந்தயப் பொடி சேர்த்துக் கிளறிக் கீழே இறக்கவும். ஆறிய பின்னர் பயன்படுத்தவும். இது விரைவில் வீணாகிவிடும் என்பதால் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்த வேண்டும்.

நெல்லிக்காய்த் தொக்கு

நெல்லிக்காய்களைத் துருவிக் கொள்ளவும். துருவல் இரண்டு கிண்ணம்

புளி ஒரு எலுமிச்சை அளவு சாறு எடுத்துக் கொள்ளவும்

தேவையான உப்பு

மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கடுகு, வெந்தயப் பொடி தேவையான அளவு

தாளிக்க நல்லெண்ணெய்

கடுகு, பெருங்காயம்.

கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிச் சூடு செய்யவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பெருங்காயத் தூள் சேர்த்துக் கொண்டு மஞ்சள் தூளும் போட்டபின்னர் புளிச்சாறை விட்டுக் கொஞ்சம் கொதிக்கவிடவும். பின்னர் துருவி வைத்திருக்கும் நெல்லிக்காயைச் சேர்த்து மிளகாய்ப் பொடி, உப்பு சேர்த்துக் கிளறவும். நன்கு கிளறி எண்ணெய் பிரிந்து வரும்போது கடுகு, வெந்தயப் பொடி சேர்க்கவும். ஒரு கிளறு கிளறிவிட்டுக் கீழே இறக்கவும். ஆறிய பின்னர் பயன்படுத்தவும். புளி சேர்ப்பதால் சிலருக்குப் பிடிக்காது.


Friday, July 29, 2016

உணவே மருந்து! நெல்லிக்காய்!

நெல்லிக்காயை ஒரு கடி கடிச்சுட்டு அதன் பின்னர் ஒரு தம்பளர் நீர் அருந்தினால் நீர் சுவை இனிமையாக இருக்கும்.  நெல்லிக்காய் பெரும்பாலும் தென்னிந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் பரவலாகக் காணப்படும் ஒன்று. முன்னெல்லாம் பள்ளி வாசல்களிலேயே நெல்லிக்காயைக் கூறு கட்டி விப்பாங்க. காலணாவுக்கு மூணு நெல்லிக்காய் கிடைச்ச காலம் அது! அப்போக் காலணாவும் கிடைக்காது. நெல்லிக்காயும் சாப்பிட முடியாது! இதன் அருமை, பெருமை தெரியாத என்னோட அப்பா நெல்லிக்காய் சாப்பிட்டால் தொண்டை கட்டிக்கும்னு சொல்லிடுவார். திருட்டுத் தனமாகத் தான் நெல்லிக்காய் சாப்பிட்டிருக்கேன்.

நெல்லிக்காயைக் குறித்துத் தமிழ் இலக்கியத்தில் கூடச்  சொல்லப் பட்டிருக்கிறது.. ஔவையாருக்குக் கிடைத்த அபூர்வ நெல்லிக்காயைத் தன்னைக் காப்பாற்றும் மன்னன் அதியமானுக்கு ஔவை அளிக்க அதைச் சாப்பிட வேண்டியவர் ஔவைதான் சாப்பிட வேண்டும் என்று அதியமான் அவருக்கே திரும்பக் கொடுத்துவிட்டதாக வரலாறு கூறுகிறது.  இத்தனை பெருமையும், பழமையும் வாய்ந்த நெல்லிக்காயின் அருமை, பெருமைகளைப் பார்ப்போமா?

இது உயரமான மரமாக வளரும். இதன் காய்கள் வெளிர் பச்சை நிறத்திலோ அல்லது இளமஞ்சள் நிறத்திலோ காணப்படும். இதில் அரைநெல்லி, கரு நெல்லி என்று இருவகை உண்டு. அரை நெல்லி என்பது சிறியதாக வளரும்.

Image result for நெல்லிக்காய்

அரை நெல்லிக்காய்
பெருநெல்லி அல்லது மலை நெல்லிக்காய் அல்லது பெரு நெல்லி எனப்படும் நெல்லிக்காயே மிகவும் சத்துக்கள் நிறைந்தது ஆகும். நெல்லிக்காய் நம் நாடு முழுவதும் எல்லாக் காலங்களிலும் அநேகமாய்க் கிடைத்து வருகிறது. ஆயுர்வேதத்தில் இதை ஒரு ரசாயனம் என்ற பெயரிலேயே பல ஆயிரம் ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.  நம் உடல் ஆரோக்கியத்துக்குத் தீங்கு விளைவிக்கும் பொருள் எதுவானாலும் அதை அப்புறப்படுத்தும் சக்தி ஆப்பிள், நெல்லிக்காய் மற்றும் ஆலிவ் ஆகியவற்றுக்கு உண்டு என்பது மருத்துவர்களின் முடிவு.
Image result for நெல்லிக்காய்

பெரு நெல்லி

படங்கள் கூகிளாருக்கு நன்றி.

நெல்லிக்காயில் இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கைப்பு, துவர்ப்பு ஆகிய ஐந்து சுவைகள் உள்ளன. பித்தத்தை நீக்க நெல்லிக்காயின் இனிப்பும் உவர்ப்பும் பயன்படுகிறது. நெல்லிக்காயின் புளிப்பு வாயுவையும், துவர்ப்பும், கைப்பும் கபத்தையும் போக்கும். இப்படி வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்களையும் நீக்கும் வல்லமை ஒரு நெல்லிக்காயில் உண்டு. இதில் ஏபிசி ஆகிய மூன்று வைடமின்களைத் தவிர ஒரு கிண்ணம் சாத்துக்குடிச் சாறில் உள்ளதைப் போல் 20 மடங்கு அதிகமான இ வைடமினும் இருக்கிறது. மற்ற எந்தக் காயானாலும் கனியானாலும் வாடிப் போனால் சத்துக் குறைந்து விடும். ஆனால் நெல்லிக்காயை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதன் சத்துக்கள் வீணாவதே இல்லை.

நெல்லிக்காயைக் காய வைத்தால் அதை நெல்லிமுள்ளி என்பார்கள். இதையும் பயன்படுத்தலாம் என்றாலும் பச்சை நெல்லிக்காய் இன்னமும் சிறப்பானது. நெல்லிக்காயை அரைத்து உருண்டையாக உருட்டிக் காய வைத்து சாப்பிட்டு வந்தால் ஆறாத காயங்களும் ஆறும். நெல்லிக்காயை உண்டு வந்தால் பற்களில் ஏற்படும் பயோரியோ நோய்க்கு நல்ல மருந்தாகும். கோணல் மாணலாக முளைக்கும் பற்களையும், சின்னக் குழந்தைகளுக்குக் காலத்தில் பல் முளைக்கவில்லை என்றாலும் நெல்லிக்காயைப் பயன்படுத்தலாம். கர்ப்பிணிகள் கர்ப்பம் ஏற்பட்டதிலிருந்து தினமும் ஒரு நெல்லிக்காயோ அல்லது நெல்லி முள்ளியோ உட்கொண்டு வந்தால் வாந்தி முதலியன கட்டுப்படும். இரும்புச் சத்து, ரத்த விருத்தி ஆகியன ஏற்படும். பசி ஏற்பட்டு நன்றாகச் சாப்பிடுவார்கள். குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும்.

ஞாபக சக்தி அதிகரித்துக் கண் பார்வை தெளிவாகவும் நெல்லிக்காயைப் பயன்படுத்தலாம். நெல்லி மரத்தின் ஒவ்வொரு பாகமும் உபயோகமானது. நெல்லிப்பட்டை வீடு கட்டவும், கலப்பை போன்ற உழவு யந்திரங்கள் தயாரிக்கவும் பயன்படும். இதில் கிடைக்கும் டானின் என்னும் ஆசிட் தோல் பதனிடப் பயன்படும். இதன் இலைகளின் நீலச் சாயம் பட்டுத் துணிகளில் சாயம்தோய்க்கப்பயன்படும்.

Monday, July 25, 2016

உணவே மருந்து! வெந்தயம், தொடர்ச்சி!

வெந்தயக் கீரைச் சப்பாத்தி அல்லது பரோட்டா அல்லது தேப்லா

Image result for மேதி பரோட்டா


மூன்றும் ஒன்றே தான். பரோட்டா மட்டும் கொஞ்சம் உள்ளே நெய் தடவி மடித்துப் போட்டு இட்டுச் செய்யணும். மத்தது இரண்டும் இட்டுக் கொண்டு தோசைக்கல்லில் போட்டு நெய்யோ எண்ணெயோ விட்டு வேக வைத்து எடுக்க வேண்டும். தேவையான பொருட்கள்:

வெந்தயக் கீரை ஒரு கட்டு. நன்கு ஆய்ந்து நறுக்கிக் கழுவிக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வைக்கவும்.

கோதுமை மாவு  இரண்டு கிண்ணம்

கடலை மாவு அரைக்கிண்ணம்

உப்பு தேவையான அளவு

மஞ்சள் பொடி ஒரு டீஸ்பூன்

மிளகாய்ப் பொடி ஒரு டீஸ்பூன்

கரம் மசாலாப் பொடி(தேவையானால்) அரை டீஸ்பூன்

ஓமம் பொடித்தது அரை டீஸ்பூன்

தயிர் ஒரு கிண்ணம்

பச்சை மிளகாய், இஞ்சி அரைத்த விழுது ஒரு டீஸ்பூன். இந்த விழுதை அரைக்கையில் இதனோடு தேங்காயும் சேர்த்து அரைக்கலாம். நான்கு பேருக்கான சப்பாத்திக்கு இரண்டு பச்சை மிளகாய் ஒரு துண்டு இஞ்சி ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய்த் துருவல் வைத்து அரைக்கலாம்.

எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் (இது மாவில் பிசையும் போது கலக்க)

இதைத் தவிர சப்பாத்தி செய்து கொண்டு சப்பாத்தியில் சுற்றியும் விட்டு எடுக்க எண்ணெய் அல்லது நெய் அவரவர் வசதிப்படி ஒரு சின்னக் கிண்ணம்.

சப்பாத்திக்கு உள்ளே தடவ வெண்ணெய் அல்லது நெய் ஒரு சின்னக் கிண்ணம்

கோதுமை மாவு, கடலை மாவு, உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, கரம்மசாலாப்பொடி ஆகியவற்றை ஒன்றாக்கி நன்றாகக் கலக்கவும். பச்சைமிளகாய் விழுது, பொடி செய்த ஓமம் ஆகியவற்றையும் போட்டுக் கலந்து கொள்ளவும். பச்சைமிளகாய் இஞ்சி கடிபட வேண்டுமென விரும்பினால் அப்படியே பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். இவற்றோடு ஆய்ந்து நறுக்கி வைத்த வெந்தயக்கீரையைச் சேர்த்துக்கலந்து கொள்ளவும்.  தயிரைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு மாவைச் சப்பாத்தி மாவு போல் பிசையவும். நன்கு மாவு பிசைந்தானதும் இரண்டு டீஸ்பூன் எண்ணெயை மாவில் மேலாக விட்டு மீண்டும் நன்கு பிசைந்து கொண்டு  ஒரு மணி நேரம் போல் ஊற வைக்கவும்.

மாவு ஊறியதும் அடுப்பில் தோசைக்கல்லைப் போட்டுச் சூடாக்கிக் கொண்டு பிசைந்த மாவில் ஒரு சின்ன ஆரஞ்சு அளவு எடுத்துக் கொண்டு காய்ந்த மாவில் தோய்த்துக் கொண்டு சப்பாத்தியாக இடவும். உள்ளே நெய் அல்லது வெண்ணெய் தடவவும், மடித்துப் போட்டுக் கொண்டு மேலே மீண்டும் நெய் அல்லது வெண்ணெய் தடவிக் கொண்டு சப்பாத்தியை மறுபடி மடித்துப் போட்டு இடவும். இம்மாதிரி இரண்டு அல்லது மூன்று முறை மடித்துப் போட்டுக் கொண்டு நெய் தடவிய பின்னர் சப்பாத்திகளாக இட்டுக் கொண்டு காய்ந்து கொண்டிருக்கும் தோசைக்கல்லில் போடவும். உடனே நெய்யோ அல்லது எண்ணெயோ விட வேண்டாம். ஒரு பக்கம் கொஞ்சம் வெந்த பின்னர் திருப்பிப் போட்டு வெந்த பின்னர் எண்ணெய் அல்லது நெய்யை ஊற்றினால் நன்றாக உப்பிக் கொண்டு வரும். பின்னர் இரு பக்கமும் திருப்பிப் போட்டு நெய்யோ அல்லது எண்ணெயோ ஊற்றி வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். இதை ஊறுகாய், தயிர்ப்பச்சடி போன்றவற்றோடு சாப்பிடலாம். மோர்க்குழம்பு, வெந்தயக்கீரைக்குழம்பு போன்றவையும் இதற்கு நல்ல துணை.


வெந்தயக் குழம்பு  தேவையான பொருட்கள்

புளி ஒரு எலுமிச்சை அளவு எடுத்து ஊற வைத்துக் கரைத்துக் கொள்ளவும். இரண்டு கிண்ணம் இருக்கவேண்டும்

தாளிக்க நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு, துபருப்பு, உபருப்பு, கபருப்பு, வெந்தயம், மிவத்தல், கருகப்பிலை ஆகியன பருப்பு கடுகு போன்றவை தலா ஒரு டீஸ்பூன் இரண்டு மிவத்தல் கருகப்பிலை கொஞ்சம் போல. பெருங்காயம் ஒரு துண்டு. மஞ்சள் பொடி அரை டீஸ்பூன்.

குழம்பில் போடத் தான் ஏதேனும். குழம்புக் கறிவடாம் அல்லது அப்பளம் அல்லது வற்றல் ஏதேனும். எண்ணெயில் வறுத்துத் தனியாக வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் நான்கு வற்றல் மிளகாய், ஒரு டேபிள் ஸ்பூன் துவரம்பருப்பு இரண்டு டீஸ்பூன் வெந்தயம் போட்டு வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். இந்தப் பொடி முழுவதும் குழம்புக்குத் தேவை இருக்காது. ஆகையால் பொடித்துக் கொண்டு ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக்கொண்டு தேவையானபோது பயன்படுத்தலாம்.

அடுப்பில் கல்சட்டி அல்லது வெண்கல உருளி அல்லது நான் ஸ்டிக் பான் ஏதேனும் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றவும். கடுகு, பருப்பு வகைகளை ஒவ்வொன்றாகத் தாளித்து மி,வத்தல், கருகப்பிலை பெருங்காயம் சேர்க்கவும். புளிக்கரைசலை ஊற்றவும். உப்புச் சேர்க்கவும். முழுவதுமாக இந்தப் பொடியே போடுவதானால் புளி வாசனை போகக் குழம்பு கொதித்ததும் வற்றலைச் சேர்த்து இந்தப் பொடியைப் போட்டுக் கீழே இறக்கவும். முழுவதுமாக இந்தப் பொடி தேவையில்லை எனில் கொஞ்சம் போல் சாம்பார்ப் பொடி போட்டுக் கொண்டு வற்றலும் சேர்த்துக் கொதித்துச் சேர்ந்து வருகையில் இந்த மிவத்தல் துவரம்பருப்பு, வெந்தயம் வறுத்த பொடியை ஒரு டீஸ்பூன் மட்டும் சேர்த்துக் கீழே இறக்கவும். ஒரு சிலர் மிவத்தல் துவரம்பருப்புப் போடாமல் வெறும் வெந்தயம் மட்டும் வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்து வைத்திருப்பார்கள். அதையும் ஒரு அரை டீஸ்பூன் சேர்க்கலாம். இறக்கியதும் கூட இந்த வெந்தயப் பொடியைச் சேர்க்கலாம். இது தான் வெந்தயக் குழம்பு!


Tuesday, July 19, 2016

உணவே மருந்து! வெந்தயம்!

இப்போது சில வெந்தய சமையல்கள் குறித்துச் சொல்லப் போகிறேன். முதலில் வெந்தயக்கீரைக் குழம்பு.

தேவையான பொருட்கள்: ஒரு சின்னக் கட்டு வெந்தயக் கீரை, நன்கு ஆய்ந்து கழுவி நறுக்கிக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வைக்கவும்.

புளி ஒரு எலுமிச்சை அளவுக்கு. ஊற வைத்துக் கோது நீக்கிக் கரைத்துக் கொள்ளவும். இரண்டு கிண்ணம் இருக்கலாம்.

துவரம்பருப்பு குழைய வேக வைத்தது கால் கிண்ணம் (கொஞ்சமாப் பருப்புப் போட்டால் போதும்)

சாம்பார்ப் பொடி இரண்டு டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு

தாளிக்க
நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு ஒரு டீஸ்பூன், வெந்தயம் ஒரு டீஸ்பூன், மி.வத்தல் ஒன்று, பச்சை மிளகாய் ஒன்று, கருகப்பிலை கொஞ்சம் போல, பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு

அடுப்பில் கல்சட்டி அல்லது உருளி அல்லது இது ஏதும் இல்லைனா உங்கள் வழக்கமான நான் ஸ்டிக் பாத்திரத்தை வைக்கவும். நினைவாக அடுப்பை மூட்டவும். நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, வெந்தயம் போட்டுக் கொண்டு மி.வத்தல், ப.மிளகாய் போட்டுக் கருகப்பிலை பெருங்காயம் சேர்த்துக் கொண்டு நறுக்கி வைத்திருக்கும் வெந்தயக் கீரையைப் பிழிந்து போட்டு நன்கு வதக்கவும். கீரை சுருள வதங்கியதும் புளிக்கரைசலை ஊற்றவும். சாம்பார்ப் பொடி போட்டு உப்புச் சேர்க்கவும். நன்கு கொதித்ததும் குழைய வேக வைத்த துவரம்பருப்பைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் கீழே இறக்கவும். சூடான சாதம், சப்பாத்தி ஆகியவற்றோடு நல்ல துணை!

அடுத்து வெந்தயக்கீரையோடு உருளைக்கிழங்கு சேர்த்துச் செய்யும் கறி

வெந்தயக்கீரை ஒரு கட்டை முன்னர் சொன்ன மாதிரிக் கழுவி ஆய்ந்து நறுக்கிக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துத் தனியாக வைக்கவும்.

உருளைக்கிழங்கு நடுத்தரமானது 5 நன்கு வேக வைத்துத் தோலுரிக்கவும்.

குடமிளகாய் அல்லது பச்சை மிளகாய், உங்கள் விருப்பம் போல் குடமிளகாய் என்றால் ஒன்று. பச்சை மிளகாய் என்றால் இரண்டு

தக்காளி விரும்பினால்

மிளகாய்ப் பொடி ஒரு டீஸ்பூன்

தனியாப் பொடி ஒரு டீஸ்பூன்

கரம் மசாலா கால் டீஸ்பூன்

உப்பு தேவையான அளவு

தாளிக்க சமையல் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு, ஜீரகம், சோம்பு தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத் தூள் அரை டீஸ்பூன்
மஞ்சள் பொடி அரை டீஸ்பூன்

அடுப்பில் கடாயைப் போட்டு எண்ணெய் ஊற்றிக் கடுகு, ஜீரகம், சோம்பு தாளிக்கவும். எல்லாம் பொரிந்ததும் பெருங்காயம் சேர்த்துக் குடைமிளகாய் அல்லது பச்சை மிளகாய் சேர்க்கவும். வதங்கியதும் வெந்தயக் கீரையைப் பிழிந்து  போட்டு வதக்கவும். மஞ்சள் பொடி சேர்க்கவும். கீரை வதங்கியதும் உருளைக்கிழங்கு வேக வைத்ததைத் துண்டங்களாக்கிச் சேர்க்கவும். மிளகாய்த் தூள், தனியாத் தூள், உப்புச் சேர்த்து வதக்கவும். விரும்பினால் ஒரு தக்காளியைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். எல்லாவற்றையும் நன்கு வதக்கி விட்டுக் கீழே இறக்கும்போது கரம் மசாலா சேர்த்துக் கலந்து விட்டு இறக்கவும். சப்பாத்தி, ஃபுல்கா, பரோட்டா ஆகியவற்றுக்கு நல்ல துணை!

Sunday, July 17, 2016

உணவே மருந்து! வெந்தயம்!

அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் ஒரு பொருள் வெந்தயம். சாம்பார், வத்தல் குழம்பு போன்றவற்றிற்குத் தாளிப்பதோடு அல்லாமல் இட்லி, தோசைக்கு அரைக்கையிலும் வெந்தயம் சேர்ப்போம். வெந்தயம் இல்லாமல் அன்றாட சமையலே இல்லை. இந்த வெந்தயம் குளிர்ச்சியைத் தரும் ஒரு பொருள்.  வெந்தயத்தில் புரதம், சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், இரும்புச் சத்து,விடமின் ஏ, தியாமின், ரிபோஃப்ளேவின், நிக்கோடினிக் அமிலம் ஆகிய சத்துக்கள் இருக்கின்றன. இது வயிற்றுக்கு மட்டுமில்லாமல் அழகு சாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப் படுகிறது. வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊற வைத்து மறுநாள் அதோடு செம்பருத்தி இலையையும் போட்டு நன்கு நைசாக அரைத்துத் தலையில் தேய்த்து ஊற வைத்துக் குளித்தால் ஷாம்பூவெல்லாம் தோற்றுவிடும் அளவுக்குத் தலை மயிர் மென்மையாகவும், பட்டுப் போலவும் இருக்கும். கூந்தல் வளரவும் செய்யும்.
Image result for வெந்தயம்

படத்துக்கு நன்றி சூரியன் டிவி கூகிளார் வாயிலாக!

வெந்தயத்தை ஊற வைத்து முளை கட்டிப் புழுங்கல் அரிசியைக் களைந்து வறுத்துக் கொண்டு மிக்சியில் பொடி செய்து முளைக் கட்டிய வெந்தயத்தோடு கலந்து கஞ்சி காய்ச்சித் தேங்காய்ப் பால் ஊற்றிச் சாப்பிட்டால் வயிற்றிற்கு இதமாக இருக்கும். துவரம்பருப்பையும், வெந்தயத்தையும் சேர்த்து வேகவைத்து சாம்பாரில் சேர்த்தால் சாம்பார் கெட்டே போகாது என்பதோடு நீரிழிவு நோய்க்கு இது அருமருந்தாகும். இட்லிப் புழுங்கல் அரிசியோடு வெறும் வெந்தயம் மட்டும் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்துத் தனியாக ஊற வைத்துக் கொண்டு முதலில் வெந்தயத்தை அரைத்து விட்டுப் பின்னர் அரிசியையும் போட்டு அரைத்து தோசை வார்த்துச் சாப்பிட்டாலும் நீரிழிவுக்கு நல்லது.

வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு தினம் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் குளிர்ச்சியைத் தருவதோடு சர்க்கரையும் குறைந்து வரும். இந்த வெந்தயப் பொடியை வற்றல் குழம்பு, புளிக்குழம்பு போன்றவை செய்கையில் கீழே இறக்கும்போது ஒரு டீஸ்பூன் சேர்த்தால் குழம்பு ஆஹா! மணம் தூக்கும். புளிக்காய்ச்சல், ஊறுகாய் போன்றவற்றிற்கும் வெந்தயப் பொடி சேர்ப்போம். வெந்தயத்தில் இருக்கும் வேதிப் பொருள் இதய நோய் வருவதைத் தடுத்துக் கொலஸ்ட்ரால் எனப்படும் கெட்ட கொழுப்பையும் கட்டுப்படுத்தும். இதயத் துடிப்பும் கட்டுக்குள் இருக்கும்.  ரத்த சோகை உள்ளவர்களுக்கும் வெந்தயம் நல்ல மருந்தாகச் செயல்படும்.  முளைக்கட்டிய வெந்தயம் ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும்.

முளைக்கட்டிய வெந்தயத்தோடு பாலில் ஊற வைத்த கசகசாவையும் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் பருக்களால், கட்டிகளால் ஏற்பட்ட வடுக்கள், கரும்புள்ளிகள் காணாமல் போகும். முகத்தைச் சுருக்கம் இல்லாமல் வைக்கும். வெந்தயக் கீரையைக் கூட அரைத்துத் தடவலாம்.  வெந்தயத்தில் உள்ள வேதிப் பொருட்கள் ஈஸ்ட்ரோஜென் போலச் செயல்பட்டுப் பெண்களின் மாதாந்திரத் தொல்லைகளைக் குறைக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்குப் பாலை அதிகரிக்கச் செய்யும் சக்தியும் வெந்தயத்தில் உண்டு.  பாலூட்டும் தாய்மார்கள் வெந்தயத்தை வறுத்துக் கொண்டு கருப்பட்டி சேர்த்துக் களி செய்து உண்டு வந்தால் பால் பெருகும். குழந்தையும் ஆரோக்கியமாக வளரும்.

உடல் எடை குறையவும் வெந்தயம் சரியான முறையில் பயனாகிறது. வெந்தயத்தை ஊற வைத்து மென்று தின்றுவிட்டு இரண்டு சின்ன வெங்காயத்தை நறுக்கி மோரில் சேர்த்துக் குடித்து வர உடல் எடை குறைய ஆரம்பிக்கும். வயிற்றில் வலி இருந்தாலோ வயிற்றுக் கடுப்பாக இருந்தாலோ வெற்றிலையோடு வெந்தயத்தை மென்று தின்று வரச் சரியாகி விடும்.  வெந்தயத்தை ஊற வைத்து எலுமிச்சைச் சாறோடு சேர்த்து அரைத்துக் கொண்டு காலை, மாலை என இருவேளைகள் சாப்பிட்டு வரக் கல்லீரல் கோளாறுகள் சரியாகும். கோடை காலத்தில் தினம் காலை ஊற வைத்த வெந்தயத்தை மென்று தின்றுவிட்டு நீராகாரமும் குடித்து வர உடல் வெம்மை தணியும்.